திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தண்பொருநையாம் தாமிரபரணி நதிக்கரையில் சைவ, வைணவ தலங்கள் பலப்பல அமைந்திருந்தாலும் ஆன்மீக பக்தர்களின் உடனடி நினைவிற்கு வருவது வேதபுரி என்னும் மன்னார்கோவில் ஶ்ரீதேவி பூதேவி சமேத ராஜகோபால சுவாமி கோவிலும், சுயம்புலிங்கமாக அமைந்துள்ள இலந்தையடிநாதர் குடிகொண்டிருக்கும் பிரம்மதேசம் திருக்கைலாயநாதர் திருக்கோவிலும் ஆகும், இவ்விரு சிவ, வைணவ தலங்களுக்கும் அருகே அமைந்துள்ள வேலாயுதமலை என்னும் இயற்கை எழில் கொஞ்சும் குன்றில் குடிகொண்டிருக்கும் மயீலேறி முருகன் திருக்கோவில் திருவரலாறு பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆதிகாலத்தில் சித்தர்களாலும் அதன்பின் அரசகுலத்தவராலும், அருகாமை கிராம மக்களாலும் வழிபடப்பட்டு வந்த வேலாயுத மலை முருகன் ஆலயம் காலப்போக்கில் கைவிடப்பட்ட காரணத்தால் . சமூக விரோதிகளால் ஆக்ரமிக்கப்பட்டது. வேலாயுத மலை குன்றிலிருந்த பாறைகள் உடைக்கப்பட்டு கற்கள் வெட்டப்பட்டு கடத்தப்பட்ட போது ஏற்கனவே இருந்த ஆலயமும் சிதைக்கப்பட்டு, தெய்வ திரு உருவங்களும் திருடு போயின. ஆலயம் இருந்த இடத்தையும் வெடி வைத்து தகர்க்க முயன்ற போது திருமுருகன் திருவிளையாடலால் ஏற்பட்ட வெடிவிபத்தில் பத்திற்கும் மேற்பட்டோர் பலியாயினர். தப்பிப் பிழைத்தோர் உடைபட்ட பாறையில் வேலும், மயிலும், ஓம் என்னும் பிரணவ மந்திரமும் பொறிக்கப்பட்டிருப்பதை பார்த்து பதறி ஓடி, அதன்பின் அந்தப்பக்கமே வருவதில்லை.
குமரக்கடவுளின் வாகனமான மயில்கள் கூட்டம், கூட்டமாக வாழும் வேலாயுத மலைக் குன்றில் வேலும், மயிலும், ஓம்காரமும் செதுக்கப்பட்ட பாறையின் மேல் அழகன் முருகனின் வாகனமான ராஜமயில் அனுதினமும ஆடி, அகவி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் அம்பாசமுத்திரம் வேலாயுத நகர் மற்றும் என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்த ஆன்மீக அன்பர்களை அருகில் அழைத்தது., மயில்களின் தொடர் அழைப்பினால் குன்றின் மேல் ஏறிச்சென்ற பக்தர்களை வழிநட,த்திச் சென்ற மயிலானது ஆலயம் இருந்த இடத்தில் தோகை விரித்தாடி குமரனுக்கு கோயில் அமைக்க உத்தவிட்டது. மேலும் குன்றின்மேல் வேல் வடிவத்தில் அமைந்திருந்த அதிசயமான சுனையையும் காட்டி மறைந்தது.
வேலாயுத நகர் மற்றும் என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்த பக்தர்கள் அக்கம் பக்கம் கிராமங்களைச் சேர்ந்த பெரியோர்களை சந்தித்து, விசாரித்து அறிந்த தகவல்கள் அனைத்தும் அதிசயமானவை. ஆச்சரியமானவை. ஆம்.. நாலாம்கரம் பொத்தை என்றொரு பெயரும் கொண்ட வேலாயுத மலை மேல் அமைந்துள்ள இந்த சுனையில் எலுமிச்சை பழத்தைப் போட்டால் இயற்கையாக அமைந்த சுரங்கம் வழியாக ஓரிரு மைல் தூரத்தில் அமைந்துள்ள பிரம்மதேசம் திருக்கைலாயநாதர் திருக்கோவில் திருக்குளத்திற்கு வந்து சேருமாம்.
அகில உலகமெல்லாம் ஆண்ட சோழச்சக்கரவர்த்தி ராஜராஜ சோழன் பாண்டிய, சேர நாடுகளை வென்று அம்பாசமுத்திரம் அருகே ராமாயண வாலி வழிபட்ட அயன்திருவாலிஸ்வரருக்கு ஆலயம் அமைத்து பிரம்ம தேசம் ஊரையும் நிர்மாணித்த காலத்தில் வேலாயுத மலை மீது ஏறி அதிசய சுனையை கண்டதாக செவிவழி வரலாறு கூறுகிறது. எனவேதான் இந்த அதிசய சுனைக்கு ராஜா கிணறு என்றொரு பெயரும் உண்டாம். ராஜராஜ சோழனின் எல்லைக்காவல் வீர்ர்களான சோழப்படைகள் நான்காயிரம் பேர் வழிபட்ட நாலாயிரத்தம்மன் ஆலயமும் வேலாயுத மலை மேல் இருந்ததாக அருகாமை கிராமப் பெரியவர்கள் கூறுகிறார்கள்.
வேலாயுத மலை முருகனின் அருமை, பெருமைகளை கேட்டறிந்த வேலாயுத நகர் மற்றும் என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்த ஆன்மீக அன்பர்களின் பெருமுயற்சியினால் முதலில் மயிலாடும் பாறையின் மீது கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ஆகஸ்ட் 22ம் தேதி (22.08.2020) விநாயகர் சதுர்த்தியன்று வேல் நிறுவப்பட்டது. அதற்கடுத்த மாதங்களில் நடந்த செயல்கள் எல்லாம் ஐயனின் திருவருள்.
குன்றின் மேல் கோயில் கட்ட செப்டம்பர் 21ம் தேதியன்று (21.09.2020) பூமிபூஜை செய்யப்பட்டு குமரன் திருவருளால் மிகக் குறுகிய காலத்தில் கோயிலும் கட்டி முடிக்கப்பட்டது. வேலாயுத மலைக்குன்றில் இருந்து எடுத்த பாறைகளில் இருந்தே விக்கிரங்களும் செய்யப்பட்டன.
அருட்கொடையாளர்களால் உற்சவ மூர்த்திகளும் செய்யப்பட்டு, குன்றின் மேல் பக்தர்கள் ஏற சிறிது தூரம் படிகளும் கட்டப்பட்டு கடந்த மாதம் அக்டோபர் 23ம் தேதி (23.10.2020) கும்பாபிஷேகம் விமரிசையாக கொண்டாடப்பட்டு தற்போது மண்டலபூஜைகள் அனுதினமும் காலையும், மாலையும் சிறப்புற நடந்து வருகின்றன.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பார் என்ற குறிசொல்படி அம்பாசமுத்திரம் வேலாயுதம் நகர் குன்றின் மேல் வள்ளி, தெய்வானை சமேதராக குடிகொண்டிருக்கும் கலிகாலக் கடவுளும், கருணைக்கடலுமான கந்தனின் திருவிளையாடல்கள் காணவும் சிலபல சித்துவிளையாட்டுகள், மூலம் திருமுருகன் தன் இருப்பை வெளிப்படுத்தி மிகக்குறுகிய காலத்தில் கோயில் கட்ட வைத்து, கும்பாபிஷேகமும் நடந்த திருத்தலமான அம்பாசமுத்திரம் வேலாயுதம் நகர் மயிலேறி முருகன் கோவில் வந்து திருமுருகன் திருவருள் பெற ஆன்மீக சொந்தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.