fbpx

அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் (கோமுக்தீஸ்வரர்) திருக்கோயில்

ஒருசமயம் கைலாயத்தில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிவனே தொடர்ந்து வெற்றி பெற்றதாக தன்னை அறிவித்துக் கொண்டார். அம்பாள் கோபம் கொள்ளவே, சிவன் அவளைப் பசுவாக பிறக்கும்படி சபித்து விட்டார். அவள் தன் வடிவம் நீங்கி மன்னிப்பு தரும்படி சிவனிடம் வேண்டினாள். இத்தலத்தில் தம்மை வழிபட்டுவர சாபம் நீங்கப்பெறும் என்றார் சிவன். அதன்படி அம்பாள் பசுவின் வடிவில் இங்கு வந்து, சிவனை வேண்டித் தவமிருந்தாள். சிவன் அவளுக்கு காட்சி தந்து, தன்னுடன் அணைத்துக்கொண்டு, விமோசனம் கொடுத்தார். “கோ“வாகிய பசுவிற்கு விமோசனம் தந்தவர் என்பதால், “கோமுக்தீஸ்வரர்” என்று பெயர் பெற்றார்.

புத்திர பாக்கியம் இல்லாமல் தவித்த முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரனிடம் பெற்ற தியாகேசரைத் தொடர்ந்து வழிபட்டு வந்தான். ஒருசமயம் சிவன் அவரது கனவில் தோன்றி, இத்தலத்தில் தன்னை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி இங்கு வந்து சிவனை வணங்கி புத்திரப்பேறு பெற்றார் முசுகுந்தன். எனவே, புத்திரப்பேறு இல்லாதவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் அப்பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சுவாமி சன்னதிக்கு வலப்புறத்தில் தியாகேசர் இருக்கிறார்.

பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சன்னதியில், “அணைத்திருந்த நாயகர்” உற்சவராக இருக்கிறார். இவர் அணைத்த கோலத்தில் இருந்தாலும், அம்பாள் மீது கைகள் படாதவாறு சிலை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம். இவர் இங்கு வரப்பிரசாதியாக திகழ்கிறார். பிரிந்திருக்கும் தம்பதியர் இவரிடம் வேண்டிக்கொண்டால் மீண்டும் இணைவர் என்பது நம்பிக்கை.

திருஞானசம்பந்தர், இத்தலத்தில் தன் தந்தையார் சிவபாத இருதயருடன் சிலகாலம் தங்கியிருந்தார். அப்போது சீர்காழியில் யாகம் நடத்த வேண்டுமென சிவபாதவிருதயர் விரும்பினார். எனவே, யாகத்திற்கு பொன்னும், பொருளும் வேண்டுமென சம்பந்தரிடம் கேட்டார். சம்பந்தர் யாகத்திற்கு பொருள் வேண்டி, பதிகம் பாடினார். சிவன் பூதகணங்கள் மூலமாக, ஒரு பொற்கிழியை கொடுத்து, அதனை இக்கோயிலில் உள்ள பலிபீடத்தில் வைக்கச்செய்தார். பொன் பெற்ற சிவபாதவிருதயர் சீர்காழிக்கு சென்று யாகத்தை நடத்தி முடித்தார்.

இந்த பலிபீடம், நந்திக்கு அருகில் இருக்கிறது. இதனை சுற்றிலும் பொற்கிழி கொண்டு வந்த பூதகணங்கள் இருக்கிறது. இங்கிருந்து சிவனிடம் வேண்டிக்கொண்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

போகரின் சீடரான திருமாளிகைத்தேவர் இத்தலத்தில் சிவத்தொண்டு செய்து வந்தார். ஒருசமயம் அவர் மீது வீண்பழி சுமத்தப்பட்டதால், மன்னன் படை வீரர்களை அனுப்பி அவரைத் தாக்க முயன்றான். அப்போது, அம்பாள் திருமாளிகைத்தேவரை காக்கும்படி சிவனிடம் வேண்டவே, அவர் நந்தி படையை அனுப்பி அவர்களை விரட்டினார். இந்த நந்திகள் ஒன்றாக சேர்ந்து இத்தலத்தில் பிரம்மாண்டமான நந்தியாக இருக்கிறது. பல கற்களை இணைத்து செய்யப்பட்ட இந்த நந்தி, பீடம் சேர்க்காமல், 14 அடி, 3 அங்குலத்துடன் உயரமாக இருக்கிறது. இதற்கு முன்புறம் மற்றொரு சிறிய நந்தியும் இருக்கிறது.

பிரதோஷ வேளையில் இவருக்கு மகாஅபிஷேகம் நடக்கிறது. இதுதவிர அதிகார நந்தியை அடுத்து மற்றொரு நந்தியும் உள்ளது.

சுந்தரநாதர் எனும் சிவயோகியார் கயிலாயத்திலிருந்து பூலோகம் வந்து சிவத்தலங்களை தரிசித்து வந்தார். அவர் இத்தலம் வந்தபோது, மூலன் எனும் இடையன் இறந்து கிடக்க, அவனைச் சுற்றிலும் பசுக்கள் அழுது கொண்டிருந்ததைக் கண்டார்.

பசுக்களின் மீது பரிவு காட்டிய அவர், தன் உயிரை மூலன் உடலில் புகுத்தி எழுந்தார். பின் பசுக்களை வீட்டில் விட்டுவிட்டு இத்தலத்தில் தவத்தில் தவம் செய்ய துவங்கினார். மூலன் வீட்டிற்கு திரும்பாததால், அவனது மனைவி இங்கு வந்து சுந்தரநாதரைத் தன்னுடன் வரும்படி அழைத்தார். அவர் செல்ல மறுத்தார். மூலன் சிவஞானம் பெற்றதாக உறவினர்கள் கூறவே மனைவியும் விட்டுச் சென்றுவிட்டாள். இவரே, “திருமூலர்” என்று பெயர் பெற்றார். இவர் ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம், மொத்தம் 3 ஆயிரம் பாடல்களைப் பாடினார். இவையே திருமூலர் திருமந்திரமாகத் தொகுக்கப்பட்டது. இவர் ஐக்கியமான இத்தலத்தில், பிரகாரத்தில் சன்னதி இருக்கிறது.

சிவன் சன்னதிக்கு வலதுபுறத்தில் தியாகராஜர், கமலாம்பிகையுடன் இருக்கிறார். சிவன் இத்தலத்தில் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமாசித்திகளை உபதேசித்ததாக ஐதீகம்.

ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் நான்கு பதிகங்கள் பாடிய திருமாளிகைத்தேவர், நமச்சிவாய மூர்த்தி சுவாமிகளுக்கு சன்னதிகள் இருக்கிறது. இத்தலத்திற்கு கோமுக்திநகர், நந்திகோயில் என்றும் பெயர் உண்டு.

இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் துவைதளம் எனப்படுகிறது. இத்தலவிநாயகர் துணைவந்த கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் இலிங்கத்தின்மீது, பசு பால் சொரியும் சிலை இருக்கிறது. இதனை “கோரூபாம்பிகை” என்கின்றனர். அருகில் சனீஸ்வரர் இருக்கிறார். நவக்கிரக சன்னதி கிடையாது. ஒரே இடத்தில் மூன்று சூரியன் இருப்பது விசேஷமான தரிசனம்.

தேவாரப்பதிகம்:

திகழும் மாலவன் ஆயிரம் மலரால் ஏத்து வானொரு நீண்மலர் குறையப் புகழினால் அவன் கண் இடந்திடலும் புரிந்து சக்கரங் கொடுத்தல் கண்டடியேன் திகழும் நின்றிருப் பாதங்கள் பரவித் தேவதேவ நின் திறம் பல பிதற்றி அகழும் வல்வினைக்கு அஞ்சி வந்தடைந்தேன் ஆவடுதுறை யாதி யெம்மானே.

–சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 36வது தலம்.

திருவிழா:

புரட்டாசியில் பிரம்மோத்சவம், மார்கழி திருவாதிரை, சிவராத்திரி, அன்னபிஷேகம்.

பிரார்த்தனை:

மாங்கல்ய பாக்கியம் நிலைத்திருக்க, தம்பதியர்கள் ஒற்றுமையுடன் இருக்க, புத்திர பாக்கியம் கிடைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வழிகாட்டி:

கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் பாதையில் 19 கி.மீ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram