fbpx

ஆண்டாளின் அழகுக்கு அழகு சேர்க்கும் ஆண்டாளின் கிளி

108 வைணவ திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் ஆண்டாளின் புகுந்த வீடாகும்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளின் தாய் வீடாகும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் ராஜகோபுரம், 196 அடி உயரமுடையது.

இது இரட்டைக் கோவிலாக அமைந்துள்ளது.

வட கிழக்கில் மிகப் பழமையான வடபத்ரசாயி கோவில் உள்ளது.

மேற்கில் ஆண்டாள் திருக்கோவில் உள்ளது. இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதே பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனம்.

இங்கு ஆண்டாளுக்குத் தனிச் சந்நிதி ஒன்றும், அதன் முன்புறம் துளசி மாடம் ஒன்றும் உள்ளது.

இங்கிருக்கும் மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டாலோ, சிறிதளவு எடுத்துச் சென்று வீட்டில் பத்திரப்படுத்தினாலோ திருமணத் தடை நீங்கி செல்வம் சேரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். மாடத்தின் அடியில் ஆண்டாளின் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டாளின் திருக்கோவில் முழுதும் கருங்கற்களால் ஆனது.

கருவறை விமானத்தில் திருப்பாவை பாசுரங்களின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள மணி மண்டபத்தின் கம்பம் ஒன்றில், ஆண்டாள் முகம் பார்த்த வெண்கலத்தட்டு (கண்ணாடி) காணப்படுகிறது. இதை தட்டொளி என்பர்.

அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பெற்ற மஞ்சத்தில் இடக்கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் ரங்கநாதர் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

அருகில் கூப்பிய கரங்களுடன் கருடாழ்வார் உள்ளார். கருவறையில் ஆண்டாள் மற்றும் ரங்கநாதர், கருடாழ்வார் (பெரிய திருவடி) ஆகியோர் அருள்புரிகின்றனர்.

தினமும் விடியற்காலையில் பிராட்டியின் சந்நிதியில் காராம்பசு ஒன்று வந்து நிற்கும்.

தேவியின் திருப்பார்வை காராம்பசுவின் பின்புறம் விழும்.

தேவி தினமும் கண் விழிப்பது இப்படித்தான். தான் அணிந்து கொண்ட பூமாலையுடன், ஆண்டாள் இங்குள்ள கிணற்று நீரில் அழகு பார்த்துக் கொள்வது வழக்கமாம். அதனால் இங்குள்ள கிணறு கண்ணாடிக் கிணறு என அழைக்கப்படுகிறது.

ஆண்டாளின் கிளிக்குச் சொல்லப்படும் கதை :

ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும்,

தூது சென்று வந்த கிளியிடம், என்ன வரம் வேண்டும்? என்று ஆண்டாள் கேட்க,

சுகப்பிரம்மம், இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்! என்று வேண்டிக் கொண்டார் என்றும்,

அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது.

இங்கு ஆண்டாள் உலா வரும்போது, நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாடப்படுகிறது.

செங்கோல் ஏந்தி அரசாளும் மதுரை ஸ்ரீமீனாட்சிக்கு வலத்தோளில் கிளி இருக்கும்.

அன்பால் இறையாட்சி புரியும் ஸ்ரீஆண்டாளுக்கு இடத்தோளில் கிளி இருக்கும்.

இந்தக் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது.

கிளி மூக்கு – மாதுளம் பூ, மரவல்லி இலை – கிளியின் உடல்,இறக்கைகள் – நந்தியாவட்டை இலையும் பனை ஓலையும்;, கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள்;, கிளியின் கண்களுக்கு காக்காய்ப் பொன் என்று சொல்லப்படும் பொருளைப் பயன்படுத்துவார்கள்.

இவற்றை பயன்படுத்தி கிளியை உருவாக்குகின்றனர்.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளில் சரணம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram