fbpx

எல்லோருடைய தெய்வமும் அன்னை ஸ்ரீவாலைபாலா திரிபுரசுந்தரி

தூத்துகுடி மாவட்டம் கொம்மடிக்கோட்டையில் உள்ள பாலா திரிபுரசுந்தரி கோவில் உள்ளது இக்கோவில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது பல சித்தர்கள் பூஜீத்த பாலா திரிபுரசுந்தரி இங்கு குழந்தை வடிவமாக பட்டுபாவாடை, சட்டையுடன் ரத்னாலங்காரங்களுடன் நட்சத்திரங்களை பழிக்கும் மூக்குத்தியுடன் பக்தர்களை வாவென்று அழைத்து அருள்பாலிக்கிறார்.

இவரை வணங்கினால் சகல சவுபாக்கியங்களும் வாழ்க்கையில் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கையாகவே உள்ளது, கொம்மடிக்கோட்டையில் கோவில் கொண்டுள்ள ஸ்ரீ வாலைகுருசுவாமியும் அவர்தம் சீடர் ஸ்ரீ காசியானந்தரும் வாலையை வழிபட்டு சித்தி பெற்று இங்கேயே ஜீவ சமாதி கொண்டுள்ளார்கள்.

தன் தாய் (வாலை) பெயரையே தன் பெயரில் பெற்றுள்ளார்கள். தான் உபாசித்த தாயை உலக மக்களும் உபாசித்து சுகம் பெற வேண்டி ஸ்ரீ வாலையம்பிகைக்கும் சன்னதி கண்டு மக்கள் அனைவரையுமே தன் தாயை(அன்னையை) வணங்க வைத்திருக்கிறார்கள்.

சித்தர்கள்வணங்கும்வாலாம்பிகை

ஸ்ரீவித்யை (ஸ்ரீ பாலா) மார்க்கத்தை குரு முகமாகவே அடைய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

ஸ்ரீ வாலை ஞான பூஜையின் மகத்துவத்தை போகர் அவருடைய குரு நந்திசரிடம் இருந்து அறிந்து கொண்டதாக சொல்கிறார். போகர் வாலையின் மகத்துவத்தை கொங்கணர்க்கு சொன்னதாகவும், கொங்கணரும் அவர்தம் சீடர்களுக்கு வாலை பூஜையை விளக்கியதாகவும் சொல்கிறார்.

அதாவது போகரின் குரு நந்திசர், கொங்கணரின் குரு போகர், கொங்கணிரின் சீடர்கள் பலர் என்று போகர் பாடல்மூலமாக குருவின் மகத்துவத்தை விளக்குகிறார். ஸ்ரீ வாலைகுரு சுவாமியின் சிடர் ஸ்ரீ காசியானந்தர்.

இவர்கள் எல்லோருடைய தெய்வமும் அன்னை ஸ்ரீ வாலைதான் ஆவாள். சித்தர்களின் மேலான தெய்வம் வாலைதான் என்பதையும் உறுதிபடுத்துகிறார்

வாலைகுருவின்_வாலாம்பிகை

கலியுகத்தில் நல்ல குரு கிடைப்பது மிக அரிதிலும் அரிது. இதை அறிந்து தான் ஸ்ரீ வாலாம்பிகை ஸ்ரீ வாலை குருவையும் ஸ்ரீ காசியானந்தரையும் இந்த புண்ணிய பூமிக்கு சுமார் 800 வருடங்களுக்கு (ஏறத்தாழ 1200வது வருடம்) முன் தன்னோடு அழைத்து வருகிறாள்.

தன் மனதில் இடம் பிடித்த ஸ்ரீ வாலை குருவையும் ஸ்ரீ காசியானந்தரையும் பிரதான படுத்தி ஆலயத்தையும் இவர்களுக்கு அவளே வரைபடம் தந்து, வடிவமைத்து தருகிறாள். சாதாரண மனிதர்களுக்கு ஸ்ரீ வாலைகுருவே பூலோகத்தின் கடவுளாவார்.

பூமியில் உள்ள அசையும் பொருள் , அசையாத பொருட்கள் போன்ற அனைத்து அவதாரங்களையும் குருவே ஞானப் பாதையில் அழைத்து சென்று அவரவர்கள் அவதார நோக்கத்தை அறியச் செய்கிறார்கள். இதைதான் திருமூலரும் “குரு பார்க்க கோடி தோஷம் நிவர்த்தி” என்கிறார் திருமந்திரத்தில்.

ஸ்ரீ வாலாம்பிகை சித்தமெல்லாம் சிவமயமாய் திளைத்திருக்க, ஆதிசக்தியின் அருளும், ஆசியும் பூரணமாக தேவை என்பதை சித்தர்கள் உணர்ந்திருந்தனர். அத்தகைய ஆதிசக்தியின் அம்சம்தான் வாலை தெய்வம். அவளையே போற்றி பூசித்தனர்.

இந்த அம்சம் பத்து வயதுக்குறிய ஒரு சின்னஞ் சிறிய பெண்ணின் அம்சம் என்பது ஆச்சர்யமான ஒன்று!, நம்மில் பலரும் அறிந்திராத ஒன்று. தமிழில் #வாலை #வாலாம்பிகை என்றும் சித்தாந்தம் வணங்குகிறது. சமஸ்கிருதத்தில் ”பாலா” என்றும் வேதாந்தம் இந்த குழந்தை தெய்வத்தை வணங்குகிறது.

அம்பிகையை பல வடிவங்களில் பக்தர்கள் வழிபடுகின்றனர். அவற்றில் குழந்தை வடிவமாக பாலா திரிபுரசுந்தரியாக அருளும் வடிவத்தின் பெருமைகள் சொல்லில் அடங்காதவை.. லலிதா பரமேஸ்வரியின் விளையாட்டின் ரூபமாக பண்டாசுர வதத்தின்போது தோன்றியவள் பாலாதேவி.

பண்டாசுர வதம் நடந்தபோது பண்டாசுரனின் புதல்வர்கள் போருக்கு வந்ததும் அவர்களை வதம் செய்ய பாலாதேவி தோன்றினாள். லலிதையின் அங்கத்திலிருந்து தோன்றியவள். இப்போதும் ஒன்பது வயது தோற்றத்தோடு கூடியதால் ‘ஸதாநவவர்ஷா’ எனவும் (ஸதா – எப்போதும், நவவர்ஷா – ஒன்பது வயதினள்).

லலிதாம்பிகையினுடய வில்லிலிருந்து தோன்றிய வெள்ளை அன்னங்கள் பூட்டிய கர்ணீ ரதத்தில் ஏறி பண்டனின் புதல்வர்கள் முப்பது பேரையும் அழித்ததால் ‘பண்டபுத்ர வதோத்யுக்த பாலா விக்ரம நந்திதா’ ஸ்ரீபாலா லீலாவிநோதி நீ எனவும் லலிதா ஸஹஸ்ர நாமத்தில் வஸின்யாதி வாக்தேவதைகள் இத்தேவியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.

பாலாதேவியின் திருவருள் கிட்டினால் லலிதாம்பிகையின் திருவருளும் உடனே கிட்டும் என்பது உபாசனா ரகஸ்யம். இந்த பாலா மந்திரம் த்ரைலோக்ய வசகாரிணீ என்று மந்திர சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது, இவள் தன் இடக்கரத்தில் புத்தகத்தை ஏந்தியிருப்பது சகல வித்யைகளையும் சாதகர்களுக்கு அருளவே.

இவள் மறு கரத்தில் கொண்டுள்ள ஜபமாலை, அம்பிகையின் நாமத்தை அனைவரும் உச்சரிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே. அபய வரத கரங்கள் பக்தர்களைக் காக்கவும் கேட்ட வரங்களைத் தரவும் தயாராக உள்ளன.

நித்ய கல்யாண சீலையான இவள், (நிவஸதி ஹ்ருதி பாலா நித்ய கல்யாண சீலா- பாலா தியான சுலோகம்) சகல நலன்களையும் இம்மையில் தந்து, மறுமையில் வீடு பேற்றையும் அளிக்க வல்லவள்.

ஸ்ரீவராஹி அம்மன் சன்னதி ஸ்ரீ வாலாம்பிகை சன்னதியின் அருகிலே உள்ளது. ஸ்ரீ சுவர்ண ஆகார்ஸண பைரவர் சன்னதி கோவிலின் வெளி பிரகாரத்தில் வடகிழக்கு மூலையிலே தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

கோவிலின் வெளி பிரகாரத்தில் மஞ்சணத்தி மரத்தடியில் ஸ்தலவிருட்ச வினாயகரும், உச்சிஸ்ட கணபதியும் பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கிறார்கள்.

ஸ்தலவிருட்சம்

கோவிலின் பிரகாரத்தில் உள்ள மஞ்சணத்தி மரமே ஸ்தலவிருட்சம். இந்த விருட்சத்தின் நிழலிலேயே ஸ்ரீ வாலைகுருசுவாமியும் ஸ்ரீ காசியானந்தரும் ஸ்ரீ வாலை பூஜை செய்து வந்ததாக நம்பப்படுகிறது.

இந்த மரத்தின் இலை திரு மாத்திரையாகவும் பயன்படுகிறது. ஆரம்ப காலத்தில் இருந்த மஞ்சணத்தின் வயது பல நூறு வருடங்களுக்கு மேல் இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்னதாக அந்த மரம் பட்டுப் போனது. பக்தர்கள் மன கவலையுடன் இருந்தனர். புதிய மஞ்சணத்தி கன்றுகளை நடலாம் என யோசனை எழுந்தது.

புதிய மரம் எதுவும் நட தேவையில்லை, #பட்டமரம்_துளிர்க்கும் என இறைவனின் உத்தரவு கிடைத்தது. உத்தரவு கிடைத்து சில மாதங்களிலேயே அதே இடத்தில் மஞ்சணத்தி மரம் துளிர்த்து , மரமாகி பக்தர்களின் மனக்குறையை போக்கியது. இதுபோல் இன்னும் எத்தனையோ அற்புதங்கள் தினம் தினம் நடந்துகொண்டே இருக்கிறது.

அமைவிடம்

தூத்துக்குடி மாவட்டம் , திருச்செந்தூரிலிருந்து பரமன்குறிச்சி , உடன்குடி வழியாக திசையன்விளை செல்லும் வழியில் 27 கி.மி தொலைவில் அமைந்துள்ளது கொம்மடிக்கோட்டை என்ற அழகிய சிறு கிராமம். கொம்மடிக்கோட்டையில் பாலா சேத்திரம் என்னும் ஞானியார்மடம் ஸ்ரீ வாலைகுருசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram