கந்தசஷ்டியில்… காஞ்சிபுரம் குமரக்கோட்டம் குமரனை வணங்கி பிரார்த்தனை செய்தால், குறைவில்லாத வாழ்க்கைத் தந்தருள்வான்.
காஞ்சிபுரத்தை நகரேஷு காஞ்சி என்று போற்றுகிறது புராணம். நகரேஷு காஞ்சி என்றால் நகரங்களில் சிறந்த காஞ்சிபுரம் என்று அர்த்தம். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். காஞ்சிபுரம் எனும் அழகிய நகரத்தில், கோயில் இல்லாத தெருக்களே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எங்கு பார்த்தாலும் கோயில்கள். எங்கு திரும்பினாலும் கோயில்கள்.
சிவாலயங்களும் அதிகம் உள்ளன. பெருமாள் கோயில்களும் ஏராளம். சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி என்றே உள்ளன. முக்கியமாக, சக்தி பீடங்களுக்கெல் லாம் தலைமைப் பீடம், சக்தியருக்கெல்லாம் தலைவி என்று காஞ்சி காமாட்சி கொலுவிருந்து, கோலோச்சும் அற்புதத் தலமும் இதுவே!
இத்தனை பெருமைகள் கொண்ட திருத்தலத்தில் முருகப்பெருமானுக்கு ஆலயம் அற்புதமாக அமைந்திருக்கிறது. இதனை குமரக்கோட்டம் என்றே பெருமையுடன் அழைக்கிறது புராணம்.
காஞ்சியில், சிற்பக் கலைக்குப் பெயர் பெற்ற திருத்தலங்கள் ஏராளம். அனைத்துக் கோயில்களிலும் சிற்பங்கள், கட்டிடங்கள், தூண்கள், பிராகார அமைப்புகள், முன் மண்டபங்கள், அர்த்த மண்டபங்கள் என நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. சிற்ப வேலைப்பாடுகள், பல்லவ கால சிற்ப நுட்பத்துக்கு உதாரணங்களாகத் திகழ்கின்றன.
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலை திருவேகம்பம் என்று சொல்லுவார்கள். காமாட்சி அம்மன் கோயிலை, திருக்காமக் கோட்டம் என்பார்கள். இந்த இரண்டு ஆலயங்களுக்கு நடுவே, இரண்டு கோட்டங்களுக்கு நடுவே, மையமாக, சோமாஸ்கந்த அமைப்பில் இருக்கிற கோயில்தான்… முருகப்பெரு மான் குடிகொண்டிருக்கும் குமரக்கோட்டம்! இங்கே உள்ள முருகப் பெருமானின் திருநாமம் ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி.
ஓம் எனும் பிரணவப் பொருள் தெரியாததால், பிரம்மாவை சிறை வைத்தார் முருகக் கடவுள் என்பது நமக்கெல்லாம் தெரியும்தானே. அப்போது பிரம்மாவைப் போன்று, ருத்திராட்ச மாலை, கையில் கமண்டலம் கொண்டு பிரம்மசாஸ்தாவாக திருக்கோலம் பூண்டு, காட்சி தந்தாராம் முருகக் கடவுள். அப்படியொரு கோலத்தில்தான் குமரக்கோட்டம் திருத்தலத்தில் காட்சி தருகிறார் வெற்றிவேலன்.
புராணங்களில் சிறப்புடையது என்று எல்லோராலும் போற்றப்படுவது கந்த புராணம். அத்தகு புண்ணியம் நிறைந்த கந்த புராணம் அரங்கேறிய திருத்தலம் இது என்று விவரிக்கிறது புராணம். குமரக்கோட்டம் என்று அழைக்கப்படும் இந்த ஒப்பற்ற தலம், இம்மையில்… அதாவது இந்த இப்பிறவியில் உள்ள எல்லா கஷ்டங்களையும் போக்கி நல்லவற்றை வழங்கும் தலம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
இங்கே உள்ள முருகப் பெருமான், ’திகடச்சக்கரம்’ என அடியெடுத்துக் கொடுக்க, தனக்குப் பூஜைகள் செய்து வந்த கச்சியப்ப சிவாச்சார்யரைக் கொண்டே கந்த புராணம் எழுதப்பட்டதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
கந்த புராணம் அரங்கேறிய திருமண்டபத்தை, இன்றைக்கும் ஆலயத்தில் தரிசிக்கலாம். அற்புதமான ஆலயம். சாந்நித்தியமான இறைவன். அருணகிரிநாதர் இங்கு வந்து, அழகன் முருகனின் அழகில் மயங்கி, திருப்புகழ் பாடியிருக்கிறார் என கோயிலின் ஸ்தல புராணம் தெரிவிக்கிறது.
பாம்பன் சுவாமிகள்… காஞ்சிக்கு வந்து, குமரக் கோட்டம் ஆலயம் தெரியாமல் வேறு எங்கோ சென்று விட்டாராம். அப்போது பாம்பன் சுவாமிகளுக்கு சிறுவனாக வந்து வழிகாட்டியதுடன், ஆலயத்துக் கும் அழைத்துச் சென்று திருக்காட்சி தந்தருளினாராம் முருகக் கடவுள்!
கந்த சஷ்டி நாளில், மாதந்தோறும் வருகிற சஷ்டி திதி நாளில், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், காஞ்சியில் உள்ள குமரக்கோட்டத்துக்கு வந்து, சுப்ரமண்ய சுவாமியை தரிசித்து வேண்டிச் செல்லும் பக்தர்கள் ஏராளம்.
கந்தசஷ்டி விழா, இங்கு விமரிசையாக நடைபெறுகி றது. கந்தசஷ்டியின் போது, காஞ்சி குமரக்கோட்டம் தலத்துக்கு வந்து, முருகப்பெருமானை தரிசித்து, 108 முறை பிராகார வலம் வந்து வேண்டிக் கொள்ளுங் கள். நினைத்ததையெல்லாம் நிறைவேற்றித் தந்தருள்வார் திருக்குமரன்.
பரணி நட்சத்திரம், கிருத்திகை நட்சத்திரம், பூசம் நட்சத்திரம் முதலான நாட்களிலும் சஷ்டி திதியிலும் காஞ்சி குமரக்கோட்டத்துக்கு வந்து 108 முறை பிராகார வலம் வந்து, குமரக்கோட்டம் சுப்ரமண்ய சுவாமியை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். குமரக்கோட்டம் முருகன் நம் குறைகளையெல்லாம் போக்கி அருளுவான். கடன் தொல்லைகளையெல் லாம் நீக்கி அருளுவான். சொந்த வீடு யோகத்தைத் தந்தருளுவான்.