fbpx

காஞ்சி காமாட்சி வரலாறு

மாயை அகற்றி ஞானம் அருளும் காஞ்சி காமாட்சி!
தேவியின் சக்தி பீடங்களாக சிறப்புற்று விளங்கும் 51 சக்தி பீடங்களில், காஞ்சி காமாட்சி அம்மனின் காமகோடி பீடமும் ஒன்று. காஞ்சி என்றாலே காமாட்சிதான் என்று சொல்லும்படி காமாட்சி அம்மனால் மகிமை பெற்ற தலம் காஞ்சி. `கா’ என்றால் விருப்பம் என்று பொருள். மனிதர்களின் விருப்பங்களை ஆள்பவள் என்பதாலும், நிறைவேற்றுபவள் என்பதாலும், அம்பிகைக்கு காமாட்சி என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு மகான் அம்பிகையைப் போற்றி ஸ்லோகங்களை இயற்றி இருக்கிறார்கள். கிருதயுகத்தில் துர்வாசரரால் 2,000 ஸ்லோகங்களாலும், திரேதாயுகத்தில் பரசுராமரால் 1,500 ஸ்லோகங்களாலும், துவாபரயுகத்தில் தௌமியாசார்யரால் 1,000 ஸ்லோகங்களாலும், கலியுகத்தில் ஆதிசங்கரரால் 500 ஸ்லோகங்களாலும் போற்றி வழிபடப் பெற்றவள் காஞ்சி காமாட்சி அம்மன்.

காஞ்சியில் காமாட்சி ஒன்பது வயது சிறுமியாகத் தோன்றி, பண்டாசுரன் என்னும் அசுரனை வதம் செய்தாள். பண்டாசுர வதம் முடிந்ததும், அம்பிகை ஆகாயத்தில் மறைந்திருந்தாள். பண்டாசுரனை வதம் செய்தது யார் என்று தெரியாமல், தேவர்கள் அனைவரும் திகைத்து நின்ற வேளையில், காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களை 24 தூண்களாகவும், நான்கு வேதங்களை நான்கு சுவர்களாகவும் கொண்டு ஒரு மண்டபம் எழுப்பும்படி கூறியதுடன், `அந்த இடத்தில் சுமங்கலிப் பெண், கன்றுடன் கூடிய பசு, கண்ணாடி, தீபம் ஆகியவை இருக்கட்டும். அப்போது நான் யார் என்று காட்டுகிறேன்’ என்றும் அசரீரியாக தேவியின் குரல் ஒலித்தது. தேவர்களும் அப்படியே செய்ய, அன்னை சிறுமியாக அவர்களுக்குக் காட்சி தந்தாள். அன்னையின் உத்தரவின்படி கதவுகளை மூடிவிட்டு, வெளியில் இருந்தபடியே தேவர்கள் அம்பிகையை ஸ்தோத்திரம் செய்தனர். மறுநாள் காலையில் கதவுகளைத் திறந்தபோது, அன்னை காமாட்சியாக அவர்களுக்கு தரிசனம் தந்தாள். இப்படி அன்னை காமாட்சியாக காட்சி தந்த நாள், சுவயம்புவ மன்வந்த்ரம், பங்குனி மாதம், கிருஷ்ணபட்ச, பிரதமை திதியுடன் கூடிய பூரம் நட்சத்திரம் ஆகும்.

காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரி, மூக கவியின் மூக பஞ்சசதீ, துர்வாசரின் ஆர்யா த்விசதி ஆகிய ஸ்தோத்திரங்கள் மிகவும் ப்ரீதியானவை.

கருவறையில் அம்பிகை பத்மாசன கோலத்தில் கரும்பு வில்லும், புஷ்ப பாணமும் கொண்டு எழிலார்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பிகை பத்மாசன கோலத்தில் வீற்றிருப்பது மிகவும் விசேஷமாகும்.

கருவறையில், அம்பிகையின் வலப் புறத்தில் ஒற்றைக் காலில் பஞ்சாக்னி நடுவில் நின்றபடி காட்சி தரும் அம்மனையும் நாம் தரிசிக்கலாம்.

பண்டாசுரன் என்ற அசுரனை அழிப்பதற்காகவே அவதரித்தவள் காமாட்சி அம்மன். பண்டாசுரனை வதம் செய்த உக்கிரத்துடன் திகழ்ந்த அம்மனின் திருவுருவத்தின் முன்பாக ஆதிசங்கரர் ஶ்ரீசக்ர பிரதிஷ்டை செய்து சாந்தப்படுத்தினார்.

அம்பிகையின் முன்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஶ்ரீசக்ரத்தில், `ஶ்ரீ ‘ என்பது லட்சுமியின் அம்சம் ஆகும். எனவே, காமாட்சி அம்மனை வழிபட்டால், அனைத்து ஐஸ்வர்யங்களும் உண்டாகும் என்பதுடன், மற்றவர்களுக்குக் கொடுத்து வராமல் போன கடன்களும் வந்துவிடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.

அம்பிகையின் அருட்பிரசாதமாக நமக்கு வழங்கும் குங்குமப் பிரசாதத்தை அப்படியே நெற்றியில் அணிந்துகொள்ளாமல், கருவறைக்கு வெளியில் அம்பிகையின் இடப்புறத்தில் உள்ள மாடத்தில் காட்சி தரும் திருவடிகளில் வைத்து எடுத்த பிறகே அணிந்துகொள்ள வேண்டும்.

காமாட்சி அம்மன் ஆலயத்தில் அரூபமாக லட்சுமி அருள்வதுடன், அன்னபூரணியும் சரஸ்வதியும் சந்நிதிகொண்டிருக்கின்றனர். காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றால், அனைத்து அம்மன் ஆலயங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும்.

மகா பெரியவா தம்முடைய அருளுரையில், ‘மாயைக்குக் காரணமான பிரம்ம சக்தி காமாட்சி தேவி. அவளே ஞானமும் அருள்பவள். அனைத்துக்கும் அவளுடைய கருணைதான் காரணம். மாயைகள் பலவற்றை அவள் நம்முடைய வாழ்க்கையில் நிகழ்த்தினாலும், அவற்றில் இருந்து விடுவிக்கிற கருணையும் அவளிடம் பூரணமாக உள்ளது. மாயையினால் நாம் உண்டாக்கிக்கொள்கிற கஷ்டங்களுக்கும் துக்கங்களுக்கும் காரணம் நம்முடைய இந்திரியங்களும் மனசும்தான். இந்திரிய சுகங்களின் வழியில் நம்முடைய மனதைச் செலுத்தி, நம்முடைய ஸ்வபாவமான ஆத்ம சுகத்தை மறந்துவிடுகிறோம். பஞ்சேந்திரியங்களும், மனமும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. இவற்றுக்குக் காரணம் மாயை. அந்த மாயையே இவற்றைச் சுத்தப்படுத்தி, இந்திரிய விகாரங்களில் இருந்தும், மன சஞ்சலங்களில் இருந்தும் ஜீவனை விடுவிப்பதற்காகவே அம்பிகை காமாக்ஷியாக வருகிறாள்” என்று அருளி உள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram