fbpx

காளிகாட் காளி கோயில் – கொல்கத்தா

51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் காளிகாட் காளி கோயில் கொல்கத்தாவின் டாலிகஞ்ச் எனும் பகுதியில் பாகீரதி (ஹூக்ளி) நதிக்கரையில் அமைந்துள்ளது. கல்கத்தா என்ற பெயர் காளிகட்டா (காளிகாட்) என்ற பெயரில் இருந்து வந்ததாகக் கூறுகிறார்கள்.

தோரணவாயில்

காட் என்பது தீர்த்தக் கட்டம் எனப்படும் நதியின் படித்துறையாகும்.
காளிகாட் என்பது கோவில் அமைந்துள்ள ஆதி கங்கை ஆற்றங்கரையின் படித்துறையைக் குறிப்பதாகும். அந்நாளில் பாகீரதி நதியையொட்டி இருந்த கோவில் காலப்போக்கில் நதியின் போக்கு விலகிச் செல்ல, இப்போது சிறு கால்வாய் போன்று ஓடும் ஆதிகங்கையின் கரையோரத்தில் உள்ளது. ஆதி கங்கை ஹுக்ளி நதியின் பழைய தடம் என்பதாலேயே “ஆதி” எனும் அடைமொழி சேர்ந்தது.

இக்கோவிலில் இருக்கும் காளி மாதாவை அனைத்து மதத்தினரும் வழிபடுகின்றனர்
இப்போதைய கோவிலின் அமைப்பு 200 ஆண்டு காலப் பழமையானதாக அறியப்பட்டாலும், 15 மற்றும் 17ஆம் நூற்றாண்டுகளின் இலக்கியப் பதிவுகளிலும் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் கிடைத்துள்ளன. இங்கு முதலாம் குமாரகுப்தா காலத்திய நாணயங்கள் கண்டெடுக்கப் பட்டதும் அதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

சிறு குடிசையாக இருந்த இத்தலத்தை 16ஆம் நூற்றாண்டில் சிறு கோயிலாக மாற்றியவர் அரசர் மானசிங். பின் 1806 ஆம் ஆண்டில் சபர்ணா ராய் செளத்ரி குடும்பத்தினர் முன்னின்றி தற்போதைய கோவில் அமைப்பைக் கட்டியுள்ளனர். சக்தி பீடத்தில் காளி அருள்பாலிக்க, க்ஷேத்ரபாலகரை நகுலேஷ்வரர் என வழிபடுகின்றனர்.

கொல்கத்தாவில் பல காளி கோவில்கள் இருப்பினும் இந்த ஆலயமே கொல்கத்தா காளி கோவிலாக அறியப்படுகிறது. இக்கோவிலுக்கு இருவேறு விதமான தலவரலாறுகள் உள்ளன.

ஒன்று:
தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட சதி தேவி (தாட்சாயிணி) நெருப்பில் விழுந்து உயிர் துறக்க, இறந்த மனைவியின் உடலைச் சுமந்துகொண்டு கடுங்கோபத்துடன் ஊழித் தாண்டவம் ஆடினார் சிவபெருமான். இதனால் எங்கும் இருள் சூழ்ந்து உலகமே அழியும் நிலை உருவாக, தேவர்களும் முனிவர்களும் மகாவிஷ்ணுவிடம் சரணடைந்தனர். விஷ்ணு பகவான் தன் சக்கராயுதத்தால் சதிதேவியின் உடலை 51 துண்டுகளாக அறுத்து பூமியில் வீழ்த்தினார். அந்த உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் சக்தி பீடங்கள் என்று அழைக்கப்பட்டு, அவை புனிதமாகப் போற்றி வணங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் காளிகாட் காளி கோவில் சதிதேவியின் வலது காலின் விரல்கள் (கட்டை விரல் தவிர்த்து) விழுந்த இடமாகப் போற்றப்பட்டு தந்திர சூடாமணி ( Tantra Chudamani – சமஸ்கிரதத்தில் எழுதப்பட்ட மந்திர தந்திரங்கள் பற்றிய நூலாகும்) கூறும் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.

கங்கை, வங்கக் கடலுடன் கலக்கும் இடத்தை கங்கா சாகர் என்பர். பழங்காலத்தில் அந்த முகத்துவாரத்தில் கபில முனிவர் வசித்து வந்தார். அங்கு இன்றும் அவர் பெயரில் ஒரு சிறு கோயில் உள்ளது. ஒரு முறை சில காபாலிக சன்னியாசிகள் கங்கா சாகரில் புனித நீராடி கபில முனிவரை தரிசிக்க அடர்ந்த காட்டு வழியே சென்றனர். பாதையில் அவர்களுக்கு விரல்கள் வடிவில் ஓர் அதிசயப் பாறை தென்பட்டது. அது காளியின் சாயலில் அவர்களுக்குத் தோற்றமளித்தது. அந்த காபாலிகர்கள், நரபலியை மனதில் கொண்டு அந்தப் பாறையை அங்கேயே ஸ்தாபித்து தங்களது முறைப்படி வழிபட்டனர். தந்திர சாஸ்திரப்படி நரபலி கொடுப்பது அக்கால வழக்கம். அந்தச் சிலையே, இன்றைய காளிகாட் காளி அம்மன் என்கிறார்கள்.

காளிகா புராணம் கூறும் நான்கு ஆதி சக்தி பீடங்களிலும் இக்கோவில் வருகிறது. ஆனால் காளிகா புராணத்தில் தேவியின் முகம் விழுந்த சக்தி பீடம் என்று கூறப்படுகிறது.

மற்றொரு தல வரலாறு:
காளிகாட் காளி கோயிலைச் சுற்றி முன்பு காடு மண்டி வளர்ந்திருந்ததாம். அந்தக் காலத்தில் இந்த தேவியை ஆத்மராம் என்கிற பக்தன் ஆழ்ந்த பக்தியோடு ஆராதித்து வந்தான். மாலை நேரத்தில் பாகீரதிக் கரையில் அவன் ஜெபம் செய்யும்போது கண்களைப் பறிக்கும் ஒளிக்கதிர் ஒன்று திடீரென்று தோன்றியது. அதைக் கண்டு வியந்தான் ஆத்மராம். ஒளி வந்த இடத்தை மறுநாள் காலையில் வந்து பார்த்த போது, தெளிவான தண்ணீருக்கு அடியில் மனிதக் கால் விரல்கள் போல் வடிக்கப்பட்ட சிறு கல் ஒன்றைக் கண்டான். அத்துடன் அவன் அன்றிரவு ஒரு கனவும் கண்டான். அந்தக் கல்லில் தென்பட்ட விரல்கள் தாட்சாயிணியின் வலக்கால் விரல்கள் என்று உணர்ந்து, அதை எடுத்து வந்து தேவியின் பாதங்களை ஒட்டி வைத்து அதற்கும் பூஜை செய்யத் தொடங்கினான். அந்தப் புனித இடமே காளி தேவியின் மகா சக்தி பீடமாயிற்று.

கல் கிடந்த இடத்தின் அருகிலேயே ஆத்மராமுக்கு ஒரு சிவலிங்கமும் கிடைத்தது. சிவலிங்கத்துக்கு நகுலேஷ்வர பைரவர் என்று நாமம் சூட்டி காளி சிலையின் அருகிலேயே அமைத்து வழிபட்டான். விரல்கள் போல் காணப்பட்ட அந்தக் கல், பின்னர் ஒரு வெள்ளிப் பேழைக்குள் வைக்கப்பட்டு இப்போதைய காளி சிலையின் அடியில் வடகிழக்கு மூலையில் வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

கோவிலுக்குச் செல்ல சிறந்த நேரம் கூட்டம் அதிகமில்லாத அதிகாலை அல்லது பிற்பகல் நேரம் என்கிறார்கள். நாங்களும் காலை வேளையிலேயே சென்று விட்டோம். இந்த நுழைவுத் தோரண வாயிலில் இருந்து சுமார் அரை அல்லது முக்கால் கிலோ மீட்டர், கீழிருக்கும் சாலை வழியாகச் சென்ற பின் ஓரிடத்தில் இடப்பக்கமாகத் திரும்பிச் சிறு சந்து வழியாகச் சென்று கோவிலை அடைய வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram