fbpx

குருநாதர் பாம்பாட்டிசித்தர் தரிசனம்
மருதமலை கோயில்

“குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்” என தமிழ் கடவுள் முருகனின் மகிமையை பற்றி கூறுவர். தன்னை தவமிருந்து வழிபடுபவர்கள் அனைவரையும் மேலான நிலைக்கு உயர்த்துபவர் முருகன். அப்படி அவரின் காட்சி கிடைக்க “பாம்பாட்டி சித்தர்” தவம் செய்து சித்தி நிலையடைந்த “மருதமலையையும்” அங்கிருக்கும் பாலதண்டாயுத பாணி முருகன் கோவிலைப் பற்றியும் இங்கு தெரிந்து கொள்வோம்.

மருதமலை கோவில் தல வரலாறு
சுமார் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில் இது என கூறப்படுகிறது. இங்கு கோவில் கொண்டிருக்கும் முருகன் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகனாக கருதப்பட்டு தண்டாயுதபாணி என அழைக்கப்படுகிறார். இங்கு கோவில் கொண்டிருக்கும் விநாயகர் மற்றும் முருக பெருமான் சுயம்பு என்பது ஒரு அதிசயமான விடயம்.18 சித்தர்களில் ஒருவரான “பாம்பாட்டி சித்தர்” தனது மனித வாழ்க்கையில் பாம்புகளை பிடித்து அதை ஆட்டுவித்து வாழ்க்கை நடத்தி வந்தார். ஒரு முறை காட்டில் சித்தர் ஒருவர் இவருக்கு உன் உடலுக்குள் இருக்கும் குண்டலினி பாம்பை அறிய முயற்சி செய் என்று அறிவுரை கூற, அதன் படியே இந்த மருதமலை குகைக்குள் தியானத்திலிருந்த பாம்பாட்டி சித்தர், இறுதியில் முருகனின் காட்சி பெற்று சித்தரானார். இவரது ஞானப்பாடல்களில் பாம்பை முன்னிறுத்தி பாடியதாலும், இவர் முன்வாழ்வில் பாம்பாட்டியாக இருந்ததாலும் இவர் “பாம்பாட்டி சித்தர்” என அழைக்கப்பட்டார். மருத மரங்கள் நிறைந்திருக்கும் இவ்விடத்தில் கோவில் கொண்ட முருகனுக்கு மருதாச்சல மூர்த்தி என்ற பெயரும் உண்டு.

மலை மீதிருக்கும் இக்கோவிலுக்கு 837 படிகள் ஏறி செல்ல வேண்டும். இங்கு வரதராஜ பெருமாளுக்கும், சப்த கன்னியருக்கும் தனி சந்நிதிகள் இருக்கின்றன. இங்கிருக்கும் விநாயகப் பெருமான் “வன்னி, அரசு, வேம்பு, அத்தி, கோரக்கட்டை” எனப்படும் ஐந்து மரங்களுக்கடியில் கோவில் கொண்டிருப்பதால் “பஞ்ச விருட்ச விநாயகர்” என அழைக்கப்படுகிறார். இந்த கோவிலில் பாம்பாட்டி சித்தருக்கும், சிவன் – பார்வதி, வள்ளி தெய்வானையோடு இருக்கும் முருகன் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. இந்த மருதமலை கோவிலுக்கு முருகனின் “7 ஆம் படை வீடு” என்ற ஒரு பெயரும் உள்ளது.

தல சிறப்பு

“தைப்பூசம்” போன்ற விஷேஷ நாட்களில் பக்தர்கள் மருதமலை முருகனுக்கு பால்குடம் தூக்கிவந்து அபிஷேகம் செய்கின்றனர். இங்கு தல விருட்சமாக இருக்கும் “மருத மரத்தில்” திருமணம், மற்றும் பிள்ளைவரம் வேண்டி புனித கயிறு மற்றும் தொட்டில்களை கட்டுகின்றனர் பக்தர்கள். இங்கிருக்கும் பாம்பாட்டி சித்தரின் சந்நிதியில் தரப்படும் விபூதி பல நோய்களை போக்கும் தன்மை கொண்டது என ஆணித்தரமாக பக்தர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பாம்புக்கடி விஷத்தன்மையை முறிக்கும் சக்தி கொண்டது எனக் கூறப்படுகிறது. இங்கு பாம்பாட்டி சித்தர் சந்நிதியில் வைக்கப்படும் அபிஷேக பால் எப்போதும் அளவில் சிறிது குறைகிறது. இன்றும் அருவ வடிவில் இங்கிருக்கும் பாம்பாட்டி சித்தர், அப்பாலை கொண்டு முருகனை அபிஷேகம் செய்து வழிபடுவதால் இது ஏற்படுவதாக அனைவரும் கருதுகின்றனர். எப்படிப்பட்ட நாக தோஷங்களை கொண்டவர்களும் இங்கு வந்து வழிபடும் போது அந்த தோஷங்களை எல்லாம் பாம்பாட்டி சித்தர் நீக்கி அருள்வதாக அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்தாக உள்ளது.

வேறெங்கும் காணமுடியாத வகையில் முருகன் குதிரையின் மீது அமர்ந்திருக்கும் சிலை இக்கோவிலில் உள்ளது. ஒருமுறை இக்கோவிலில் கொள்ளையடித்து சென்ற கள்ளர்களை முருகப்பெருமான் குதிரையில் ஏறி சென்று அவர்களை தடுத்து, பாறைகளாக மாற்றியதாக கூறுகின்றனர். அப்படி முருகன் குதிரையின் மீதமர்ந்து சென்ற போது அக்குதிரையின் கால் குளம்புகள் பாறையில் பதிந்திருப்பதை இன்றும் காண முடிகிறது.

கோவில் அமைவிடம்

மருதமலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில், கோயம்புத்தூர் நகரிலிருந்து சற்று தொலைவில் மருதமலை எனப்படும் மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு சிறிய குன்றில் அமைந்திருக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram