fbpx

தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி, அறுபத்து நான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகவும். தட்சிணம் என்றால் தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் கொள்ளலாம். த-அறிவு, க்ஷ-தெளிவு, ண-ஞானம் என இம்மூன்றும் பீஜ மந்திரங்களும், அவற்றின் பொருளாகும்.

தட்சிணாமூர்த்தியை தென் திசை கடவுள் என்று சைவர்கள் குறிப்பிடுகின்றார்கள். சிவ தலங்களில் கருவறையின் தென் சுவரின் வெளிப்புறத்தில் இவ்வடிவம் காணப்படுகிறது. தட்சிணாமூர்த்தியை குரு என்ற பெயரிலும் அழைக்கின்றார்கள்.
பஞ்சகுண சிவமூர்த்திகளில் தட்சிணாமூர்த்தி சாந்த மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்.
திருவுருவக் காரணம்

படைப்பின் கடவுளான பிரம்மாவின் குமார்கள் எனப்படும் சனகாதி முனிவர்கள் ஞானம் பெறுவதற்காக குருவினை நாடிச் சென்றார்கள். பிரம்மா படைப்பு தொழிலில் மூழ்கியதாலும், திருமால் இல்லறத்தில் ஈடுபடுவதாலும் அவர்களை விலக்கி வேறு குருவினை தேடிச் சென்றார்கள்.

இதனை உணர்ந்த சிவபெருமான் தானும் சத்தியுடன் இருப்பதை கண்டால் பிரம்ம குமாரர்கள் ஏமாற்றம் அடைந்துவிடுவார்கள் என்று பதினாறு வயது சிறுவனாக வடவிருட்சத்தின் கீழ் அமர்ந்து வரவேற்றார். பிரம்ம குமாரர்களின் ஞானத்தினைப் பற்றிய கேள்விகளுக்கு தட்சிணாமூர்த்தியாக இருந்து சிவபெருமான் பதில் தந்தார். எனினும் ஞானத்தின் கேள்விகள் அதிகரித்தவண்ணமே இருந்தன. பின்பு தட்சிணாமூர்த்தி சின் முத்திரையை அவர்களுக்கு காண்மித்தார். பிரம்ம குமாரர்களுக்கு அமைதியும், ஆனந்தமும் உண்டாயிற்று. அவர்கள் ஞானம் பெற்றனர்.
உருவம்

தட்சிணாமூர்த்தி நான்கு கைகள் கொண்டு ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்துள்ளார். அவருடைய வலதுகால் ‘அபஸ்மரா’ என்ற அரக்கனை மிதித்த நிலையில் அமர்ந்துள்ளார். அபஸ்மரா அறியாமையை / இருளை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் / ஒரு பாம்பையும் பிடித்துள்ளார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பை கொண்டுள்ளார். அவருடைய கீழ் இடது கையில் தர்பைப் புல்லை / ஓலைச்சுவடி வைத்துள்ளார், கீழ் வலது கையில் ஞான முத்திரையையும் காட்டுகிறார். அவர் தியானத்தில் இருப்பதாக கருதப்படுகிறது.

பாடல்

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.
பாடல்

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.

(திருவிளையாடற் புராணம் – பாடல் – 13)

விளக்கம்

கல்லால மரத்தின் (ஆலமரம்) கீழ் இருந்து, நான்மறை, ஆறுஅங்கம் முதலானவற்றை கற்றுணர்ந்த கேட்டலில் வல்லுநர்கள் ஆகிய சநகர் முதலிய நான்குமுனிவர்கட்கும், வாக்கியலைக் கடந்த நிறைவாயும், வேதங்கட்கு அப்பாற்பட்டதாயும், எல்லாமாயும் அவற்றுள் ஒன்றும் அல்லதுமாயும் உள்ளதன் உண்மையை உள்ளபடி இருந்து காண்பித்து குறிப்பாலுணர்த்திய தட்சிணாமூர்த்தியை இடையறாமல் நினைந்து பிறவிக் கட்டாகிய பகையை வெல்வாம்

நான்மறை: ரிக்கு, எசுர், சாமம், அதர்வணம் / தைத்திரியம், பௌடிகம், தலவகாரம், சாமம் ஆறங்கம் : சிட்சை, வியாகரணம், நிருத்தம், கற்பம் சந்தம், சோதிடம்
அமைப்பின் சிறப்புகள்

திருமேனி
பளிங்கு போன்ற வெண்ணிறம் தூய்மையை உணர்த்தும்.

வலப் பாதம் முயலகனை மிதித்தமர்ந்திருத்தல்
அனைத்து தீமைகளையும் அடக்கி ஆளும் வலிமை.

திருக்கரத்திலுள்ள நூல்
இது சிவஞான போதமாகும். ஞானங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி கொண்டு திகழ்கின்றது. ஞானத்தாலேயே வீடு பேறுகிட்டும்.

திருக்கரத்தில் உருத்திராக்கமாலை
36 அல்லது 96 தத்துவங்களை உணர்த்துவது. உருத்திராக்க மாலை கொண்டு திருவைந்தெழுத்தைப் பன்முறை எண்ணிப் பல்காலும் உருவேற்றித் தியானித்தலே ஞானம்பெறும் நெறி என உணர்த்தலும் ஆகும்.

இடக்கரத்தில் அமிர்தகலசம்
அனைத்து உயிர்களுக்கும் பேரின்பம் அளிக்க வல்ல ஆற்றல்.

சின்முத்திரை
ஞானத்தின் அடையாளம், பெருவிரலின் அடிப்பாகத்தைச் சுட்டுவிரல் தொடவும், ஏனைய மூன்று விரல்களும் விலகி நிற்கும் முத்திரை இது. பெருவிரல் இறைவனையும், சுட்டுவிரல் உயிரையும், மற்ற மூன்று விரல்களுள் நடுவிரல் ஆணவத்தையும், மோதிரவிரல் கன்மத்தையும், சுண்டு விரல் மாயையையும் குறிக்கும். உயிரானது மும்மலங்களின்றும் நீங்கி இறைவன் திருவடி அடைந்து இன்புறுவதே இம்முத்திரையின் தத்துவமாகும்.

புலித்தோல்
தீயசக்திகளை அடக்கியாளும் பேராற்றல்

தாமரை மலர்மீது அமர்தல்
அன்பர் இதயதாமரையில் வீற்றிருப்பவர். தாமரை மலர் ஓங்காரத்தை உணர்த்துவது.

நெற்றிக்கண்
காமனை எரித்த கண்ணுதல்; ஞானமும் வீடும் எய்த விரும்புவோர் எவரும் ஐம்பொறி அவர்களை அறுந்தொழித்துப் புலனடக்கம் உடையராதல், துறவின் சிறப்பு.

ஆலமரமும் அதன் நிழலும்
மாயையும் அதன் காரியமாகிய உலகமும்

தென்முகம்
அவரை நோக்கி வடக்காகத் தியானிக்க வேண்டும் என்ற குறிப்பு.

அணிந்துள்ள பாம்பு
குண்டலினி சக்தியைக் குறிப்பது.

வெள்விடை
தருமம்

சூழ்ந்துள்ள விலங்குகள்
பசுபதித்தன்மை அணைத்து உயிர்களுக்கும் அவரே தலைவர்.

முயலகன்
முயலகன் வடிவம் அறியாமையைக் குறிப்பதால் அறிவுப் பிழம்பாகிய ஆலமர் செல்வன் அறியாமையாகிய முயலகனைக் காலடியில் மிதிப்பதாகக் காட்டுவது அருட்குறிப்பு. [2]

நூல்கள்

ஞான சூத்திரம், ஞானச் சுருக்கம், ஞான பஞ்சாட்சரம் என பல நூல்களை தட்சணாமூர்த்தி எழுதியுள்ளதாக சித்தர்கள் இராச்சியம் வலைதளம் கூறுகிறது.

பல திருவுருவங்கள்

ஞான தட்சிணாமூர்த்தி, வியாக்யான தட்சிணாமூர்த்தி, சக்தி தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணாமூர்த்தி, வீர தட்சிணாமூர்த்தி, லட்சுமி தட்சிணாமூர்த்தி, ராஜ தட்சிணாமூர்த்தி, பிரம்ம தட்சிணாமூர்த்தி, சுத்த தட்சிணாமூர்த்தி என்று தட்சிணாமூர்த்தி பல வடிவங்களில் உள்ளதாக ஆகமங்கள் கூறுகின்றன.

யோக தட்சிணாமூர்த்தி
முதன்மைக் கட்டுரை: யோக தட்சிணாமூர்த்தி
பிரம்ம தேவரின் மகன்களான சனகர், சனாதனர், சனந்தனர் மற்றும் சனற்குமாரர் என்ற நால்வருக்கும் தட்சிணாமூர்த்தியாக சிவபெருமான் உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது யோக நிலையைப் பற்றியும் எடுத்துரைக்க வேண்டினர் நால்வரும். அவர்களின் வேண்டுதல்களை ஏற்று யோகம் பற்றியும் அதன் உட்கருத்துப்பற்றியும் சிவபெருமான் எடுத்துரைத்தார். யோகத்தினை புரிந்துகொள்ள யோகநிலையில் இருந்துகாட்டினார். இவ்வாறு சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாக யோக நிலையில் இருந்த தருணத்தினை யோக தட்சிணாமூர்த்தி என்று வழங்குகின்றனர்.
வீணா தட்சிணாமூர்த்தி
சாம வேதத்தினை வீணையில் இசைத்திட விரும்பிய நாரத முனிவரும், சுக்ர முனிவர்களும் சிவபெருமானை வேண்டிக் கொண்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சிவபெருமான் இசை ஞானத்தினையும், சாம வேதத்தின் இசையையும் அவர்களுக்குக் கற்பித்தார். வீணையை உருவாக்குவது பற்றியும், அதனை முறையாக இசைப்பது பற்றியும் வீணா தட்சிணா மூர்த்தியாகிய சிவபெருமான் எடுத்துரைத்தார்.

கோயில்கள்

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியறை எனும் ஊரில் உள்ள சிவாலயத்தில்
பிரதான நுழைவாயிலில் தட்சிணாமூர்த்தி மூலவரை சுற்றி வலம் வரும் வகையில் தனியாக அமைத்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் பட்டமங்கலத்தில் அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில் உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram