fbpx

திருச்சி உஜ்ஜையினி ஓம் காளியம்மன் தரிசனம்

திருச்சி உஜ்ஜையினி ஓம் காளியம்மன் தரிசனம்
மூலவர் – காளியம்மன், ஆனந்தசவுபாக்கிய சுந்தரி
உற்சவர் – அழகம்மை
தல விருட்சம் – மகிழ மரம்
பழமை – 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் – மாகாளிக்குடி
மாவட்டம் – திருச்சி
மாநிலம் – தமிழ்நாடு
மத்திய பிரதேசம் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தவர் விக்ரமாதித்தன். காட்டில் ஆறு மாதமும், நாட்டில் ஆறு மாதமும் ஆட்சி செய்வது வழக்கம். இவரது குலதெய்வம் உஜ்ஜயினி மாகாளி. இவளைத்தான் தமிழகத்தில் “உச்சினி மாகாளி, உச்சிமாகாளி” என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

ஒரு சமயம் காட்டில் ஆட்சி செய்ய, காவிரிக்கரையிலுள்ள மகாகாளிகுடி காட்டுக்கு, தான் வழிபட்ட காளி சிலையுடன் வந்தார். இங்கே தங்கிப் பூசை செய்து கொண்டிருந்தார். அவர் நாடு திரும்பும்போது, தான் வழிபட்ட சிலையை எடுக்க முயன்றார். முடியவில்லை. அம்பாளைத் தன்னுடன் வரும்படி எவ்வளவோ கெஞ்சினார். அப்போது அவர் முன் தோன்றிய காளி, இந்த இடத்திலும் தனது சக்தி தங்கும் என்று கூறி விட்டாள். அதைத் தொடர்ந்து அம்பாளுக்கு கோயில் கட்டி வழிபாட்டை துவக்கினார்.

ஒருநாள் காளி, “இங்கிருந்து 2 கல் தொலைவில் ஒரு சிவாலயம் உள்ளது. அந்த சிவன் கோயிலில் உள்ள முருங்கை மரத்தில் ஒரு வேதாளம் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதை நீ கீழே இறக்கினால் அது உனக்கு 32 கதைகளைச் சொல்லும். அதைவென்று அடிமைப்படுத்தினால், உனக்கு எல்லா உதவிகளையும் செய்யும். அதன்படி நீ நடந்தால் உனக்கு உன்னத பதவி கிடைக்கும்” எனக் கூறி மறைந்தாள்.

“வேதாளமும் விக்கிரமாதித்தனும்” கதை நடந்த தலம் இதுதான் என்கின்றனர்.

வேதாளத்தின் கதை:

அந்த சிவன் கோயிலின் அர்ச்சகர், கருவறையில் ஈசன், உமையம்மைக்கு 32 வேதாந்த ரகசியங்களை கதைகளாகச் சொல்லிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்க நேர்ந்தது. சிவன் கோபமுற்று, அங்கிருந்த முருங்கை மரத்தில் வேதாளமாகத் தொங்கும்படியும், விக்கிரமாதித்தனால் அவர் சாபம் நீங்கும் எனவும் கூறினார். சிவனருளால், காளியின் வழிகாட்டலில், அர்ச்சகருக்கு விக்கிரமாதித்தன் மூலமாக சாப விமோசனம் கிடைத்தது.

சிவனும் சக்தியும் எவ்வித வேறுபாடும் இல்லாதவர்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அர்த்தநாரீசுவர வடிவம் அமைந்தது. பார்வதிதேவி தனக்கும் சிவனைப்போலவே பூசைகள் நடக்கவேண்டும் எனக் கேட்டதன் விளைவாக இவ்வாறு நடந்ததாகச் சொல்வர்.
இதை மெய்ப்பிக்கும் வகையில் அம்பாளுக்குள் சிவன் அடங்கும் விதத்தில் மாகாளிக்குடியில் ஆனந்த சவுபாக்கிய சுந்தரியாக அம்பிகை எழுந்தருளினாள்.

சிவபெருமானே உமையாளை இடப்பாகத்தில் கொண்டு உமையொருபாகனாகக் காட்சி தருகிறார். அம்பிகை அர்த்தநாரீசுவர கோலத்தில் ஒரு மார்பு இல்லாமல் காட்சிதருவதை திருச்சி மாவட்டம் மாகாளிக்குடி ஆனந்த சவுபாக்கிய சுந்தரி கோயிலில் மட்டுமே காணமுடியும்.

இந்த கோயிலில் உஜ்ஜைனி காளியம்மனும் காட்சி தருகிறாள். விக்கிரமாதித்தன் இந்த சிலையை இக்கோயிலுக்கு தந்ததாக கூறப்படுகிறது. இதை மெய்ப்பிக்கும் வைகயில் விக்கிரமாதித்தனுடன் வந்த வேதாளமும், விக்கிரமாதித்தனின் மதியுக மந்திரியான கழுவனும் இங்கு வந்துள்ளனர். வேதாளத்திற்கும் கழுவனுக்கும் இங்கு சிலைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. வேறு எந்த தலத்திலும் வேதாளத்திற்கு சிலை கிடையாது. இவர்களில் கழுவனை வழிபட்டால் விடாமுயற்சி செய்யும் தன்மையைப் பெற்று, எதிலும் வெற்றி பெறும் திறன் உண்டாகும். “கழுவன் சாதனை” என்ற வார்த்தை இப்போதும் வழக்கில் உள்ளது. இதற்கு “தனது நிலையிலேயே நிலைத்திருத்தல், எதற்கும் அசையாமல் இருத்தல்” என்று பொருள். கருவறை விமானம் மாறுபட்ட தோற்றத்துடன், நான்கு மூலைகளிலும் அம்பாளுக்குரிய சிம்மத்திற்குப் பதிலாக ரிடபத்துடன் காணப்படுகிறது. வாயுமூலையில் சுதை வடிவில் முருகப்பெருமானும், அவருக்கு மேலுள்ள விமானத்தில் சீனதேசத்து மனித உருவமும் உள்ளது. இவர் பழநி முருகனுக்கு நவபாஷாண சிலை செய்த போகர் என்கின்றனர். போகர் சீன தேசத்தவராயிருக்கலாம் எனும் ஐயம் இன்னும் உள்ளது.

தர்மசாஸ்தா எங்கும் காண இயலாதவாறு மனைவி, குழந்தை, யானை வாகனம் சகிதமாக அய்யனராக வீற்றிருக்கிறார். கருவறையிலுள்ள அம்பாளை ஆனந்த சவுபாக்ய சுந்தரி என்கின்றனர். புடைப்புச் சிற்பமாக, தாண்டவ கோலத்தில் சாந்தபாவனையில், விரித்த சடைகளோடு அசுர சம்காரம் செய்யும் நிலையில் காணப்படுகிறாள். மேலும், அர்த்தநாரீசுவரர் சந்நிதியில், வழக்கமான தோற்றத்துக்கு மாறாக, அம்பாள் வலப்புறமும், இறைவன் இடப்புறமுமாக உள்ளனர்

இங்கு காஞ்சி மகா பெரியவர் அளித்த ஐம்பொன்னால் ஆன நர்த்தன விநாயகர் சிலையும், பஞ்சலோக விநாயகர் சிலை ஒன்றும் உள்ளது.

நோய் தீர்க்கும் தீர்த்தம்:

திருநந்தவனத்தில் சக்தி தீர்த்த கிணறு உள்ளது. இங்கு சிவபெருமான் தவம் செய்வதாகவும், அவரது
சடைமுடியின் கங்கையே இந்த தீர்த்தம் என்றும் நம்பப்படுகிறது. இந்தக் கிணற்றின் அடியில் நீரூற்று இல்லாமல், கிணற்றின் பக்கவாட்டு ஊற்று மூலம் தீர்த்தம் பெறப்படுகிறது. இந்த தீர்த்தத்தை தெளித்தால் தோல் நோய், சித்த பிரமை தீர்வதாக நம்பிக்கையுள்ளது. பெண்கள் இந்த தீர்த்தத்தில் நீர் இறைக்க கூடாது ஆண்கள் இறைத்து பெண்களுக்கு வழங்கலாம்.

பெருமாள் சந்நிதி:

அலமேலு மங்கையுடன் பிரசன்ன வெங்கடேசுவரர் இங்கு அருள்பாலிக்கிறார். இவர் வெங்கடேசனாக இருந்தாலும் கையில் கதை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரை “கதாதரர்” என்றும் அழைக்கின்றனர். மரணபயம் நீக்குபவராக இவர் அருள்கிறார். இவரை வணங்கி வருவதால் அகாலமரணம் ஏற்படாது என்பதும், பூர்ண ஆயுள் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

வெண்ணெய் அபிஷேகம்:

குழந்தை ரூபத்தில் சந்தான கோபாலகிருஷ்ணர் அருள்பாலிக்கிறார். குழந்தை பாக்கியம், இளமை, செல்வம், ஆயுள் போன்ற நற்பலன்களை வழங்கும் கருணாமூர்த்தியாகவும் இவர் திகழ்கிறார். இவருக்கு வெண்ணெய் அபிசேகம் செய்து, அன்னதானம் வழங்குவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

விலங்குத்துறையான்:

காவல் தெய்வமான விலங்குத்துறையான் என்ற கருப்பண்ண சுவாமிக்கு பொங்கல் வைத்தால், பாதுகாப்பான நீண்டகால வாழ்வு கிடைப்பதாக நம்பிக்கையுள்ளது. இவர் திருமாலின் அம்சமாக விளங்குகிறார். சங்கிலிக் கருப்பு என்றும் அழைப்பர். பொம்மியம்மை, வெள்ளையம்மை சமேத மதுரை வீரசுவாமியும் அருள்பாலிக்கிறார். அம்பிகையின் தேரோட்டம் நடக்கும்போது அவளுக்கு பாதுகாப்பாக இவர் வருவதாக ஐதீகம். தேர் நிலைக்கு வந்தவுடன் மீண்டும் இவரைக் கட்டிவிடுவார்கள். அதற்கு அடையாளமாக விலங்கு மீண்டும் பூட்டப்பட்டுவிடும். நவக்கிரகங்கள் தங்கள் துணைவியருடன் காட்சி தருகின்றனர்.

பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே கருவறை விமானத்தின் மீது ஏககலசம் (ஒற்றை கலசம்) இருக்கும். அதுபோல இந்த அம்பாள் கோயிலிலும் ஏககலசம் உள்ளது. அம்மன் கோயில்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கலசங்கள் இருப்பதே வழமை. இதிலிருந்து சிவனே இங்கு சக்திக்குள் அடங்கியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.

எல்லா கோயில்களிலும், நுழைவுப்பகுதியில் இடது வாயிலில் விநாயகரும், வலதுபுறம் சுப்பிரமணியரும் காட்சிதருவர். ஆனால் இங்கு வலது புறத்தில் வலம்புரி விநாயகரும், இடதுபுறம் ஆஞ்சநேயர் சன்னதியும் உள்ளது. சிவலிங்கம் ஒன்று சுவரில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

உற்சவர் அழகம்மை நான்கு கைகளுடன் நின்ற திருக்கோலத்தில் உள்ளார். ஆனந்த சவுபாக்கிய சுந்தரிக்கு மூன்று கைகளே உள்ளன. பொதுவாக அம்மனுக்கு இரண்டு, நான்கு, எட்டு என்ற விதத்தில் கைகள் இருக்கும். ஆனால் ஒற்றைப்படையாக மூன்று கைகள் உள்ள அம்மன் இங்கு மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கையில் கபாலமும், மற்றொரு கையில் சூலமும், இன்னொரு கையில் தீச்சுடரும் ஏந்தியுள்ளார். அசுரனை வதம் செய்யும் கோலத்தில் இருந்தாலும் முகத்தில் சாந்தம் தவழ்கிறது. கோரப்பல் எதுவும் இல்லை. எனவே இவளை “ஆனந்த சவுபாக்கிய சுந்தரி” என்கிறார்கள்.

அசுரனை வதம் செய்த பிறகு ஏற்பட்ட மகிழ்ச்சியின் அடிப்படையில் இப்படி இருப்பதாக ஐதீகம்.

இத்தல விநாயரின் திருநாமம் வலம்புரி விநாயகர்.

சுற்றுப்பிரகாரத்தில் பின்னை மரத்தில் கட்டிய கிருஷ்ணனின் தவழும் நிலையிலுள்ள சிற்பம் தனி சன்னதியில் உள்ளது. இந்த கிருஷ்ணனுக்கு மொட்டை அடிக்கப்பட்டுள்ளது.

காமாட்சி அம்மன், இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகியோர் கோயிலின் சுற்றுப்பிரகார சுவர்களில் சிலை வடிவில் உள்ளனர்.

திருவிழா:

நவராத்திரி பண்டிகை பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திரவிழா 21 நாட்கள் நடக்கிறது. பவுர்ணமி, அமாவாசை, மகர சங்கராந்தி, தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனி திருவிழா, அஷ்டமி நாட்களில் விசேட பூசை உண்டு.

திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, கல்வியில் சிறந்து விளங்க இங்கு பிரார்த்திக்கலாம்.

அம்மனுக்கு அபிசேகம் செய்தும், புத்தாடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

வழிகாட்டி:

திருச்சி, சமயபுரத்திற்கு கிழக்கில் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது உஜ்ஜயினி காளியம்மன் திருக்கோயில்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram