fbpx

திருச்சி உறையூர் வெக்காளி அம்மன் தரிசனம்

வெட்டவெளியில் வீற்றிருக்கும் உறையூர் வெக்காளி அம்மன் திருக்கோவில்
வானமே கூரையாக வாழும் அன்னை, காளி என்றாலும் காட்சியில் கருணை வடிவம் காட்டும் அன்னை என பல பெருமைகள் வாய்ந்த தலமாக விளங்குவது உறையூர் வெக்காளி அம்மன் திருக்கோவில்.

குறை இல்லா கருவறை
கோவில் தோற்றம்
வெக்காளி அம்மன்
வானமே கூரையாக வாழும் அன்னை, காளி என்றாலும் காட்சியில் கருணை வடிவம் காட்டும் அன்னை, சோழ மன்னனின் தலைநகரான தலம், பெருமைமிக்க அருளாளர்கள் அவதரித்த பூமி, பழங்கோவில்கள் நிறைந்த தலம், யானையை அடக்கிய கோழி வாழ்ந்த ஊர் என பல பெருமைகள் வாய்ந்த தலமாக விளங்குவது உறையூர் வெக்காளி அம்மன் திருக்கோவில்

கல்வெட்டுச் செய்தி :

முற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கிய நகரம் இது. இன்று திருச்சிராப்பள்ளி மாநகரின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. இது ‘உறந்தை’, ‘கோழியூர்’, ‘வாகபுரி’, ‘வாரணம்’ உள்ளிட்ட பெயர்களால் அழைக்கப்பட்டிருப்பதை, அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், பெரியபுராணம் போன்ற இலக்கியங்கள் உறுதி செய்கின்றன.

தாலமி (கி.பி. 130) என்ற வெளிநாட்டு அறிஞரும், ‘பெரிப்ளஸ்’ என்ற கிரேக்க நாட்டுப் புவியியல் நூலும், உறையூர் பற்றி கூறுகின்றன. ‘உரகபுரம்’ என்ற வடமொழி சொல்லின் திரிந்த வார்த்தை தான் ‘உறையூர்’ என்றும் கூறப்படுகிறது.

சோழ மன்னன் காலத்தில், இத்தலத்திற்கு வந்த மன்னனின் பட்டத்து யானை அலங்காரத்தோடு, கம்பீரமாக பவனி வந்தது. அப்போது அதை எதிர்கொண்ட கோழி ஒன்று, சற்றும் பயம் கொள்ளாமல், சட்டெனப் பறந்து, யானையின் பிடரியின் மீது அமர்ந்து கொண்டது. இதனால் அதிர்ச்சியுற்ற பட்டத்து யானை, செய்வதறியாது நெடுநேரம் திகைத்து நின்றது. இதனால் இத்தலம் ‘கோழியூர்’ என்றும், யானையைக் குறிக்கும் விதமாக ‘வாரணம்’ என்றும் அழைக்கப்பட்டது. இதனை மெய்ப்பிக்கும் விதமாக, இத்தலத்தில் உள்ள பஞ்சவர்ணநாதர் கோவில், அம்மன் சன்னிதி கருவறை வெளிச்சுவரில், இக்காட்சி புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளதை கண்டு மகிழலாம்.

சிலப்பதிகாரத்தில் கூறப்படும் நெடுங்கிள்ளியின் மகனான பெருநற்கிள்ளி எழுப்பிய பத்தினிக் கோட்டமே ‘வெக்காளி ஆலயம்’ என கூறப்படுகிறது. மேலும், ஒட்டக்கூத்தனின் ‘தக்கயாகப் பரணி’, சைவ எல்லப்பனின் ‘செவ்வந்திப் புராணம்’ ஆகியவற்றிலும் இத்தலம் பற்றி கூறப்பட்டுள்ளது. கண்ணகியின் வடிவமே வெக்காளி என்று கூறுவோரும் உண்டு.

தலவரலாறு :

சாரமா முனிவர் என்பவர், அபூர்வ பூச்செடிகளைக் கொண்டு உறையூரில் நந்தவனம் அமைத்தார். அந்த நந்தவனத்தில் மலரும் மலர்களை மாலையாகத் தொடுத்து, அருகே உள்ள தாயுமான சுவாமிக்கு நாள்தோறும் சமர்ப்பித்து வந்தார்.

இந்த நிலையில் பூ வணிகன் ஒருவன், அந்தப் பகுதி மன்னனை மகிழ்விப்பதற்காக சாரமா முனிவரின் நந்தவனத்தில் இருந்து மலர்களை திருட்டுத்தனமாக பறித்துக் கொடுத்து வந்தான். ஒரு நாள் இதனைக் கண்டறிந்த சாரமா முனிவர், மன்னனிடம் போய் முறையிட்டார். மன்னனோ, முனிவரின் புகாரை புறக்கணித்த தோடு அல்லாமல், பூ வணிகனை ஊக்குவித்தான்.

இதனால் தவித்துப் போன சாரமா முனிவர், திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்று எண்ணி, தாயுமான சுவாமிகளிடமே தனது புகாரை சொல்லி வழிபட்டார். தனக்கு நேரும் குறைகளைக் கூட தாங்கிக் கொள்ளும் இறைவன், தன் அடியார்கள் படும் துயரைத் தாங்கிக்கொள்ள மாட்டார் என்பதே நிதர்சனமான உண்மை. இதனால் கிழக்கு நோக்கிய இறைவன், கோபக்கனல் கொண்டு மேற்குநோக்கி திருப்பினார். அவரது உக்கிரப் பார்வையால், உறையூரில் மண் மழை பொழிந்தது. இதில் அங்கு வசித்த மக்களின் வீடுகள் அழிந்தன. மக்கள் செய்வதறியாது திகைத்தனர். அனைவரும் உறையூரில் உள்ள வெக்காளி அம்மனிடம் சரண் புகுந்தனர்.

அன்னை வெக்காளி, தம் மக்களுக்காக தாயுமானவரிடம் வேண்ட, மண் மாரி பொழிவது நின்றது. மக்கள் வீடு இழந்து நின்றனர். மக்களின் துயரம் கண்டு வருந்திய அன்னை, மக்கள் அனைவருக்குமே வீடு கிடைக்கும் வரை நானும் வெட்ட வெளியிலேயே வாழ்வேன் என்று சபதம் செய்து வானமே கூரையாக வாழத் தொடங்கினாள். இன்றளவும் வீடற்றவர்கள் வாழ்ந்து வருவதால், அன்னையும் தன் சபதப்படியே வெட்ட வெளியில் வாழ்ந்து வருவதாக தல வரலாறு சொல்கிறது.

குறை இல்லா கருவறை

ஆலய அமைப்பு :

சுற்றிலும் எழிலான மண்டபம் இருக்க, அன்னை வெக்காளி மட்டும் தன் வாக்குப்படி வெட்டவெளியில் நடுநாயகமாக வடக்கு முகமாய் அருள்காட்சி வழங்குகிறாள். ஆலயத்திற்கு தெற்கு, வடக்கு வாசல்கள் உள்ளன. தெற்கு வாசலில் நுழைந்தால் வல்லப கணபதி, விசாலாட்சி சமேத விஸ்வநாதர், வள்ளி – தெய்வானை சமேத மயூர முருகன், காத்தவராயன், புலி வாகனத்துடன் கூடிய பெரியண்ணன், மதுரைவீரன், உற்சவர் வெக்காளி, வடக்கு சுவரில் துர்க்கை, பொங்கு சனீஸ்வரர் என அனைத்து சன்னிதிகளும் ஒருங்கே அமைந்துள்ளன.

அன்னை வெக்காளி, பெயரில் தான் காளி. வடிவத்தில் கருணை கொண்ட முகம். கோரைப் பற்களின் சீற்றம் கிடையாது. சிரித்த முகம், சிவந்த வாய், அக்னிச் சுவாலையுடன் கூடிய கிரீடம், அதில் நாகமும் அமைந்துள்ளது. நான்கு கரங்களில் மேற்கரங்கள் இரண்டில் உடுக்கை, பாசம், கீழே வலது கரம் சூலம் ஏந்தியிருக்கிறாள். வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டு, அரக்கனை மிதித்த விதமாக காட்சி தருகின்றாள். பொதுவாக, இடதுகாலை மடித்து காட்சிதரும் கோலத்திற்கு மாறாக, வலது காலை மடித்து காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. இது ‘வீர ஆசனம்’ என்று அழைக்கப்படுகிறது.

அம்மனின் இடது பாகத்துக்கு அருகே சூலமும், இரு பாதங்களும், கருவறையின் நான்கு மூலையில் பாதங்களும் பதிக்கப்பட்டுள்ளன. அன்னையின் மேற்புறம் வானமே கூரையாக அமைந்துள்ளது. இதே அமைப்பு திருப்பரங்குன்றத்தில் உள்ள வெயில் உகந்த காளி ஆலயத்திற்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அம்மன் சன்னிதியின் எதிரே சூலங்கள் நடப்பட்டுள்ளன. இதில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை அலுவலகத்தில் சிறு காணிக்கை செலுத்தி, ஆலயத்தில் தரும் சீட்டில் எழுதி அதனை அம்மனிடம் வைத்து எடுத்து, இந்த சூலத்தில் கட்டி விடுகின்றனர். இதனால் தங்கள் வேண்டு தல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் பங்குனியில் தொடங்கும் பிரம்மோற்சவம், சித்திரை 1-ந் தேதி நடைபெறும் தேரோட்டத்தோடு நிறைவுபெறுகிறது. இது தவிர, ஒவ்வொரு மாதமும் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன. விழாக்களுக்குக் குறைவில்லாத ஆலயமாக இது விளங்குகின்றது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ச்சியாக திறந்திருக்கும்.

சுற்றியுள்ள தலங்கள் :

உறையூரில் பஞ்சவர்ண நாதர் கோவில், தான்தோன்றீஸ்வரர் ஆலயம், நாச்சியார் கோவில், செல்லாண்டி அம்மன் திருக்கோவில் உள்ளிட்ட பல ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. இவை தவிர உறையூரைச் சுற்றிலும் உச்சிப் பிள்ளையார் கோவில், தாயுமான சுவாமி ஆலயம், திருவானைக்கா ஆலயம், உய்யக்கொண்டான் திருமலை, திருவெறும்பூர், திருநெடுங்களம், திருவாசி, திருப்பைஞ்ஞீலி, வயலூர் உள்ளிட்ட சைவத் தலங்களும், ஸ்ரீரங்கம், உத்தமர் கோவில், திருவெள்ளரை, அன்பில் எனும் வைணவத் தலங்களும் அமைந்துள்ளன. இது தவிர சமயபுரம், குணசீலம் உள்ளிட்ட பிரார்த்தனைத் தலங்களும் இருக்கின்றன.

அமைவிடம் :

திருச்சிராப்பள்ளி மாநகரின் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உறையூர் அமைந்துள்ளது. எண்ணற்ற பேருந்துகள் உறையூர் வழியே சென்று வருகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram