fbpx

திருச்செந்தூர் மகிமை

வியாழ பகவானான குரு திருச்செந்தூர் தலத்தில் வழிபட்டு தன் யந்திரத்தை ஸ்தாபித்துள்ளார். திருச்செந்தூர் தலம் குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது.

சங்க காலத்தில் வாழ்ந்த நக்கீரரும், அவருக்குப்பின் வந்த ஆதிசங்கரரும் திருச்செந்தூர் மகிமையைப் பாடியுள்ளார்கள்.

சர்வக்ஞராய்த் திகழ்ந்த ஆதிசங்கரரின் அறிவு, தவம், யோக மகிமை முதலியவற்றைக் கண்டு பொறாமை கொண்ட அபிநவகுப்தன் என்ற வித்வான், சங்கரரைத் துன்புறுத்த ஆபிசாரப் பிரயோகம் செய்துவிட்டான். அதனால் சங்கரரை க்ஷயரோக நோய் துன்புறுத்தியது. இது வினைப்பயனென்று ஆதிசங்கரர் சமாதானம் செய்துகொண்டார். ஒருசமயம் சங்கரர் “கோகர்ணம்’ என்ற தலத்தில் இருந்தபொழுது நோயின் தாக்கம் அதிகரித்து மிகவும் துன்புற்றார்.

அன்றிரவு பரமேஸ்வரன் சங்கரரின் கனவில் தோன்றி, “”ஜெயந்திபுரம் தலத்தில் சூரபத்மனை சம்ஹாரம் செய்துவிட்டு, ஜெயத்தோடு விளங்கும் என் குமாரன் ஆறுமுகனை தரிசனம் செய். உனது நோய் முற்றிலும் குணமாகும்” என்று சொல்லி விபூதிப் பிரசாதம் கொடுத்தருளினார்.

பொழுது விடிந்ததும் ஆதிசங்கரர் தன் யோகமகிமையால் ஆகாயமார்க்கமாக திருச்செந்தூர் வந்து முருகனை தரிசனம் செய்தார். அந்த சமயத்தில் சர்ப்பராஜனான ஆதிசேஷன், முருகனுடைய பாதாரவிந்தங்களில் பூஜை செய்ததைக் கண்டு பரவசமானார். அடுத்த வினாடி சங்கரரின் திருவாக்கிலிருந்து “சுப்ரமண்ய புஜங்கம்’ என்ற துதியானது அருவியாக மலர்ந்தது. அப்போதே சங்கரரின் நோய் முற்றிலும் குணமானது. (இந்த துதியானது ஒரு சர்ப்பம் வளைந்துசெல்வது போன்ற விருத்தத்தில் அமைந்துள்ளது. ஒரே ஆவர்த்தி பாராயணம் செய்தாலே தீராத நோய்களையும் குணமாக்கும் சக்தி கொண்டது இந்த துதி.)

இத்தலத்தில் 17-ஆம் நூற்றாண்டில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. டச்சு நாட்டு கடற்கொள்ளையர்கள் இக்கோவிலைக் கொள்ளையடித்தார்கள். அதுசமயம் தெற்குநோக்கி இருந்த ஆறுமுகப் பெருமானையும், விக்ரகங்களையும் தூக்கிக்கொண்டு கப்பலில் ஏறினர்.

அடுத்த சில மணிகளில் பெரும்புயலும், இடியும் மழையும் அவர்களைத் தாக்கின. அவர்கள் பயந்து முருகனின் திருவுருவச் சிலையையும், விக்ரகங்களையும் கடலில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர்.

காலையில் ஆலயம் வந்த பக்தர்கள் ஆண்டவனைக் காணாமல் துயரம் கொண்டனர்.

அந்த சமயம் ஒரு அற்புதம் நடந்தது. வடமலையப்ப பிள்ளை என்ற அடியவரின் கனவில் முருகன் தோன்றி தான் இருக்கும் இடத்தைக் கூறினார். உடனே வடமலையப்ப பிள்ளையும், பல பக்தர்களும் கடலில் குதித்து ஆறுமுகப் பெருமானைத் தேடினார்கள்.

முதலில் நடராஜர் சிலையையும், பிறகு ஆறுமுகப் பெருமானையும் கண்டெடுத்து ஆலயத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தனர்.

இன்று அந்த திருவுருவச் சிலைகளையே செந்திலாண்டவன் ஆலயத்தில் நாம் தரிசிக்கிறோம். இத்தலத்தில் குரு பகவானும் விளங்குகிறார்.

குரு மகாதசை அல்லது குரு புக்தி குரூரமாக இருந்தால் அவர்கள் திருச்செந்தூர் வந்து ஆறுமுகனை தரிசித்து, ஸ்ரீஆதிசங்கரரின் சுப்ரமண்ய புஜங்கத்தையோ, குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பாவையோ ஒருமுறை பாராயணம் செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கிவிடும். பூத, பிரேத, பைசாச உபாதைகளும் நீங்கி நலம்பெறலாம். இத்தலத்தின் மகிமையை முனிவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

வசிஷ்டர்: இந்த பூமியில் போக மோட்சங் களைத் தரும் பல தலங்கள் இருந்தாலும் அவை யாவும் சந்தேகமின்றி திருச்செந்தூர் தலத்திற்கு அடுத்தவையே.

வாமதேவர்: பிரம்மஹத்தி செய்தவனும், வேதங்களை பழித்தவனும்கூட திருச் செந்தூரில் ஒருநாள் வசித் தால் பரிசுத்தவானாகிறான்.

ஜாபாலி: இத்தல தீர்த்த மகிமைக்கு ஈடானது எதுவுமில்லை.

விசுவாமித்திரர்: நூறு அஸ்வமேத யாகங்களின் பலனை திருச்செந்தூர் வாசத்தால் கோடி பங்கு அதிகமாகப் பெறலாம்.

காச்யபர்: ஒருவன் பிரயாகையில் வாழ்நாள் முழுவதும் நீராடும் பலனை கார்த்திகை நட்சத்திரத்தன்று ஒருமுறை இந்த தலத்தில் நீராடினால் அடைந்துவிடுகிறான்.

மார்க்கண்டேயர்: ரிஷிகள் காசியில் ஒரு வருடம் தவம்செய்து பெறும் புண்ணியத்தை திருச்செந்தூரில் ஒரே நாளில் அடைந்து விடலாம்.

மௌத்கல்யர்: பல நாட்கள் செய்துவரும் தவத்தை திருச்செந்தூர் தரிசனம் ஒன்றினா லேயே அடைந்துவிடலாம்.

இவ்வாறு முனிவர்களாலும், ஆச்சார்யர்களாலும் போற்றப்பட்ட திருச்செந்தூர் தலத்தைவாழ்வில் ஒருமுறையாவது தரிசித்தால் முருகன் அருளையும், குரு பகவானின் அருளையும் பெற்று சகல துக்கங்களிலிருந்தும் விடுபடலாம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram