fbpx

திருமூர்த்திமலை தரிசனம் (உடுமலை)

மும்மூர்த்திகளும் குழந்தையாக மாறிய திருமூர்த்தி மலை

மும்மூர்த்திகளும் குழந்தையாக மாறிய திருமூர்த்தி மலை
இரண்டாயிரம் ஆண்டு பழமைவாய்ந்த தலமாக திகழ்கிறது திருமூர்த்திமலை. இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

தல வரலாறு :

அகத்திய மாமுனிவர் இறைவனின் திருமணக் கோலத்தை பொதிகை மலையில் கண்டுகளித்ததைப் போல மீண்டும் காணவேண்டி அதற்கான இடத்தை இறைவன் சக்தியால் உணர்த்திய இடமே திருமூர்த்தி மலை. கயிலாயத்தில் நடந்த இறைவனின் திருமண கோலத்தை குருமுனி அகத்தியர் கண்டு வணங்கிய இடமே பஞ்சலிங்கம் என வழங்கப்படுகிறது. கயிலாயக் காட்சியை இறைவன் இங்கும் காட்டியதால் தென் கயிலாயம் என்ற சிறப்பும் திருமூர்த்தி மலை பெறுகிறது. மும்மூர்த்திகளும் தமக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்பது அத்திரி மகரிஷியின் விருப்பம். அவரது மனைவி அன்னை அனுசூயா தேவியின் கற்பின் மகிமையை உலகிற்கு எடுத்துக்காட்டவும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் இங்கு தோன்றினர்.

ஒருமுறை அத்திரி மகரிஷி வெளியே சென்றபோது மும்மூர்த்திகளும் அனுசுயா அன்னையிடம் வந்து தங்களுக்கு நிர்வாணமாக பிச்சையிடுமாறு வேண்டினர். அனுசுயா தேவியும் தனது கணவனை மனதால் நினைத்து தீர்த்தத்தை மும்மூர்த்திகள் மேல் தெளிக்க மூம்மூர்த்திகளும் குழந்தைகளாக மாறினர். பின்பு அந்த குழந்தைகளுக்கு நிர்வாணமாக பாலூட்டி அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த நிகழ்ச்சி நடந்த திருத்தலமே இந்த திருமூர்த்திமலை.

அனுசூயா தேவியால் குழந்தையாக மாறிய மும்மூர்த்திகளும் இத்தலத்தின் எட்டுகால் மண்டபத்தின் அருகில் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது அருகிலுள்ள சஞ்சமலையிலிருந்து கல் ஒன்று உருண்டு வந்தது. அப்போது அங்கு பட்டாரசி தேவகன்னி, பத்மகன்னி, சிந்துகன்னி, அகஜாகன்னி, வனகன்னி, சுமதிகன்னி என்ற சப்த கன்னியர் ஏழு விரளி மஞ்சளை வைத்து உருண்டு வந்த கல்லை தடுத்து நிறுத்தி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைக் காப்பாற்றினார். அப்படி உருண்டு வந்த கல்லிலேயே மும்மூர்த்திகள் ஐக்கியமாகிவிட்டனர். இத்தலத்தில் சப்த கன்னியர்களுக்கும் தனி சன்னிதி உள்ளன.

தல மகிமை :

குழந்தையில்லாதவர்கள் இத்தலத்தில் நீராடி, சப்த கன்னிகளை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள விநாயர் ஆலயத்தின் முன்பு உள்ள ‘வரடிகல்’ என்ற கல்லின் மேல் அமர்ந்து அக்கல்லின் மீது தேங்காய் பழம் வைத்து அந்தக்கல்லை இது கைகளால் பிடித்து மனதார வழிபடவேண்டும். அப்படி செய்யும்பொழுது அந்த தேங்காய் பழத்தை அவர்கள் அறியாமல் தொட்டுவிட்டால் குழந்தை பேறு நிச்சயம் என்பது பலன் பெற்றவர்கள் சொல்கின்றனர்.

இங்குள்ள சிவபெருமானுக்கு மும்மூர்த்தி ஆண்டவர், அமணலிங்கேஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு. அத்திரி மகரிஷியின் மனைவி அனுசுயாதேவி அம்மணமாக வந்து மும்மூர்த்திகளையும் குழந்தை வடிவமாக மாற்றி உணவு அளித்த தலமானதால் இத்தல இறைவன் அமணலிங்கேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மும்மூர்த்திகளும் சிறிய குன்றில் சுயம்புவாக அருள்பாலிக்கின்றனர். இது ஒரு குடைவரைக் கோவிலாகும்.

சந்தன வழிபாடு :

இங்குள்ள மும்மூர்த்திகளுக்கு பக்தர்கள் சந்தனத்தை வாங்கி வந்து மும்மூர்த்திகள் மேல் எறிந்து வழிபாடு செய்கிறார்கள். அந்த சந்தனம், மும்மூர்த்திகளின் நெற்றியில் விழுந்தால் தாம் நினைத்த காரியம் உடனே நடக்கும் என்பது ஐதீகம். மேலும் இங்கு சிவபெருமான் ஞான குருவாக இருப்பதால் இங்கே தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பானதாகும். மலையின் மீது பஞ்சலிங்கம் உள்ளது. இது அத்திரி மகரிஷி தனது மனைவி அனுசுயா தேவியோடு வழிபட்ட லிங்கங்கள் ஆகும். இன்றும் அவர்கள் தினமும் பஞ்சலிங்கத்தை வழிபடுவதாகவும், இங்குள்ள எட்டுக்கால் மண்டபத்தில் தான் மும்மூர்த்திகளும் தங்கியதாகவும் கூறப்படுகிறது.

கருவறை :

பாறையைக் குடைந்து கருவறை அமைக்கப்பட்டுள்ளது. பிரம்மன், சிவன், விஷ்ணு உற்சவ மூர்த்திகளாக கருவறையில் காட்சி தருகின்றனர். நீரினால் சூழப்பட்டுள்ள அமணலிங்கத்தை சுற்றி வரும்பொழுது கன்னிமார்களை வணங்கி அருளை பெறலாம். விநாயகர், சுப்பிரமணியர், நவக்கிரகங்கள் சன்னிதியும் உள்ளன. அமணலிங்கேஸ்வரர் கோவிலின் முன்பு உள்ள தீபகம்பத்தின் அடிப்பாகத்தில் அட்டதிக்குளை நோக்கியபடி பத்ரகாளி, வனதுர்க்கை, விசாலாட்சி, ஊர்த்தவ தாண்டவர், அகோரவீரபத்திரர், ராமாவதாரம், நரசிம்ம அவதாரம், வேணுகோபாலர் சிற்பங்கள் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

குறுமிளகையும், உப்பையும் திருமூர்த்திகள் மீது இட்டு வேண்டிக்கொண்டால் தங்களது குறைகள் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இத்தலத்தின் தீர்த்தம் தோணி ஆறு. தலமரம் அரசமரம்.

மகாசிவராத்திரி அன்று நான்கு கால பூஜை நடைபெறுகின்றன. ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை அன்று பூஜைகளும், ஞாயிறுதோறும் 12.30 மணி வரை சிறப்பு பூஜையும் நடைபெறுகின்றன. ஆவணி ஞாயிறு அன்று சிறப்பு விசேஷ பூஜையும் நடைபெறுகிறது.

மும்மூர்த்தி வடிவங்கள் :

கோவை மாவட்டம், உடுமலையிலிருந்து தெற்கே சுமார் 21 கி.மீ. தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் பெருந் தொடர்களில் தென்திசை நோக்கி பரவியுள்ள ஆனை மலைகளில் ஒன்றாகத் திகழ்வதே இந்த திருமூர்த்தி மலை. இதன் அடிவாரத்திலிருந்து தென்மேற்கே ஒரு கி.மீ. தொலைவில் தோணி ஆறு என்ற பாலாற்றங்கரையில் தான் அமணலிங்கேஸ்வரர் அருள்பாலிக்கிறார். அமணன் என்றால் குற்றமற்றவன் என்று பொருள். வடதிசை நோக்கி லிங்கவடிவில் எழுந்தருளியுள்ள பாறைதான் அமணலிங்கேஸ்வரர். இப்பாறையில் மும்மூர்த்திகளின் வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆலயம் காலை 6.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும். உடுமலைப்பேட்டையில் இருந்தும், தாராபுரத்தில் இருந்தும் நிறைய பஸ் வசதி உள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram