fbpx

நசிகேதன் கதையும் பரணி தீபமும்

உயிர்களின் பிறப்பும், மரணமும் வாழ்வின் பெரும் புதிர்கள். பிறந்த உயிர்கள் மரணத்திற்குப் பிறகு என்னவாகின்றன? மரணத்திற்குப் பிறகு உயிர்களின் நிலை என்ன° இவ்வாறு பல சந்தேகங்களுக்குக் “கட உபநிஷதம்’ ஒரு மாறுபட கோணத்தில் மரணத்தை ஆராய்கிறது.
வேத காலத்தில் #வாஜசிரவஸ் என்பவர் வாழ்ந்துவந்தார். அவருக்கு #நசிகேதன். என்ற மகன் இருந்தான். வாஜசிரவஸ் இவ்வுலகையே ஆளும் பேரரசன் ஆக விருப்பம் கொண்டார். அந்தப் பலனைத் தரும் “விசுவஜித்’ என்ற யாகத்தைச் செய்தார் நசிகேதனின் தந்தை வாஜசிரஸ்.
விசுவஜித் யாகத்தின் நிபந்தனை சிரமமானது. உலகில் உள்ள அனைத்தையும் ஆளும் சக்தியைப் பெற நடத்தும் அந்த யாகம் நிறைவேற வேண்டுமானால், தன்னிடமுள்ள அனைத்தையும் தானம் செய்ய வேண்டும். அனைத்தையும் துறக்கச் சித்தமாக இருப்பவனுக்குத்தான், அனைத்தும் உரிமையாக முடியும்.
இத்தனை சிரமமான அந்த யாகத்தின் நிபந்தனைப்படி வாஜசிரவஸ் அனைத்தையும் தானம் செய்தார். ஆனால், தனக்கு உதவாதவற்றைத் தானம் என்ற பெயரில் கொடுத்தார். பசுவைத் தானம் செய்வது சிறந்தது. இவரோ, மரணத்துக்காகக் காத்திருக்கும் கிழப் பசுக்களைத் தானமாக அளித்தார். இதனால், தானத்தின் பலன் கிடைக்காமல் போவது மட்டுமல்ல; தானத்தின் அடிப்படைக் கருத்தைச் சரியாகக் கடைப்பிடிக்காததால் இரட்டைத் தவறுகள் செய்தார்.
அவருடைய மகன் நசிகேதன் அனைத்தையும் கவனித்தான். தந்தையிடம் சென்று, “அப்பா, என்னை யாருக்குக் கொடுக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டான். சிறந்தவற்றைத் தானம் செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டும் விதமாக மூன்று முறை கேட்டான். கோபமுற்ற வாஜசிரவஸ், “உன்னை யமனுக்குக் கொடுக்கிறேன்” என்றார்.

நசிகேதனின் யமலோகப் பயணம்

 தந்தை கோபத்தில் சொல்லி இருந்தாலும், அவர் சொன்னபடி யமனிடம் போக வேண்டும் என்று நசிகேதன் உறுதிப் பூண்டான். இம்முடிவைத் தந்தையிடம் கூறினான். அவர் தான் கோபத்தில் கூறிய வார்த்தைகளை எண்ணி வருத்தமுற்றார். அவருக்கு ஆறுதல் கூறிய நசிகேதன், “வாழ்க்கை நிலையற்றது. மனிதன், செடி கொடிகளைப் போல் பிறக்கவும், இறக்கவும் செய்கிறான். பிறந்தவர்கள் இறப்பதும், இறந்தவர் பிறப்பதும் உறுதி. எனவே, நான் யமலோகம் செல்வதைப் பற்றி வருந்த வேண்டாம்” என்றான்.
 நசிகேதன் யமலோகத்தை அடைந்தபோது, அவனை யாரும் உள்ளே விடாமல் மூன்று நாட்கள் வாசலிலேயே காத்திருக்க வைத்தனர். எப்படியும் யமதர்மனை சந்தித்தே தீருவேன் என்ற உறுதியோடு இருந்த அந்த பாலகனின் உறுதியான மனத்தைக் கண்டு வியப்படைந்த எமதர்மன் இறுதியாக அவனைச் சந்திக்க முடிவெடுத்தார். நசிகேதனை நோக்கி, “விருந்தினரான நீ மூன்று நாட்கள் உணவின்றித் தங்க நேர்ந்தது நான் செய்த குற்றம். அப்பழியைப் போக்க, என்னிடமிருந்து மூன்று வரங்களைப் பெற்றுக் கொள்” என்றார்! யமதர்மன்.

நசிகேதன் பெற்ற மூன்று வரங்கள்

  நசிகேதன் தெளிவான மனதுடன் யமதர்மனை நோக்கி, “இங்கிருந்து திரும்பிச் செல்கின்ற என்னை, என் தந்தை ஏற்றுக்கொண்டு, மனக்கவலையின்றி, தெளிந்த மனத்துடன் கோபம் அற்றவராய் என்னிடம் பேச வேண்டும். இதுவே எனது முதல் வரம்” என்றான். யமதர்மனும், “என் அருளால் உன் தந்தை உன்னை முன்பு போலவே ஏற்றுக்கொள்வார்” என்று வரம் தந்தான்.
அதன் பின் நசிகேதன், “யமதர்மனே! சொர்க்கத்தில் வாழ்பவர்கள் தேவ தன்மையைப் பெறுகின்றனர். அங்கே அழைத்துச் செல்லும் யாகத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியும். சிரத்தை மிக்கவனான எனக்கு அதைப் பற்றிச் சொல்ல வேண்டும். இதுவே எனது இரண்டாவது வரம்” என்றான்.
  “நசிகேதா, சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் யாகத்தைப் பற்றிச் சொல்கிறேன். விழிப்போடு கேள். சொர்க்கத்தைத் தருவதும் பிரபஞ்சத்துக்கு ஆதாரமானதுமான அந்த அக்னி இதயக் குகையில் உள்ளது. அதாவது புறக்கிரியையாகச் செய்யும்போது, சொர்க்கத்தைத் தருகிற அதே யாகம், அக அக்னியாக, ஆன்ம அக்னியாகக் கொண்டு வித்யையாகச் செய்யப்படும் போது பிரபஞ்சத்துக்கு ஆதாரமான இறைவனை அடையும் சாதனை ஆகிறது.” என்றார்! யமதர்மன்.
  நசிகேதனுக்கு யமதர்மனும் யாகம் செய்யும் வழிமுறைகளை உபதேசித்தார். நசிகேதனும் தெளிவாகப் புரிந்துகொண்டு திருப்பிச் சென்ல, மனம் மகிழ்ந்த எமதர்மன், இன்னொரு வரமும் தருகிறேன் என்றார். இன்று முதல் அந்த யாகம் #நசிகேத_யாகம் என்றே இனி விளங்கும் என ஆசி வழங்கினார் யமதர்மன்; மேலும், பல யாகங்களின் அறிவைக் குறியீடாக உணர்த்தும் 

பல வண்ண மாலை ஒன்றையும் வழங்கினார்.
“மரணத்துக்குப் பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும், இல்லை என்று சிலரும் கூறுகின்றனர். இந்தச் சந்தேகத்தைத் தங்களிடம் கேட்டுத் தெளிவுபெற விரும்புகிறேன். நான் கேட்க விரும்பும் மூன்றாவது வரம் இதுவே” என்றான்.

மூன்றாம் வரம் மரணத்துக்குப் பிறகான நிலை

  "நசிகேதா, நீ வேறு எந்த வரம் வேண்டுமானாலும் கேள்! தருகிறேன். பூமியில் உள்ள எல்லாச் செல்வங்களையும் அரசையும் கேள்! எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வாழ்ந்துகொள்! மரணத்தைப் பற்றி மட்டும் கேட்காதே” என்கிறார் யமதர்மன். நசிகேதனோ மிகத்தெளிவாக, “உலகின் இன்பங்கள் நிலையற்றவை! உயிர்களின் பிறப்பு இறப்பைப் பற்றிய மரணத்திற்குப் பிறகான பரம ரகசியமான அவ்வுண்மையை. நான் அறிந்தேயாக வேண்டும் என்றான். வேறு எந்த வரமும் வேண்டாம்” என பிடிவாதமாக நின்றான் நசிகேதன்.
  நசிகேதனின் மன உறுதியில் அக மகிழ்ந்த யமதர்மன், “நசிகேதா! உண்மையை அடைவதில் உறுதியாக இருக்கும் உன் போன்ற. சீடன் எனக்குக் கிடைத்ததே வரம். எனவே உயிர்களின் மரணத்திற்கு பின்பான நிலையை பற்றி நான் உனக்கு உபதேசிக்கிறேன் கேள்! என்றார் யமதர்மன்.  
நசிகேதா! சொல்கிறேன் கேள்! இலட்சியத்தை அடைவதற்கான மந்திரம் #ஓம். ஆகும். அ+உ+ம் =ஓம். உடம்பு, உயிர், ஆன்மா என்ற மூன்றின் சேர்க்கையே மனிதன்.  #பிரணவ_மந்திரம் என்று சொல்லப்படுகிற இந்த ஓம்கார மந்திரமே உயிர்களின் இயக்கமும்,  இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கமுமாக அனைத்துமே இந்த ஓங்கார மந்திரத்திலேயே அடங்கியுள்ளது. பொதுவாக மரணம் என்று குறிப்பிடப்படுவது உடம்பின் மரணம் மட்டுமே.! நசிகேதா. உடம்பின் மரணத்துக்குப் பின்னரும் ஆன்மா வாழுகிறது. ஆன்மா பிறப்பற்றது; நிலையானது; அழியாதது” என்றார் யமதர்மன். (#கீதை. கூறுவதும் இதையே.)
 மேலும், “மரணத்துக்குப் பிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றன. சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றன. அவரவர் வினைப்பயனுக்கேற்பவே அடுத்த பிறவி அமையும்! என்றார் யமதர்மன்.

ஆன்ம அனுபூதி

 ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது. அதே வேளையில் அந்த வடிவங்களுக்கு வெளியேயும் திகழ்கிறது. ஆன்ம அனுபூதி, இறையனுபூதி என்பது ஓர் அனுபவம். நாம் உணர வேண்டியது, இறைவன் பேராற்றலின் உறைவிடம் என்பதையே. அவ்வாறு உணர்பவன் மரணமில்லாப் பெருநிலையை அடைகிறான்! என்றார் யமதர்மன்.
 மனதைச் சார்ந்திருக்கும் எல்லா ஆசைகளும் விலகும்போது மனிதன் மரணமற்றவன் ஆகிறான். மனதின் எல்லா ஆசைகளும் அகன்று, இறைவனை அடைய வேண்டும்! என்ற ஞான நிலையை அடையும் பொழுது. மனிதன் மரணமற்றவன் ஆகிறான்! என்று  யமதர்மன், நசிகேதனுக்குத்  தனது உபதேசத்தை நிறைவு செய்தார்
இதைக் கேட்டு, பின்பற்றி, ஞானமடைந்த நசிகேதன் மரணமற்றவன் ஆனான். சிரத்தையுடன் தேடுதல் செய்து, தானறிந்தவற்றை தெளிவாக உணர்ந்து, அதைத் தவறாது, பின்பற்றினால் அனைவரும்  நசிகேதனைப் போல ஆகலாம்.
 மனித உடலோடு (ஊனுடலோடு) யமதர்மனிடம் சென்று பல வரங்களையும் நீண்ட ஆயுளையும் பெற்று திரும்பிய நசிகேதன், பூலோகத்திலிருந்து யமனுலகு செல்லும் உயிர்கள் பல இருட்டில் பாதை தெரியாமல் தத்தளிப்பதைக் கண்டார்.
   அவ்வாறு அவ்வுயிர்கள் தத்தளிக்காமலிருக்கக் கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகைக்கு முன்பாக வரும் பரணி நட்சத்திரத்தன்று யார் வீடுகளில் விளக்கேற்றி வைக்கப்பட்டிருக்கிறதோ அந்த வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு வெளிச்சம் தெரியும்! எனப்பதை உணர்ந்து அதை மக்களுக்குப் போதித்தார் நசிகேதன்.

அது மட்டுமல்ல! கார்த்திகை தீபத் திருநாளன்று சொக்கப்பனை எரித்தால் அனைத்து உயிர்களுக்கும் வெளிச்சம் கிடைக்கும். அன்று முதல் பரணி தீபம் எங்கும் ஏற்றப்பட்டது. அதோடு, சக உயிர்களின் நன்மைக்காக சொக்கப்பனை கொளுத்தும் வழக்கமும் வந்தது.
உலக உயிரினங்கள் அனைத்துக்காகவும் மோட்ச தீபம் ஏற்றும் தினம் இது. உலக நன்மைக்காக வேண்டிக்கொண்டு தீபம் ஏற்றி வணங்குவது நம் மரபு. கார்த்திகை என்றாலே ஒளி என்று பொருள். கார்த்திகை தீபத்துக்கு இன்னொரு காரணமும் உண்டு.
#ஜோதியாகநின்றார்திருமால்கார்த்திகைபரணியில் 🙏
நான்முகனான பிரம்மா தனது மனைவியான சரஸ்வதி தேவியை விட்டுவிட்டு தான் மட்டும் யாகம் ஒன்றை நடத்தினார். மனைவி இருக்கும்போது வைதிக காரியங்களைத் தனித்துச் செய்யக் கூடாது! என்பது விதி. ஆனால் பிரம்மதேவரே தவறு செய்ததால் கோபம் கொண்ட சரஸ்வதிதேவி, யாகத்துக்குத் தடையாக உலகெங்கும் இருளைப் பரவச் செய்தாள். அதனால் யாகம் தடைபட்டது. செய்வதறியாது திகைத்தப் பிரம்மா, தனது தந்தையான திருமாலிடம் சென்று முறையிட்டார். அன்று கார்த்திகை மாத பௌர்ணமி தினம்.
திருமால் உடனே தானே ஒரு ஜோதிப் பிழம்பாக உருமாறி நின்றார். அந்தப் பிரகாசத்தில் உலகமே ஒளிர்ந்தது. யாகம் நல்லபடி நிறைவேறியது. இந்தச் சம்பவம் நடந்தது காஞ்சிபுரத்தில் உள்ள தூப்புல் திருத்தலத்தில். இத்தலத்தில் விளக்கொளிப் பெருமாள் எனும் திருநாமத்தோடு தீபப்பிரகாசராய் சேவை சாதிக்கிறார். தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அகல திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரமன்று இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
பாவங்களைப் போக்கும் #பரணி_தீபம் மனதால் கூட யாரும் பிறருக்குத் தீங்கிழைக்கக் கூடாது. பாபம் செய்யக்கூடாது. ஆனால் பாபங்கள் அதிகரிக்கும் யுகம்தான் கலியுகம். நாம் செய்யும் பாபங்களுக்குப் பரிகாரமாக தீபங்களை ஏற்றி தினமும் வழிபாடு செய்வது நல்லது.
நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அகல, திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான #பரணி நட்சத்திரமன்று இல்லமெங்கும் விளக்கேற்றியும், ஆலயங்களில் விளக்கேற்றி வழிபட வேண்டும். மகாவிஷ்ணு உலகிற்கு ஒளியைத் தர தானே ஜோதியாக நின்ற
இக்கார்க்திகை மாத பரணி நட்சத்திரதன்று பரணிதீபமேற்றி திருமாலை வழிபடும் அனைவரின் வாழ்வும் பிரகாசமடையும்! என்பது உறுதி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram