பராசர பட்டர், விஷ்ணுசஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் பண்ணியிருக்கிறார். பகவத் குண தர்ப்பணம் என்று அதற்குப் பெயர். பகவானுடைய திருக்கல்யாண குணங்களைக் காட்டக் கூடிய கண்ணாடி என்று பொருள்.
விஷ்ணு சஹஸ்ரநாமம் என்னும் போது பகவானுடைய நாமாக்களைச் சொல்கிறோமா? அவன் குணங்களைச் சொல்கிறோமா என்று சந்தேகம் வேண்டாம்… அவன் குணங்களையே தெரிவிக்கும்படியான நாமாக்கள் அவை. அத்தனையும் சுகுணங்கள்.
சிறிய கண்ணாடியானது மிகப் பெரிய யானையின் உருவத்தைக்கூடக் காட்டவல்லது இல்லையா… அதைப் போலே சர்வ வியாபகனானவனை அந்த சின்ன திருநாமங்கள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
இந்த பகவத் குணதர்ப்பணம் என்கிற பாஷ்யத்திலே, பராசர பட்டர், விஷ்ணு சஹாஸ்ரநாமத்துக்கு உரிய ஏற்றங்களைச் சொல்கிறார். ஆறு வித உயர்வுகளைச் சொல்கிறார்.
- மகாபாரத சாரம்:
ரசாலு என்று ஆந்திர தேசத்திலே ஒருவகை மாம்பழம் வருவதுண்டு. வெயில் காலத்திலே வரும். அதைப் பிழிந்தால் மொத்தமும் ரசமே கொட்டும். அதைப் போலவே மகாபாரதம் ஒரு பெரிய ரசாலு என்று வைத்துக் கொண்டால், அதைப் பிழிந்தால் வரக்கூடிய சாறு சஹஸ்ரநாமம். மகாபாரதக் கதை முழுவதும் அதில் இருக்கிறது. மகாபாரதத்துக்கு அப்படி என்ன சிறப்பு…? “சாப்பிட்டால் வடையே சாப்பிடணும், கேட்டால் மகாபாரதக் கதையே கேட்கணும்” என்கிற அர்த்தத்திலே ஒரு தெலுங்கு பழமொழி உண்டு.
தர்மத்தைச் சொல்வது மகாபாரதம். “மகா” பாரதம் என்று ஏன் அதற்குப் பெயர் உண்டாயிற்று…? பெரிதாக பளுவுடையதாக இருப்பதாலே அந்தப் பெயர்.. அளவிலும் பளு, புத்திக்கும் பளு.. சாமான்யனின் புத்திக்கு வடிவமாகச் சொல்லியிருக்கிறது. தர்ம, அர்த்த, காம மோக்ஷம் என்ற சதுர்வித புருஷார்த்தத்திலேயும் தெளிவான ஞானம் பிறக்க வழி, மகாபாரதம். வேத சாகரத்தை (சமுத்திரத்தை) வியாசரின் புத்தியாகிற மத்தினாலே கடைந்து பெற்ற உயர்ந்த வெண்ணெய் போன்றது மகாபாரதம். இப்படி வேத ஸாரமான மகாபாரதத்தின் ஸாரம் விஷ்ணு சஹஸ்ரநாமம்.
- மகரிஷிகளாலே நன்கு, பலமுறை கானம் பண்ணப்பட்டது:
ரிஷிகளுக்கும் நம்மைப் போன்ற நித்ய சம்சாரிகளுக்கும் வித்தியாசமில்லையா…? நம் பார்வை ஒரு வரையறைக்குட்பட்டது. மகரிஷிகளின் பார்வையோ உயர்ந்த ரீதியிலே வஸ்துவாகப் பார்க்காமல் அதன் உள்ளே இருக்கிற சக்தியைக் காணக்கூடியது. உடல்மிசை உயிரெனக் கறந்து எங்கும் பரந்துளன் – உடலுக்குள் உயிர் மறைந்துள்ளது போல் எல்லாவற்றிலும் கலந்திருக்கிறான் பரமாத்மா. இதுக்கு ஒரு கதை…
சுக பிரும்ம மகரிஷி ஒரு தடாகக் கரை வழியே வேகமாக நடந்து போனார். அவர் அவதூதர். திருமேனியில் வஸ்திரம் கூட இல்லை. தடாகத்தில் சில அப்ஸர ஸ்திரீகள் நீராடிக் கொண்டிருந்தனர். அத்தனை ஸ்திரீகளும் சுக பிரும்மரைப் பார்த்தனர். அவரும் அவர்களைப் பார்க்கிறார் – அவர் மனசில் எந்த விகாரமும் ஏற்படவில்லை. அந்த ஸ்திரீகளும் மான சம்ரக்ஷணம் பண்ணிக் கொள்ளவில்லை.
சுகபிரும்மரைத் தொடர்ந்து வந்தார் அவர் தந்தையான வியாசர். “ஹே புத்ரா” என்று அழைத்தபடி வந்தார். அவர் குரலைக் கேட்டதுமே மான சம்ரக்ஷணம் செய்து கொண்டார்களாம். வியாசர் அந்த ஸ்திரீகளிடம் வந்தார். “நான் வயோதிகன்; அவனோ சின்னப் பையன்.. அப்படியும் என்னைக் கண்டதும் மான சம்ரக்ஷணம் பண்ணிக் கொண்டதேன்..? இது என்ன விபரீத ஆசாரம்?” என்று கேட்டார். “இந்த கேள்வியை உங்கள் பிள்ளை கேட்டாரா? எங்களைத் திரும்பிப் பார்த்தாரா? அவர் தன்மை எங்களுக்குத் தெரியும். நிற்கின்றதெல்லாம் நெடுமால் என்று நினைப்பவர்; சர்வ பதார்த்தங்களிலும் பகவானைப் பார்க்கிறார். நீர் இன்னும் கீழ்ப்படியில் இருக்கிறீர். ஆகையினாலே உங்களைக் கண்டால் பயப்பட வேண்டியிருக்கிறது என்றார்களாம் அப்ஸர ஸ்திரீகள். இதனால் வியாசரைக் குறைத்துச் சொன்னதாக அர்த்தம் ஆகாது. ஒருத்தரைக் குறைச்சுச் சொல்றமாதிரி சொல்லி அடுத்தவரை உயர்த்திச் சொல்றது. இதை “நஹி நிந்தா ந்யாயம்” என்பார்கள். சுகபிரும்மரைப் போல் எதிலும் பகவானைப் பார்க்கும் ரிஷிகள், பகவான் நாமத்தைத் தனியே சொல்ல வேண்டியதில்லை… ஆனால் அப்படிப்பட்ட ரிஷிகளே விஷ்ணு சஹாஸ்ரநாமத்தைக் கானம் பண்ணுகிறார்கள். அனைத்து ரிஷிகளும் அபிப்ராய பேதமின்றி பண்ணுகிறார்கள்.
- பகவானாலே அடையாளம் காட்டப்பட்டது:
வியாசரை வேத வியாசர் என்று சொல்கிறோம். வேதத்தை விபஜிக்கிறவர் என்று பொருள். விபஜிக்கிறவர்..? பிரிக்கிறார்.
கலியுகத்திலேதான் நால் வேதங்களை நான்கு பிரிவினர் தனித்தனியே சொல்கிறார்கள். கிருத யுகத்திலே அப்படியில்லை. எல்லா வேதங்களையும் பூர்ணமாகக் கற்று உணர்ந்திருப்பார்கள். ரிக் வேதம் சொல்லும் என்றால் சொல்வார்கள்; சாம கானம் பண்ணும் என்றால் பண்ணுவார்கள்.. எல்லாவற்றையும் சேர்த்து தரித்தார்கள். இப்போது கலியுகமானதினாலே மந்த புத்தியும் மந்த பாக்யமும் உடையவர்களாயிருக்கிறோம்.
ஒவ்வொரு துவாபர யுகத்தின் முடிவிலேயும் அடுத்து வரப் போகிற கலியுகத்து மனிதர்களுக்கு உதவும்படியாகப் பரமாத்மாவே வியாசாவதாரம் பண்ணுகிறார். வேத சாரத்தை விபஜித்துக் காட்டுகிறார். பிரித்து, நான்கு சிஷ்யர்களுக்கு விபஜித்துத் தருகிறார். இப்படி வசிஷ்டர் ஒரு முறை வியாசாவதாரம் பண்ணியிருக்கிறார். பகவானே கருணை கொண்டு வேத வியாசராய் அவதரித்து வழங்கியது மஹா பாரதம். சாரம் பகவத் கீதை; அதன் சாரம் விஷ்ணு சஹஸ்ரநாமம். ரிஷிகள் கானம் பண்ணிய விஷ்ணு சகஸ்ர நாமத்தை பகவானே அடையாளம் காட்டியிருக்கிறார்.
- பீஷ்மரால் உயர்ந்ததாகக் கொண்டாடப்பட்டது:
ஆங்கிலத்திலே “superlative degree” என்றொரு வார்த்தை சொல்வதுண்டு. அதற்கு மேலாக ஒன்றும் கிடையாது. ஒப்பு உயர்வு சொல்ல முடியாமல் பெருமை உடையது என்று பீஷ்மரே ஏற்று விஷ்ணு சகஸ்ர நாமத்தை எடுத்து ஆண்டிருக்கிறார். “மகரிஷிகளால் கானம் பண்ணப் பட்ட பரம நாமம்” என்று போற்றி உகந்திருக்கிறார்.
- நோய் தீர்க்க வல்லது:
வைத்ய சாஸ்திரமான சரக சம்ஹிதையிலே சொல்லியிருக்கிறது. விஷ்ணு சகஸ்ர நாமம் சொல்லக் கேட்டால் வியாதிகள் போகும்! முக்கூர் ஸ்ரீமத் அழகிய சிங்கர் வேடிக்கையாச் சொல்வார். “எல்லோரும் உபநிஷத்படி நடக்கிறார்கள் – மாத்திர பலத்தை நம்புகிறார்கள்” என்று. உபநிஷத் சொல்லும் மாத்ரா பலம் – வேத கோஷங்களின் ஒலி மாத்திரைகளுக்கு உள்ள சக்தியை. நாம் நம்புவதோ மாத்திரை (tablet) பலத்தை. அந்த நரசிம்ஹனே பலம் என்று நம்பி சஹாஸ்ரநாமத்தைப் பூரணமாய்ச் சொல்லி மூன்று தடவை தீர்த்தம் கொடுத்தால் தலைவலி போய்விடும். அந்திம காலத்தை தடுக்கக் கூடிய சக்தி கூட சகஸ்ர நாமத்துக்கு இருக்கிறது.
நித்யம் பகவத் சந்நிதியில் விளக்கேற்றி சகஸ்ர நாமம் பாராயணம் பண்ற வழக்கம் வைத்துக் கொண்டால் அந்தக் குடும்பத்திலே சண்டை, கலகம் கிடையாது. சர்வ சம்பத்தும் வந்து சேரும். அந்நியோன்யம் வளரும். துர்தேவதைகள் பிரவேசிக்காது. நம் சித்தத்திலும் நுழையாது.
- கீதைக்குத் துல்லியமாய் அர்த்தத்தை உடையதனாலே:
கீதைக்கு சமானமா ஏதாவது உலகத்திலே உண்டா என்று கேட்டால் அது விஷ்ணு சஹஸ்ரநாமம்தான். இன்னும் கேட்டால், கீதையைவிட உயர்வானது. கீதையைச் சொன்னது பகவான். அந்த பகவத் சரணார விந்தத்திலே அசஞ்சலமான பக்தி உடைய பீஷ்மர் சொன்ன வார்த்தை விஷ்ணு சஹஸ்ர நாமம். பகவானை காட்டிலும் பீஷ்மர் உயர்ந்தவரானதாலே அவர் வார்த்தைக்கு மதிப்பு அதிகம்.
துளி கூட மிச்சமின்றி அந்த ஆகாயம் முழுவதையும் காகிதமாக்கி, ஏழு சமுத்திர ஜலத்தையும் மையாக்கி எழுதினாலும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பெருமையை விளக்க முடியாது.