பெருமாளை தரிசிப்பதும் பெருமாளின் திவ்விய நாமங்களைச் சொல்வதும் இந்தப் பூவுலகில் நம்மை சிறப்புற வாழவைக்கும்.
நீங்கள் என்னை நோக்கி ஓரடி எடுத்துவைத்தால், நான் உங்களை நோக்கி பத்தடி எடுத்து வைப்பேன்’ என பகவான் அருளியுள்ளார்.
அதன்படி, மகாவிஷ்ணுவை, திருமாலை, வேங்கடவனை எப்போதெல்லாம் தரிசிக்கிறோமோ அப்போதெல்லாம் நமக்கு மனோபலம் பெருகும். இல்லத்தில் தடைப்பட்டிருந்த மங்கல காரியங்கள் வெகு சீக்கிரமாகவே நடந்தேறும் என்பது ஐதீகம்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ரங்கமன்னார்,
அல்லிக்கேணி பார்த்தசாரதி,
குணசீலம் பிரசன்ன வேங்கடேச பெருமாள்,
மதுரை கள்ளழகர்,
கூடலழகர்,
குடந்தை ஒப்பிலியப்பன் என்று
ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமான திருநாமத்துடன் திகழ்கிறார் பெருமாள்.
ஏழுமலையான் கோயில் கொண்டிருக்கும் திருமலை திருப்பதி திருக்கோயிலும் சாந்நித்தியத்துடன் திகழும் அற்புதமான ஆலயம்.
பெருமாள் கோயில்களில் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயங்கள் ஏராளம். குடந்தை, திருவாலி திருநகரி, ஆழ்வார் திருநகரி முதலான 10 வைஷ்ணவ திவ்விய தேசங்கள் என்று போற்றப்படுகின்றன.
தொழிலில் ஈடுபட்டவர்களும் வியாபாரம் செய்பவர்களும் தங்கள் லாபத்தில் இருந்து ஒரு தொகையை, பெருமாளுக்கு, குறிப்பாக திருப்பதி ஏழுமலையானுக்கு அந்தத் தொகையை வழங்குவதாக வேண்டிக்கொள்வார்கள் பக்தர்கள்.
பெருமாள் வழிபாடு, சகல சுபிட்சங்களையும் தந்தருளும் என்பது ஐதீகம். இல்லத்தில் செல்வ கடாட்சங்களைக் கொடுத்தருள்வார் மகாவிஷ்ணு.
சனிக்கிழமைகளில், மகாவிஷ்ணுவின் காயத்ரியைச் சொல்லி, பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொள்வது சிறப்பு வாய்ந்தது.
மகாவிஷ்ணு காயத்ரி
ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்
இந்த மகாவிஷ்ணு காயத்ரியை தினமும் சொல்லுங்கள். மனதார வேண்டுங்கள். மங்கல காரியங்களையெல்லாம் நடத்தித் தந்தருள்வார் பெருமாள். தொழிலில் ஏற்றத்தை ஏற்படுத்தித் தருவார் மகாவிஷ்ணு. திருமண யோகம் வழங்கி அருளுவார்.இல்லறத்தை நல்லறமாக்கி அருளுவார் வேங்கடவன்.