fbpx

பைரவரை வணங்கினால் எதிர்ப்பு தவிடுபொடியாகும்

சுத்தம் செய்யச் செய்ய அசுத்தமும் வந்துகொண்டே இருக்கும். வீட்டில் ஒட்டடை இருக்கிறதே என்று ஒட்டடைக்குச்சி எடுத்து, ஒட்டடைகளைச் சுத்தம் செய்வோம். ஆனால் பதினைந்து நாள் கழித்து மீண்டும் ஒட்டடை பல்லிளிக்கும். திரும்ப வருகிறதே என்கிற காரணத்தால், ஒட்டடையை அப்படியே விட்டுவிடுகிறோமா என்ன?
துவைத்து, அயர்ன் செய்து போட்டுக் கொள்கிற சட்டை மாலையிலேயே அழுக்காகிவிடும். மீண்டும் துவைக்கிறோம். அயர்ன் செய்கிறோம். உடுத்தி அழகு பார்க்கிறோம். மீண்டும் அழுக்காகிறது. இதுதான் வாழ்க்கையின் கணக்கு.
கடவுளை வணங்குவதன் தாத்பர்யமும் பலமும் பலனும் கூட இப்படித்தான். கடவுளை வணங்குகிறோம். இருக்கிற கஷ்டங்களெல்லாம் எங்கோ பறக்கிறது. பதவி, உத்தியோகம், வருமானம் என வாழ்க்கைத் தரம் உயர, அங்கே எதிர்ப்பு, எதிரி என உருவாக, மீண்டும் ஏதோவொரு சிக்கல், ஏதோவொரு பிரச்னை. எப்படியோ வருகிறது துக்கம்.
இந்த எதிர்ப்பில் இருந்து மீண்டும் வருவதற்குத்தான் காலபைரவ வழிபாடு கைகொடுக்கிறது. எதிரியை துவம்சம் செய்வதற்காகத்தான் காலபைரவர், தன் சந்நிதிக்கு வருபவர்கள் யார் என்று காத்திருக்கிறார்.
இன்று அஷ்டமி. தேய்பிறை அஷ்டமி. காலபைரவருக்கு உரிய அருமையான நாள். சிவாலயத்துக்குச் செல்லுங்கள். ஞாயிற்றுக்கிழமைதான். விடுமுறை நாள்தான். குறிப்பாக, மாலையில் செல்லுங்கள். இன்று மாலை 4.30 முதல் 6 மணி வரை ராகுகால வேளை. பல சிவாலயங்களில், காலபைரவருக்கு ராகுகாலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் கலந்து கொள்ளுங்கள். பைரவர் முன்னே ஒருமித்த மனத்துடன் நில்லுங்கள்.
உங்களால் முடிந்த அளவுக்கு அரளிப்பூச்சரங்களை வழங்குங்கள். இன்னும் முடியும் என்றால், தயிர்சாதம் நைவேத்தியம் வழங்குங்கள். குடும்பத்துடன் சென்று, குடும்பம் நன்றாக சீரும் சிறப்புமாக இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்.
எதிர்ப்புகள் அகலும். தடைகள் விலகும். எதிரிகள் தவிடுபொடியாவார்கள். உங்கள் வீட்டில் தடைப்பட்ட காரியங்கள் யாவும் இனிதே நடைபெறும். உத்தியோகம் சிறக்கும். தொழில் விருத்தியாகும். லாபம் பெருகும். சந்தோஷம் இரட்டிப்பாகும். உற்சாகம் கரைபுரண்டோடும்.
ஒற்றுமை மேலோங்கும். இவையெல்லாம் இன்னும் இன்னும் வளரச் செய்யும். வாழையடிவாழையென தழைக்க வைக்கும். பைரவ வழிபாடு, மகத்துவமானது. மறந்துவிடாதீர்கள். தேய்பிறை அஷ்டமி வழிபாடு, உங்களை வளர்ச்சிப்படுத்தும். வளமாக்கும் என்பது உறுதி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram