fbpx

மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்

தேவார பாடல் :
கொள்ளும் காதன்மை பெய்து உறும் கோல்வளை
உள்ளம் உள்கி உரைக்கும், திருப்பெயர்
வள்ளல் மா மயிலாடுதுறை உறை
வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே.

மயிலாடுதுறையில் உறைகின்ற வள்ளலும், கங்கை வெள்ளம் தாங்கிய சடையனுமாகிய பெருமானை விரும்பிக் காதல் கொள்ளும் இயல்புடைய திரண்ட வளைகள் பெய்யப்பட்ட இப்பெண் உள்ளத்தால் உள்கி அப்பெருமான் திருப்பெயரையே உரைக்கும் தன்மையள் ஆயினள் என அப்பர் பாடியுள்ளார். அப்பர் இரு பதிகமும், ஞானசம்பந்தர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

ஊர்: மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம். மாயவரம், மாயூரம் எனவும் வழங்கப்படுகிறது.

மூலவர்: மயூரநாதர்

அம்பாள்: அபயாம்பிகை

ஸ்தல விருட்சம்: மாமரம், வன்னி

தீர்த்தம்: பிரம, ரிஷப தீர்த்தங்கள், காவிரியாறு

வழிபட்டோர்கள் : பிரம்மா, அம்பாள், கன்வ முனிவர்,

ஸ்தல வரலாறு : பிரம்ம தேவனால் உருவாக்கப்பட்ட இந்த ஊரில் பிரம்மா இத்தலத்து இறைவனாம் மாயூரநாதரை பூஜித்தான் என்று புராண வரலாறு கூருகிறது. அம்பாள் பார்வதி மயில் உருவில் சிவபெருமானை பூஜை செய்ததாக கருதப்படும் இரண்டு சிவஸ்தலங்களில் மயிலாடுதுறை ஒன்றாகும். மற்றொன்று தொண்டை நாட்டு சிவஸ்தலமான திருமயிலை ஆகும். சிவபெருமானை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தில் இறைவன் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக கலந்து கொண்டு அவமானப்பட்ட பார்வதியை சிவன் சபித்து விடுகிறார். காவிரிக்கரையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் தவம் செய்து தன்னை மீண்டும் அடையுமாறு சிவன் பார்வதியை சபித்து விடுகிறார். மயில் ரூபம் பெற்று சிவபெருமானை வெகுகாலம் பூஜை செய்து அம்பிகை சுய உருவம் அடைந்து பாவங்கள் நீங்கப்பட்டு சிவனை அடைந்தாள். மயில் ரூபத்தில் அம்பிகை சிவனை வழிபட்டதால் இத்தலம் மயிலாடுதுறை எனப்பட்டது.

ஒருமுறை கண்ணுவ முனிவர் கங்கையில் நீராடச் செல்லும் போது எதிரில் சண்டாளக் கன்னிகள் மூவர் வருகின்றனர். அவர்கள் கண்னுவ முனிவரை வணங்கி தாங்கள் மூவரும் கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற நதிகள் என்றும், தங்களிடம் நீராடிய மக்களின் பாவக்கறை படிந்து தங்கள் உருவம் இவ்வாறு ஆகிவிட்டதென்றும் கூறினர். அவர்களுடைய பாவம் நீங்கி அவர்கள் சுய உருவம் பெற தென்திசையில் உள்ள மாயூரத்தில் துலா மாதத்தில் காவிரியின் மூழ்கி நீராட முனிவர் ஆலோசனை கூற அவ்வாறே செய்து பாவங்கள் நீங்கி சுய உருவம் பெற்றனர். தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லக்ஷ்மி, கௌரி, சப்தமாதர்கள் ஆகியோர் மாயூரத்திலுள்ள காவிரிக்கரையில் நீராட வருகின்றனர். ஆகையால் துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகும். அதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி நாளான கடைமுகம் அன்று நீராடுவது மிகமிகச் சிறப்பு. இம்மாதத்தில் முதல் 29 நாட்களில் நீராட முடியாவிட்டலும் கடைசி நாளான 30ம் நாள் காவிரியில் நீராடி மாயூரநாதரையும் அன்னை அபயாம்பிகையும் அன்று வழிபட்டால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாதத்தின் முதல் நாள் “முடவன் முழுக்கு” என்று கொண்டாடப்படுகிறது. துலா நீராடலைக் கேள்விப்பட்டு, தன் பாவத்தினைப் போக்க முடவன் ஒருவன் மயிலாடுதுறைக்கு வந்தான். தன் இயலாமையால் தாமதமாக வந்து சேர்ந்தான். அதற்குள் ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை முதல் நாள் ஆகி விட்டது. முடவனான தன்னால் மீண்டும் அடுத்த ஆண்டு வந்து மூழ்கிச் செல்வது இயலாது என இறைவனிடம் அவன் முறையிட்டதால், இறைவன் அவனுக்கு ஒருநாள் நீட்டிப்பு தந்தார். முடவனும் காவிரியில் மூழ்கி எழுந்தான். அவனது பாவமும் நீங்கியது.

ஆலய சிறப்புகள்: 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் 5. திருசாய்க்காடு ஆகும். ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்ற பழமொழியே இதன் பெருமையைக் காட்டுகிறது.

தரிசன பயன்கள்: காசி தரிசனத்திற்கு இணையான பயன்கள்

எப்படி செல்வது : சென்னையிலிருந்து பேருந்து மற்றும் ரயில் சேவைகள் உள்ளன. மேலும் கும்பகோணம், திருவாரூர், சிதம்பரம் ஆகிய இடங்களிருந்தும் பேருந்து வசதி உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram