fbpx

மலருக்காக கண்ணை வைத்து ஈசனை பூஜித்த திருமால்!!

குபன் என்னும் அரசனுக்கு உதவுவதற்காக திருமால், ததீசி முனிவர் மீது தம் சக்ராயுதத்தை ஏவினார். அது அவரது வஜ்ரம் போன்ற உடலைத் தாக்கமுடியாமல் சிதைந்தது. அதனால் திருமால் இத்தலத்தை அடைந்து, அம்பிகை பூஜித்த மணலால் ஆன மணிகண்டேஸ்வரரை தினமும் ஆயிரம் தாமரைப்பூக்களால் அர்ச்சித்து தன் சக்ராயுதத்தை மீட்டு அருள வேண்டினார். அவரின் பக்தியை சோதிக்க எண்ணிய ஈசன், ஒரு நாள் அந்த ஆயிரம் தாமரை மலர்களில் ஒன்றை மறைந்துபோகச் செய்தார்.

வழக்கப்படி அர்ச்சனை செய்தபோது ஒரு மலர் குறைவதைக் கண்ட திருமால், மலர் போன்ற தன் கண்ணை அப்படியே அகழ்ந்து எடுத்து ஈசனை அர்ச்சித்தார். ஈசன் அவரை, ‘செந்தாமரைக் கண்ணா’ என்றழைத்து மகிழ்ந்தார். திருமாலின் சக்ராயுதத்தையும் மீட்டுத் தந்தார். தனக்கு அருள்புரிந்தது போல் இத்தலத்தை தரிசிப்பவர் அனைவருக்கும் அருள் புரிய ஈசனை திருமால் கேட்டுக் கொண்டார். பிறகு, ஈசன் கருவறையின் முன் நந்தியின் பின்னால் ஈசனை நோக்கி கை கூப்பிய நிலையில் நிலை கொண்டார் என காஞ்சிப்புராணம் கூறுகிறது.

ஹரியான திருமால் பேறு பெற்றதால் திருமால்பேறு என்றும், ஹரிசக்ரபுரம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.

கண் நோய்களை நீக்கும் நிகரற்ற தலம் இது. கருவறையில் அருளும் ஈசன், மணலால் ஆன லிங்கம்.

ஒரு முறை ஈசனின் கோபத்துக்கு ஆளான அம்பிகை, பூவுலகில் இத்தலம் வந்து மணலால் லிங்கம் பிடித்து ஈசனை வழிபட ஆரம்பித்தாள். அம்பிகையை சோதிக்க, ஈசன் தன் தலையிலிருந்த கங்கையை பாலாற்றில் கலந்து ஓடச்செய்ய, பார்வதி எங்கே தன் மணல் லிங்கம் கரைந்து விடுமோ என பயந்து தன் அண்ணனான திருமாலை உதவிக்கு அழைத்தாள்.

திருமால் இத்தலம் அருகே உள்ள திருப்பாற்கடல் எனும் இடத்தில் படுத்துக் கொண்டு அந்த வெள்ளத்தைத் தடுத்தார். அங்கேயிருந்து பாலாறு காஞ்சிக்கு தெற்கே ஓட ஆரம்பித்தது. அம்பிகை ஈசன் வழிபாட்டை நிறைவாக முடித்து அவருடன் இணைந்தாள்.

ராஜகோபுரத்தைக் கடந்தவுடன் அம்பிகையான அஞ்சனாட்சி இடது புறம் தனிக்கோயிலில் அருள்கிறாள். கருவறையில் தெற்கு நோக்கி அருளே வடிவமாய் பாசம், அங்குசம், வரதம், அபயம் தரித்து திருமுகத்தில் புன்னகை துலங்க, ‘அஞ்சாதே, இந்த அஞ்சனாட்சி இருக்கும் வரையில்’ என கூறுவது போல் சாந்நித்யமாக தேவி தரிசனம் தருகிறாள்.

வியாபாரத்தில் நஷ்டம், திருமணத்தடை, திருமண உறவில் பிரச்னை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அன்னையை தரிசித்து வேண்டினால் அந்த பிரச்னைகளை இல்லாமல் செய்து விடுவாளாம் இந்த அஞ்சனாட்சி. நினைத்ததை நிறைவேற்றித் தருவதால் இந்த அன்னை கருணை நாயகி என்றும் பக்தர்களால் போற்றப்படுகிறாள். பௌர்ணமி அன்று ஊஞ்சல் உற்சவமும், வெள்ளிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகளும் இந்த அன்னைக்கு நடக்கின்றன. அன்னை சந்நதியின் அர்த்த மண்டபத்தில் மீன் உருவங்கள் நிறையக் காணப்படுகின்றன. மீன ராசி அன்பர்களின் பரிகாரத்தலமாக இந்த சந்நதி போற்றப்படுகிறது.

சந்நதியின் வெளியே நவகிரக நாயகர்கள் அருள்கின்றனர். ஆலயத்தில் பூஜைகள் அனைத்தும் ஈசன், நடராஜப்பெருமான், திருமால் மூவருக்கும் சேர்த்தே நடைபெறுகின்றன

பிரகார வலம் வரும்போது இந்த ஆலயத்தைக் கட்டிய பராந்தகசோழனின் நினைவாக சோழீஸ்வர லிங்கம், நால்வர், சப்த மாதாக்களில் கௌமாரியும் ஐந்த்ரீயும் நீங்கலாக மற்ற ஐந்து மாதர்கள், வல்லப கணபதி, உச்சிஷ்ட கணபதி, பால கணபதி, சிதம்பரேஸ்வரர், மகாலக்ஷ்மி, வள்ளி – தேவசேனா சமேத சுப்ரமண்யர், வீரபத்திரர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் பிராகாரத்திலும்; மாம்பழம் ஏந்திய விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், நான்முகன், வித்தியாசமான அஷ்டபுஜ துர்க்கை ஆகியோர் கோஷ்டங்களிலும் அருள்கின்றனர்.

பொதுவாக சிவாலயங்களில் பூஜை மணியில் நந்தி வீற்றிருக்கும். இங்கு சங்கு-சக்ரம் உள்ளது. ஹரியும் சிவனும் ஒன்று என்பதை இந்த ஆலயத்தின் ஒவ்வொரு அமைப்பிலும் காண முடிகிறது.

செங்கல்பட்டு, அரக்கோணம் ரயில் பாதையில் திருமால்பூர் ரயில்நிலையத்திலிருந்து தென்மேற்கே நான்கு கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம். காஞ்சிபுரத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram