fbpx

முதல்படை வீடு – திருவண்ணாமலை

முருகப்பெருமானுக்கு இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளின் வழிபாடு பலன்கள் வருமாறு:-

முதல்படை வீடு – திருவண்ணாமலை :

திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் ‘அல்லல் போம் விநாயகர்’. இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலே ‘அல்லல் போம் வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்’ என்பது. இவரை வழிபட அல்லல்கள் தீரும்.

இரண்டாம் படை வீடு – விருத்தாசலம் :

இங்குள்ள ஆலயத்தில் எழுந்தளியுள்ள கணபதிக்கு ஆழத்துப் பிள்ளையார் என்று பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னதி கொண்டுள்ளார். இந்த விநாயகரைத் துதித்தால் செல்வமும், கல்வியும் மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும்.

மூன்றாவது படைவீடு- திருக்கடவூர் :

எந்தவிதமான வாழ்க்கை வசதிகள் நமக்கு அமையப் பெற்றிருந்தாலும் அதை அடைய நமக்கு மிக முக்கியத் தேவை நீண்ட ஆயுள். இந்த ஆயுளை அள்ளி வழங்குகிறவராக திருக்கடவூர் கள்ள வாரணப் பிள்ளையார் விளங்குகிறார்.

நான்காம்படை வீடு – மதுரை :

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள சித்தி விநாயகர் நான்காம்படை வீடு விநாயகராக கருதப்படுகிறார். மீனாட்சி அம்மன் சன்னதிக்குள் நுழையும் முன்னர் இவரின் தரிசனத்தைப் பெறலாம். நாம் விரும்புகின்றவாறு காரியங்களை நிறைவேற்றித்தருபவராக இவர் உள்ளார். மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காக குதிரை வாங்கப் புறப்படுகையில் இந்த சித்தி விநாயகரையே தரிசித்துச் சென்றதாக திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது.

ஐந்தாவது படை வீடு – பிள்ளையார்பட்டி :

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஐந்தாம் படை வீட்டின் அதிபதியராகத் திகழ்கிறார். அனைத்துப் பேறுகளும் நம்மை வந்தடைந்தாலும் ஞானம் இல்லையேல் அந்தப் பேறுகளால் ஒரு பலனும் இல்லை. அந்த ஞானத்தை வழங்குபவராக இவர் அருள்பாலிக்கிறார். இவர் சிவலிங்கத்தைக் கையில் தாங்கி அருள்புரிகிறார். சிவலிங்கத்தை கையில் ஏந்தி சிவபூஜை செய்பவராகத் திகழும் இந்த கற்பக விநாயகரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.

ஆறாம்படை வீடு – திருநாரையூர் :

திருநாரையூரில் அருள்பாலிக்கிறார் பொள்ளாப் பிள்ளையார். அப்பரும் சம்பந்தரும் பாடிய இத்தலத்தில் இவரை வழிபட புதிய முயற்சிகளில் கை மேல் வெற்றி பலன் கிடைக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram