உலகத்திலே த்ரிவிக்ரம அவதாரம் தான் மிகப் பெரிது என்று நாம் நினைக்கிறோம். லோகமெல்லாம் அளந்து நின்றானே அந்த பிரம்மாண்ட ரூபத்தைத்தானே எல்லோரும் பெரிது என்று கொண்டாடுவோம். ஆனால் அந்த த்ரிவிக்ரம அவதாரத்தை விடப் பெரியது வராஹ அவதாரம் என்பது யோசித்தால் புரியும். அதனால் தான் உன் பெருமையை யாரும் உணர முடியாது என்று அந்த அவதாரத்தைப் பாடுகிறார் ஆழ்வார்.
எந்த உலகத்தை அளப்பதற்குப் பரமாத்மா திருவடியைத் தூக்கி வைத்தானோ அதே உலகமானது இந்த வராஹ அவதாரத்திலே பகவானின் மூக்கிலே ஒட்டிக் கொண்டிருக்கிறது. ஏதோ சிறு துகளாக துளியூண்டு ஒட்டிக் கொண்டிருக்கிறது. உலகையே மூக்கின் மேலே தரிக்கிறான்.
அதனால் தான் ஆண்டாள் சொல்கிறாள்:
பாசிதூர்த்துக் கிடந்த
பார்மகட்குப் பண்டொருநாள்
மாசுடம்பில் நீர்வாரா மானமில்லாப் பன்றியாம்
தேகடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே
மானமில்லா பன்றியாம்…
மானமில்லா என்றால், ‘அளவில்லாத’ “எவ்வளவு பெருமையுடையது” என்று நிர்ணயிக்க முடியாத என்று அர்த்தம். அப்படிப்பட்ட மகாவராஹர் அவர். தாமரை புஷ்பம் போன்ற அவர் திருநேத்திரங்களே (கண்களே) அந்த நாராயணன் ஸ்வரூபம் என்று கோள் சொல்லிக் காட்டிக் கொடுத்து விடுகின்றன. அந்த வராஹ அவதாரிதான் விச்வாத்மா – ஜகத்துக்கு எல்லாம் தலைவன்.
நான்கு வேதங்களையும் நான்கு தமிழ்ப் பிரபந்தங்களாக மாற்றிக் கொடுத்த நம்மாழ்வார் திருவிருத்தம் என்கிற முதல் பிரபந்தத்தை முடிக்கிற சமயத்திலே வராஹ மூர்த்தியைத்தான் தியானம் பண்ணுகிறார். “அந்த வராஹ மூர்த்தியை விட்டால் நமக்கு வேறு கதி ஏது” என்கிறார்.
விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திலே பிற்பகுதியில் “மஹா வராஹோ கோவிந்த” என்று வருகிறது.
அதையே தான் சஹஸ்ர நாமத்தின் ஆரம்பத்தில் வரும் விச்வ சப்தமும் சொல்கிறது.
ஹிரண்யாசுரனை சம்ஹாரம் பண்ணிய பரமாத்மா, பூமி பிராட்டியை எடுத்துக் கொண்டு மேலே வருகிறான்; கண்களை உருட்டுகிறான். சப்தித்துக் கொண்டு வருகிறான். பூமி பிராட்டி அந்த நேரத்திலே அழுது கொண்டிருக்கிறாள்.
பகவானுக்கு ஒரே வருத்தம்! காப்பாற்றுகிற நேரத்திலே அவள் அழுது கொண்டிருக்கிறாளே!உலகில் யாராவது கிணற்றில், பள்ளத்தில் விழுந்தவர்களைத் தூக்கிவிட்டால் அழுவார்களா? நீ சந்தோஷப்பட வேண்டிய நேரத்திலே, இப்படி அழலாமா? என்று கேட்கிறார் பகவான்.
நான் கூக்குரலிட்டு அழுதபோது ஓடோடி வந்து ரட்சித்தீர்கள். நான் உங்கள் பார்யை, சிஷ்யை, பத்னி என்பதால் வந்தீர்கள். இந்த பூமியில் இருக்கிற ஜீவன்கள் கூப்பிட்டால், வருவீர்களா? என்னை ரட்சித்த மாதிரி இவர்களை ரக்ஷிப்பீர்களா? என்று கேட்டாள்.
“ஒருத்தனுக்கு மனம் தெளிவாக, அலைபாயாமல், விகாரமில்லாமல் இருக்கிற போதே – சின்ன வயதிலேயே, மனத்தில் காமம் புகாத நிலையிலே, இந்திரியங்கள் சரியாக இயங்கும் நிலையிலே, என்னுடைய விச்வரூபத்தை எவன் உணர்கிறானோ, என் திருவடியிலே எவன் ஒரு புஷ்பத்தைப் போட்டு அர்ச்சனை பண்ணுகிறானோ, எவன் என் திருநாமத்தை வாய்விட்டு உரக்கச் சொல்கிறானோ, என் திருவடியிலே எவன் ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகிறானோ, அவன் அழைக்கும் போது நான் ஓடோடி வருவேன்”.
வராகப்பெருமாளுடைய சரமச்லோகம் இதுவாகும்.
அந்திம காலம் என்பது மனிதர்களுக்கு, கல் கட்டை மாதிரி விழுந்து கிடக்கும் நிலை வந்து விடும். அப்போது சரணாகதி பண்ண முடியுமா? இத்தனை நாள் ஓடி உழைத்துப் பொருள் தேடியும் அதை எங்கே வைத்தோம் என்று அவனுக்கு நினைவு வரவில்லையே… அந்தச் சமயத்திலே பகவான் திருப்பெயரை அவன் எப்படிச் சொல்வான்?
ஆகையினாலே தான், அதற்கு முன்பே மனத்திலே எம்பெருமானை பிரதிஷ்டை பண்ணி, அவன் திருவடியிலே பக்தியாகிற புஷ்பத்தை இட்டு வணங்க வேண்டும். ஏனென்றால் அந்திம காலம் என்பது எல்லோருக்கும் கட்டாயம் உண்டு. அது நமது கட்டுப்பாட்டிலே இல்லை.
ஒருவர் தம் மனைவியிடம் குடிக்க தீர்த்தம் கேட்டார். அவள் கொண்டு தருவதற்குள் காலமாகி விட்டார். சடங்குகள் எல்லாம் நடந்து அவரை எடுத்துச் செல்ல சித்தமானபோது திடீரென்று உயிர் திரும்பியது போல் கண்விழித்து நான் எங்கே இருக்கேன்? இங்கே என்ன நடக்கிறது? என்று கேட்டார். எனவே உயிர் போவதும் வருவதும் நம் கட்டுக்குள் இல்லை என்பதாகிறது.
அதனால் தான், இளமையிலேயே பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும் என்கிறான்.என் திருவடியில் ஆத்மா சமர்ப்பணம் பண்ணினவனைக் கைவிடேன் என்கிறான். அவ்வாறு செய்பவன் என் பக்தன். அவனை ஒருநாளும் நான் கைவிடேன். நானே வந்து அவனை உத்தம கதிக்கு அழைத்துப் போவேன் என்கிறான் வராஹஸ்வாமி.
எம்பெருமானின் அப்படிப்பட்ட வாக்கு இந்த வராஹ அவதாரத்திலே வெளிப்பட்டதினாலே அது பெருமையும், சிறப்பும் மிக்க அவதாரம். அந்த வாக்கை பூமி பிராட்டி மூன்று முடிச்சுகளாக முடிந்து வைத்துக் கொண்டாளாம். புஷ்பம் அர்ச்சித்தல், ஆத்மா சமர்ப்பணம், திருநாமம் சொல்லுதல் என்ற மூன்றுக்கும் மூன்று முடிச்சு.