கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார்

13.அரிவாட்டாய நாயனார்
சோழர்களது காவிரி நாட்டிலே கணமங்கலம் எனும் ஓர் ஊர் உள்ளது. அது நீர்வளம், நிலவளம் முதலியவற்றால் சிறந்து விளங்குவது. அவ்வூரிலே வாழ்ந்த வேளாளரின் தலைவராகத் தாயனார் எனும் செல்வந்தர் இருந்தார். அவர் சிவபாதம் மறவாத சீருடையாளர். மனையறம் பூண்டு வாழ்ந்த அவர் சிவபெருமானுக்கு ஏற்றன என்று செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் நாள்தோறும் கொண்டு வந்து திருவமுது செய்விப்பார்.
இத்திருத்தொண்டினை அவர் வறுமை வந்த காலத்தும் விடாது செய்துவருவார் என உலகுக்குக் காட்டி, அது கொண்டு உலகை உய்விக்கும் பொருட்டு, இறைவர் அவரது வழிவழி வந்த செல்வத்தை சென்றவழிதெரியாது மாற்றினார். அதனால் அவரது செல்வம் யானை உண்ட விளாங்கனி போல உள்ளீடற்று மறைந்தது. அப்போதும் நாயனார் எம்பெருமானுக்கு அமுது படைப்பதை நிறுத்தவில்லை கூலிக்கு நெல்லறுத்து கூலியாகக் கிடைத்த செந்நெல்லைக் கொண்டு இறைவருக்குத் திருவமுது ஆக்கினார். கார்நெல் அரிந்து கார்நெல் கூலியாகப் பெற்று தாம் உண்டு வந்தார் இந்நிலையினையும் மாற்ற இறைவர் திருவுளம் பற்றவே வயல்களில் எல்லாம் நல்ல நீண்ட செந்நெல்லேயாகி விளைந்தன. அவற்றை அறுத்த நெற்கூலியினைக் கொண்டு “இது அடியேன் செய்த புண்ணியமே ஆகும்” என்று சிந்தை மகிழ்ந்து, அக்கூலியெல்லாம் திருவமுதுக்கே என்று வைத்தார். தம் வீட்டுக் கொல்லையில் வளர்த்த கீரை வகைகளைக் கொய்து மனைவியார் சமைத்துத்தர அதனை உணவாகக் கொண்டார். வீட்டுத்தோட்டத்தில் உள்ள கீரை வகைகள் ஒரு கட்டத்தில் தீர்ந்துவிட்டது.ஆகையால் தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்து வந்தார்
ஒருநாள் தொண்டனார் இறைவர்க்கு அமுது ஊட்ட அவரது அன்புபோன்ற தூய செந்நெல்லரிசியும், பசிய மாவடுவும், மென்கீரையும் கூடையிற் சுமந்து செல்ல, மனைவியார் அவர் பின்பு மட்கலத்தில் ஆனைந்து ஏந்திச் சென்றனர். இவ்வாறு செல்லும் பொழுது உணவு உட்கொள்ளாமல் இருந்ததால் உடல் மிகவும் நலிவுற்று காணப்பட்டார் .உடல் வாடியதனால் கால் தளர்ந்து தாயனார் நிலைதடுமாறி கீழே விழச் சென்றார் அப்பொழுது அவர் மனைவியார் விரைந்து வந்து அவரை தாங்கி பிடித்துக் கொண்டார் .ஆனால் கூடையிற் கொண்டு வந்தவை எல்லாம் நிலத்தில் சிந்தின. அது கண்டு தாயனார், மனம் வருந்தி“திருவமுது இல்லாமல் இனி அங்கு ஏன் போதல் வேண்டும்?” என வருந்தினார். “அளவில்லாத தீமையுடையேன், இறைவனுக்கு அமுது செய்யும் பாக்கியம் இழந்துவிட்டேன் என்று வருந்தினார்.இதற்கு தானே பொறுப்பு என்று மனம் வருந்திய தாயனார் தனது கழுத்தை அறுத்து உயிர் நீக்க முற்பட்டார் அப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் தாயனார் மனைவி மிகவும் வேதனை அடைந்தார் தனது திருமாங்கல்யத்தை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டு எம்பெருமானை வேண்டினார் அப்பொழுது பூமியிலிருந்து ருத்ராட்சமும் திருநீறும் அணிந்த ஒரு கை தாயனார் தன் கழுத்தை அருக்க விடாமல் தடுத்தது அப்பொழுது எம்பெருமான் மாவடு உண்ணும் சத்தம் விடேல் விடேல் என்று கேட்டது .அது இறைவன் தான் நிலத்தில் சிந்திய திருவமுதை ஏற்றுக் கொண்டார் என்று தாயனார் உணர்ந்தார் இறைவனது திருக்கரம் அவரது கையைப் பற்றிக் கொண்டவுடன் அவரும் கழுத்தை அறுப்பதை நிறுத்திவிட்டார்.அப்பொழுது அறுபட்ட கழுத்து மீண்டும் சேர்ந்தது
தாயனார் இறைவனை இரு கை கூப்பி வணங்கி“அடியேனது அறிவில்லாமையைக் கண்டு என் அடிமை வேண்டிக் கமரின் வந்து இங்கு அமுது செய்தருளும் பரனே போற்றி” என்று பலவாறு துதித்து வணங்கினார். இறைவர் இடப வாகனராய்த் தோன்றி ‘நீ புரிந்த செய்கை நன்று! உன் மனைவியுடனே கூட நம் உலகில் என்றும் வாழ்வாயாக!” என்று அருளிச் செய்து, அவர் உடனே அடிசேர, திரு அம்பலத்தில் எழுந்தருளினார். தாயனவர் தம் கழுத்தை அரிவாள் பூட்டி அறுத்த காரணத்தால் அரிவாட்டாய நாயனார் எனும் திருநாமத்தைப் பெற்றார்.
அரிவாட்டாய நாயனாரை ஆட்கொண்டவரே, நீள்நெறிநாதர் எனும் நீணெறிநாதர். அன்னை ஞானாம்பிகை. ஆமையின் செருக்கை அடக்கி, தோலினை ஆடையாக இறைவன் அணிந்த தலம். கோச்செங்கட் சோழன் தீராத நோய் தீர்ந்தபின் எழுப்பிய ஆலயம். படிக்காசுப் புலவர், தண்டலையார் சதகம் பாடி படிக்காசு பெற்ற கோயில். புலிக்கால் முனிவரும் பதஞ்சலி முனிவரும் தங்கி வழிபட்ட தலம். திருஞானசம்பந்தர், வள்ளலார் பாடிப் பரவிய தலம்.
செந்நெல் அரிசி முதலியவை சிந்த
அவை சிந்திய நிலவெடிப்பில்
இறைவர் அமுது செய்து அருள
அந்நிலையில் மாவடுவினது
“விடேல்” என்ற ஓசையைக் கேட்கும் பேறு பெற்ற தொண்டரின் திருவடி வணங்கித் துதித்துநிலை பெற்ற ஆனாயரின் செய்கை அறிந்தவாறு துதிக்கத் தொடங்குகிறேன்.
(அரிவாட்டாய நாயனார் புராணம் முற்றிற்று)
பெயர்:
அரிவாட்டாய நாயனார்
குலம்:
வேளாளர்
பூசை நாள்:
தை திருவாதிரை
அவதாரத் தலம்:
கணமங்கலம்
முக்தித் தலம்:
கணமங்கலம்
மேற்கோள்கள்:
1.சுந்தரமூர்த்தி சுவாமிகள் தனது திருத்தொண்டத் தொகையில் இரண்டாவது பாடலில் 13வது நாயன்மாராக அரிவாட்டாய நாயனாரை பின்வருமாறு வரிசை படுத்தி உள்ளார்
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
2.சேக்கிழார் பெருமான் தனது பெரியபுராணத்தின் பாடல் எண் 908 முதல் 930 வரை மொத்தம் 27 பாடல்கள் பாடியுள்ளார்
திருச்சிற்றம்பலம்
சிவார்ப்பணம்