fbpx

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 16

கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார்

  1. முருக நாயனார்

சோழமண்டலத்தில் உள்ள திருப்புகலூர் தெய்வமணம் கமழும் பழம் பெரும் திருத்தலம் ! இத்தலத்திலுள்ள சிவன் கோயிலுக்கு வர்த்தமானேச்சுரம் என்று பெயர். இத்தலத்தில், அந்தணர் குலத்தில் முருகனார் என்னும் சிவத்தொண்டர் தோன்றினார். முருகனார் இளமை முதற்கொண்டே இறைவனின் பாதகமலங்களில் மிகுந்த பற்றுடையவராய் வாழ்ந்து வந்தார் ! பேரின்ப வீட்டிற்குப் போக வேண்டிய பேறு பரமனின் திருத்தொண்டின் மூலம்தான் கிட்டும் என்ற பக்தி மார்க்கத்தை உணர்ந்திருந்தார் முருகனார். எந்நேரமும் அம்பலத்தரசரையும் அவர் தம் அடியார்களையும் போற்றி வணங்கி வந்தார் முருகனார். தேவார திருப்பதிகத்தினை ஓதுவார். ஐந்தெழுத்து மணிவாசகத்தை இடையறாது உச்சிரிப்பார். இத்தகைய சிறந்த சிவபக்தியுடைய முருக நாயனார் இறைவனுக்கு நறுமலர்களைப் பறித்து மலர்மாலை தொடுக்கும் புண்ணிய கைங்கரியத்தைச் செய்து வந்தார். முருகநாயனார் தினந்தோறும் கோழி கூவத் துயிலெழுவார். தூயநீரில் மூழ்குவார். திருவெண்ணீற்றை மேனியில் ஒளியுறப் பூசிக் கொள்வார். மலர்வனம் செல்வார். மலர்கின்ற பருவத்திலுள்ள மந்தாரம், கொன்றை, செண்பகம் முதலிய கோட்டுப் பூக்களையும், நந்தியவர்த்தம், அலரி, முல்லை, சம்பங்கி, சாதி முதலிய கொடி பூக்களையும், தாமரை, நீலோற்பவம், செங்கழுநீர் முதலிய நீர்ப்பூக்களையும் வகை வகையாகப் பிரித்தெடுத்து வெவ்வேறாகக் கூடைகளில் போட்டுக் கொள்வார். இவ்வாறு பறிக்கப்பட்ட வகை வகையான தூய திருநறுமலர்களைக் கொண்டு, கோவை மாலை, இண்டை மாலை, பக்தி மாலை, கொண்டை மாலை, சர மாலை, தொங்கல் மாலை என்று பல்வேறு விதமான மாலைகளாகத் தொடுப்பார்.

வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்குப்ப பூமாலையாம், பாமாலை சாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார். அரனாரிடம் அளவற்ற பக்தி பூண்டுள்ள முருகநாயனார் சிவன் அடியார்களுக்காகச் சிறந்த மடம் ஒன்றைக் கட்டுவித்தார். முருகநாயனாரின் திருமடத்திற்கு திருஞான சம்பந்தர், அப்பர் சுவாமிகள், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் போன்ற சைவ சண்மார்க்கத் தொண்டர்கள் எழுந்தருளியுள்ளார்கள். அவர்கள் முருகநாயனாரின் அன்பிற்கினிய நண்பர்களாகவும் மாறினர். இறுதியில் திருநெல்லூரில் நடந்த திருஞானசம்பந்தரின் பெருமணத்திலே கலந்துகொள்ளச் சென்ற முருக நாயனார், அங்கு தோன்றிய சிவ ஜோதியில் திருஞான சம்பந்தர் புகுந்தபோது தாமும் புகுந்தார். என்றும் நிலையான சிவானந்தப் பேரின்ப வாழ்வைப் பெற்றார். இறைவனின் திருவடி நிழலை அடைந்தார்.

பாம்பணிந்த திருவரையையுடைய பெருமானைப் போற்றி வழிபட்டதன் பயனாக, அவருடைய திருவடிநிழற்கீழ் இன்புற்றிருக்கும் முருக நாயனாரின் உண்மைத் தொண்டின் நெறி யினை வணங்கி, இனி வஞ்சனையிலாத நெஞ்சுடையவர்பால் தோன்றி நிற்கும் சிவபெருமானைத் தமது கருத்தில் கொண்டு, உருத்திர மந்திரம் கொண்டு வழிபட்ட அன்பர் உருத்திர பசுபதி நாயனார் பணிந்த பெருமையைச் சொல்கின்றேன்.

(முருக நாயனார் புராணம் முற்றிற்று)

மேற்கோள்கள்:
சுந்தரமூர்த்தி சுவாமிகள் தனது திருத்தொண்டத் தொகையின் மூன்றாவது பாடலில் 16வது நாயன்மாராக முருகநாயனாரை பின்வருமாறு வரிசை படுத்தி உள்ளார்

முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்

2.சேக்கிழார் பெருமான் தனது பெரியபுராணத்தின் பாடல் எண் 1022 முதல் 1035 வரை மொத்தம் 14 பாடல்கள் பாடியுள்ளார்

பெயர்:
முருக நாயனார்
குலம்:
அந்தணர்
பூசை நாள்:
வைகாசி மூலம்
அவதாரத் தலம்:
திருப்புகலூர்
முக்தித் தலம்:
நல்லூர்ப் பெருமணம்

திருச்சிற்றம்பலம்
சிவார்ப்பணம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram