கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார்

- திருநாவுக்கரசு நாயனார்
பாகம் -2
விடையேரும் பெருமானிடம் விடை பெற்றுக் கொண்டு காஞ்சிபுரத்தை வந்தணைந்தார். காஞ்சி மாநகரத்து அன்பர்களும், சிவதொண்டர்களும் நாவுக்கரசரை எல்லையிலே எதிர்கொண்டு வணங்கி வரவேற்றனர். ஏகாம்பரநாதர் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அப்பரடிகள், தழிழ்ப்பதிகம் சாத்தி ஏகாம்பரேசுவரளர வழிபட்டார். அங்கு சில நாட்கள் தங்கியிருந்து அடுத்துள்ள பல சிவத்தலங்களைத் தரிசிதது வந்தார் அப்பரடிகள். ஏகாம்பரநாரைப் பிரிய மனமில்லாமல் பக்தி மயக்கத்தில் மூழ்கினார். ஒரு நாள் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார். திருக்கழுக்குன்றம், திருவான்மியூர், மயிலாப்பூர், திருவொற்றியூர், திருப்பாச்சூர், திருவாலங்காடு, திருக்காரிகை வழியாகத் திருக்காளத்திமலையை அணுகினார் அப்பர். திருக்காளத்தியப்பரையும், திருக்காளத்தியப்பரின் வலப்பக்கத்தில் வில்லேந்தி நிற்கும் அருள் வல்லவர் கண்ணப்ப நாயனாரது திருச்சேவடிகளையும் வணங்கி வண்ணத் தமிழ்ப் பாமாலையால் அர்ச்சனை செய்தார். சில நாட்கள் அத்திருமலையில் தங்கியிருந்து புறப்பட்ட அப்பரடிகள், திருப்பருபதம் என்னும் ஸ்ரீ சைலத்தை வந்தணைந்தார். இத்திருத்தலத்தில் நந்தியெம்பெருமான், எம்பெருமானைத் தவஞ்செய்து வரம் பெற்று இம்மலை வடிவமாக எழுந்தருளி எம்பெருமானைத் தாங்குகிறார் என்பது புராண வரலாறு. தேவர்களும், சித்தர்களும், கின்னரர்களும், நாகர்களும், இயக்கர்களும், விஞ்சையர்களும், சிவமுனிவர்களும், தினந்தோறும் போற்றி மகிழ்நது வணங்கி வழிபடும் மல்லிகார்ச்சுனரை உளம் குளிரக் கண்டு பக்திப் பாமாலை சாத்தி வழிபட்டார் அப்பரடிகள்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, தெலுங்கு நாடு, மாளவதேசம், மத்தியப் பிரதேசம் முதலியவற்றைக் கடந்து காசியை வந்தடைந்தார் நாவுக்கரசர் ! அத்திரு நகரிலுள்ள தொண்டர்கள், அப்பரடிகளை வணங்கி மகிழ்ந்தனர். அவரோடு தலயாத்திரைக்குப் புறப்பட எண்ணினார். அப்பரடிகள் தடங்கண்ணித் தாயாரையும், விசுவ லிங்கத்தையும் போற்றி தமிழ்ப் பதிகம் பாடியருளினார். அப்பரடிகள் தம்முடன் வந்த அன்பர்களை விட்டு விட்டு திருக்கயிலாய மலைக்குப் புறப்பட்டார். அடர்ந்த காடுகளையும், உயர்ந்த மலைகளையும், காட்டாறுகளையும் கடந்து, கங்கைவேணியர் மீது தாம் கொண்டுள்ள அரும்பெருங் காதலுடன் தன்னந்தனியாக வழிநடக்கலானார் அப்பரடிகள். அவர் சிந்தை அனைத்தும் சிவநாமத்தைப் பற்றிய தாகவே இருந்தது. காய், கனி, கிழங்கு, குலை முதலியவற்றை உண்பதையும் அறவே நிறுத்திவிட்டார்! இரவென்றும், பகலென்றும் பாராமல் பரமன் மீது ஆறாக் காதல் பூண்டு நடந்து செல்லலானார். அத்திருவருட் செல்வரது பட்டுப் பாதங்கள் தேயத் தொடங்கின.

இரவு வேளையில் காடுகளில் காணும் கொடிய விலங்குகள் அவருக்கு எவ்வித துண்பத்தையும் கொடுக்காமல் அஞ்சி நடுங்கி ஒளிந்தன. நல்ல பாம்புகள் படமெடுத்து அதனது பணாமகுடத்துள்ள நாகமணிகளால் அவருக்கு விளக்கெடுத்தன. இவ்வாறு அப்பரடிகள் நடந்து கொண்டே பாலை வனத்தைக் கடக்கும் நிலைக்கும் வந்தார். கதிரவனின் கொடிய வெப்பத்தால், பாலைவனத்தில் நடந்த அவரது திருவடிகள் பரடுவரையும் தேய்ந்தன. கால்கள் தேய்ந்து ரத்தம் சொட்ட தொடங்கின. அதைப் பற்றியும் சறறும் வருந்தாமல் திருக்கைகளை ஊன்றி தத்தித் தத்தித் சென்றார். அதனால் கரங்களும் மணிக்கட்டுவரைத் தேய்ந்தன. அப்பொழுதும் அயர்ந்து விடாத அப்பரடிகள் மார்பினால் தவழ்ந்து சென்றார். சற்று தூரம் சென்றதும், மார்பும் தேய்ந்து குருதி பொங்க, சதைப்பற்று அற்று எலும்புகள் முறிந்தன. அப்பரடிகள் எதைப் பற்றியும் வருத்தப்படாமல் கயிலை அரசரின் சிந்தையிலே உடல் தசைகள் கெட, உடம்பை உருட்டிக் கொண்டே சென்றார். இவ்வாறு புற உறுப்புக்கள் எல்லாம் உபயோகமற்றுப் போனதும், அப்பரடிகள் செய்வதறியாது நிலத்தில் வீழ்ந்தார். அப்பரடிகள் வீழ்ந்து கிடந்த இடத்திற்கு அருகே ஓர் அழகிய தாமரைத் தடாகத்தைத் தோற்றுவித்தருளிய பரமன், ஓர் தவசி வடிவம் கொண்டு அப்பர் எதிரில் தோன்றினார். விழிகளை மூடியவாறு சயனித்திருந்த அப்பரடிகள் கண்னைத் திறந்துப் பார்த்தபோது தம்மைச் சுற்றித் தடாகமும், அத்தடாகத்தருகே அருந்தவசியும் இருக்கக் கண்டு வியந்தார்.
அப்பொழுது அத்தவசி, அன்பரே! உள்ளம் உருக உடல் தேய்ந்து, சிதைந்து, அழிந்து போகுமளவிற்கு இந்தக் கொடிய கானகத்தில் இப்படித் துயறுருவது யாது கருதி ? எனக் கேட்டார். அத்தவசியின் கோலத்தைக் கண்டு அவரது பாதங்களைப் பணிந்தார். கண்களிலே நீர் மல்க, சுவாமி ! மலைமகளுடன் கயிலையில் எழுந்தருளி யிருக்கும் எம்பெருமானைத் தரிசித்து வழிபட ஆறாக்காதல் கொண்டேன். ஆளும் நாயகனைக் கண்டுகளிக்காதவரை, என் வாழ்வு முற்றுப் பெறாது. பிறவித் துன்பத்தில் நின்றும் நான் விடுவிட, பிறையணிந்த பெருமானைக் கயிலைக்குச் சென்று எப்படியாகிலும் பேõற்றி÷ய தீருவேன். என்று மிகுந்த சிரமத்துடன் அப்பரடிகள் பதிலுரைத்தார். அது கேட்ட அத்தவசி புன்னகை முகத்தில் மலர, அப்பனே ! பாம்பணிந்த பரமேசுரர் பார்வதியுடன் வீற்றிருக்கும் கயிலைமலையை மானுடர் சென்று காண்பது என்பது ஆகாத காரியம் அப்படியிருக்க இறைவன் தரிசனம் உனக்கு மட்டும் எப்படியப்பா கிட்டும் ? எதற்கப்பட இந்த வீண் முயற்சி ? தேவர்களுக்கும் அது அரிது. கயிலையையாவது நீ காண்பதாவது? பேசாமல் வந்த வழியே திரும்ப போவதே தக்கச்செயல். இல்லையேல் கயிலைக்குப் போவதற்குள் உன் உடல்தான் அழியும். சுவாமி! அழியப் போகும் இந்த உடலுக்காக அஞசேன். கயிலைமலை பூமியில் எழுந்தருளியிருக்கும் என் அப்பனின் ஆனந்த தாண்டவத்தை கண்டு களித்த பின்னரன்றி நான் மீளேன்.
இந்தப் பொய்யான மெய்யுடம்பை ஒருபோதும் திரும்பச் சுமந்து செல்லேன். தவசியாக வந்த பெருமான் மறைந்தார். நாவுக்கரசர் வியப்புற்றார். ஓங்கு புகழ் நாவுக்கரசனே ! எழுந்திரு என்ற இறைவனின் அருள்வாக்கி ஒலித்தது. அப்பரடிகள், பூரித்தார். அவரது தேய்ந்து அழிந்த உறுப்புக்கள் எல்லாம் முன்போல் வளர்ந்து பிரகாசித்தது. அவர் உடல் வன்மை பெற்று எழுந்தார். நிலமதில் வீழ்ந்து வணங்கினார். சிவ சிவ சுந்தரதேவனே! அருட்கடல் அண்ணலே! அடியேனைக் காத்த ஐயனே! ஆடுகின்ற அரசனே! மண்ணிலே தோன்றி விண்ணிலே மறைந்தருளி அற்புதம் புரிந்த தேவநாயகனே! தேவரீர் திருக்கயிலைமலை மீதில் எழுந்தருளியிருக்கும் திருக்கோலத்தைக் கண்டு வழிபட இந்த அடியேனுக்கு அருள்வீர் ! இறைவன் அசரீரியாக அப்பரடிகளுக்கு, அன்ப! இப்பொய்கையில் மூழ்கி திருவையாற்றில் எழுந்திருப்பாயாக ! அங்கு திருக்கயிலையில் நாம் வீற்றிருக்கும் காட்சியைக் காட்டியருளுவேன் என்று மொழிந்தருளினார். அம்பலத்தரசனின் ஆணையைச் சிரமேற்கொண்டு சிந்தை குளிர்ந்த அப்பரடிகள் செந்தமிழ்ப் பதிகத்தால் செஞ்சடை அண்ணலைப் போற்றிப் பணிந்தவாறு தூய தடாகத்தில் மூழ்கினார். பிறையணிந்த பெருமானின் பெருமையை யாரே அறியவல்லார் ? அத்தடாகத்தில் மூழ்கிய அப்பர் பெருமான் திருவையாறு பொற்றாமரைக் குளத்தில் தோன்றிக் கரையேறினார்.
அப்பரடிகள் இறைவனின் அருளை எண்ணி எண்ணி கண்ணீர் மல்கி கரைந்துருகினார். அமரர்கள் மலர்மாரி பொழிந்தனர். அவரது பொன் திருமேனியிலும், நெற்றியிலும், தெய்வீகப் பேரொளி பால் வெண்ணீறு போல் பிரகாசித்தது. சிரம் மீது கரம் உயர்த்தியவாறு நீரிலிருந்து கரையேறினார் அப்பரடிகள் ! கோயிலை அடைந்தார். பூங்கோயில் கயிலைப் பனிமலை போல் காட்சி அளித்தது. எம்பெருமான் அப்பர் அடிகளுக்கு சக்தி சமேதராய் நவமணி பீடத்தில காட்சி கொடுத்தார். அப்பரடிகள், சிவானந்தச் சமுத்திரத்தைக் கண்கள் என்னும் திருக்கரங்களால் அள்ளி அள்ளி்ப பருகினார். வீழ்ந்து பணிந்து எழுந்தார். ஆனந்தக் கண்ணீர் வடித்தார்; சிவக் கடலில் மூழ்கி திளைத்தார். அப்பரடிகள், திருத்தாண்டகப் பதிகங்களைப் பக்திப் பெருக்கோடும பாடிப் பாடி அளவிலா இன்பம் எய்தி நின்றார். அப்பரடிகளின் ஆசையை நிறைவேற்றிய பெருமான் அத்திருக் காட்சியைக் மறைந்தருளினார். கயிலைக் காட்சி சட்டென்று மறைந்தது கண்டு திகைத்த அப்பரடிகள் மாதர் பிறைக் கண்ணியாளை மலையான் மகளொடும் எனத் தொடங்கும் தமிழ்ப் பதிகம் பாடினார். திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் பஞ்ச நதீசுவரரின் திருவடித் தாமரைகளைப பணிந்தார். அத்திருத்தலத்தை விட்டுச் செல்ல மனம் வராத அடியார் திருவையாற்றில் தங்கியிருந்து உழவாரப் பணி செய்து வரலானானர். சில நாட்களில், அங்கிருந்து புறப்பட்டு சிவத்தலங்களைத் தரிசித்துத் தமிழ்ப் பாமாலை பாடிய வண்ணம் திருப்பூந்துருத்தி என்னும் தலத்தை அடைந்தார். அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமானுக்குத் திருத்தொண்டுகள் பல புரிந்து வரலானார்.
இந்தச் சமயத்தில் பாண்டிய நாட்டிலே சமணரை வென்று வெற்றி வாகை சூடிய ஞானசம்பந்தர், சோழநாடு திரும்பினார். திருப்பூந்துருத்தியில் அப்பரடிகள் அவரைக் கண்டு மகிழ அடியார்களும் புடைசூழ தமது முத்துச் சிவிகையில் புறப்பட்டார். அதுபோல, ஞானசம்பந்தரின் வருகையைக் கேள்விப் பட்ட அப்பரடிகள், உவகைப் பொங்க அக்கணமே அவரை எதிர் கொண்டழைக்கப் புறப்பட்டார். அப்பரடிகள் முத்துச் சிவிகையில் சம்பந்தர் வருவதைக் கண்டார். அப்பரடிகள் தம்மை எவரும் காணாதபடி ஞானசம்பந்தர் வீற்றிருக்கும் முத்துச் சிவிகைதனைத் தோள் கொடுத்துச் சுமந்து நடக்கலானார். திருப்பூந்துருத்தியை வந்தடைந்த ஆளுடைப்பிள்ளை அப்பர் அடிகளை எங்கும் காணாது அப்பர் எங்கிருக்கிறார் என்று கேட்க திருநாவுக்கரசர் தேவரீருடைய அடியேன், முத்து சிவிகையினைத் தாங்கி உமது திருவடிகளைப் போற்றி வரும் பெறும்பேறு பெற்று இங்குள்ளேன் என்று மகிழ்ச்சிப் பொங்க கூறினார். அப்பருடைய மொழி கேட்டு, ஆளுடைப் பிள்ளையார் சிவிகையினின்றும் விரைந்து கீழே இறங்கினார். உள்ளமும், உடலும் பதைபதைக்க அப்பரடிகளை வணங்க வந்தார். அதற்குள் அப்பரடிகள் விரைந்து ஆளுடைப் பிள்ளை தம்மை வணங்குவதற்கு முன் அவரை வணங்கி மகிழந்து உள்ளம் உருகில கண்களில் நீர்மல்க நின்றார். இக்காடசியைக் கண்ட சிவனடியார்கள் அனைவரும் மெய்யுருகி நின்றனர்.
இரு திருத்தொண்டர்களையும் வணங்கினர். இரு ஞானமூர்த்திகளும், அத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் தாளைத் தலையால் வணங்கி திருத்தாண்டகம் பாடி மகிழ்ந்தனர். அன்பர்களுடன் இரு சிவநேசச் செல்வர்களும் மடத்தில் தங்கினர். அப்பரும், ஆளுடைப்பிள்ளையும் அடியார்கள் புடைசூழ, மேளதாள வாத்தியங்கள் முழங்க திருக்கோயில் சென்று திருப்பூந்துருத்திப் பெருமானைப் பாமாலையால் போற்றிப் பணிந்தனர். பக்தர்கள் பரமனையும், பரமன் அருள்பெற்ற தவசியர்களையும் வணங்கி மகிழந்தனர். ஒருநாள் ஆளுடைப்பிள்ளையார் அப்பரடிகளிடம் பாண்டி நாட்டில் தாம் சமணர்களை வாதில் வென்று வெற்றி பெற்ற விவரத்தை கூற, நாவுக்கரசர் பாண்டிய நாடு செல்ல ஆவல் கொண்டார். அப்பரடிகள் ஆளுடைப்பிள்ளையாரிடம், நான் பாண்டிய நாடு சென்று வருகிறேன். தாங்கள் தொண்டை நன்னாட்டிலுள்ள சிவத்தலங்களைத் தரிசித்து வருவீராகுக என்று கூறினார். ஆளுடைப்பிள்ளையாரும் அவ்வாறே செய்யச் சித்தம் பூண்டார். ஞானசமபந்தர் அப்பரடிகளிடம் விடைபெற்றுப் புறப்பட்டார். ஞானசம்பந்தரை வழி அனுப்பிவிட்டு அப்பரடிகள் தமது பாத யாத்திரையைத் தொடர்ந்தார். பல திருத்தலங்களைத் தரிசித்துக் கொண்டே மதுரையம் பதியை வந்தடைந்தார் அப்பரடிகள் ! அப்பரடிகள், மதுரையம்பதிக்கு எழுந்தருளியுள்ளார் என்று செய்தியறிந்தான் பாண்டியன் ! மன்னரும், மங்கையர்கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும், அன்பர்களாடு, அடியார்களோடு அப்பரடிகளைத் தொழுது வணங்கி, உபசரித்து வரவேற்றார். ராஜ மரியாதைகளுடன் அப்பரடிகளை கெளரவப்படுத்தினான் மன்னன். அத்திருத்தலத்தில், அடியார் சிலகாலம் தங்கியருந்தார். எம்பெருமானு்க்குத் தமிழ்த் தொண்டாற்றினார்.
மன்னர் மனம் மகிழ்ந்தார். அரசியாரும், அமைச்சரும் அடியாரைப் போற்றி பெருமிதம் கொண்டனர். அங்கிருந்து புறப்பட்ட அப்பரடிகள் திருப்புவனம், திருராமச்சுரம், திருநெல்வேலி, திருகானப்பேர் போன்ற பல பாண்டி நாட்டுக் கோயில்களில் எழுந்தருளியிருக்கும் பரமனைப் பாடிப் பரவிய வண்ணம், சோழ நாட்டை நோக்கிப் புறப்பபட்டார். பொன்னி நாட்டில் ஒளிவிடும் பொன்னார் மேனியனுடைய புனிதத் தலங்களையெல்லாம் கண்குளிரக் கண்டு பற்பல பைந்தமிழப் பதிகங்களைப் பாடி வணங்கிய வண்ணம் திருப்புகலூரை அடைந்தார். திருப்புகலூர்ப் பெருமானின் தாளை வணங்கி ஆறாக் காதலுடன், உள்ளமும், உடலும் உருக, அத்திருத்தலத்திலேயே தங்கியிருந்து, புகலூர்ப் புனிதர்க்கு உழவாரப் பணிசெய்து வராலனார் அப்பரடிகள். அப்பொழுது அப்பரடிகள் நினற திருத்தாண்டகம், தனித் திருத்தாண்டகம், திருத்தலக்கோவை, குறைந்த திருநேரிசை, தனித்திருநேரிசை, ஆருயிர் திருவிருத்தம், தசபுராணம், பாவநாசப்பதிகம், சரக்கறைத் திருவிருத்தம் முதலிய பல திருப்பதிகங்களைப் பாடினார். அப்பரடிகளின் பற்றற்ற பரம நிலையை உலகிற்கு உணர்த்துவான் வேண்டி புகலூர்ப் பெருமான், உழவார பணிபுரிந்து வரும் மன்றலிலே, பொன்னும், நவரத்தினங்களும் மின்னும்படிச் செய்தார். அப்பரடிகள் பொன்னையும், நவமணிகளையும் உழவாரப் பணிபுரியும் மன்றலிலே உருளும் கற்களுக்கு ஒப்பாகவே கருதி, அவற்றை உழவாரப் படைகொண்டு எடுத்து அருகிலுள்ள தாமரைத் தடாகத்தில் வீசி எறிந்தார். பொன்னாசையும், பொருளாசையும் கொள்ளாத அப்பரடிகள், பெண்ணாசையும் வெறுத்த துறவு நிலையை மேற்கொள்ளும் பெரு ஞானி என்பதையும் உலகிற்கு உணர்த்துவான் வேண்டிப் புகலூர் சிவபெருமான் அரம்பையர்களை மன்றலிலே தோன்றச் செய்தார். வில்லைப் போன்ற புருவங்களையும், மின்னலைப் போன்ற மேனியையும், கன்னலையொத்த மொழியையும், தென்றலைப் போன்ற குளுமையையும் உடைய அரம்பையர், அப்பரை நோக்கினர்.
அப்பரடிகள் தியானத்திலேயே இருந்தார். அரம்பையர்கள் மெல்லிய மலர்ப் பாதத்திலே சிலம்புகள் ஒலித்தன. செங்கழுநீர் மலர் போன்ற மெல்லிய விரல்களினை வட்டணையோடு அசைத்தனர். அக்கரங்களின் வழியே கெண்டைமீன் வடிவங்கொண்ட வட்டக் கருவிழிகளைச் செலுத்தி, பொற்கொடி போல் அசைந்தாடினர். தித்திக்கும் தேன்போல் கொவ்வை இதழ்களில் பண் இசைத்து சுழன்று, சுழன்று மயக்கும் அழகு நடனம் புரிந்தார்கள். மலர்மாரி பொழிதலும், தழுவுபவர் போல அணைத்தலும், காரிருள் கூநதல் அவிழ, இடை துவள மான் போல் துள்ளி ஓடுதலுமாக, தாங்கள் கற்ற கலைகளை எல்லாம் காட்டிக் காமன் கணை தொடுத்தாற் போல், பற்பல செய்ல்களை நடத்தினர் அரம்பையர். அப்பரடிகள் சித்தத்தைச் சிவனாரடிக்கே அர்ப்பணித்து சற்றும் சித்தநிலை திரியாது திருத்தொண்டு லீலைகளில் அவரது உள்ளத்தையோ, உடலையோ பறிகொடுத்து விடவில்லை. அப்பரடியார் அரம்பையர்களைப் பார்த்து, மயங்கும் மாலை வடிவங்களே ! எதற்காக என்னிடம் வந்து இப்படி வீணாக அலைகிறீர்கள் ? உமக்கு நீவிர் மயக்கி ஆளும் உலகம் மட்டும் போதாதா ? எதற்காக என்னிடம் வந்து ஆடிப் பாடுகிறீர்கள் ? திருவாரூர் தியாகேசப் பெருமானின் திருவடிகளில் தமிழ்ப் பதிகம் பாடித் திருத்தொண்டு புரிந்துவரும் சிறந்த பணியில் நிலையாக நிற்பவன். என்னை உங்கள் வலையில் சிக்கி எண்ணி வீணாக அலைய வேண்டாம். போய்விடுங்கள் என்று கருத்து கொண்ட பொய்ம்மாய பெருங்கடல் எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தைப் பாடினார். உடனே அத்தேவக் கன்னிகைகள் அவரது திருவடியை வணங்கி மறைந்தனர். அப்பரடிகளுடைய உள்ள உறுதியையும், பக்தியின் திறத்தினையும், பாமாலை பாடும் ஆற்றலையும் ஏழு உலகங்களும் போற்றிப் புகழ்ந்தன. இவ்வாறு புகலூர்ப் பெருமானுக்கு அரும்பணி ஆற்றிவந்த அன்பு வடிவம் கொண்ட அப்பரடிகள் எம்பெருமானின் திருவடிகளில் தமது திருமெய் ஒடுங்கும் காலம் நெருங்கி வந்துவிட்டதே என்பதை தமது திருக்குறிப்பினால் உணர்ந்தார்.
அதனால். அவர் அத்திருத்தலத்தை விட்டு சற்றும் நீங்காமல், பாமாலைப் பாடிப் பரமனை வழிபட்டு வந்தார். புடமிட்ட பொன்போல் உலகிற்கு பேரொளியாய்த் திகழ்ந்த திருநாவுக்கரசர் தாம் இறைவனது பொன்மலர் தாளினை அடையப் போகும் பேரின்ப நிலையை உணர்ந்தார். எண்ணுகேன் என் சொல்லி எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தை ஊன் உருக, உடல் உருக, உள்ளம் உருகப் பாடினார். எம்பெருமானின் சேவடியைப் பாமாலையால் பூஜித்து திருச்செவியைச் செந்தமிழால் குளிரச் செய்தார். திருநாவுக்கரசர் சித்திரைத் திங்கள் – சதயதிருநக்ஷத்திரத்தில், சிவானந்த ஞான வடிவேயாகிய சிவபெருமானுடைய பொன் மலர்ச் சேவடிக் கீழ் அமர்ந்தருளி பேரின்பப் பெருவாழ்வு பெற்றாறர். விண்ணவரும் மலர்மாரி பொழிந்தனர். தேவ துந்துபிகள் ஐந்தும் விண்ணில் முழங்கின. எல்லா உயிர்களும் நிறைந்த மகிழ்ச்சியால் உளம் நிறைவுபெற்று நின்றன. அப்பரடிகளாக அவதரித்த வாகீசமுனிவர் வேணிபிரானின் திருப்பாத நிழலில் வைகும் நிலையான சிவலோக பதவியைப் பெற்றார். முன்போல் திருக்கயிலாய மலையில் தவஞானியாக எழுந்தருளினார்.
பெயர்:
மருள் நீக்கியார்
குலம்:
சைவ வெள்ளாளர்
பூசை நாள்:
சித்திரை சதயம்
அவதாரத் தலம்:
திருவாமூர்
முக்தித் தலம்:
திருப்புகலூர்
திருச்சிற்றம்பலம்
சிவார்ப்பணம்