fbpx

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 22

கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார்

22.குலச்சிறை நாயனார்

புலவர்களால் பாடி பெருமைப்படுத்தப்பட்ட தலமான பாண்டிய நாட்டில் உள்ள மணமேற்குடி என்னும் ஊரில் சிவனடியார்கள் பலர் வாழ்ந்து வந்தார்கள். சிவனடியார்களின் உயர்குடியில் பிறந்தவர்களில் ஒருவர் குலச்சிறையார்.சிறுவயது முதலே சிவனின் பாதக்கமலங்களைப் பற்றி கொள்வதிலும் சிவனடியார்களுக்கு தொண்டு செய்வதிலும் விருப்பமுற்று இருந்தார்.

உயர் குலத்தில் பிறந்தாலும் அவரை நாடிவரும் சிவனடியார்கள் எக்குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை இன்முகத்தோடு உபசரிப்பதைப் பெரும் பணியாக செய்துவந்தார். திருநீறும், ருத்ராட்சமும் அணிந்து வந்த சிவனடியார்களின் பாதத்தைப் பற்றி வழிபடுவதில் பெரு மகிழ்ச்சி கொண்டார்.

பாண்டிய மன்னனான நின்றசீர் நெடுமாறனிடம் தலைமை அமைச்சராக பணிபுரிந்த இவர் சமய ஞானம் தான் சகல நலன்களுக்கும் முதன்மை யானது என்பதை தெளிவாக உணர்ந்திருந்தார். ஆனால் இவர் காலத்தில் பாண்டிய நாடு சமண மதத்தை அதிகமாக கொண்டிருந்தது. பாண்டிய மன்னனும் அதை ஆதரித்தார். அதனால் மக்கள் அனைவரும் அந்த மதத்தை தழுவினார்கள்.ஆனால் சிவனின் பாதக்கமலங்களை விடாமல் பற்றிய குலச்சிறையாரும், பாண்டிமாதேவியும் மட்டும் சைவ சமயத்தைப் பற்றியிருந்தார்கள்.

சைவ சமயத்தை பாண்டி நாட்டில் பரப்ப வேண்டும் என்று நினைத்த குலச்சிறையார் அரசியாருடன் ஆலோசித்தார். அப்போது திருஞான சம்பந் தரை சைவ மதம் பரப்ப அழைக்கலாம் என்று இருவரும் முடிவு செய்தார்கள்.
பாண்டிமாதேவியும் சம்மதித்து திருஞான சம்பந்தரை அழைத் திருந்தாள்.

அரசரின் கோரிக்கையை ஏற்று வந்திருந்த திருஞான சம்பந்தரது வருகையை விரும்பாத சமணர்கள் அவர் தங்கியிருந்த இடத்துக்கு தீமூட்டி னார்கள். அதிலிருந்து தப்பிய திருஞான சம்பந்தர் அரசரும் இதற்கு உடந்தை என்று மனம் வருந்தி அரசன் மீது கடுங்கோபமுற்றார். அது வெப்பு நோயாக மன்னனைத் தாக்கிற்று. வைத்தியர்கள் எவ்வளவு வைத்தியம் செய்தும் பலனற்று போனது.

பாண்டிமாதேவி மீண்டும் சம்பந்தரை அழைக்க அவர் “மந்திரமாவது நீறு” என்னுந் திருநீற்றுப் பதிகத்தைப் பாடி. அவனுடைய வலப்பாகத்தை விபூதி கொண்டு, திருக்கையினாலே தடவினார் அவ்வலப்பாகம் வெப்புநோய் நீங்கிப் பொய்கை போலக் குளிர்ந்தது. இடப்பாகத்து வெப்புநோய் முன்பை விட இருமடங்காய் மிகுந்து பொங்க, சமணர்கள் மனம் நடுங்க ஆரம்பித்தார்கள்.அரசன் அவர்களை விலகச் சொல்லி விட்டு இடப்பாகத்தில்
ஆளுடைய பிள்ளையை திருநீற்றை தடவி வெப்பு நோயை சரி செய்யும் படி வேண்டினார் ஆளுடைய பிள்ளையும் அவ்வாறு செய்து மன்னனின் வெப்பு நோயை முழுவதுமாக போக்கினார் இதனால் மகிழ்ந்த மன்னன் சைவ சமயத்திற்கு மாறினார்.

மன்னனை சைவ சமயத்துக்கு மாற்றியதால் கோபம் கொண்ட சமணர்கள் இவரை வாதத்துக்கு அழைத்தார்கள். இருதரப்பினர் முன்னிலையில் வாதம் துவங்கியது.நெருப்பில் ஏடுகளை விட்டு எரியாமல் இருக்க வேண்டும் என்று சொன்ன சமணர்களின் ஏடுகள் எரிந்து சாம்பலானது. ஆனால் திருஞான சம்பந்தரின் ஏடுகள் எரியாமல் பத்திரமாக இருந்தது. சர் ஆனால் தண்னீரில் ஏடுகளை விடுவோம். அது மூழ்கினால் அரசன் எங்களை கழுவேற்றலாம் என்ற சமணர்கள் ஓடும் நீரில் தங்கள் ஏடுகளை விட்டார்கள். அது நீரின் போக்கில் அடித்து சென்றுவிட்டது. ஆனால் திருஞான சம்பந்தரின் ஏடுகள் எதிர்திசையில் மிதந்து வந்தது. திருஞான சம்பந்தர் வென்றுவிட்டார்கள். இவ்வாறு சமணத்தை ஒழித்து சைவம் தழைக்க முயற்சி எடுத்தவர் குலச்சிறையார்.

இவ்வாறு சைவ மதத்தை உலகறிய செய்வதில் முக்கியபங்கு வகித்தவர் குலச்சிறையார். ஒட்டக்கூத்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் இவரை பெருநம்பி குலச்சிறையார் என்று பதிகத்தில் பாராட்டியிருக்கிறார்கள். குலச்சிறையார் இறுதிவரை சிவனது பாதக்கமலங்களைப் பற்றியபடி இறைவனிடம் சென்றடைந்தார்.

பாண்டியன் உற்ற வெப்பு நோய் நீக்கம் முதலாக மூவகை வாதங்களிலும் தோல்வியுற்ற சமணர்களை, வலிய கழுமரத்தில், அவர்கள் இதுவரை செய்து வந்த தீமைகளினின்றும் நீங்க அதன் கண் ஏற்றுவித்த குலச்சிறையாரின் ஆற்றலை, இதுவரை எவ்வகையில் போற்றி செய்து வணங்கினேன்? ஒருவகையிலும் போற்றி செய்தேனல்லேன். இனி நான்மறைகளிலும் கூறப்பெற்ற அறங்களைப் போற்றி மகிழும் பெருமிழலைக் குறும்பரின் திருவடிகளைப் போற்றத் தொடங்குகின்றேன்.

பெயர்:
குலச்சிறை நாயனார்
குலம்:
மரபறியார்
பூசை நாள்:
ஆவணி அனுஷம்
அவதாரத் தலம்:
மணமேல்குடி
முக்தித் தலம்:
மதுரை

மேற்கோள்கள்:

1.சுந்தரமூர்த்தி சுவாமிகள் தனது திருத்தொண்டத் தொகையின் 4வது பாடலில் குலச்சிறை நாயனாரை 22வது நாயன்மாறாக பின்வருமாறு வரிசை படுத்தி உள்ளார்

பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்

சேக்கிழார் பெருமான் தனது பெரிய புராணத்தில் பாடல் எண் 1700 முதல் 1710 வரை மொத்தம் 11 பாடல்கள் பாடியுள்ளார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram