fbpx

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 23

கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார்

  1. பெருமிழலைக் குறும்ப நாயனார்

சேக்கிழார் வாக்குப்படி, மிழலை நாட்டுப் பெருமிழலை என்னும் பதியில் குறும்பர் மரபிலே அவதரித்த பெருமிழலைக்குறும்பனார் எனனும் அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் ஆண்டவனிடத்தும், அடியார்களிடத்தும் இடையறாத அன்பும், பக்தியும் கொணடிருந்தார். சிவனடி‌யார்களின் முன்பு, தம்மை மிக்க எளியோனா‌கவே எண்ணிக்‌ கொள்வார். அடியார்களை வணங்கி வரவேற்று விருந்தோம்பல் அறம் அறிந்து போற்றுவதோடு அவர்களிடும் எல்லா ஏவல்களையும் சிரமேற் கொண்டு பணிவோடு செய்தார். அதனால் இவ்வடியாரது இல்லத்தில் எப்ப‌ொழுதும் சிவ அன்பர்கள் வந்து போன வண்ணமாகவே இருப்பர். இத்திருத்தொண்டருக்கு, சுந்தரமூர்த்தி நாயனாரிடம் அளவு கடந்த பக்தி உண்டாயிற்று. இறைவன் திருநாமத்தினைப் போற்றி வந்த‌தோடல்லாமல், சுந்தரரின் புகழைப்பற்றியும் பேசி வந்தார். சுந்‌தரரின் நாமத்தை மனத்தாலும், காயங்களாலும், வாக்காலும், துதித்து வழிபட்டார். நாளடைவில் சுந்தர மூர்த்தி நாயனாரின் அன்பிற்குரிய தொண்டராகவும் மாறிவிட்டார். இறைவனின் திருவருளைப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனாரின் அடிவணங்கிப் போற்றுதலால் பரமன் அருளையே பெறலாம் என்ற உறுதி வழியே வாழ்ந்த இப்பெரியார் உபாசனையைத் தொடங்கினார். உபாசனையின் சக்தியால் குறும்பனாருக்கு அஷ்டமாசித்திகளும் கைக்கு வந்தன. சித்தத்தால் எதையும் உணரும் அரும்பெரும் சக்தியைப் பெற்றார். சுந்தரமூர்த்தி சுவாமிகளைச் சித்தத்தால் கண்டு களித்து பெருமகிழ்ச்சி கொண்டார். இவ்வாறு சுந்தரரைத்தியானம் செய்து வந்த பெருமிழலைக் குறும்பனார், சுந்தரமூர்த்தி சுவாமிகள் கொடுங்கோளூரில் இருந்தபடியே வெள்ளானை மீதமர்ந்து கயிலைமலை போகிறார் என்ற நிலையைத் தம் சித்தத்தின் மகிமையால் தெரிந்து கொண்டார். அவர் மனம் துடித்தது. மேற்கொண்டு உலகில் வாழ அவர் விரும்பவில்லை. கண்ணில் கருவிழி போன்ற சிறந்த சிவத்தொண்டரை விட்டுப் பிரிந்து நான் மட்டும் இந்த மண்ணில் உயிர் வாழ்வதா? அத்தொண்டர் திருக்கயிலைமலையை அடையும் முன்பே ‌யாம் எம் யோக நெறியால் கைலாயம் சென்றே தீருவோம் என்று தமக்குள் உறுதி பூண்டார். எம்பெருமான் திருவடியை அடையத் துணிந்தார். சுந்தரமூர்த்தி நாயனார் மீது தாம் கொண்டுள்ள பக்தியின் வன்மையால் தமது சித்த‌யோக முயற்சியினால் சுந்தரர் கயிலை செல்வதற்கு முதல் நாளே தம் உயிரை, ச‌டலத்தை விட்டு நீங்கும் வண்ணம் செய்தார். பிரம்ம நாடி திறக்கப்பட்டு கபாலத்தின் வழியாக கயிலையை அடைந்து அரனார் அடிமலர் நீழலில் ஐக்கியமானார்

உயிர்க் காற்றை வாங்கவும், நிறுத்தவும், விடவும் பயின்ற யோக முயற்சியால், பரவையாரின் கணவராய ஆரூரரின் திருவடிகளைப் பிரியாது பொருந்துதற்குத் திருக்கயிலையின்கண் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிப் பேற்றை அடைந்த பெருமிழலைக்குறும்பரின் திருவடிகளை வணங்கிச், சாயலால் மயி லைப் புறங்கண்ட மெல்லிய மகளாராகிய, யாழையும் குயிலையும் ஒத்த சொற்களைப் பேசும் காரைக்கால் அம்மையாரது வரலாற்றை இனிக் கூறுவாம்.

மிழலைக் குறும்பர் அவதரித்த பதி பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. ” மிழலை நாட்டுப் பெருமிழலை ” என்று சேக்கிழார் பெருமான் கூறுகிறார்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ளது என்று சிலரும், ஏழ்மை நிலையில் இருந்த நாயனார் தினமும் திருவீழி மிழலை நாதர் ஆலயம் சென்று அங்கு எழுந்தருளியுள்ள நாதருக்கு தினமும் தனக்கு கிடைக்கும் விளாம்பழத்தை காணிக்கையாக சமர்ப்பித்து அதை பிரசாதமாக அனைவருக்கும் வழங்கி ஏழ்மை நிலையில் வாழ்ந்தார் என்று சிலரும் திருப்பனந்தாள் அருகிலுள்ள கோவிலாச்சேரியே மிழலை என்றும் கூறுகின்றனர் கோவிலாச்சேரி சிவன் ஆலயத்தில் பெருமிழலைக் குறும்ப நாயனார் விக்கிரகம் உள்ளது.
புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் சற்று தொலைவில் பெருமாநல்லூர் என்ற ஊர் உள்ளது மேலும் இன்று பெருமாநல்லூர்’ என்று வழங்கிய பெயரும் இன்று மாறி, வழக்கில் “தேவமலை” என்று வழங்குகிறது.
தேவமலையின் அடிவாரத்தில் ஓர் குகை கோயில் உள்ளது; இங்கு குறும்ப நாயனார் உருவம் சிற்பமாக (குடைந்து) செதுக்கப்பட்டுள்ளது. இங்கு ஓர் சமாதியுமுள்ளது, இது குறும்ப நாயனாரின் சமாதி எனக் கூறப்படுகிறது

நதி மூலமும் ரிஷி மூலமும் ஆராயக்கூடாது என்பதால் எனக்கு தெரிந்த தகவல்களை இதில் பதிவிட்டுள்ளேன் தங்களுக்கு எந்த ஆலயம் செல்வது எளிதாக உள்ளதோ அந்த ஆலயத்திற்கு சென்று மனதார வழிபடுங்கள்

பெயர்:
பெருமிழலைக் குறும்ப நாயனார்
குலம்:
குறும்பர் (இடையர்)
பூசை நாள்:
ஆடி சித்திரை
அவதாரத் தலம்:
மிழலை
முக்தித் தலம்:
மிழலை/ஆரூர்

( சுந்தரமூர்த்தி சுவாமிகள் தனது திருத்தொண்டத்தொகையில் நான்காவது பாடலில் பெருமிழலைக் குறும்ப நாயனாரை பின்வருமாறு வரிசைப்படுத்தி உள்ளார்

பெரு மிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்)

சேக்கிழார் பெருமான் தனது பெரியபுராணத்தின் பாடல் எண் 1711 முதல் 1721 வரை மொத்தம் 11 பாடல்கள் பாடியுள்ளார்

திருச்சிற்றம்பலம்
சிவார்ப்பணம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram