fbpx

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 27

கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார்

  1. நமிநந்தி அடிகள் நாயனார்

சோழர்களுக்குச் சொந்தமாகி‌ய ‌பொன்னி நாட்டில் ஏமப்பேறுர் என்னும் சிவத்தலம், அமந்துள்ளது. இத்தலத்திலுள்ள அந்தணர்கள் வேள்விச் சாலையில் அருமையான பூ‌சை மேடை மீது வெண் மணலைப் பரப்பி இடை இடையே செந்தீயை வளர்த்து வேத பாராயணம் செய்வர். இத்தகைய சீரும் சிறப்பு மிக்குத் தலத்தில் சைவ நெறியில் ஒருமைப்பட்ட அந்தணர் குலத்தில் நமிநந்தியடிகள் நாயனார் தோன்றினார். இவர் எக்காலத்தும் எம்பெருமசன் திருவடிகளை இடையறாது வணங்கி வழிபட்டு வரும் பெரும் பேறு பெற்றிருந்தார். இவ்வன்பர் நாடோறும் அடுத்துள்ள திருவாரூர் சென்று புற்றிடங்கொண்ட பெருமானை வணங்கி வழிபட்டு வந்தார். திருவாரூர் திருக்கோயிலின் திருமதிலுக்கு அருகே அறநெறி என்று ஓர் தனிக்கோயில் உண்டு. அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு அறநெறியப்பர் என்று பெயர். நமிநந்தியடிகளார் அறநெறிச் சன்ன‌‌தியை அடைந்து அறநெறியப்பரையும் அம்மையையும் பக்திப் பெருக்கோடு வழிபட்டு வந்தார். ஒரு நாள் மாலைப் பொழுது அடிகளார் அறநெறி யப்பரைச் சேவிததுக் கொண்டிருந்தார்.

அங்கே விளக்கேற்றாமல் இருந்தால் எங்கும் இருள் படர்ந்திருந்துது. ஒரே ஒரு விளக்கு மட்டும் எண்ணை தீர்ந்து போகும் நிலையில் சற்று மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. ஆலயத்துள் வி‌ளக்கேற்றி வைக்க எண்ணினார். தொலைவிலுள்ள தமது ஊருக்குச் சென்று விளக்கு ஏற்ற நெய் வாங்கி வருவதற்குள் பொழுது நன்றாக இருண்டுவிடும் என்பதை உணர்ந்தார் நாயனார். ஆலயத்தை அடுத்துள்ள ஒரு வீட்டிற்கு சென்று அவ்வீட்டிலுள்ளோரிடம் விளக்கு ஏற்றுவதற்குக் கொஞ்சம் நெய் வேண்டும் என்று பணிவன்புடன் வேண்டினார். அந்நாளில் திருவாரூரில் சமணர்கள் சற்று அதிகமாகவே குடியேறியிருந்தார்கள் நமிநந்தியடிகள் விளக்கு ஏற்ற நெய் கேட்ட இல்லத்தில் இருந்தவர்கள் சமணர்கள். அச்சமணர்கள் அடிகளாரைப் பார்த்து எள்ளி நகையாடினார்கள். அவர்கள் அவரைப் பார்த்து, கையில் கனல் ஏந்தி ஆனந்தத் தாண்டவம் ஆடும் உங்கள் இறைவனுக்கு விளக்கு வேறு வேண்டுமா ? கனல் ஒளி ஒன்றே போதுமே ? அப்படியும் விளக்கேற்றத்தான் வேண்டும் என்றால் எதிரில் உள்ள குளத்து நீரை ஊற்றி ஏற்றுவதுதானே ? என்று சொல்லி எள்ளி நகையாடினர். சமணர்களின் இக்கேலி வார்த்தைகளைக் கேட்டு நமிநந்தியடிகள் நெஞ்சம் உருக ஆலயத்திற்கு வந்‌து இறைவடன பணிந்து, அறநறியப்பரே ! எந்தாயே ! எம்பெருமானே ! சமணர்களால் ஐயனுக்கு இழிமொழிகள் ஏற்பட்டுவிட்டதே ! இவற்றை இச்செவிகள் கேட்பதற்கு அடியேன் என்னன பாவம் செய்தேனோ ? மாற்றி அருள மார்க்கம்தான் ‌யாது உளதோ ? என்று இறைஞ்சினார். அப்பொழுது ‘நமிநந்தியே! உனது கவலை ஒழிக. இதன் அயலேயுள்ள குளத்தில் நீரை முகந்து வந்து வார்த்து விளக்கேற்றுக’ என்றதொரு அருள்மொழி ஆகாயத்தில் தோன்றியது இறைவன் அருளியதைக் கேட்டு அடிகளார் ஆனந்தப் பெருக்கோடு தேவாசிரிய மண்டபத்தை அடுத்து உம்ம சங்கு தீர்த்தம் என்னும் பெயருடைய திருக்குளத்தை நோக்கி ஓடினார். நீரை மொண்டு வந்தார்.

விளக்கில் நீரை ஊற்றித் திரியைத் தூண்டிவிட்டார். ஐயனின் அருட்கருணையைத்தான் ‌என்னென்பது ! நீர் விட்டு ஏற்றிய விளக்கு நெய் விளக்கு ஒளியைவிட பன்மடங்கு ஒளியோடு பிரகாசித்தது. ஆனந்தம் மேலிட அடியார் எல்லா விளக்குகளையும் இப்படியே குளத்து நீரை ஊற்றி ஏற்றினார். விளக்குகள் அனைத்தும் மங்களமாகப் பிரகாசித்தன. அடியார் எல்லையில்லா மகிழ்ச்சிப் பெருக்கோடு ‌யாது செய்வதென்றறியாது பேரின்ப சுகம் பூண்டு திகைத்து நின்றார். காலப்ப‌ோக்கில் சமணர்களின் அக்கிரமத்திற்கும் ஒரு முடிவு காலம் வந்தது. சமணம் அழிந்தது. ‌சைவநெறி தழைத்தது. திருவெண்ணீற்றுப் பொன் ஒளி ஏமப்பேறுாரை வெள்ளியம்பலம் போல் விளங்கச் செய்தது. அப்பொழுது சோழ நாட்டை ஆண்டு வந்த மன்னர், அடியாரின் திருத்தொண்டினையும், பக்தியையும் கேள்விப்பட்டு கோயிலுக்கு நமிநந்தியடிகளையே தலைவராக்கினார். அத்தோடு ‌கோயில் திருப்பணி தட்டாமல் நடைபெறுவதற்காக வேண்டி பொன்னும் பொருளும் கொடுத்து உதவினார். அடிகளார் எம்பெருமானுக்குப் பெருவிழாக்கள் பல நடத்தி பெருமிதம் பூண்டார். ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்தரத் திருவிழாவை அடிகளார் முன் நின்று மிக்கச் சிறப்பாக நடத்தி வந்தார். இந்த சமயத்தில் ஏமப்பேறுாரை அடுத்துள்ள மணலி என்ற ஊரில் ஆண்டுக்கொடருமுறை, திருவாரூர் தியாகேசப் பெரமான் எழுந்தருளுவது வழக்கம். தியாகேசப் பெருமானுக்கு. மணலியில் பெருவிழா நடைபெறும். ஒருமு‌றை மணலியில் நடந்த தியாகேசர் விழாவிற்கு தொண்டர்களும், அன்பர்களும் ஜாதி, மத பேதமின்றி கலந்து கொண்டனர். நமிநந்தியடிகளும் இவ்விழாவில் கலநது கொண்டு பரமனின் அருளைப் பெற்றார். மாலையில் புற்றிடங் கொண்ட பெருமான் முன்போல திருவாரூக் கோயிலில் எழுந்தருளினார். அடிகளார் தியாகேசப் பெருமானை வணங்கிவிடடு, இரவென்றும் பாராமல், அங்கிருந்து புறப்பட்டு ஏமப்பேறுாரிலுள்ள தமது இல்லத்தை அடைந்தார்.

அந்தணர், வீட்டிற்கும் போக மனமில்லாமல் புறத்தே படுத்துவிட்டார்.அப்பொழுது உள்ளிருந்து வந்த அம்மையார் கணவன் வெளியே படுத்து உறங்குவது கண்டு திகைத்தாள்; காரணத்தை வினவினாள். அந்தணர் அம்மையாரிடம், அம்மையே ! திருவிழா விற்குச் சென்றிரு்ந்தேன். அங்கு சாதிமதபேதமின்றி எல்லாரும் கலந்து இருந்‌மையால் தூய்மை கெட்டுவிட்டது. இந்த நிலையில், மனைக்குள் எப்படி வரமுடியும் ? தண்ணீரைச் சூடாக்கி எடுத்து வா! குளத்து விட்டுப் பிறகு வருகிறேன் என்று விடை பகர்ந்தார். அதுகேட்டு அந்தணப் பெருமாட்டியும் தண்ணீர் காய வைப்பதற்காக உள்ளே சென்றார்கள். அதற்குள் அடிகளார் சோர்வின் காரணமாகத் திண்ணையில் சற்றுக் கண் அயர்ந்து உறங்கிவிட்டார். அப்பொழுது எம்பெருமான் அவரது கனவிலே பே‌ரொளி பொங்க எழுந்தருளினார். அந்தணரே ! திருவாரூரில் பிறந்தவர்கள் அனைவருமே எனது கணங்கள்தான் ! அப்படியிருக்க உமக்கு மட்டும் ஏன் இப்படியொரு எண்ணம் எழுந்தது ? இவ்வுண்மையை நாளை திருவரூர் வந்து காண்பீராக ! என்று திருவாய் மலர்ந்து அருளினார். அந்தணர் கனவு கலைந்து எழுந்தார். தம் தவற்றை உணர்ந்து இறைவனிடம் பிழை பொறுத்து அருளுமாறு வேண்டினார் ! அம்மையார் குளிப்பதற்கு வருமாறு கணவனை அழைத்தாள். அடிகளார் கனவிலே எம்பெருமான் ‌மொழிந்‌ததைச் சொன்னார். குளிக்காமலேயே வீட்டிற்குள் சென்று துயின்றார். மறுநாள் ‌பொழுது புலர்ந்ததும் அந்தணர் தூய நீரில் நீராடி திருமேனியில் திருவெண்ணீறு பிரகாசிக்கத் திருவாரூருக்குப் புறப்பட்டார். அந்நகருக்குள் நுழையும்போதே நகரிலுள்ளோர் அனைவரும் சிவகண உருவத்ததில் பேரொளிப் பிழம்பாகத் திருவெண்ணீறு மேனி‌‌யோடு திகழும் காட்சியைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி பூண்டார் நாயனார். நிலத்தில் வீழ்ந்து வணங்கினார். உடனே, அனைவருமே சிவசொரூபத் தோற்றப் பொலிவு மாறி, பழையபடியே திகழவும் கண்டார். அடிகளார் திருக்கேயிலில் சென்று எம்பெருமானே ! அடியேன் செய்த பெரும் பிழையைப் பொறுத்தருளல் வேண்டும் என்று வேண்டினார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அடிகளாருக்கு திருவாரூரை விட்டுக் செல்ல மனம் வரவில்லை. தியாகேசப் பெருமானின் திருவடிகமலங்களிலேயே காலத்தைக் கடத்த எண்ணினார். அடிகளார் மனைவியாருடன் ஏமப்பேறுாரை விடுத்துக் திருவாரூரையே தமது இருப்பிடமாகக் கொண்டார். தியாகேசப் பெருமானுக்கு திருத்தொண்டுகளைச் செய்து கொண்டு வாழ்ந்து வரலானார்.
இவ்வாறு சிவனடியார்களுக்கு வேண்டுவன எல்லாம் நியதியாக நெடுங்காலம் செய்திருந்தது திருநாவுக்கரசரால் ‘தொண்டர்களுக்கு ஆணி’ எனச் சிறப்பிக்கப் பெற்று
திருவாரூரிலே வாழ்ந்து வந்த நமிநந்தி அடிகளார் இறுதியில் அரனாரின் திருவடி நிழலை அடைந்து பேரின்பம் பூண்டார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி

நாட்டிலுள்ள மக்கள் அறியும்படி முன்னாளில் ஐம்படைத் தாலியை அணிந்த மார்புடைய சிறிய
மறையவர் மைந்தனும்
புக்கொளியூரில் தாளையுடைய பொய்கையில் தனித்த பெரும் முதலையின் வாயிலிருந்து
நல்ல நாளில் மீட்டவரான
சுந்தர மூர்த்திநாயனாரின் திருவடிகளை நினைப்பார்க்கு
மீளா வழியிலிருந்து மீட்பு கிடைக்கும்.

நமிநந்தியடிகள் நாயனார் புராணம் முற்றிற்று.

பெயர்:
நமிநந்தியடிகள் நாயனார்
குலம்:
அந்தணர்
பூசை நாள்:
வைகாசி பூசம்
அவதாரத் தலம்:
ஏமப்பேறூர்
முக்தித் தலம்:
ஆரூர்

மேற்கோள்கள்

1.சுந்தரமூர்த்தி நாயனார் தனது திருத்தொண்டத் தொகையில் நான்காவது பாடலில் பின்வருமாறு வரிசைப் படுத்தி உள்ளார்

அரு நம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்

2.சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் பாடல் எண் 1871 முதல் 1902 வரை நமிநந்தி அடிகளர் வரலாற்றை பாடியுள்ளார்

திருச்சிற்றம்பலம்
சிவார்ப்பணம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram