fbpx

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 28, 1

கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார்

  1. திருஞானசம்பந்த நாயனார்

பாகம் – 1

பிறையணிந்த பெருமானை வழிவழியாகப் போற்றி வரும் சோழர்களின் கொடி நிழலிலே வளம் கொழிக்கும் திருநகரங்கள் பலவற்றுள் சீர்காழியும் ஒன்றாகும்.இத்தலத்திற்கு பிரமபுரம், வேணுபுரம், சீர்காழி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராம், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சைவயம், கழுமலம் என்னும் பன்னிரெண்டு பெயர்கள் உண்டு. நிலவளமும், நீர்வளமும், தெய்வவளமும் ஒருங்கே அமையப்பெற்ற இப்பழம்பெரும் பதியிலே சிவனின் சிந்தை மறவாது செந்தண்மை பூண்டொழுகும் அந்தணர் மரபிலே – கவுணியர் கோத்திரத்திலே – சிவபாதவிருதயர் என்னும் பெயருடைய தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவருடைய வாழ்க்கைத் துணைவியார் பெயர் பகவதியார். இவ்விரு சிவனருள் தம்பதியரும் இல்லற இலக்கணமறிந்து திருவெண்ணீற்றன்பர்களிடத்தும் இறைவனிடத்தும் எல்லையில்லாப் பக்தி பூண்டு யாவரும் வியக்கும் வண்ணம் இல்லறத்தை இனிமையாக நடத்தி வந்தனர். இவ்வாறு, இவர்கள் வாழ்ந்து வரும் நாளில் சைவ சமயமும் சற்று வலிமை குறைந்து இருக்க, பவுத்தமும், சமணமும் வன்மை பெற்று விளங்கிற்று. வேறு சில சமயங்களால் வேதநெறி குன்றியது. இரவையே பகல் போல் பிரகாசமாகத் தோன்றச் செய்யும் திருவெண்ணீற்றின் மகிமையும் பெருமையும் போற்றுதலின்றி நலிந்து காணப்பட்டன. சிவசமயத்திற்கு ஏற்பட்ட இத்தகைய தாங்கொணாத் துயர்கண்டு சிவபாதவிருதயரும் அவரது மனைவியாரும் மிகவும் மனம் வாடினர். அவர்கள் இருவரும் புறச் சமயங்களால் வரும் தீமைகளைப் போக்கித் திருவெண்ணீற்றின் ஆக்கத்தை அகிலமெல்லாம் ஓங்கச் செய்யத்தக்க சிவப்பற்றும் தெய்வ அருளும் மிக்க மகனைப் பெற்றுப் பெருமிதமடைய எண்ணினர். இச்சிவ அன்பர்கள் எப்போதும் முழுமுதற் பரம் பொருளின் நினைவாகவே இருந்தனர். அதற்கென அருந்தவம் செய்தனர். திருத்தோணியப்பருக்குத் தொண்டுகள் பல புரிந்தனர். அதன் பயனாக தோணியப்பர் இச்சிவத் தொண்டர்களின் மனக்குறையைப் போக்க மக்கட்பேற்றை அளித்து அருளத் திருவுள்ளம் கொண்டார்.

பிறைமுடிப் பெருமானின் திருவருளால் பகவதியார் கருவுற்றாள். வைகாசிமுதல் நாளன்று – சைவம் தழைக்க திருஞான சம்பந்தப்பெருமான் பகவதியாருக்கும் சிவபாத விருதயருக்கும் திருமகனாய் அவதாரம் செய்தார். செல்வன் பிறந்த பேருவகையில் பெற்றோர்கள் பொன்னும் பொருளும் வந்தோர்க்கெல்லாம் வாரி வாரி வழங்கினர். அன்பர்களுக்கு அமுது அளித்தனர். ஆலயத்திற்கு முக்காலமும் கோலாகலமாகப் பெருவிழா போல் சிவ வழிபாடுகள் பல செய்தனர்.மண்மாதாவின் மடியில் பிறந்த அருந்தவப் புதல்வன் பெற்றோர்களின் மடியிலும் துங்கமணி மாடத்திலும் தூயமணி பீடத்திலும், அணிமிகும் தொட்டிலிலும் விளையாடினான்.செங்கீரை, சப்பாணி, அம்மானை முதலிய பருவங்களைக் களிப்போடு கடந்து, சின்னஞ்சிறு தேர் உருட்டி வீதியிலே தளர் நடை பயிலும் பருவத்தை அடைந்தான். இப்படியாகப் பிரபஞ்சத்தில் கமலமலர்ப் பாதங்களைப் பதிய வைத்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்பிறைபோல் வளர்ந்து வந்த தவப்புதல்வருக்கு மூன்றாவது ஆண்டு தொடங்கிற்று. வழக்கம்போல் சிவபாதவிருதயர் கோயிலை அடுத்துள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராடப் புறப்பட்டார். அப்போது தவப்புதல்வன் அழுது கொண்டே தந்தையைப் பின்னே தொடர்ந்து வாயில் வரை வந்தான். பிஞ்சுக் கால்களிலே இனியதான கிண்கிணி ஓசை ஒலிக்க, மெல்ல அடி இட்டு வந்த செல்வன் தாமும் உடன் வருவதாகக் குழலைப் பழிக்கக் கூறி நின்றான். மழலை மொழிதனில் உலகை மறந்த சிவபாத விருதயர் தம்மோடு நீராடி மகிழ குழந்தையையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார். குளத்தை வந்தடைந்த சிவபாதவிருதயர் குழந்தையைக் கரையிலே உட்கார வைத்துவிட்டு நீராடக் குளத்தில் இறங்கினார்; ஜபதபங்கள் புரிந்து தண்ணீரில் மூழ்கினார். குழந்தை தந்தையாரைக் காணாது மனம் கலங்கியது; கண்களிலே கண்ணீர் கசிய சுற்றும் முற்றும் பார்த்தது! குழந்தை கோபுரத்தை நோக்கி, அம்மே! அப்பா எனத் தன் பவழ வாயால் அழைத்தது. பொருமிப் பொருமி அழுதது. தோணியப்பர், உமாதேவியாரோடு விடை மீது வானவீதியில் பேரொளி பரவ எழுந்தருளினார்.

எம்பெருமான் உமாதேவியாரிடம், தேவி ! நமது தொண்டனுக்குச் சிவஞானத்தை குழைத்த பாலைப் பொற்கிண்ணத்தில் ஏந்தி ஊட்டுவாயாக என்று அருளினார். அன்னை பராசக்தி குழந்தையின் அருகே வந்தாள். வாரி அணைத்து முத்தமிட்டு மகிழ்ந்தாள். மடி மீது அமர்த்திக் கொண்டாள். தமது திருமுலைப் பாலினைப் பொற்கிண்ணத்தில் ஏந்தினாள். அவரது கண் மலரிலே வழியும் நீரைத் துடைத்தாள். சிவஞான அமுதத்தைக் கலந்த பொற்கிண்ணத்தை அவரது கைகளிலே அளித்து பாலமுதத்தினை உண்பாயாக என மொழிந்தாள்.குழந்தையின் கையைப் பிடித்தவாறு பார்வதி தேவியார் பாலைப் பருகச் செய்தார்கள். குழந்தை அழுவதை நிறுத்தி ஆனந்தக் கண்ணீர் பூண்டது. திருத்தோணியப்பராலும் உமாதேவியாராலும் ஆட்கொள்ளப்பெற்ற குழந்தை ஆளுடைப் பிள்ளையார் என்னும் திருநாமம் பெற்றது.தேவர்க்கும் முனிவர்க்கும் கிடைக்காத பேரின்பம் பெற்ற நிலையில் பிள்ளையார் திருஞானசம்பந்தராய் அபரஞானம் பரஞானம் அனைத்தும் கைவரப் பெற்றார் அப்பொழுதே சம்பந்தர் உவமையில்லாத கலைஞானத்தைப் பெற்று விளங்கும் பெருமகனானார். குளத்தில் மூழ்கி நியமங்களை முடித்துக் கரையேறினார் சிவபாதவிருதயர். ஒப்பற்ற ஞானத்தோடு பேருணர்வு பெற்று விளங்குகின்றார் பிள்ளை என்ற உண்மையை அவர் அறிந்திலார். குழந்தையருகில் வந்தார்.பிஞ்சுக் கரங்களிலே பொற்கிண்ணமிருப்பதைக் கண்டார். செக்கச் சிவந்த செங்கனி இதழ்களிலே பால் வழிவதனையும் கண்டார். அந்தணர் ஐயமுற்றார்.பால் மணம் மாறாப் பாலகனுக்கு எவரோ எச்சிற் பால் ஊட்டிச் சென்றனரே என ஐயமுற்றார். கள்ளமில்லாப் பாலகனை கடுங்கோபத்தோடு பார்த்தார்.

கீழே கிடந்த குச்சியை எடுத்தார் பாலகன் அருகே சென்று, உனக்கு எச்சிற் பாலைக் கொடுத்தது யாரென்று எனக்கு காட்டு என்று மிக்கச் சினத்துடன் கேட்டார். தந்தையின் சுடுமொழியினால் மெய்ஞான சம்பந்தர் விழிகளிலே ஆனந்தக் கண்ணீர் தான் ததும்பியது. சம்பந்தர் ஒரு காலைத் தூக்கி ஒரு திருக்கை விரலை உச்சி மேல் உயர்த்தி விண்ணிலே விடையின் மேல் பேரொளியோடு எழுந்தருளிய பெருமானைச் சுட்டிக்காட்டினார். ஞானசம்பந்தர் தமது ஒப்பற்ற ஞானத் திருமொழியினால் எல்லையில்லா வேதங்கட்கு மூலமாகிய ஓங்காரத்தோடு சேர்ந்த எழுத்தால் இன்பம் பெருகப் பாடத் தொடங்கினார். தாம் பாடும் தமிழ்மறை பரமசிவத்தின்பாற் சென்று ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு ஏற்ப சிவபிரானது திருச்செவிறைச் சிறப்பித்துச் செவ்விசையோடு, தோடுடைய செவியன் எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடலானார். தெய்வத்திருவருள் பெற்ற திருஞானசம்பந்தரை மிரட்டுவதற்காகக் கோலெடுத்து வந்த அந்தணர் திகைத்தார். செயலற்று நின்றார். அவர் கையிலே இருந்த கோல் அவரையறியாமலேயே கை நழுவிக் கீழே விழுந்தது. அந்தணர் ஆனந்தக் கூத்தாடினார். அருந்தமிழ்ப் பதிகத்தால் உண்மையை உணர்த்திய புதல்வரின் முகத்தில் இறைவனின் தோற்றப் பொலிவுதனைக் கண்டு மெய்யுருகினார். சம்பந்தப் பெருமான் தோணியப்பர் எழுந்தருளியிருக்கும் கோவிலுக்குச் செல்ல மெல்ல தம் சீரடி எடுத்து வைத்தார். தந்தையாரும் பிள்ளையாரைப் பின் தொடர்ந்தார். தோணியப்பர் கோவிலையடைந்த ஞானசம்பந்தர் இறைவனை வணங்கி வழிபட்டார். பதிகம் ஒன்றைப் பாடினார். இந்த அற்புத நிகழ்ச்சி பகலவனின் காலை இளங்கீற்றுப்போல் ஊரெங்கும் பரவியது. ஞானசம் பந்தரின் அருஞ்செயலை நேரில் கண்டு களிப்புற அனைவரும் கோவிலின் வாயிலில் ஒருங்கே கூடினர். ஞானசம்பந்தர் அங்கிருந்த அனைவருக்கும் எம்பெருமான் உமாதேவியாருடன் விடையின் மேல் வந்து தம்மை ஆட்கொண்டு அருளிய திறத்தினை மொழிந்தார். அனைவரும் ஞானசம்பந்தரை, காழியர் செய்த தவமே! கவுணியர்தனமே ! கலைஞானக் கடலே, அக்கடலிடை தோன்றிய அமுதே! மறைவளர் திருவே! வைதிக நிலையே! வளர்ஞானப் பொறையணி முகிலே! புகலியர் புகலே! காவிரி பெற்ற மணியே ! மறையின் ஒளியே! புண்ணிய முதலே! கலை வளரும் திங்களே! கண் கவரும் கதிரொளியே! இசையின் முதலே! மூன்றாண்டிலே சைவந் தழைக்க எம்பெருமான் அருள் பெற்ற செல்வனே ! நீ வாழ்க! என வாழ்த்தி மகிழ்ந்தனர். சம்பந்தர் கோவிலை விட்டுத் வீட்டிற்குப் புறப்பட்டார்.

அன்பர்களும் அடியார்களும் தொடர்ந்து புறப்பட்டனர். சிவபாதவிருதயர் தம் தெய்வத் திருமகனைத் தோளிற் சுமந்துகொண்டு மகிழ்ச்சியுடன் வீதி வழியே பவனி புறப்பட்டார். கோவிலை மும்முறை வலம் வந்தார். தோணிபுரத்துப் பெருமக்கள் புடை சூழ்ந்து கொண்டு ஞானசம்பந்தரை வாழ்த்தி வணங்கியதோடு தங்களுடைய மேலாடைகளை வானில் எறிந்து அளவு கடந்த ஆரவாரம் செய்தனர். மங்கல மங்கையர்கள் மேல் மாடங்களிலே வந்து நின்று மங்கள மொழிகள் கூறினர். தேன் சிந்தும் நறுமலர்களையும், நறுமணப் பொடியையும் நெற்பொரியோடு கலந்து தூவி வாழ்த்தினர். வீதிதோறும் மணிவிளக்குகள் ஒளியூட்டின. எங்கும் மாவிலைத் தோரணங்கள் அழகு செய்தன. வீடெல்லாம் அழகாக அலங்கரித்தனர். வெண் சிறு கடுகு, முகில் முதலியவற்றால் தூபமெடுத்தார்கள். இப்படியாகத் திருவீதியெங்கும் மறை ஒலியும், மங்கல வாத்தியமும் ஒலிக்க ஆளுடைப்பிள்ளையார் இல்லத்தை அடைந்தார். பகவதியார் தமது தவச் செல்வனை ஆரத்தி எடுத்து வாரி அணைத்து எடுத்துக் கொண்டார். முத்தமாரி பொழிந்தார். உலகையே மறந்து உவகை பூண்டார். வியக்கத்தக்கத் திருவருளைப் பரமனருளால் பெற்ற ஞானசம்பந்தர் தந்தையாருடன் சிவத்தலங்கள் தோறும் சென்று ஆலய தரிசனம் செய்ய எண்ணினார். ஒரு நாள் தந்தையாருடன் ஆலய தரிசனம் காணப் புறப்பட்டார். அடுத்துள்ள திருக்கோலக்காவை அடைந்தார். அங்கு எழுந்தருளி இருக்கும் எம்பெருமானை வழிபட்டார். கையினால் தாளம் போட்டுக் கொண்டே, மடையில் வாளையாய எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தார். பிஞ்சுக்கரம் சிவக்கத் தாளம் போடுவதைப் பார்த்த செஞ்சடைவண்ணர் ஐந்தெழுத்து மந்திரம் எழுதிய பொன்னாலான இரண்டு தாளங்களை ஞானசம்பந்தரின் திருக்கை மலரிலே வந்து தங்குமாறு திருவருள் பாலித்தார். ஞானசம்பந்தர் இறைவனின் கருணையை எண்ணி உள்ளமும் உடலும் பூரித்தார். இறைவன் அருளால் தம் அங்கை மலரிலே வந்து தங்கிய பொற்தாளங்களைச் சிரம் மீது எடுத்து வணங்கினார்.அவற்றாலே தாளம் போட்ட வண்ணம் ஏழிசைகளும் தழைத்தோங்குமாறு பக்திப் பெருக்கோடு தமிழிசை பொழிந்து திருக்கடைக் காப்பு சாத்தி நின்றார்.தேவத் துந்துபிகள் முழங்க விண்ணவர் பூ மழையைப் பொழிந்தனர்.திருஞானசம்பந்தர் மேற்கொண்ட முதல் தலயாத்திரை இதுவே ஆகும்
ஞானசம்பந்தருக்குப் பொன்னாலான தாளம் அளித்தமையால் திருத்தாளமுடையார் கோவில் என்று அத்தலத்திற்குச் சிறப்புப் பெயர் ஏற்பட்டது

திருக்கோலக்காவில் பொற்றாளம ஞானசம்பந்தரைத் தந்தையார் தம் தோள் மீது சுமந்து கொண்டு சீர்காழிக்கு வந்து நின்றார். . சீர்காழியில் உள்ள தொண்டர்களும் சுற்றுப்புற ஊர்களிலுள்ள சிவத் தொண்டர்களும் அந்தண சிரேஷ்டர்களும் கூட்டங் கூட்டமாக வந்து ஞான சம்பந்தரை வழிபட்டனர். சம்பந்தர் அனைவரோடும் கோயிலுக்குச் சென்றார். தோணியப்பரை எட்டுப் பதிகங்கள் அடங்கிய கட்டளை ஒன்றில் அமைந்த பூவார் கொன்றை என்ற தேவாரப் பதிகம் பாடி வணங்கினார். சிவனருட் செல்வரின் சுந்தர தரிசனத்தால் சீர்காழி அன்பர்கள் பாலாழியில் மூழ்கிய பேரின்பத்தைப் பெற்றார்கள்.

திருநனிபள்ளி யாத்திரை:

ஞானசம்பந்தரின் தாயார் பகவதி அம்மையார் பிறந்த நனிபள்ளியிலுள்ள அந்தணர்கள், அவர் மூவாண்டில் சிவஞானம் பெற்றதையும் சிவபிரானால் பொற்றாளம் அருளப் பெற்றதையும் கேள்வியுற்றுத் தங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டுமென ஞானசம் பந்தரை வேண்டினர். அதற்கு இசைந்த ஞானசம்பந்தர் தோணிபுரத்து இறைவரை வணங்கி விடைபெற்றுத் தாமரை மலர் போன்ற தம் திருவடி நோக நனிபள்ளி நோக்கி நடந்தருளினார். ஆளுடைய பிள்ளையார் அடிமலர் வருந்தக் கண்ட சிவபாத இருதயர் ஞானசம்பந்தரைப் பிறர் தூக்கிச் செல்வதை விரும்பாது தாமே தன் திருத்தோளில் அமர்த்திக் கொண்டு செல்வாராயினார். நனிபள்ளியை அணுகிய நிலையில் ஞானசம்பந்தர் எதிரே தோன்றும் இப்பதியாது எனக் கேட்கத் தந்தையார் அது தான் நனிபள்ளி எனச் சொல்லக் கேட்டுக் காரைகள் கூகைமுல்லை எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிக் கொண்டே நனிபள்ளி ஆலயத்தை அடைந்து வணங்கிப் போற்றி அவ்வூரின் அருகிலுள்ள தலைச்சங்காடு, சாய்க்காடு, வெண்காடு முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு மீண்டும் சீகாழிப் பதிக்குத் திரும்பி னார். வளம் குன்றிப் பாலையாயிருந்த நனிபள்ளி, ஞானசம்பந்தர் வரவால் நெய்தலாய்ப் பின் மருதமாயிற்று. இது ஞானசம்பந்தர் வரலாற்றில் அமைந்த இரண்டாவது தல யாத்திரை யாகும்.

சில நாட்கள் கழித்து ஞானசம்பந்தர் மயேந்திரப்பள்ளி, குருகாவூர், முல்லை வாயில் முதலிய தலங்களைச் சென்று வணங்கி மீண்டார். இது மூன்றாவது தலயாத்திரை.

திருசம்பந்தருடைய தெய்வத் திருப்பணியைப் பற்றிக் கேள்வியுற்ற திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவரது மனைவியாராகிய மதங்கசூளாமணியாரும் ஞான சம்பந்தரை தரிசிக்கச் சீர்காழிக்கு வந்தனர். ஞானசம்பந்தர் அவர்கள் தம்மை வீழ்ந்து வணங்கும் முன்பே அன்போடு வீழ்ந்து வணங்கி எழுந்தார். ஞான சம்பந்தர் தேவார அமுதும் பொழிந்தார். அத்தேவார அமுதத்தைப் பாணர் தம்பதியர் யாழிசைத்து மகிழ்ந்தனர். ஞானசம்பந்தர் பாட, பாணர் யாழிசைக்க, பாலும் தேனும் கலந்தாற்போல் எங்கும் தமிழ் மழை பொழிந்தது. திருநீலகண்ட யாழ்ப்பாணரும், மதங்கசூளாமணியாரும் ஞானசம்பந்தருடனேயே இருந்து அவருடைய பாசுரங்களை யாழிலே இசைக்கும் அரும் பெரும் தொண்டை மனங்குளிர – பரமன் செவி குளிர – கேட்போர் உள்ளம் உருகத் தொடர்ந்து நடத்தி வரலாயினர். இவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் ஞானசம்பந்தருக்குத் தில்லையில் எழுந்தருளியிருக்கும் நடராசப் பெருமானை வழிபட வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. யாழ்ப்பாணரோடு தந்தையாரையும் அழைத்துக் கொண்டு தில்லைக்குப் புறப்பட்டார் சம்பந்தர். தந்தையார், சம்பந்தரைத் தோளில் சுமந்து கொண்டு மகிழ்வோடு புறப்பட்டார். சீர்காழி மெய்யன்பர்கள் சம்பந்தரை வழிஅனுப்பி வைத்தனர். தில்லைவாழ் அந்தணர்கள் ஞானசம்பந்தர் பெருமானைப் பூரண பொற்கும்ப கலசங்கள் வைத்து வரவேற்று வீதி வழியே அழைத்துச் சென்றனர். தில்லைத் திருவீதியையும், எழுநிலைக் கோபுரத்தையும் வணங்கியவாறே ஆலயத்தை வலம் வந்த ஞானசம்பந்தர் கண்களிலே ஆனந்தக் கண்ணீர் பெருகியது. பதிகம் பாடிக்கொண்டே தெற்கு ராஜகோபுரத்தின் வழியாக சென்று நடராஜப் பெருமானை வணங்கினார். அவரது பாடல்களை பாணரும் அவரது மனைவியாரும் யாழில் இசைத்தனர். பல நாட்கள் தில்லையில் தங்கி திருப்பணிகளைச் செய்தார் சம்பந்தப் பெருமான்! தில்லையில் தங்கி இருந்த ஞான சம்பந்தர் அருகிலுள்ள திருவேட்களம் சென்றார். அங்கு திருக்கோவிலிலே தங்கி இருக்கும் அரனாரைப் பாடிப் பாடி, உள்ளம் உருகினார். அங்கிருந்தபடியே அடிக்கடி தில்லைக்கு வந்து சிற்றம்பலத்தையும் தரிசனம் செய்து வரலானார். பாணர் வேண்டுகோளுக்கிணங்க அவரது சொந்த ஊராகிய திருஎருக்கத்தம்புலியூருக்கு சம்பந்தர் புறப்பட்டார். ஆங்காங்கே கோவில் கொண்டுள்ள இறைவனை வழிபட்டு திருப்பதிகங்களைப் பாடிக் கொண்டே சென்றார். ஞானசம்பந்தருக்கு திருநெல்வாயில் அரந்துறையைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆசை எழுந்தது. இத்திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு உச்சிநாதர் என்று பெயர். அது காரணம் பற்றியே அத்தலத்திற்கு திருவுச்சி என்றும் ஒரு பெயர் உண்டு. திருமகனின் ஆசையை நிறைவேற்ற தந்தையார் அவரைத் தமது தோளில் சுமந்துகொண்டு புறப்பட்டார். தந்தையார் தம்மைத் தூக்கிக்கொண்டு நடப்பது கண்டு சம்பந்தர் மனம் கலங்கினார். தந்தையாரைத் தோளிலே தூக்கிச் செல்ல வேண்டாம் என்று கூறிய ஞானசம்பந்தர், தமது பட்டுப்பாதம் நோவதையும் அறியாது நடக்கலானார். இவர்கள் போகும் வழியே மாறன்பாடி என்னும் தலம் ஒன்று எதிர்ப்பட்டது. இரவு நெருங்கவே அனைவரும் அங்கே தங்கினர். திருநெல்வாயில் அரத்துறை அமைந்த இறைவன், ஞான சம்பந்தர் சேவடி நோக நடந்துவருவதை எண்ணி, அவ்வூர் அடியார்களின் கனவில் தோன்றினார். ஞானசம்பந்தன் தளிர் அடிகள் நோக நம்மைத் தரிசிக்க வருகின்றான். அவனை ஏற்றி வருவதற்காக முத்துச் சிவிகையையும், முத்துக் குடையையும், முத்துச் சின்னங்களையும் வைத்திருக்கின்றோம். அவற்றை எடுத்துச் சென்று, இது எமது கட்டளை என்று கூறி அழைத்து வருவீர்களாக ! என சிவ பெருமான் திருவாய் மலர்ந்தருளினார். எம்பெருமான், ஞானசம்பந்தர் கனவிலும் தோன்றி, நாம் உனக்கு மகிழ்ந்து அருளும் முத்துச்சிவிகை, முத்துக்குடை முதலியவற்றைப் பெற்றுக் கொள்வாயாக எனத் திருவாய் மலர்ந்தருளினார். பொழுது புலர்ந்தது! ஞானசம்பந்தர் இறைவனின் திருவருட் கருணையை எண்ணிப் பதிகம் ஒன்றைப் பாடிப் பரமன் அருளைப் போற்றினார். அதற்குள் மறையோர்கள் முத்துச்சிவிகையோடு வந்தனர். ஞானசம்பந்தப் பெருமானைக் கண்டு இறைவன் திருவாய் மலர்ந்து அருளிய திருவாசகத்தைச் சொல்லினர். முத்துச் சிவிகையில் ஞானசம்பந்தர் இறைவன் திருவருளை எண்ணி வியந்து அச்சிவிகையை மும்முறை வலம் வந்து பணிந்து ஐந்தெழுத்தோதி அச்சிவிகையில் அமர்ந்து “எந்தை ஈசன் எம்பெருமான்` என்ற திருப்பதிகத்தால்,இறையருளை வியந்து புறப்பட்டுச் சென்று அரத்துறை ஈசனை வணங்கிப் போற்றினார். திருநெல்வாயில் அரத்துறையில் சில நாள் தங்கியிருந்து புறப்பட்டுச் சிவிகையில் விசையமங்கை, திருவைகா, புறம்பயம், சேய்ஞலூர், திருப்பனந்தாள், பந்தணைநல்லூர், ஓமாம் புலியூர், வாழ்கொளிப்புத்தூர், கடம்பூர், நாரையூர், கருப்பறியலூர், முதலிய தலங்களைப் பணிந்து திருப்பிரம புரம் மீண்டருளினார். இது நான்காவது தலயாத்திரையாகும்.பிறகு சீர்காழியை வந்தடைந்தார். சீர்காழிப் பகுதியில் எழுந்தருளியிருந்த சம்பந்தர் அனுதினமும் தோணியப்பரைப் பாடிப் பரவசமுற்றார்.

உபநயனம்:

திருஞானசம்பந்தருக்கு ஏழாவது வயது தொடங்கியது. வேதியர்கள் தங்கள் குலமரபை எடுத்துக்கூறி இருபிறப்பாளர் நிலையை விளக்கி அவருக்கு முப்புரிநூல் அணிவிக்கும் உபநயனச் சடங்கினைச் செய்து மறை நான்கும் தந்தோம் என்றனர். பிள்ளையார் இறையருளால் எல்லாக் கலையுணர்வுகளையும் ஓதாது உணந்தவர். ஆதலின் வேதங்களின் பல பகுதிகளையும் அவற்றின் பொருளோடு ஓதக் கேட்ட அந்தணர்கள் வேதங்களில் தங்கட்கிருந்த ஐயங்களை ஞானசம்பந்தரிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர்.

ஞானசம்பந்தர் அவர்களை நோக்கி வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாய் விளங்கும் திருவைந்தெழுத்தின் சிறப்பை, துஞ்சலும் துஞ்சல் என்று தொடங்கிப்பாடி அனைவர்க்கும் உணர்த்தி யருளினார்.

அப்பர், சம்பந்தர் சந்திப்பு:

உபநயனச் சடங்கு முடிந்து ஞானசம்பந்தர் சீகாழியில் தங்கியிருக்கும் பொழுது, தில்லை வந்தருளிய திருநாவுக்கரசர் ஞான சம்பந்தரை இறைவன் ஆட்கொண்டருளிய அற்புத நிகழ்ச்சியைக் கேள்வியுற்று அவரைக் காணும் பெருவேட்கையோடு சீகாழிப்பதிக்கு எழுந்தருளினார். கல்லைப் புணையாகக் கொண்டு கடலிடைக் கரை யேறிய நாவுக்கரசர் பெருமைகளைக் கேட்டறிந்திருந்த ஞானசம்பந்தர் அவர் தன்னைக் காண வருகின்றார் என்பதை அறிந்து அன்பர்களோடு சென்று அவரை எதிர் கொண்டு அழைத்தனர். தூய வெண்ணீறு துதைந்த பொன்மேனியும் தாழ்வடமும் நாயகன் சேவடிதைவரும் நெஞ்சும் அன்பு பாய்வது போல் கண்ணீரும்கொண்டு முதியராய் வந்த திருநாவுக்கரசரை ஞானசம்பந்தர் வணங்கினார். நாவுக்கரசர் அவரை வணங்கித் தன்னை வணங்கிய ஞானசம்பந்தரைத் தம் எழுதரிய மலர்க்கையால் எடுத்து அப்பரே என அழைக்க அவரும் அடியேன் என மகிழ்ந்துரைத்தார். இருவரும் அளவளாவி மகிழ்ந்து திருத்தோணி புரத் திருக்கோயிலுக்கு வந்து வழிபட்டனர். ஞானசம்பந்தர் அப்பரைத் தம் திருமாளிகைக்கு அழைத்துச் சென்றார். இருவரும் திருவமுது கொண்டு அளவளாவி மகிழ்ந்தனர். சிலநாள்கள் சீகாழிப் பதியில் தங்கிப் போற்றிய அப்பர் பிரியாவிடைபெற்றுச் சோழ நாட்டுத் திருத் தலங்களை வணங்கப் புறப்பட்டார்

ஞானசம்பந்தர் திருத்தோணியப்பரைச் செந்தமிழ் மாலை விகற்பங்களான திருமொழிமாற்று, திருமாலை மாற்று, வழிமொழித் திருவிராகம், திருஏகபாதம், திருவிருக்குறள், திருவெழுக கூற்றிருக்கை, திருவிராகம் போன்ற பற்பல திருப்பதிகங்களை உள்ளம் உருக பாடிப் பரவசம் பூண்டார். இத்திருப்பதிகங்கள், மூல இலக்கியமாக வீடுபேற்றிற்கான உண்மை இயல்பினை உணர்த்தும் சன்மார்க்க பதிகங்களாக அமைந்துள்ளன. ஒருநாள் தந்தையாருடன், பிள்ளையார் சிவயாத்திரையைத் தொடர்ந்தார். அதுசமயம் பாணரும் அவரது மனைவியாரும் உடன் சென்றார்கள்.

முயலகன் நோய் தீர்த்தல்:

திருஞானசம்பந்தர் தமிழ் நாட்டிலுள்ள பல தலங்களையும் தரிசித்து வழிபடவும் ஆங்காங்குள்ள மக்கட்கு அவற்றின் பெருமை களை அறிவுறுத்தவும் விரும்பி மிகப்பெரிய தமது ஐந்தாவது தல யாத்திரையை மேற்கொள்ள எண்ணினார். தன் தந்தையாரிடம் அவ் விருப்பத்தைத் தெரிவித்தார். சிவபாதஇருதயர் தமது அருமருந்தன்ன பிள்ளையைப் பிரிய மனமின்றி யான் உம்மைப் பிரிந்து ஒருகணமும் தரியேன் ஆயினும், இருமை யின்பம் அளிக்கும் யாகம் ஒன்றையும் செய்ய எண்ணுகிறேன். எனவே, சில தலங்கட்கு உம்மோடு வரு கிறேன், என்று கூறி விடை யளித்துத் தானும் அவரோடு உடன் சென்றார்.

திருஞானசம்பந்தர் திருத்தோணிபுரப் பெருமானை வணங்கி விடைபெற்றுப் பயணம் மேற்கொண்டார். திருக்கண்ணார்கோயில் புள்ளிருக்கு வேளூர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு காவிரி வடகரை வழியே மழவர் நாட்டுத் திருப்பாச்சிலாச்சிராமம் சென்றடைந் தார். அந்நகரில் வாழும் குறுநில மன்னனாகிய கொல்லி மழவன் என்பான் முயலகன் (வலிப்பு)என்ற நோயினால் வருந்தி வந்த தன் மகளைப் பல்வகை மருத்துவம் செய்தும் குணப்படுத்த இயலாத நிலையில் பாச்சிலாச் சிராமத்து ஆலயத்தில் இறைவர் திருமுன் கிடத்தியிருந் தான். திருஞானசம்பந்தர் வருகையை அறிந்த அம்மன்னன் நகரை அலங்கரித்து நன்முறையில் அவரை வரவேற்று ஆலயத்துக்கு அழைத்துச் சென்றான். ஆலயத்தில் இளம்பெண் ஒருத்தி உணர்வற்ற நிலையில் நிலத்திற் கிடத்தலைக் கண்டு அம்மழவனை வினவியறிந்து அப்பெண்ணுக்கு ஏற்பட்ட முயலகன் என்னும் நோயைப் போக்கி யருளுமாறு இறைவனை வேண்டி, துணிவளர்திங்கள் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார். அந்நிலையில் அப்பெண், நோய் நீங்கி நல் உணர்வு பெற்று எழுந்து ஞானசம்பந்தரை வணங்கிப் போற்றினாள். மழவன் மகிழ்ந்து அவர் திருவடிகளை வணங்கித் தன் நன்றியறிதலைப் புலப்படுத்திக் கொண்டான்

பனி நோய் தீர்த்தல்:

பாச்சிலாச் சிராமத்துப் பரமனைப் பணிந்து போற்றிய ஞான சம்பந்தர் அவ்வூரினின்றும் புறப்பட்டுப் பைஞ்ஞீலி, ஈங்கோய்மலை முதலான தலங்களை வணங்கிக் கொண்டு கொங்கு நாட்டிலுள்ள கொடிமாடச் செங்குன்றூரைச் சென்றடைந்தார். அங்கு விளங்கும் மாதொரு பாகரைப் போற்றி அருகிலுள்ள திருநணாவை வழிபட்டு, திருச்செங்குன்றூர் வந்து திருமடம் ஒன்றில் தங்கியிருந்தார். அக்காலம் பனிக்காலம் ஆனதால் அந்நிலத்தின் இயல்புப்படி பனி நோய் என்னும் குளிர் காய்ச்சல் அவருடன் வந்த அடியார்களைப் பற்றி வருத்தியது. அதனை அறிந்த ஞானசம்பந்தர் அடியவர்களைப் பற்றியிருந்த அந்நோய் தீருமாறு நஞ்சுண்டு அமரர்களைக் காத்த திருநீல கண்டப் பெருமானைப் போற்றி அவ்வினைக்கு இவ்வினை என்னும் திருப்பதிகம் அருளிச் செய்தார். அக்கணமே அடியவர்கட்கே யன்றி கொங்கு நாடெங்கிலும் அந்நோய் வாராது நீங்கியது.

முத்துப் பந்தர் பெற்றது:

திருஞானசம்பந்தர், திருச்செங்குன்றூரிலிருந்து புறப்பட்டுப் பாண்டிக் கொடுமுடி, வெஞ்சமாக் கூடல், கருவூர் ஆனிலை முதலிய தலங்களைப் பணிந்து சோழ நாடு மீண்டு திருச்சிராப்பள்ளி முதலிய காவிரித் தென்கரைத் தலங்களை வணங்கிக் கொண்டு திருவலஞ்சுழி வந்தடைந்தார். அப்போது இளவேனிற் பருவம் தொடங்கியது. திருவலஞ்சுழி இறைவனை வணங்கிப் பழையாறை மேற்றளியையும் திருச்சத்தி முற்றத்தையும் பணிந்து நண்பகற்போதில் பட்டீச்சுரம் வந்தடைந்தார். சிவபூதங்கள் வானத்தில் மறைந்து நின்று பட்டீசுரர் அளித்த முத்துப் பந்தரை ஏந்தியவாறு இது சிவபெருமான் அளித்தது எனக் கூறி ஞானசம்பந்தரின் சிவிகையின் மேல் ஏந்தி நிழல் செய்தன. அடியவர் வானினின்று இழியும் அப்பந்தரை ஏந்தியவர்களாய்த் தண்ணிழலில் ஞானசம்பந்தரை ஆலயத்துக்கு அழைத்துச் சென்றனர். ஞானசம்பந்தர் இறைவனது தடங் கருணையை வியந்தவாறு பாடல் மறை பதிகம் பாடிப் பட்டீச்சுரரை வழிபட்டு மகிழ்ந்தார்.

உலவாக் கிழி பெறுதல்:

ஞானசம்பந்தர் பட்டீச்சுரத்திலிருந்து புறப்பட்டுப் பல தலங்களையும் வணங்கியவராய்த் திருவாவடுதுறை வந்தடைந்தார். அதுபோது சிவபாத இருதயர், தான் வேள்வி செய்தற்கு ஏற்ற காலம் இதுவாகும். அதற்குப் பொருள் வேண்டுமென ஞானசம்பந்தரிடம் தெரிவித்தார். ஞானசம்பந்தர் தந்தையாருக்கு அளிக்கப் பொருள் இல்லையே என வருந்தியவராய் இடரினும் தளரினும் என்ற திருப்பதிகத்தால் இறைவனிடம் விண்ணப்பித்தார். சிவபூதம் ஒன்று ஆயிரம் பொன்னடங்கிய பொற்கிழி ஒன்றை ஆலயத்தில் மாசிலாமணியீசர் சந்நிதியில் உள்ள பீடத்தில் வைத்து இப்பொற்கிழி எடுக்க எடுக்கக் குறையாத உலவாக் கிழி, இறைவர் இக்கிழியை உமக்கு வழங்குமாறு அளித்துள்ளார் எனக் கூறி மறைந்தது. ஆளுடைய பிள்ளையார் உலவாக் கிழியைத் தலைமேற் கொண்டு போற்றி அதனைத் தந்தையார் கையில் கொடுத்து, இக்கிழியின் பொன்னைக் கொண்டு தந்தையாரையும் கழுமலத்திலுள்ள ஏனைய அந்தணர்களையும் நல் வேள்விகள் பலவும், செய்யுமாறு கூறி வழி யனுப்பி வைத்தார்.

யாழ்மூரி பாடியது:

பின்னர் ஞானசம்பந்தர் திருக்கோழம்பம் வைகல் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு திருத்தருமபுரம் சென்றடைந்தார். தருமபுரம் திருநீலகண்ட யாழ்ப்பாணரின் தாயார் பிறந்த ஊர், ஆதலின் அங்கு வாழும் அவரது சுற்றத்தார் ஞானசம்பந்தரையும், யாழ்ப்பாண ரையும் அன்புடன் வரவேற்றுப் போற்றினர். பாணர், தம் உறவினர் களோடு உரையாடுகையில், அவர்கள் ஞானசம்பந்தரின் திருப்பதிக இசையைப் பாணர் உடனிருந்து யாழில் வாசித்து வருதலினாலேயே திருப்பதிக இசை சிறப்படைகிறது என முகமன் உரை கூறினர். அதைக் கேட்டு மனம் பொறாது ஞானசம்பந்தரை வணங்கித் திருப்பதிக இசை யாழில் அடங்காதது என்பதனை உறவினர்கள் உணருமாறு செய்தருள வேண்டுமெனப் பணிந்தார். ஞானசம்பந்தர் கண்டத்திலும் கருவி யிலும் அடங்காத இசைக் கூறுடைய மாதர் மடப்பிடி என்ற திருப் பதிகத்தை அருளிச் செய்தார். யாழ்ப்பாணர் அப்பதிகஇசை தம் கருவியில் அடங்காததை உணர்ந்து இக்கருவியினாலன்றோ உறவினர் ஞானசம்பந்தரையும் தன்னையும் ஏற்றத் தாழ்வு கற்பிக்க முற்பட்டனர் என, அதனை உடைத்தற்கு ஓங்கினார். ஞானசம்பந்தர் அதனைத் தடுத்து, இறைவன் பெருமை இக்கருவியில் அடங்குமெனக் கருதல் கூடாது. ஆயினும் இயன்றவாறு வாசிப்பீர் எனத் திரும்பக் கொடுத்து, இசைத் தொண்டு செய்யப் பணித்து, சிலநாள் அப்பதியில் தங்கி, திருநள்ளாறு அடைந்து போகமார்த்த பூண் முலையாள் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடி நள்ளாற்றிறைவரை வணங்கித் திருச்சாத்த மங்கைக்கு எழுந்தருளினார்.

தொடர்ச்சி
பாகம் – 2

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram