கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார்
- திருஞானசம்பந்த நாயனார்
பகுதி 2
நீலநக்கர் சிறுத் தொண்டர் உபசரிப்பு:
நீலநக்கநாயனார் ஞானசம்பந்தரை எதிர்கொண்டழைத்துத் தம் திருமனையில் திருவமுதளித்து உபசரித்தார். திருச்சாத்த மங்கையில் அயவந்தி என்னும் ஆலயத்திலுள்ள இறைவனை வழிபட்டார். அத்தலத் திருப்பதிகத்தில் நீலநக்கரின் அன்பின் திறத்தைப் பாராட்டினார். பின்னர்ப் பல பதிகளையும் வழிபட்டுத் திருச்செங்காட்டங்குடியை அடைந்தார்.
திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சுரம் சென்று பைங் கோட்டு மலர்ப் புன்னை
எனத் தொடங்கிப் பதிகம் பாடிப் பரவினார். அத்திருப்பதிகத்தில் சிறுத்தொண்டர் பக்திச் சிறப்பைப் பாராட்டித் திருமருகல் சென்றடைந்தார்.
விடந் தீர்த்தல்:
திருஞானசம்பந்தர் மருகற் பெருமானை வழிபட்டுச் சிலநாள் அங்குத் தங்கியிருந்தார். அப்பொழுது ஓர் அற்புத நிகழ்ச்சி நடந்தது.
வணிகன் ஒருவன் தனக்கு முறைப் பெண்ணான கன்னி ஒருத்தியை உடன் அழைத்துக் கொண்டு தன்னூர் செல்பவன், மாலை நேரம் வந்ததால் தன் பயணத்தைத் தொடர முடியாமல் திருமருகல் கோயில் அருகிலுள்ள ஒரு திருமடத்தில் தங்கினான். இரவில் வணிகனை அரவு தீண்டி விட்டது. விடந் தலைக்கேறி மயங்கிச்சோர்ந்தான். அந்நிலையில் அவனுடன் வந்த பெண் மணமாகாத நிலையில் அவனைத் தொட இயலாதவளாய்ப் பெற்றோர்க்குத் தெரியாமல் உடன் போக்காக வந்தவளாதலின் செய்வதறியாது திகைப்புற்று அழுதாள். ஊர்மக்கள் மந்திரம் வல்லாரைக் கொண்டு மந்திரித்தும் பயனின்றிக் கிடந்த வணிகனின் உடல் அருகே இருந்து கதறி அழும் பெண் நஞ்சுண்டு தேவர்களைக் காத்த பெருமானே, மன்மதன் உயிரை அவன் மனைவி வேண்ட அளித்தருளிய கருணையாளனே மார்க்கண்டேயர்க்காக காலனை உயிர்துறக்கச் செய்தருளியவனே என் நாயகனைப் பற்றிய விடத்தின் வேகம் தணியுமாறும், துன்பக் குழியிலிருந்து நான் கரையேறுமாறும் அருள் புரிய வேண்டும்
என இறைவனை நினைந்து அழுதரற்றினாள். அவ்வழியில் காலை இளம் போதில் மருகற் பெருமானை வழிபட வந்த திருஞானசம்பந்தப் பெருமானின் திருச்செவிகளுக்கு இவ்அவலக் குரல் எட்டியது. உடன் ஞானசம்பந்தர் அத்திருமடத்தை அடைந்து அவளுக்கு ஆறுதல் கூறி நடந்ததை வினாவினார். அப்பெண் ஞானசம்பந்தரை வீழ்ந்து வணங்கித் தன் வரலாற்றைச் சொல்லலானாள்.
வைப்பூரிலுள்ள தாமன் என்போன் என் தந்தை. அவனுக்கு மகளிர் எழுவர். அரவு தீண்டப்பட்டவன் என் தாய்மாமன். என் தந்தை தன் மகளிருள் மூத்தவளை மாமனுக்குத் தருவதாகக் கூறிப் பொருளாசையால் பிறன் ஒருவனுக்கு மணம் செய்வித்தார், அடுத்த பெண்ணை உனக்குத் தருகிறேன் என்று ஆறுதல் கூறிக்கொண்டே ஆறு பெண்களையும் இவ்வாறே பிறருக்கு மணம் முடித்து வந்தார். ஏழாவது பெண்ணாகிய என்னையும் இவ்வாறே வேறு ஒருவருக்கு மணம் செய்வித்துத் தன் மருகனைத் தந்தை தளர்வுறச் செய்வார் என்ற எண்ணத்தால் உறவினர்க்கும் தெரியாமல் இவரோடு மணம் முடித்து வாழ எண்ணினேன். வழியிடையே இவ்வூரில் அரவு தீண்டி இவரும் இறந்தார். கடல் நடுவே கலம் கவிழ்ந்த நாய்கன் போலத் துன்பத்துக்கு ஆளானேன். இந்நிலையில் என் சுற்றத்தார் போல என்பால் பரிவு காட்டி அருள் செய்கின்றீர்கள்! என்று கூறிய பெண்ணின் ஆற்றாமையைக் கேட்டுத் திருவுளம் இரங்கிய ஞான சம்பந்தர் மருகற் பெருமான் ஆலயம் சென்று பணிந்து
உன் பெயர் கூறி ஒள்ளிழையாள் உளம் மெலிந்து வருந்துதல் அருட் கடலாகிய உனக்கு அழகோஎன முறையிடும் நிலையில்
சடையாயெனுமால்` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். அந்நிலையில் வணிகனும் உயிர்பெற்று எழுந்தான். இருவரும் தங்கட்கு வாழ்வளித்த ஞான சம்பந்தர் திருவடிகளைப் பணிந்தனர். ஞானசம்பந்தர் அவ்விருவருக்கும் இறைவன் திருமுன்னிலையில் மணம் புணரும் பெருவாழ்வு வழங்கி வாழ்த்தினார்.
திருஞானசம்பந்தர் திருமருகலில் தங்கியிருந்தபோது, சிறுத் தொண்ட நாயனார் அவரை வணங்கி மீண்டும் திருச்செங்காட்டங்குடிக்கு எழுந்தருளுமாறு வேண்டினார். மருகற் பெருமானை வணங்கி விடைபெறச் சென்ற ஞானசம்பந்தருக்கு இறைவன் செங்காட்டங்குடிக் காட்சியைக் காட்ட இரு தலங்களையும் இணைத்து அங்கமும் வேதமும்
என்ற திருப்பதிகம் பாடிப் போற்றிச் சிறுத் தொண்டருடன் செங்காட்டங்குடி சென்று கணபதீச் சுரத்தை வழிபட்டுக் கொண்டு சிலநாள் அங்குத் தங்கியிருந்தார். பின்னர் சிறுத்தொண்டருக்கு விடையருளித் திருப்புகலூர் தொழச் சென்றார்.
முருக நாயனார் உபசரிப்பு:
முருக நாயனார் எதிர் கொண்டழைக்கத் திருப்புகலூர் சென்ற ஆளுடைய பிள்ளையார் ஆலயம் சென்று பெருமானை வணங்கி திருப்பதிகம் பாடிப் போற்றி முருக நாயனார் திருமடத்தில் தங்கி யிருந்தார். திருநாவுக்கரசர் திருவாரூரில் புற்றிடங் கொண்ட பெருமானை வழிபாடாற்றித் திருப்புகலூரை வழிபட எழுந்தருளினார். அப்பர் வருகையை அறிந்த ஞானசம்பந்தர் அவரை எதிர்கொண்டு அழைத்து அளவளாவி மகிழ்ந்தார். அப்பர் திருவாரூரில் நிகழ்ந்த திருவாதிரை நாளின் சிறப்பை விரித்துரைக்கக் கேட்ட ஞானசம்பந்தர் அப்பரைத் திருப்புகலூரில் இருக்கச் செய்து விற்குடி வீரட்டத்தைப் பணிந்து திருவாரூருக்கு எழுந்தருளினார். ஞானசம்பந்தரின் வருகையை அறிந்த நகர மக்கள் எதிர்கொண்டு போற்றினர். ஞான சம்பந்தர் திருவாரூர்ப் பூங்கோயிலை அடைந்து சித்தம் தெளிவீர் காள்
என்பது முதலிய பல திருப்பதிகங்களை அருளிப் வழிபட்டார். அரனெறியைத் தரிசித்தார். பின்னர் வலிவலம் கோளிலி முதலான தலங்களை அடைந்து வழிபட்டு மீண்டும் திருவாரூரை அடைந்து தங்கியிருந்து வழிபட்டு அத்தலத்தைப் பிரிய மனம் இன்றி அப்பர் நினைவால் திருப்புகலூருக்கு எழுந்தருளினார். வழியிடையே பனையூரைத் தொழுது திருப்புகலூர் வந்தடைந்தார். ஊர் எல்லையில் முருக நாயனார் முதலிய அடியவர்கள் வரவேற்கத் திருப்புகலூரை அடைந்து இறைவனை வழிபட்டு முருகநாயனார் திருமடத்தில் திருநாவுக்கரசர், நீலநக்கர், சிறுத்தொண்டர் முதலிய அடியவர்களோடு உரையாடிக் கலந்து மகிழ்ந்து உடனுறைந்தார்.
திருநாவுக்கரசருடன் தலயாத்திரை:
ஞானசம்பந்தரும் அப்பரும் நீலநக்கர் சிறுத்தொண்டர் முதலானோர்க்கு விடையளித்து இறைவன் வீற்றிருக்கும் பல திருத் தலங்களையும் வழிபட விரும்பிப் புறப்பட்டனர். ஞானசம்பந்தர் அப்பர் உடன்வருவதால், முத்துச்சிவிகை பின்வர, தானும் அவருடன் நடந்து சென்றார். அதைக்கண்ட அப்பர் பெருமான் தாங்கள் சிவிகையில் எழுந்தருள்வீராக எனக் கேட்டுக் கொள்ள ஞானசம்பந்தர் அப்பரை முன்னே விடுத்து அவர் செல்லும் திருத்தலங்களைத் தொடர்ந்து சென்று வழிபட்டார். இருவரும் அம்பர் மாகாளத்தை வணங்கித் திருக்கடவூர் சென்றனர். குங்குலியக்கலயர் வரவேற்க இருவரும் கடவூர் வீரட்டத்தைத் தொழுது போற்றி அந்நாயனார் திருமனையில் அமுது கொண்டு திருக்கடவூர் மயானம் ஆக்கூர் மீயச்சூர் பாம்புரம் முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு திருவீழிமிழலைவந்தடைந்தனர்அத்தலத்தில் விண்ணிழி விமானத்தில் வீற்றிருந்தருளும் பெருமானை வணங்கி இருவரும் தனித்தனி ஆலயத்தின் அருகே விளங்கிய இரண்டு திருமடங்களில் தனித்தனியே அடியார்களுடன் தங்கினர்.
கோயிலின் வடபால் உள்ள திருமடத்தில் ஞானசம்பந்தர் எழுந்தருளியிருந்தார். அங்கிருக்கும் நாள்களில் திலதைப்பதி, பேணு பெருந்துறை என்ற தலங்களை ஞானசம்பந்தர் வழிபட்டுப் போற்றினார். ஞானசம்பந்தர் வீழியில் இருந்தபோது காழிமக்கள் அவர் பிரிவாற்றாது எங்களோடு சீகாழிக்கு வந்தருள வேண்டுமென வேண்டினர். ஞானசம்பந்தர் வீழிநாதனின் அருள் பெற்று இன்று கழித்து நாளை செல்வோம் எனக் கூறி அன்றிரவு துயில் கொண்டார். பெருமான் அவர் தம் கனவில் தோன்றி யாம் தோணியிலமர்ந்த வண்ணத்தை நாளை நீ வீழிமிழலையிலேயே காணலாம்
எனக் கூறக் கேட்டு விழித்தெழுந்து நீராடி ஆலயம் சென்றபோது திருத்தோணிபுரத்தில் உள்ள இறைவன் சம்பந்தருக்கு திருவீழி மிழலையில் காட்சி தந்தார் இதனை கண்டு மைம் மருபூங் குழல்
எனத் திருப்பதிகம் பாடிப் பரவினார், காழிமக்கட்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு வீழிமிழலையிலேயே தங்கியிருந்தார்.
வாசி தீரக் காசு பெறுதல்:
ஞானசம்பந்தரும் அப்பரும் திருவீழிமிழலையில்தங்கி யிருந்த காலத்து மழையின்மையால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. உயிர்களெல்லாம் பசியால் வருத்தமுற்றன. அடியார்களும் துயருற்றனர். அதனை அறிந்த பிள்ளையார் கண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்கும் கவலை வருமோ? என்று கருதியவராய் இரவில் துயிலலுற்றார். பெருமான் அவர் கனவில் தோன்றிப் பஞ்சம் நீங்கும் கால எல்லைவரை ஆலயத்தின் கிழக்குப் பலிபீடத்திலும் மேற்குப் பலிபீடத்திலும் இருவருக்கும்பொற்காசு அளிக்கின்றோம்! எனக்கூறி மறைந்தார். விழித்தெழுந்த ஞானசம்பந்தர் அப்பர் மூர்த்திகளுடன் ஆலயம் சென்றார். கிழக்குப் பலிபீடத்தில் ஞானசம்பந்தர் காசு பெற்றார். மேற்குப் பலிபீடத்தில் அப்பர் காசு பெற்றார். இருவரும் அக்காசுகளைப் பெற்றுத் தத்தம் திருமடங்களில் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்தருளினர். இங்ஙனம் நிகழும் நாள்களில் நாவுக்கரசர் திருமடத்தில் உரிய காலத்திலும், ஞானசம்பந்தர் திருமடத்தில் சிறிது காலம் தாழ்த்தும் அமுதளிக்கப் பெறுவதை அறிந்த ஞானசம்பந்தர், உரியவர்களை அழைத்துத் தாமதத்திற்குரிய காரணம் வினவினார். இறைவன் தனக்கு அளிக்கும் காசுகள் வாசியுள்ளதாக (செல்லாதாக கருதுவதால் மாற்ற காலதாமதம் ஆகிறது) இருத்தலையும் அதனால் அக்காசினை மாற்றிப் பொருள்கள் பெற்று வருதலினால் காலத்தாழ்ச்சி ஏற்படுதலையும் அறிந்த ஞானசம்பந்தர், அப்பர் கூடுதலாக ஆலய தொண்டும் செய்தலால் அவருக்கு வாசியில்லாத காசு வழங்குதலை அறிந்து மறுநாள் ஆலயம் சென்று
வாசிதீரவே காசு நல்குவீர்` எனத் திருப்பதிகம் பாடி நல்ல காசினைப் பெற்று உரிய காலத்தில் தமது திருமடத்திலும் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்து மகிழ்ந்திருந்தார். சில திங்களில் மழைபெய்து நாடு செழித்தது. பஞ்சம் நீங்கி மக்கள் இனிது வாழத் தொடங்கினர்.
மறைக்கதவம் அடைத்தல்:
ஞானசம்பந்தரும் அப்பரும் அடியவர்களுடன் திருவீழி மிழலையிலிருந்து புறப்பட்டுத் திருவாஞ்சியம் முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு அடியவர் எதிர்கொண்டு போற்றத் திருமறைக் காடு அடைந்தனர். ஆலயத்தை வலம் வந்து வாயிலை அணுகினார்கள். வேதங்களால் பூசிக்கப்பெற்றுத் திருக்காப்பிடப்பெற்ற அத்திருக் கதவுகள் திறக்கப்படாதிருத்தலையும் மக்கள் வேறோர் பக்கத்தில் வாயில் அமைத்துச் சென்று வழிபட்டு வருதலையும் கண்ட ஞான சம்பந்தர் வேதவனப் பெருமானை முன் வாயில் வழியே மட்டும் சென்று வழிபட வேண்டுமெனத் திருவுளத்தெண்ணி அப்பரைப் பார்த்து இக்கதவுகள் திறக்கத் தாங்கள் திருப்பதிகம் பாடியருளுக
என வேண்டினார். அப்பர் பண்ணினேர் மொழியாள்
எனத் தொடங்கித் திருப்பதிகம் பாட அப்பதிகப் பொருட் சுவையில் ஈடுபட்ட இறைவன் பதிகத்தின் நிறைவில் திருக்கதவுகள் திறக்குமாறு செய்தருளினார். இருவரும் ஆலயம் சென்று மறைக்காட்டுறையும் மணாளனைப் போற்றிப் பரவித் திரும்பினர். அப்பர் இக்கதவுகள் இனி திறக்கவும் அடைக்கவும் உரியனவாக இருத்தல் வேண்டுமென எண்ணி ஞான சம்பந்தரை நோக்கி இப்போது தாங்கள் திருக்கதவுகள் அடைக்கப் பாட வேண்டுமென வேண்டினார்.
ஞானசம்பந்தர் சதுரம் மறை
எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடினார். முதற்பாடலிலேயே கதவு அடைத்துக் கொண்டது. ஏனைய பாடல்களையும் பாடிப் போற்றினார் ஞானசம்பந்தர். பின்னர் இருவரும் சென்று தத்தம் திருமடங்களில் இனிதுறைந்தனர்.
வாய்மூரில் இறைவன் ஆடல் காட்டி அருளல்:
அப்பர் அரிய வேதங்களால் திருக்காப்பிடப்பெற்றகதவுகள் தாம் பாடிய திருப்பதிகத்தால் அரிதில் திறக்கப்பெற்றதையும் ஞானசம்பந்தரின் பாடலுக்கு எளிதில் அடைத்துக் கொண்டதையும் எண்ணியவராய்த் துயில் கொண்டார். அவர் தம் மனக்கருத்தை அறிந்த இறைவன் அவர் எதிரே சைவ வேடத்துடன் காட்சி நல்கி நாம் வாய்மூரில் இருக்கின்றோம். நம்மைத் தொடர்ந்து வருக
என அழைத்து முன்னே செல்ல அவரைப் பின் தொடர்ந்து சென்றார் அப்பர் நெடுந்தூரம் சென்ற நிலையில் பெருமான் மறைந்தார். அப்பர் வாய்மூரை அடைந்து வழிபட்டுத் திருப்பதிகம் பாடினார். இந்நிலையில் அப்பரை அவர்தம் திருமடத்தில் காணாத ஞானசம்பந்தர் அவர் சென்ற வழி கேட்டறிந்து அவரைத் தேடித் திருவாய்மூர் வந்தடைந்தார்.
ஞானசம்பந்தரின் வருகையை அறிந்த அப்பர் அவரைக் கண்டு மகிழ்ந்து தாம் அருளிய திருப்பதிகத்தில் திறக்கப்பாடிய என்னினும் சிறப்புடைய செந்தமிழ்பாடித் திருக்கதவம்அடைப்பித்த ஞானசம்பந்தர் வந்துள்ளார் திருக்காட்சி நல்குக,என வேண்டினார். வாய்மூர் உறையும் இறைவர் ஞானசம்பந்தருக்கு மட்டும் தமது ஆடல்காட்சியைக் காட்ட பிள்ளையார் தளிரிள வளரென எனத் திருப்பதிகம் பாடிப் போற்றி அக்காட்சியை அப்பருக்கும் காட்டியருளினார். பின்னர் அப்பரும் அவ்வருட் காட்சியைக் கண்டு பதிகம் பாடிப் போற்றினார். இருவரும் வாய்மூரில் சில நாள் தங்கி மகிழ்ந்து மீண்டும் திருமறைக்காடு சென்று தத்தம் திருமடங்களில் இனிதுறைவாராயினர்.
தொடர்ச்சி
பகுதி 3