fbpx

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 28, 4

கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார்

  1. திருஞானசம்பந்த நாயனார்

பகுதி 4

பாண்டித் தலங்களைத் தரிசித்தல்:

பாண்டிய மன்னனும் அரசியும் பிள்ளையாரை வணங்கி, அனுமதி பெற்றுக் கொண்டு, தங்கள் மாளிகைகக்குப் போனார்கள். பாண்டியரும் மாதேவியாரும் குலச்சிறைநாயனாரும் தினந்தோரும் வந்து சம்பந்தர் திருவடிகளை வணங்கித் துதித்துக் கொண்டிருந்தார்கள். சம்பந்தர் கொக்கநாதசுவாமியை நாள் தோறும் வணங்கித் துதித்துக் கொண்டு எழுந்தருளியிருக்கும் நாளிலே சீர்காழியிலிருந்த சிவபாதவிருதயர் “சமணர்களுடன் வாது செய்து வெல்லுவதற்கும் பாண்டிநாடெங்கும் விபூதியைப் பரப்புதற்கும் காரணமான திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரிடம் நிகழ்ந்தவற்றை அறிவேன்” என்று புறப்பட்டு, மதுரையை அடைந்து திருவாலவாயில் சென்று, சொக்கநாத சுவாமியை வணங்கிக் கொண்டு, பிள்ளையார் எழுந்தருளியிருக்கின்ற திருமடத்தை அணைந்தார்

அப்பொழுது ஞானசம்பந்தர் அவரைப் பார்த்து அருந்தவத்தீர் குழந்தைப் பருவத்தில் எனக்குப் பொற்கிண்ணத்தில் பாலளித்து அருள் புரிந்த தோணிபுரப்பெருந்தகை எம்பெருமாட்டியோடு இனிதாக இருந்ததே? என நலம் உசாவும் முறையில் மண்ணில் நல்ல வண்ணம் என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.
பாண்டியரும் மாதேவியாரும் குலச்சிறைநாயனாரும் திருஞானசம்பந்தரை பிரிய மனமில்லாமல் உடன் சென்று, திருப்பரங்குன்றம், திருவாப்பனூர், திருப்புத்தூர்,
திருப்பூவணம், திருக்கானப்பேர், திருச்சுழியல், திருக்குற்றாலம், திருக்குறும்பலா, திருநெல்வேலி என்னுந் தலங்களை வணங்கித் திருப்பதிகம் பாடிக் கொண்டு இராமேச்சுரத்தை அடைந்து, சுவாமிதரிசனம் செய்து திருப்பதிகம் பாடி, அங்கே இருந்தருளினார். அங்கிருந்தே, ஈழமண்டலத்தில் உள்ள திருக்கோணமலை, திருக்கேதீச்சரம் என்னும் தலங்களை வணங்கித் திருப்பதிகம் பாடியருளினார். சிலநாட்சென்ற பின் இராமேச்சுரத்தை நீங்கி, திருவாடானை, திருப்புனவாயில் என்னுந்தலங்களை வணங்கி, குலச்சிறை நாயனாருடைய ஊராகிய மணமேற்குடியை அடைந்து, அங்கே எழுந்தருளியிருந்தார். அங்கு இருக்கும் நாளிலே அதற்குச் சமீபத்திலுள்ள சிவஸ்தலங்களுக்குப் போய்ச் சுவாமி தரிசனம் செய்துகொண்டு திரும்பிவிட்டார். சில பின் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் சோழ நாட்டுக்கு மீண்டும் செல்லுதற்குத் திருவுளங்கொண்டார் பாண்டியரும் மாதேவியாரும் குலச்சிறைநாயனாரும் அவருடைய திருவடிகளைப் பிரிய மனமில்லாமல் அவருடன் செல்ல முற்பட்டனர்.

பிள்ளையார் அதுகண்டு, “அன்பர்களே நீங்கள் நம்முடைய சொல்லை மறவாமல், சைவ சமயத்தைப் பரிபாலனம் செய்து கொண்டு உங்கள் நகரத்திலேயே இருங்கள்” என்று அருளிச் செய்தார். அவர்கள் பிள்ளையாருடைய வார்த்தையை மறுத்தற்கு அஞ்சி, அவருடைய ஸ்ரீபாதங்களை நமஸ்கரித்து, அனுமதி பெற்றுத் திரும்பி மதுரையை அடைந்து, அவரை ஒரு பொழுதும் மறவாத சிந்தையுடன் சைவசமய பரிபாலனஞ் செய்து கொண்டிருந்தார்கள்.
பிள்ளையார் திருக்கூட்டத்தோடு பாண்டிநாட்டைக் கடந்து, சோழநாட்டை அடைந்தார்.
சோழநாடு புகுந்து பாதாளீச்சரம், திருக்களர் முதலான தலங்களை வழிபட்டுக் கொண்டு முள்ளிவாய்க் கரையை வந்தடைந்தார்.

ஓடம் உய்த்தது:

முள்ளி வாய்க்கரையில் இருபுற ஆற்றங்கரை களையும் அனைத்து சென்றதால் நீரிலே ஓடம் செலுத்துபவர்கள் ஓடத்தை செலுத்த நிலையில்லாமை பற்றிக் கரையிலே நிறுத்திப் போய்விட்டார்கள் பிள்ளையார் அதுகண்டு கரையிலே எழுந்தருளி நின்றபோது திருக்கொள்ளம்புதூர் எதிரே தோன்றியது. அங்கே சென்று சுவாமி தரிசனஞ்செய்தற்குத் திருவுளம் விரும்புதலால், அதிசீக்கிரம் ஓடத்தின் கட்டை அவிழ்த்து, சிவனடியார்களை அதிலே ஏற்றி, நாவலமே கோலாக அதன்மேல் நின்று, “கொட்டமே கமழும்” என்னுந் திருப்பதிகத்தைப் பாடியருளினார். பரமசிவனுடைய திருவருளினால் ஓடம் தானாக சென்று மற்றக்கரையை அடைந்து. பிள்ளையார் அடியார்களுடனே இறங்கித் திருக்கோயிலை அடைந்து சுவாமிதரிசனம் செய்து, அங்கே எழுந்தருளியிருந்தார்.

சில நாட்களுக்கு பின்பு திருநள்ளாற்றை அடைந்து, சுவாமிதரிசனம் செய்து, “பாடகமெல்லடி” என்னும் வினாவுரைப் பதிகம் பாடி, சிலநாள் எழுந்தருளியிருந்தார்.

புத்தரை வாதில் வென்றது:

திருத்தெளிச்சேரியை அடைந்து வழிபட்டுப் போதி மங்கை அருகே ஞானசம்பந்தர் வரும்போது, அவரது முத்துச் சின்னம், காளம், பரசமயகோளரி வந்தான் பாலறாவாயன் வந்தான் என முழங்கிய ஓசை கேட்ட புத்த நந்தி, தேரர் குழாத்துடன் வந்து தங்களோடு வாதிட அழைத்தான். ஞானசம்பந்தருடன் வந்த அடியவர் ஒருவர் அவர் அருளிய தேவாரங்களில் புத்தர் சமண்கழுக் கையர் என்ற பாடலைப் பாடி புத்தன் தலை இடி வீழ்ந்து உருளுக என உரைத்த அளவில் புத்த நந்தியின் மேல் இடி வீழ்ந்தது. உடன் வந்தவர்கள் அஞ்சி அகன்றனர். சாரி புத்தன் என்பவனைத் தலைவனாகக் கொண்ட புத்தர்கள் தந்திர செயல்புரிவது உடுத்து தர்க்க வாதம்புரியுமாறு ஞானசம்பந்தரை அழைத்தனர் அப்போதுபோது அந்த அடியவரைக் கொண்டே வாதிடச் செய்து வெற்றி கண்டார். புத்தர்கள் தங்கள் பிழை உணர்ந்து ஞானசம்பந்தரை வணங்கிச் சைவரானார்கள். பின்னர்த் திருக்கடவூர் சென்று வழிபட்டு அப்பர் எங்குள்ளார் எனக் கேட்டு அவர் திருப்பூந்துருத்தியில் இருக்கும் செய்தி அறிந்து அவரைக் காணத் திருப்பூந்துருத்தி நோக்கி சென்று கொண்டிருந்தார்

அப்பரைக் கண்டு மகிழ்தல்:

ஞானசம்பந்தர் வருகையை அறிந்த அப்பர், திருப்பூந்துருத்தி எல்லைக்குமுன் சென்று அடியவர் கூட்டத்தினரோடு எவரும் அறியாத வண்ணம் அவர் ஏறி வரும் சிவிகையைத் தானும் ஒருவராய்ச் சுமந்து வந்தார்

திருஞானசம்பந்தர் திருப்பூந்துருத்தி எல்லையை அடைந்த போது அப்பர் வரவைக் காணாது அப்பர் எங்குற்றார்? என அடியவர் களை வினாவினார். அவ்வுரை கேட்ட அப்பர் உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் பெரு வாழ்வு வந்து எய்தப் பெற்று இங்குற்றேன் என்றார். ஞானசம்பந்தர் விரைந்து சிவிகையினின்றிறங்கி இவ்வாறு செய்தருள்வது தகுமா? எனக் கூறி உடனடியாக முத்து சிவிகையில் இருந்து கீழிறங்கி அப்பரை வணங்கினார்.சம்பந்தர் தன்னை வணங்கும் முன்பாக அப்பர் சம்பந்தரை வணங்கினார். இருவரும் ஒருவரை ஒருவர் வணங்கி கொண்டார்கள்.பின்னர் இருவரும் ஆலயம் சென்று இறைவனை வணங்கினர்.

ஞானசம்பந்தர் அப்பர் திருமடத்தில் அவரோடு உடன் உறைந்து பிள்ளையார் தாம் பாண்டி நாட்டிற் சென்று சமணர்களை வாதில் வென்றதையும், பாண்டியனுடைய கூனை நிமிர்த்தியதையும், அந்நாடெங்கும் விபூதியை வளர்த்ததையும், மங்கையர்க்கரசியார், குலச்சிறைநாயனார் என்கின்ற இருவருடைய பெருமையையும், அப்பமூர்த்திக்குச் சொல்லியருளினார். அப்பமூர்த்தி தான்தொண்டை நாட்டுக்குச் சென்று அங்குள்ள சிவஸ்தலங்களை வணங்கியதைப் பிள்ளையாருக்குச் சொல்லியருளினார்.
ஞானசம்பந்தர் பாண்டிய நாட்டின் வளத்தை கூறக்கேட்ட அப்பமூர்த்திகள் பாண்டிய நாட்டுக்குச் செல்ல விரும்பினார்.அப்பர் தொண்டை நாட்டின் சிறப்பைக் கூறக்கேட்ட ஞான சம்பந்தர் தொண்டை நாடு செல்லும் விருப்புடையரானார். இருவரும் ஒருவரையொருவர் பிரிந்து யாத்திரை மேற்கொண்டனர்.

ஞானசம்பந்தர் காவிரி வடகரையை அடைந்து நெய்த்தானம் ஐயாறு பழனம் முதலிய தலங்களை வணங்கி, சீர்காழிப் பதியை அடைந்து தோணிபுரப் பெருமானைப் போற்றித் தம் திருமாளிகையை அடைந்தார்.

தொண்டைநாட்டுத் தல யாத்திரை:

ஞானசம்பந்தர் கச்சித்திருஏகம்பப் பெருமானை வழிபடும் கருத்தினராய்ச் சீகாழியிலிருந்து புறப்பட்டுத் தில்லை சென்று ஆனந்தக் கூத்தனைப் பணிந்து மாணிகுழி, பாதிரிப் புலியூர், வடுகூர், வக்கரை இரும்பை மாகாளம் முதலிய தலங்களை வணங்கித் திருவதிகை வீரட்டம் தொழுது போற்றிக் கோவலூர் அறையணி நல்லூர் ஆகிய தலங்களை வணங்கி திருஅண்ணாமலை சென்றடைந்தார். உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய இறைவனை வணங்கிப் பதிகங்கள் பாடி
திருஓத்தூர் அடைந்து இறைவனைப் போற்றினார்.

அந்தத் தலத்திலே உள்ள சிவனடியார் ஒருவர் வந்து, பிள்ளையாரை வணங்கி நின்று, “பிற சமயங்களை ஒழித்து சைவம் தழைக்க செய்தருளும் எம்பெருமானே! மெய்க்கடவுளாகிய பரமசிவனுக்கு அடியேன் ஆக்கும் பனைகளெல்லாம் மிக உயர்வாக வளர்ந்து ஆண்பனை யாகின. அதுகண்ட சமணர்கள்
நீர் வளர்க்கும் ஆண் பனைகள் எல்லாம்உன் இறைவனால் காய்க்குமா என்று பரிகாசம் செய்வதாக கூறினார். தேவரீர் தயை கூர்ந்து திருவருள் செய்ய வேண்டும்” என்று
விண்ணப்பஞ்செய்தார்.

பிள்ளையார் அது கேட்டு எழுந்து விரைந்து திருக்கோயிலிற்சென்று, சுவாமியை வணங்கி, “பூந்தொத்தாயின” என்னுந் திருப்பதிகம் பாடியருளினார். அத்திருப்பதிகத்தின் திருக்கடைக்காப்பிலே “குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்” என்று அருளிச் செய்தார். அதனால் ஆண்பனைகளெல்லாம் குரும்பைக் குலைகளையுடைய பெண்பனைகளாயின. அதனைக் கண்டவர்களெல்லாரும் ஆச்சரியங்கொண்டார்கள். பிள்ளையார் ஆண்பனைகள் காய்த்துப் பழுக்கும்படி அன்பருக்கு அருள் செய்து, சுவாமிதரிசனம் செய்து கொண்டு அங்கே எழுந்தருளியிருந்தார். சமணர்கள் பிள்ளையாருடைய செய்கையைக் கண்டு, அந்நாட்டைவிட்டு ஓடினார்கள். அவர்களில் சிலர் பரமசிவனே மெய்க்கடவுள் என்று உணர்ந்து, சைவர்களாகி உய்ந்தார்கள். பிள்ளையாருடைய திருவாக்கிலே பிறத்தலால் அப்பனைகளெல்லாம் தங்கள் காலத்தைக் கழித்து, ஒழியாப் பிறவியை ஒழித்துச் சிவத்தை அடைந்தன.

திருவோத்தூரிலிருந்து புறப்பட்டு ஞானசம்பந்தர் திருமாகறல் குரங்கணில் முட்டம் ஆகிய தலங்களை வணங்கிக் காஞ்சிபுரம் சென்றடைந்தார். கச்சி ஏகம்பம் , காம கோட்டம் ஆகிய ஆலயங்களை வணங்கிக் கொண்டு அத்தலத்தின் அருகில் விளங்கும், ஆலயங் களைப் போற்றிக் காரைக்காலம்மையார் முத்திப் பேறு பெற்றருளிய திருவாலங்காட்டை வணங்கிப் போற்ற எண்ணினார். அம்மையார் தலையால் நடந்து வந்த அத்தலத்தை மிதித்தற்கு அஞ்சி அத்தலத்தின் அருகில் உள்ளதொரு ஊரில் அன்றிரவு துயில் கொண்டார். ஆலங் காட்டு இறைவர் அவர் கனவில் தோன்றி நம்மைப் பாடுதற்கு மறந்தனையோ என்ன உடனெழுந்து துஞ்சவருவாரும் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.

பின்னர் அவ்வூரை விட்டகன்று பாசூர் வெண்பாக்கம் காரிகரை ஆகிய தலங்களை வணங்கிக் கொண்டு காளத்தியை அடைந்தார். கண்ணப்பரின் பக்தித் திறம் போற்றிக் காளத்தி இறைவரைப் பணிந்து அங்குள்ள திருமடம் ஒன்றில் பலநாள் தங்கிப் பரவினார்.அந்நாளில் வட திசையிலும் மேற்கு திசையிலும் தமிழ் மொழி வழக்கில் இல்லாததால் அங்கிருந்தே வடதிசையிலுள்ள கயிலாயம், கேதாரம், திருப்பருப்பதம் இந்திரநீல பருப்பதம் முதலிய தலங்களைப் போற்றிப் பதிகங்கள் அருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவேற்காடு பணிந்து திருவொற்றியூரை வந்தடைந்தார்.

எலும்பைப் பெண்ணாக்கியது

திருமயிலையில் சிவநேசர் என்னும் பெயருடைய வணிகர் குடியில் பிறந்த வள்ளல் ஒருவர் இருந்தார். அவர் சிவனாரிடத்தும், சிவனடியார்களிடத்தும் அன்புடையவராய்த் திகழ்ந்தார். எம்பெருமானினும் மெய்ப் பொருளையே ஆராய்ந்து அறியும் ஆற்றல்மிக்க அருந்தவத்தை உணர்ந்து வாழ்வை நடத்தி வந்தார். பொய்மை இல்லாத இவ்வணிக குலப்பெருந்தகையார் வாணிபம் செய்து பெரும் பொருள் ஈட்டினார்.இவர்க்கு அரனார் அருளால் பூமகளைப் போன்ற பொலிவும், நாமகளைப் போன்ற அறிவும் உடைய பூம்பாவை என்னும் பெயருடைய மகள் இருந்தாள். அம்மகள் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வந்தாள்.

ஞானசம்பந்தரை மனதிலே தியானித்து அவரையே தன் குலத்தின் முழுமுதற் கடவுள் எனக் கருதி வந்த சிவநேசர் தமது அருமை மகள் பூம்பாவையையும், பொன்னையும், பொருளையும், தன்னையும் திருஞான சம்பந்தருக்கே அர்ப்பணம் செய்வதாய் உறுதிபூண்டார். அதனால் தம் மகளைக் கன்னிமாடத்தில் வளர்த்து வரலானார். ஒருநாள் தோழியருடன் மலர்வனத்திற்கு மலர் கொய்யச் சென்ற பூம்பாவையை அரவம் ஒன்று தீண்டிவிட்டது. சிவநேசர் விஷத்தை நீக்க மந்திரம், வைத்தியம், மாந்திரீகம் எல்லாம் செய்வதும், அனைத்தும் பலிக்காமல் பயனற்றுப் போயின. பூம்பாவை உடல் பூவுலகை விட்டு மறைந்தது. துயரக் கடலிலே ஆழ்ந்த சிவநேசர் செய்வதறியாது திகைத்தார். தகனம் செய்யப்பட்ட மகளின் சாம்பலையும், எலும்பையும் ஒரு குடத்திலிட்டு கன்னி மாடத்தில் வைத்துக் காப்பிட்டார்.

இவ்வாறு இருந்து வரும் நாளில்தான் ஞானசம்பந்தர் திருவொற்றியூருக்கு எழுந்தருளினார். சிவநேசர் மகிழ்ச்சி கொண்டார். தமது தவப் பயனால்தான் அவர் எழுந்தருளினார் என்று எண்ணினார். திருவொற்றியூர் சென்று சம்பந்தப் பெருமானைத் திருமயிலைக்கு எழுந்தருளுமாறு பிரார்த்தித்தார். சம்பந்தர் சம்மதித்தார். சிவநேசர் மகிழ்ச்சி மிகப்பூண்டு சம்பந்தப் பெருமானை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை தொடங்கினார். திருவொற்றியூரிலிருந்து மயிலை வரை அலங்காரம் செய்தார். ஞானசம்பந்தரை வரவேற்க பல வகையான ஏற்பாடுகளைச் செய்தார். ஞானசம்பந்தர் மயிலையில் எழுந்தருளியிருக்கும் கபாலீச்சுரரைத் தரிசிக்க அடியார்களுடன் முத்துச் சிவிகையில் புறப்பட்டு வந்து கொண்டே இருந்தார். சிவநேசர், மகிழ்ச்சி பொங்க, எதிர்சென்று ஞானசம்பந்தரை வரவேற்று வணங்கினார்.

ஞானசம்பந்தர் சிவநேசருடன் மயிலையை அடைந்து கோயிலில் எழுந்தருளியிருக்கும் அருள் தரும் அம்பிகை கற்பகாம்பாளையும், கருணைக் கடலான கபாலீச்சுரரையும் பைந்தமிழ்ப் பாசுரத்தால் போற்றினார். அடியார்கள் மூலம் சிவநேசருக்கு ஏற்பட்ட சோகக்கதையை முன்னதாகவே கேள்விப்பட்டிருந்த ஞான சம்பந்தர் சிவநேசரிடம், உம்முடைய மகளின் எலும்பு நிறைந்த குடத்தை மதிற்புற வாயிலின் முன்பு கொண்டு வருக என்று பணித்தார். சிவநேசர் கன்னி மாடத்தில் வைத்திருந்த குடத்தை எடுத்து வந்து கோயிலுக்குப் புறத்தே ஞானசம்பந்தர் எழுந்தருளியிருந்த முத்துச் சிவிகையின் முன்னால் வைத்தார்.ஞானசம்பந்தர் கபாலீச்சுரரைப் பணிந்தவாறு, மட்டிட்ட புன்னையைக் கானல் மடமயிலை என்னும் திருப்பதிகத்தைப் பாடத் தொடங்கினார். முதல் பாசுரத்திலேயே பூம்பாவாய் என விளித்தார்.

மண்ணிலே பிறந்தவர்கள் பெறும் பயன் பிறைமதி சூடிய அண்ணலாரின் மலரடிகளுக்கு அமுது செய்வித்தலும், கண்களால் அவர் நல்விழாவைக் காண்பதும்தான் என்பது உண்மையாகும் என்றால் உலகோர் காண நீ வருவாய் என உரைத்தார்.
முதற் பாட்டிலே வடிவு பெற்று அடுத்த எட்டுப் பாட்டுக்களில் பன்னிரண்டு வயதை எய்தினாள் பூம்பாவை.சமணரைக் குறிப்பிட்டு பாடி முடித்ததும் குடம் உடைந்தது. பூம்பாவை பொங்கி எழும் எழிலோடு கூம்பிய தாமரை மலர்ந்தாற்போல் திருமகளை ஒத்தப் பேரழகு மிக்க வடிவோடு எழுந்து நின்றாள்.பூம்பாவை குடத்தினின்றும் வெளியே வந்து இறைவனை வழிபட்டு ஞானசம்பந்தரின் திருவடித்தாமரைகளில் வீழ்ந்து வணங்கி எழுந்தாள்.

சிவநேசரும், அடியார்களும் வியக்கத்தக்க இவ்வருட் செயலைக் கண்டு மெய்யுருகி நின்றனர்.சிவநேசர் ஆளுடைப் பிள்ளையாரிடம் தன் மகளை மணம் புரிந்து வாழ்த்தியருள வேண்டும் என பணிவன்போடு பிரார்த்தித்தார். ஞானசம்பந்தர் புன்முறுவல் பூக்கச் சிவநேசரை நோக்கி, உமது மகள் அரவந்தீண்டி இறந்துவிட்டாள். ஆனால் இவளோ அரனார் அருளால் மறுபிறப்பு எடுத்துள்ளாள். எனவே, இவள் என் மகளுக்கு ஒப்பாவாளேயன்றி நான் மணம் செய்ய ஏற்றவளல்ல என மொழிந்தார்.சிவநேசரும் உண்மையை உணர்ந்து தெளிந்தார். அவர் ஞானசம்பந்தரின் திருவடியை வணங்கி தம் மகளோடு திரும்பினார்.பூம்பாவை முன்போல கன்னி மாடத்தில் வாழ்க்கையைத் தொடங்கினாள்.

சிவனாரை எண்ணித் தவமிருந்து இறுதியில் அவரது திருவடித் தாமரையை அடையும் சிறந்த ஆற்றலையும் பெற்றாள்.இவ்வாறு பூம்பாவைக்கு மறுபிறப்பு கொடுத்த ஞானசம்பந்தர் கற்காம்பாள் சமேத கபாலீச்சுரரை வணங்கி விட்டு தமது புண்ணிய யாத்திரையை புனித மண்ணில் துவங்கினார். திருவான்மியூர், திருஇடைச்சுரம், திருக்கழுக்குன்றம், அச்சிரப்பாக்கம், திருவரசிலி, திருப்பனங்காட்டூர் முதலிய தலங்களைத் தரிசித்தவண்ணம் மீண்டும் தில்லையை வந்தடைந்தார்.

சீர்காழி வந்த அடைதல்

தில்லைவாழ் அந்தணர்கள் எதிர்கொண்டு அழைக்கத் திருஞானசம்பந்தர் தில்லை அம்பல நடராசப் பெருமானைத் தரிசித்தார்.பைந்தமிழ்ப் பாமாலையால் ஆடும் கூத்தனைக் கொண்டாடினார். அங்கியிருந்து புறப்பட்டு முத்துச்சிவிகையில் தமது பிறந்த ஊரான சீர்காழியை வந்தடைந்தார். பெற்றோர்களும் மற்றோர்களும் மேளதாளத்துடன் பிள்ளையாரை வரவேற்றனர். எல்லையில் நின்றவாறே தோணியப்பரைச் சேவித்து அம்பலத்துள் எழுந்தருளினார். பிரம்மபுரீசுரர் திருமுன் சைவப்பிழம்பாய் நின்று வழிபட்ட ஞானசம்பந்தப்பிரான் அன்பர்களும் தொண்டர்களும் புடைசூழத் தமது திருமாளிகைக்கு எழுந்தருளினார். இத்தருணத்தில் திருமுருக நாயனார். திருநீலநக்க நாயனார் முதலிய சிவனருட் செல்வர்கள் மற்றும் அன்பு அடியார்கள் தங்கள் சுற்றத்தாருடன் சீர்காழிக்கு வந்தனர். ஞானசம்பந்தர் அவர்களை வணங்கி வரவேற்றார்.

ஞானசம்பந்தர் பெருமகிழ்ச்சியோடு அவர்களது வருகையைச் சிறப்பித்துப் பெருமையுற்றார். அவ்வடியார்களும் சம்பந்தரைப் போற்றி பணிந்தனர்.அவ்வடியார் களோடு தினந்தோறும் திருத்தோணி யப்பரை வழிபட்டு சிவப்பாடல்களைப் பாடி வந்தார் சம்பந்தர்.இவ்வாறு சீர்காழியில் தங்கியிருந்து தோணியப்பரின் தாளினுக்குத் தண்தமிழ்ப் பதிகப் பாமாலைகள் பல சூட்டி மகிழ்ந்தார்

தொடர்ச்சி
பகுதி 5

திருச்சிற்றம்பலம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram