fbpx

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 29

கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார்

  1. ஏயர் கலிக்காம நாயனார்

நீடிய கொடையின் சிறப்பால் புகழ்கொண்ட சோழ அரசர்களது, நீர்வளம் குன்றாத நாட்டில் நிலவுகின்ற தனது கரையின் இருமருங்கும் பொன் கொழித்திடும் காவிரி ஆற்றின் வடகரையின் கிழக்குப் பக்கத்தே, பூங்கொடிகள் ஆடப், பொருந்திய மாடங்கள் நீண்டவரிசையாக இருப்ப, அதனால் அழகு பொருந்திய நகர் ஒன்று உள்ளது. அந்நகர் பெருமை தாங்கிய திருப்பெருமங்கலம் என்னும் பெயருடையது.

இத்தலத்திலே ஏயர் குலத்தினர் சோழருடைய படைத் தலைமை வகிக்கும் பெருமை பெற்றவர்களாக சிறந்து விளங்கினர்.அக்குடியினிலே வாழ்ந்து வந்த தொண்டர்கள் பலருள் கலிக்காம நாயனார் என்பவரும் ஒருவர். இவர் பக்தியின் பேருருவாய் அன்பின் அழகு வடிவமாய் சிறந்த சிவத்தொண்டராய் விளங்கினார். இவர் மானக்கஞ்சாற நாயனாருடைய மகளைத் திருமணம் செய்து இல்லறத்தை இனிது நடத்தி வந்தார்.

இச்சிவனடியார் திருவெண்ணீற்றுச் செல்வத்தையும், திருச்சடையோன் சேவடியையும் தமக்குக் கிட்டிய பேரின்ப பொக்கிஷம் என்ற எண்ணத்தில் சிவனாரின் திருவடிக் கமலங்களைச் சிந்தையில் இருத்தித் தேனினும் இனிய ஐந்தெழுத்து மந்திரத்தை இடையறாது எந்நேரமும் ஓதி வந்தார். பெருமானின் நினைவாகவே காலம் கடத்தி வந்த நாயனார் சிவனடியார்களின் வியக்கத்தக்க செயல்களையும் அவர்களது பக்திப் பெருக்கின் தன்மையையும் கேள்வியுற்று களிப்பெய்தி வந்தார். இங்ஙனம் இவர் வாழ்ந்து வரும் நாளில்தான் எம்பெருமானாரைச் சுந்தரர் தம்பொருட்டு பரவையாரிடம் தூது போகவிட்ட நிகழ்ச்சி நடந்தது!

இச்செய்தியைக் கேள்வியுற்ற கலிக்காமர் மனம் வருந்தினார். ஆண்டவனை அடியான் தூது அனுப்பும் தொழில் மிகமிக நன்று அல்ல ! இறைவன் அவனது ஆணைக்கு உடன்பட்டு இரவு முழுவதும், தமது தூய திருவடிகள் நோகுமாறு தேரோடும் திருவீதி வழியே உழன்றுள்ளாரே ! இந்திரனும், திருமாலும், நான்முகனும் காணமுடியாத எம்பெருமானின் திருவடிகள் தூது சென்று நோக இசைந்தாலும் தொண்டன் என்று கூறிக்கொள்ளும் இவன்தான் ஏவுதல் முறையாகுமோ?

இத்தகைய செயல்புரிந்த இவரும் தன்னைத் துணிந்து தொண்டன் என்று கூறிக்கொள்ள வெட்கப்பட வில்லையோ! இது எவ்வளவு பாவமான செயல்! பொறுக்கமுடியாத அளவிற்கு இத்தகைய பெரும் பிழையினைக் கேட்ட பின்னரும் என்னுயிர் நீங்காதிருந்ததே! என்று சினங்கொண்டார் கலிக்காமர். துன்பக் கடலில் மூழ்கினார். கலிக்காமரின் கடும் கோபத்தைப் பற்றிக் கேள்வியுற்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் மிகவும் மனம் வாடினார். தம்மால் ஒரு தொண்டர்க்கு ஏற்பட்டுள்ள துயரத்திற்கு எப்படி முடிவு காண்பது என்று சிந்தித்தார். தமது பிழையைப் பொறுத்தருள இறைவனிடம் வேண்டினார்.

புற்றிடங்கொண்ட பெருமான் சுந்தரமூர்த்தி நாயனாரையும், கலிக்காம நாயனாரையும் நண்பர்களாக்கத் திருவுள்ளம் கொண்டார். அதன்படி இறைவன் கலிக்காமருக்குக் கொடிய சூலை நோயினைக் கொடுத்து ஆட்கொண்டார். கலிக்காமர் சூலை நோயால் மிகவும் துடித்தார். கொடிய கருநாகப் பாம்பின் விடம் தலைக்கு ஏறினாற்போல் துடித்த நாயனார் மயக்கமுற்றார்.

அப்பொழுது எம்பெருமான் உன்னைத் துன்புறுத்துகின்ற சூலை நோயைத் தீர்க்க வல்லவன் வன்றொண்டனே ஆவான் ! என்று திருவாய் மலர்ந்து மறைந்தார். எம்பெருமான் சுந்தரரை அடைந்து, நம் ஏவலினால் நம் அன்பன் ஏயர்கோன் கொடிய சூலை நோயினால் மிகவும் வருந்தி வாடுகிறான். உடனே நீ சென்று கலிக்காமருக்கு ஏற்பட்டுள்ள சூலை நோயைத் தீர்த்து வருவாயாக! என்றார். சுந்தரர் புற்றிடங்கொண்ட பெருமானின் பூவடிகளைப் பற்றி வணங்கிப் பெருமங்கலத்துக்குப் புறப்பட்டார். இறைவன் ஆணைப்படி பெருமங்கலத்திற்குப் புறப்பட்டு வரும் செய்தியை ஏவலாளர்கள் மூலம் முன்னதாகவே சொல்லி அனுப்பினார் சுந்தரர்.

ஏவலர் கலிக்காமர் இல்லத்தை அடைந்து சுந்தரர் வருகையைப் பற்றிக் கூறினர். ஏற்கனவே பல வழிகளில் துவண்டு புழுப்போல் துடித்துக் கொண்டிருந்த கலிக்காமருக்கு சுந்தரரின் வருகையைப் பற்றிக் கேள்விப் பட்டதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருந்தது. பிறை முடியணிந்த பெருமானை வணங்கியவாறு உடைவாளைக் கழற்றினார். எம்பெருமானே! இனிமேலும் நான் உலகில் வாழ விரும்பவில்லை.

ஆரூரன் இங்கு வந்து என்னைப் பற்றியுள்ள சூலை நோயைத் தீர்க்கும் முன் என் ஆவியைப் போக்கிப் கொள்வேன் என்று கூறி கலிக்காமர் உடைவாளால் வயிற்றைக் கிழித்துக் கொண்டார். கலிக்காமர் ஆவி பிரிந்ததும் அவரது மனைவி தம் கணவரோடு உயிர் துறந்து அவருடன் பரமனடியைச் சேர்வது என்று உறுதி பூண்டாள். அதற்குரிய நிலையினை உருவாக்கும் தருணத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் ஏவலாளர்கள் முன்னதாக வந்து நம்பிகள் இங்கு பொருந்த அணைந்தார் என்று கூறினர்.

இவ்வாறு அவர்கள் கூறியதும் அம்மையார் துயரத்தை மறைத்து கணவரது செயலினையும் மறைத்து சுந்தரமூர்த்தி சுவாமிகளை இன்முகத்துடன் வரவேற்க எண்ணினார். எண்ணியபடியே அம்மையார் ஏவலாளர்கள் அறியாவண்ணம் கணவரது உடலை உள்ளே ஓர் அறையில் மறைத்து வைத்துவிட்டுத் திருமாளிகையை அலங்கரிப்பதில் ஈடுபட்டார். சிவ அன்பர்களும் உதவலாயினர்.

வாயில்கள் தோறும் மணி விளக்குகளையும் மணமிக்கத் தூயநிறை குடங்களையும் வைத்தனர். நறுமலர் மாலைகளை வரிசையாக அழகுடன் தொங்க விட்டனர். அம்மையார் முக மலர்ச்சியுடன் சுந்தரர் வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் இருந்தார். சுந்தரர் அன்பர்களுடன் எழுந்தருளினார் கலிக்காமரின் தேவியார் சுந்தரரை முகமன் கூறி வரவேற்றார். மலர் தூவிக் கோலமிட்ட ஆசனத்தில் அமரச் செய்து விதிமுறைப்படி அவரது திருப்பாதங்களைத் தூய நீரால் சுத்தம் செய்து மலர் தூவி வழிபட்டு மகிழ்ந்தார். சுந்தரரும் அம்மையாரின் அன்பிற்குக் கட்டுப்பட்டவராய் அம்மையாருக்கு அருள் செய்தார்.

சுந்தரர், அம்மையாரை நோக்கி, அம்மையே ! என் நண்பர் கலிக்காமர் எங்குள்ளார்? அவருக்கு இப்பொழுது துன்பம் செய்து வரும் சூலைநோயினைக் குணப்படுத்தி அவரது நட்பைப் பெற்று மகிழ்வதற்குக் காலம் தாழ்ந்தது பற்றி நான் மிக்க வேதனைப்படுகிறேன் என்றார். கலிக்காமருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று அங்குள்ளோர் அம்மையாரின் ஏவுதலின்படி கூறக்கேட்ட சுந்தரர், அவருக்கு எவ்வித தீங்கும் ஏற்படவில்லை என்றாலும் என் மனம் அவரைக் காணாது தெளிவு பெறாது. நான் உடனே அவரைப் பார்த்துதான் ஆகவேண்டும் என்றார். அன்பர்கள் வேறு வழியின்றி சுந்தரரை அழைத்துச் சென்று குருதி வெள்ளத்தில் கிடக்கும் கலிக்காமரைக் காண்பித்தனர்.

குடல் வெளிப்பட்டு உயிர் நீங்கி உடலில் குருதி கொட்ட ஆவி பிரிந்து கிடந்த கலிக்காமரைக் கண்டு உளம்பதறிப்போன சுந்தரர் வேதனை தாளாமல் கண்களில் நீர்பெருக எம்பெருமானைத் தியானித்தார். எம்பெருமானே! இதென்ன அபச்சாரமான செயல்! நான் மட்டும் இவரது இத்தகைய பயங்கர முடிவைக் கண்ட பின்னரும் உயிர் வாழ விரும்பவில்லை. நானும் என் உயிரைப் போக்கிக்கொள்கிறேன் என்று கூறித் தமது ஆவியை போக்கிக் கொள்ள உறுதி பூண்டார்.

கலிக்காமர் அருகே கிடந்த உடைவாளைக் கையிலெடுத்தார். அப்பொழுது எம்பெருமான் திருவருளால் ஏயர்கோன் கலிக்காம நாயனார் உயிர்பெற்று எழுந்தார். கணப்பொழுதில் தெளிவு பெற்று நடந்ததை அறிந்தார். உடைவாளால் தம்மை மாய்த்துக் கொள்ளப் போகும் சுந்தரரைப் பார்த்து மனம் பதறிப்போனார். உடை வாளைப் பற்றினார் கலிக்காமர்.

ஐயனே! இதென்ன முடிவு? உங்கள் தோழமையின் உயர்வை உணராமல் என்னையே நான் அழித்துக் கொண்டதோடு உங்களது வாழ்க்கைக்கும் பெரும் பாவம் புரிந்துவிட்டேன். ஐயனே! எம்பெருமானின் அன்பிற்குப் பாத்திரமான உம் மீது பகைபூண்டு நெறி தவறிய என்னை மன்னித்தருள வேண்டும் என்று இறைஞ்சினார். சுந்தரர் எம்பெருமானின் திருவருளை எண்ணி அகமும், முகமும் மலர்ந்திட, கலிக்காம நாயனாரை ஆரத்தழுவிப் பெருமிதம் கொண்டார்.

கலிக்காமரும் சுந்தரரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். கலிக்காமரின் தேவியாரும் மட்டிலா மகிழ்ச்சி பூண்டார். சுந்தரர், அவரது மனைவியின் பக்தியைப் பெரிதும் போற்றினார். மானக்கஞ்சாரர் மகள் அல்லவா? என்று வியந்து கூறினார். எம்பெருமானின் திருவருட் கருணையினால் கலிக்காமரும், சுந்தரரும் தோழர்களாயினர். இரு சிவனருட் செல்வர்களும் சேர்ந்து சிவயாத்திரை செல்ல எண்ணினர். ஒருநாள் பெருமங்கலப் பெருமானைப் பணிந்து இருவரும் புறப்பட்டனர். திருப்புன்கூர் என்னும் திருத்தலத்தை அடைந்து அங்கு எழுந்தருளியிருக்கும் திருசடை அண்ணலின் திருவடிகளைப் பணிந்து துதித்தனர். சுந்தரர் அந்தனாளன் எனத் தொடங்கும் பதிகத்தைச் சுந்தரத் தமிழில் பாடினர்.

அங்கியிருந்து புறப்பட்டு, இருவரும் திருவாரூரை வந்தணைந்து பூங்கோயிலில் எழுந்தருளியிருக்கும் புற்றிடங்கொண்ட பெருமானின் பொற்பாதங்களைப் போற்றிப் பணிந்தனர். கலிக்காம நாயனார் சுந்தரருடன், பரவையார் திருமாளிகையில் சில காலம் தங்கினார். இருவரும் திருவாரூர்த் தியாகேசப் பெருமானை வழிபட்டு மகிழ்ந்தனர். கலிக்காமர் சுந்தரரிடம் விடைபெற்றுக்கொண்டு பிரிந்துசெல்ல மனமில்லாத நிலையில் தமது ஊருக்குப் புறப்பட்டார். பெருமங்கலத்துப் பெருமானுக்குப் பணி செய்தவாறு மனைவியுடன் இனிது வாழ்ந்து வந்த கலிக்காமர் ஆனேறும் பெருமானின் தேனூறும் திருவடிகளை நாள்தோறும் வாயாறப் போற்றி மகிழ்ந்தார்.

திருத்தொண்டு வழுவாமல் நின்றார். பல்லாண்டு காலம் பூவுலகில் பெருவாழ்வு வாழ்ந்த நாயனார், முடிவில் நலம் தந்த நாதரின் வரம் தரும் திருவடி நீழலில் வீற்றிருக்கும் அடியார்கள் கூட்டத்துடன் கலந்தார். மீளா நெறியில் அமர்ந்து உய்ந்தார்.

பெயர்:
ஏயர்கோன் கலிக்காம நாயனார்
குலம்:
வேளாளர்
பூசை நாள்:
ஆனி ரேவதி
அவதாரத் தலம்:
பெருமங்கலம்
முக்தித் தலம்:
பெருமங்கலம்

மேற்கோள்கள்:

(சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் ஐந்தாவது பாடலில் நாயனார் அவர்களை பின்வருமாறு வரிசை படுத்தி உள்ளார்

ஏவர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்

2.சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் கலிக்காம நாயனாரை பற்றி 3155 முதல் 3563 வரை 409 பாடல்கள் பாடியுள்ளார் இவற்றில் பெரும்பாலான பாடல்கள் சுந்தரரைப் பற்றியே உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram