fbpx

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 30

கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார்

  1. திருமூல நாயனார்

திருவாடுதுறை! உமாதேவியார் பசுவின் கன்றாக வடிவம் பூண்டு தவஞ் செய்த பெருமைமிக்க திருத்தலம்! இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் திருநாமம் பசுபதியார் என்பதாம். இங்கு காவிரியாறு ஓடுவதால் நல்ல செழிப்பும் சுபிட்சமும் நிலைத்து நின்றன.

மாலைக்காலத்தில் தோன்றும் இளம்பிறைக் கண்ணி யைச் சூடிய சிவமூர்த்தியினது திருக்கயிலாய மலையினில் உள்ள பழமையான கோயிலுக்கு முதற்பெருந் தலைவராகத் தலைமை பெற்று, இந்திரன் மால் அயன் முதலாய தேவர்கட்கு இறைவனை அடைகின்ற நெறியினை அருள் செய்கின்ற குருமூர்த்தியாகிய நந்தியெம் பெரு மான் திருவருள் பெற்ற, நான்கு மறைகளையும் உணர்ந்த, யோகியர் களில் ஒருவர் சுந்தரநாதர்.அச்சிவயோகியார் அணிமா முதலான எண் வகைச் சித்திகளையும் பெற்றவர்.

அவர் நம் முதல்வரது திருக் கயிலாய மலையினின்றும் புறப்பட்டுத் தென்திசையில் பொதிய மலையில் இருந்த அகத்திய முனிவரிடத்துக் கொண்டதொரு நட்பு உரிமையால், அவருடன் சில நாள் தங்குதற்கு விரும்பி, நல்ல தமிழின் பிறப்பிடமான பொதிய மலையில் சேர்வதற்கு வந்தார்

திருக்கேதாரம் இமயமலைச் சாரலிலுள்ள ஒரு பதியாகும். திருஞானசம்பந்தரும், சுந்தரரும் திருக்காளத்தியில் இருந்தவாறே அருளிய பதிகங்களையுடையது. மிகத்தொன்மையான பன்னிரண்டு சிவலிங்கங்களில் இங்குள்ள திருமேனியும் ஒன்றாகும்.பின்பு அங்கிருந்து நேபாளத்திற்கு சென்று பசுபதீஸ்வரர் வணங்கி கங்கைக் கரையை அடைந்தார்

கங்கையாற்றின் நீர்த் துறையில் நீராடிப் பின்னர், நீண்ட பிறவிக் கடலில் புகுவாரை அக்கடலினின்றும் கரை யேற்றும் கண்ணுதற்பெருமான் அமர்ந்தருளும் காசி என்னும் பதியைப் பணிந்து போற்றி, அப்பால் சென்று மேகங்கள் படியும் விந்திய மலையினையும், நிலைபெற்ற திருப்பருப்பத மலையையும் பணிந்து, அதன் பின்னாகத் தொடர்ந்து, பிறையணிந்த சடையை யுடைய பெருமானது திருக்காளத்தி மலையினைச் சேர்ந்தார்

பின்பு திருவாலங்காடு, காஞ்சி, தில்லை முதலிய திருத்தலங்களிலுள்ள சிவன் கோயில்களை வழிபட்டவாறு திருவாடுதுறை என்னும் பழம்பெரும் புண்ணியதலத்தை வந்தடைந்தார். அத்தலத்தை அடைந்த யோகியார் அங்கு எழுந்தருளியிருக்கும் பசுபதிநாதரை வணங்கினார். அத்திருத்தலத்திலேயே சிலகாலம் தங்கியிருந்து பரமனை வழிபட்டு வந்தார். அருகிலுள்ள பிறத்தலங்களையும் தரிசித்து வர வேண்டும் என்ற வேட்கை மிகுதியினால் சுந்தரநாதர் அங்கியிருந்து புறப்பட்டு, காவிரியாற்றின் கரை வழியாக போய்க் கொண்டிருந்தார்.

காவிரிக்கரையிலே பசுக்கள் கூட்டம் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன. அப்பசுக்களை மேய்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தான் மூலன் என்பவன். மூலன் சாத்தனூரைச் சேர்ந்தவன். குலத்தில் இடையர். அதனால், தன் குலத்திற்கு ஏற்ப அந்தணர்கள் வீட்டு ஆநிரைகளை மேய்த்து வரும் தொழிலைச் செய்து வந்தான். மூலன் கருணை உள்ளம் படைத்தவன். இவன் பசுக்களை அடிக்காமல் வெயிலில் மேயவிடாமல் கூடியமட்டும் நல்ல நிழல் உள்ள இடமாகவே அவைகளைத் துன்புறுத்தாமல் மேய விடுவான். பாதுகாப்பாகவும், அன்பாகவும் பேணி வளர்ப்பான்.

வழக்கம்போல் அன்றும் மூலன் ஆநிரைகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போதுதான் யோகியார் அவ்வழியாக வந்து கொண்டிருந்தார். ஆநிரைகள் மேய்ந்து கொண்டிருக்கும் அழகான காட்சியைக் கண்டு யோகியார் தம்மை மறந்த நிலையில் நின்று கொண்டிருந்தார். அவ்வமயம் எதிர்பாராமல் ஒரு சம்பவம் நடந்தது. ஆநிரைகளை மேய்த்துக் கொண்டிருந்த மூலனுக்கு ஆயுள் நெருங்கிடவே அவன் இறந்தவிட்டான். இறந்து போன மூலனைச் சுற்றி பசுக்கள் கூடின. பசுக்களின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தன. மூலனை நாக்கால் நக்கியும், உம்பினால் உராய்ந்தும் ஆநிரைகள் தங்கள் அன்பை வெளிப்படுத்தின. பசுக்கள் எல்லாம் சேர்ந்து கதறிப் பதறி அங்குமிங்குமாக சுற்றித் திரிந்தன.

இக்காட்சியைக் கண்ட யோகியார், மூலனைப் பிரிந்து இவ்வளவு தூரம் வாடும் இப்பசுக் கூட்டம் இனி மேல் ஆகாரம் உட்கொள்ளாது. அவனைப் போல் இறந்துதான் போகும். எம்பெருமான் திருவருளால் எப்படியும் இப்பசுக்கூட்டத்தின் இடரைத் தீர்ப்பேன் என்று தமக்குள் எண்ணினார். கருணைமிக்க சிவயோகியார் ஆநிரைகளுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தைப் போக்க முடிவு பூண்டார். கூடுவிட்டு கூடுபாயும் வித்தையைக் கற்றிருந்த தவசியார் மூலன் உடலுக்குள் தம் உயிரைப் புகுத்தினார். அவ்வளவுதான். மூலன் உறங்குபவன் போல் கண் விழித்து திருமூலராய் எழுந்தான். ஆநிரைகளுக்கு ஆனந்தம் தாங்கவில்லை. துள்ளிக் குதித்தன.

திருமூலராகிய சித்தருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அவரும் பசுக்களைத் தட்டிக்கொடுத்து அவற்றோடு சேர்ந்துத் துள்ளிக் குதித்தார். மாலை மறைந்தது. வீடு நோக்கி பசுக்கள் புறப்பட திருமூலரும் கூடவே புறப்பட்டார். ஒவ்வொரு பசுவும் தத்தம் வீடு அறிந்து புகுந்து கொண்டன. திருமூலர், அவற்றை எல்லாம் வீடு சேர்த்தார். ஆனால் மூலன் மட்டும் அவரது வீட்டிற்கு போக விரும்பவில்லை. அவர் ஞான திருஷ்டியால் மூலனுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பதை அறிந்தார். அதனால் தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து என்ன செய்வது? என்று சிந்திக்கத் தொடங்கினார். மூலனின் மனைவி கணவன் வரவை வெகு நேரமாக எதிர்பார்த்துப் பயன் ஏதும் காணாமையால் கணவனைத் தேடிப் புறப்பட்டாள்.

வரும் வழியிலே ஓரிடத்தில் கணவன் இருப்பதைக் கண்டு வியப்பு மேலிட அருகே சென்று வீட்டிற்கு வரக் காலதாமதம் ஆனது பற்றி வினவினாள். மூலன் மௌனம் சாதித்தார். மூலனின் மனைவி வியப்பு மேலிட கேள்வி மேல் கேள்வி கேட்டாள். திருமூலர் மௌனமாகவே இருந்தார். அவரது மனைவிக்கு புரியவில்லை. திருமூலரின் கையைத் தொட்டு அழைக்க முற்பட்டாள்! அம்மையார் செய்கை கண்டு திருமூலர் சிறிது எட்டி விலகினார். அப்பெண்மணி அஞ்சி நடுங்கி, உங்களுக்கு என்ன தீங்கு நேர்ந்தது? எதற்காக இப்படி விலகுகிறீர்கள் என்று மன வருத்தத்தோடு கேட்டாள். திருமூலர் தம் மனைவியிடம், என்னால் உன் வீட்டிற்கு வர முடியாது. உனக்கும், எனக்கும் இனி மேல் எவ்வித உறவும் கிடையாது. அதனால் ஆலயம் சென்று அரனாரை வழிபட்டு அமைதி பெறுவாயாக! என்று கூறினார்.

அதற்குமேல் அவள் முன்னாள் நிற்பதும் தவறு என்பதை உணர்ந்து திருமூலயோகியார் அத்தலத்திலுள்ள திருமடம் ஒன்றுக்குச் சென்று சிவயோகத்தில் அமர்ந்தார். கணவனின் நிலையைக் கண்டு கதிகலங்கிப் போனாள் மனைவி. கணவனின் மனமாற்றத்தைப் பற்றி ஒன்றும் புரியாமல் கவலையோடு வீடு திரும்பினாள். இரவெல்லாம் பொல்லாத் துயர்பட்டுக் கிடந்தாள். மறுநாள் மூலனின் மனைவி சுற்றத்தாரை அழைத்துக்கொண்டு அவர் இருக்குமிடத்திற்கு வந்தாள். யோக நிலையில் அமர்ந்திருக்கும் திருமூலரின் முகத்தில் தெய்வ சக்தி தாண்டமாடுவது போன்ற தனிப் பிரகாசம் பொலிவு பெறுவது கண்டு அனைவரும் திகைத்து நின்றனர். இருந்தும் அவர்கள் மனைவிக்காக திருமூலரிடம் வாதாடினர். ஒரு பலனும் கிட்டவில்லை. அதன் பிறகு திருமூலர் முனிவர் என்பதை அவர்களால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அவர்கள் மூலன் மனைவியிடம், உன் கணவர் முன்னைப்போல் இல்லை. இப்பொழுது அவர் முற்றும் துறந்த முனிவராகிவிட்டார். இனிமேல் இம் மெய்ஞானியாரோடு வாழ வேண்டும் என்பது நடக்காத காரியம் என்ற உண்மையைக் கூறினர்.

அவர்கள் மொழிந்ததைக் கேட்ட மூலனின் மனைவி கணவனுக்கு இப்படிப் பித்து பிடித்துவிட்டதே! என்று தனக்குள் எண்ணியவாறே அவரது கால்களில் விழுந்து வணங்கி வேதனையோடு வீடு திரும்பினாள். சற்று நேரத்தில் யோகநிலை தெளிந்த திருமூலர், மறைவாக ஒரு இடத்தில் வைத்திருந்த தமது திருமேனியைத் தேடினார். கிட்டவில்லை. முதலில் யோகியாருக்கு அஃது சற்று வியப்பாகவே இருந்தது. மீண்டும் யோக நிலையில் அமர்ந்து, தனது மேனியைப் பற்றிய உண்மைப் பொருளை உணர எண்ணங்கொண்டார். தபோ வலிமையால் இறைவன் அருளிய ஆகமப் பொருளைத் தமிழிலே வகுத்து உலகோர்க்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவே முக்கண்ணனார் தம் உடலை மறைத்தருளினார் என்பதை உணர்ந்து கொண்டார்.

திருமூலநாயனார் இறைவனின் கட்டளையை நிறைவேற்றிச் சித்தங்கொண்டார். திருவாடுதுறைப் பெருமானைப் பணிந்தவாறு மதிலுக்கு வெளியே மேற்கு பக்கமாக அமைந்துள்ள அரசமரத்தின் அடியில் அமர்ந்து சிவயோகம் செய்யத் தலைப்பட்டார். சிவயோகத்தில் நிலைத்து நின்று இதய கமலத்தில் எழுந்தருளிய எம்பெருமானுடன் ஒன்றினார். உணர்வு மயமாய்த் திகழ்ந்தார் திருமூலர். உலகோர், பிறவியாகிய நஞ்சிலிருந்து நீங்கி உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறிகளையும் வகுத்தும், தொகுத்தும், விரித்தும் கூறும் நல்ல திருமந்திர மாலையினை ஓர் ஆண்டிற்கு ஒரு மந்திரப் பாடலாக மூவாயிரம் ஆண்டுகள், சிவயோகத்தில் அமர்ந்து, மூவாயிரம் திருமந்திரங்கள் அடங்கிய திருமுறையைப் பாடினார்.

சிவயோக நுணுக்கங்களை விளக்கமாகக் கூறும் திருமந்திரம் ஓர் அற்புதமான அறநூல்! தெய்வீக ஆற்றலுடன் திகழ்ந்து, சிவபதவியை நினைப்பவரைப் பாவக் குழியிலிருந்து வெளியேற்றி காப்பதால் திருமந்திரம் எனத் திருநாமம் பெற்றது. திருமூல நாயனார் பரம் பொருளாகிய சிவபெருமானைப் போற்றி பாடியருளிய திருமந்திரம், ஆகமங்களின் சாரம்! இஃது ஒன்பது மந்திரங்களாக அமைந்துள்ளது. பன்னிரு திருமுறையில் பத்தாம் திருமுறையாக விளங்குவது தெய்வீக ஆற்றலுடன் விளங்கும் இத்திருமந்திரமாலை. சைவ சித்தாந்த சாத்திரங்கள் அனைத்திற்கும் முற்பட்டது. இப்புனிதமான திருமந்திரத் திருமுறைக்கு நிகராக வேறு திருமுறைகளே இல்லை. இம் மூவாயிரந் திருமந்திரப் பாடல்களையும் வைகறை எழுந்து கருத்தறிந்து ஓதுவோர் பிறவிப் பாசம் நீங்கி பரமன் பதியை அணைவர் என்பது திருவாக்கு!இவ்வாறு, உலகோர் உய்யும் பொருட்டு திருமந்திர மாலையை, அருளிய திருமூல நாயனார் நெற்றிக் கண்ணனாருடைய பொற்றாமரைப் பாதங்களைப் பற்றிக் கொள்ளும் ஒப்பற்ற பெருவாழ்வைப் பெற்று உய்ந்தார்.

நலம் சிறந்த ஞான, யோக, கிரியை, சரியை ஆகிய நெறிகள் எல்லாம் மலர்ந்த திருவாய் மொழியை அருளிய திருமூல தேவ நாயனாரின் மலரனைய திருவடிகளை வணங்கி, உலகெங்கும் பரவ விளங்கிய புகழுடைய திருவாரூரில் சமணர்கள் கலங்குமாறு செய்த இந்நிலவுலகில் என்றும் சிறந்த வலிமையுடைய தண்டி யடிகளின் அடிமைத் திறத்தைச் சொல்லுவாம்.

திருமூலதேவ நாயனார் புராணம் முற்றிற்று.

பெயர்:
திருமூலர்
குலம்:
இடையர்
பூசை நாள்:
ஐப்பசி அசுவினி
அவதாரத் தலம்:
சாத்தனூர்
முக்தித் தலம்:
திருவாவடுதுறை

மேற்கோள்கள்
1.சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருத்தொண்டத் தொகையின் ஐந்தாவது பாடலில் திருமூலநாயனாரை பின்வருமாறு வரிசைப்படுத்தி உள்ளார்

நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்

  1. சேக்கிழார் பெருமான் தனது பெரியபுராணத்தின் பாடல் எண் 3564 முதல் 3591 வரை அறிமுக உரை பாடலையும் சேர்த்து 29 பாடல்கள் பாடியுள்ளார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram