கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார்

- சோமாசிமாற நாயனார்
மாமரங்கள் மிகுதியாக விளங்கி நிற்கும் சோலை களையுடைய திரு அம்பர் என்னும் ஊரில், மனத்தைத் தூய்மை செய்யும் வாய்மையுடைய நான்மறைகளையும் பயில்கின்றதூய அந்தணர் மரபிலே பிறந்தவர் தான் மாற நாயனார் என்பவர். இவர் அறவொழுக்கங்களில் நெறிபிறழாது முறையோடு வாழ்ந்து யாவராலும் போற்றப்படும் அளவிற்கு மேம்பட்டு விளங்கினார். இவரது திருமேனியிலே எந்நேரமும் திருவெண்ணீறு துலங்கும். நாவிலே நமச்சிவாய மந்திரம் ஒலிக்கும். பாதங்கள் சிவ ஆலயங்களை எந்நேரமும் வலம் வரும். இவ்வாறு நலம் தரும் நாயகனை நாளெல்லாம் போற்றிப் பணிந்தார் அடிகளார். இறைவனின் திருவடி நீழலையே பற்றி வீடு பேற்றை அடைவதற்கான ஒப்பற்ற வேள்விகள் பல நடத்தி வந்தார். இவர் நடத்தி வந்த வேள்விகள் பலவற்றிலும் சோம வேள்விதான் மிக மிகச் சிறந்தது. எண்ணற்ற சோம வேள்விகளைச் செய்தமையால்தான் இவருக்குச் சோமாசி மாறர் என்ற சிறப்புப் பெயர் உண்டாயிற்று. இவர் சிவத்தலங்கள் தோறும் சென்று சிவதரிசனம் செய்து வந்தார். ஒருமுறை திருவாரூரை அடைந்து தேவாசிரியத் திருமண்டபத்தைத் தொழுது நின்றார். அப்பொழுது சுந்தரமூர்த்தி சுவாமிகள் பரவை நாச்சியாரோடு திருவாரூருக்கு எழுந்தருளியிருந்தார். அவர்களைக் கண்டதும் நாயனாருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை! சோமாசி மாற நாயனார் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருப்பாதம் பணிந்து வழிபட்டார். இவருக்கு சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்பும் அருளும் கிடைத்தது. இவ்வாறு சிவதொண்டு பல புரிந்து வாழ்ந்து வந்த சோமாசி மாற நாயனார் திருவைந்தெழுத்து மகிமையால் விடையில் எழுந்தருளும் சடைமுடிப் பெருமானின் திருவருளைப் பெற்று வாழும் அருந்தவப் பேற்றினைப் பெற்றார்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
வயற் பண்ணைகளும், குளமும் புறத்தே சூழ இனிது விளங்கும் திருவொற்றியூரில் ஒருகூற்றில், வைத்த துணைவியாரான உமையம்மையாரைச் சிறிதும் பிரியாதிருக்கின்ற பெருமான், தமக்கு ஒப்பற்ற தோழராக விளங்கும் சுந்தரரை இணையான பருத்த மார் பகங்களையுடைய சங்கிலியாரின் அழகிய மெல்லிய தோள்களை அணைந்து சேருமாறு அருள் செய்ய, அதனால் சென்றணைந்த ஒப்பற்றவராகிய சுந்தரரின் திருவடிகளே நமக்குக் காப்பாக அவரை அடைந்தோம்.
சோமாசிமாற நாயனார் புராணம் முற்றிற்று
வம்பறாவண்டுச் சருக்கம் முற்றிற்று
பெயர்:
சோமாசிமாற நாயனார்
குலம்:
அந்தணர்
பூசை நாள்:
வைகாசி ஆயிலியம்
அவதாரத் தலம்:
அம்பர்
முக்தித் தலம்:
ஆரூர்
மேற்கோள்கள்
- சுந்தரமூர்த்தி நாயனார் தனது திருத்தொண்டத் தொகையின் ஐந்தாவது பாடலில் சோமாசி மாற நாயனாரை பின்வருமாறு வரிசைப்படுத்தியுள்ளார்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
- சேக்கிழார் பெருமான் தனது பெரிய புராணத்தில் பாடல் எண் 3630 முதல் 3634 வரை 6 பாடல்கள் பாடியுள்ளார்
திருச்சிற்றம்பலம்
சிவார்ப்பணம்