கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார்

35.சிறப்புலி நாயனார்
காவிரியாறு பாய்ந்து செழிப்புச் செய்யும் சோழ நாட்டின் பழமையான அழகிய பதி, உலகத்துள்ளோர் வறுமையினால் இரந்து சென்றால் அவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வேண்டியவற்றை வரையாது அளிக்கும் குணம் உடையவர்கள் என்று சீகாழித் தலைவரான ஆளுடைய பிள்ளையார், நன்மை பொருந்திய வேதியர்களைப் பற்றி அருள் செய்த மறை வாக்கினைப் பெறும் ஊரானது திருவாக்கூர் என்பதாகும்
இப்பகுதியில் உள்ள தூயமலர்ச்சோலை, சுடர் தொடு மாடங்களிலும் மாமழை முழக்கம் தாழ மறையொலி முழக்கம் ஓங்கும். அகிற்புகையும், வேள்விச்சாலையிலிருந்து எழும் ஓமப்புகையும் விண்ணும், மண்ணும் பரவும். எம்பெருமானின் திருநாமம் எந்நேரமும் ஒலிக்கும். இத்தகைய மேன்மை மிக்கத் திருவாக்கூர் தலத்தில் நான்மறை ஓதும் அந்தணர் மரபிலே சிறப்புலியார் என்னும் நாமமுடைய சிவனடியார் அவதரித்தார். இவர் இளமை முதற்கொண்டே திருசடைப் பெருமானிடத்தும், திருவெண்ணீற்றன்பர்களிடத்தும் எல்லையில்லாப் பேரன்பு கொண்டிருந்தார். தினந்தோறும் திருவைந்தெழுத்தினை முக்காலமும் நியமமாக ஓதி முத்தீயினை வளர்த்து ஆனேறும் பெருமானை வழிபட்டு வந்தார். இவர் எண்ணற்ற வேள்விகளை சிவாகம முறைப்படி நடத்தி வந்தார். அத்தோடு சிறப்புலி நாயனார் விருந்தோம்பல் இலக்கணமறிந்து சிவனடியார்களை அமுது செய்வித்து அகம் குளிர்ந்தார். இவர் காட்டி வந்த ஈடு இணையற்ற அன்பினாலும் நெறி தவறாத அறத்தினாலும் பிறரால் தொழுவதற்குரியவரானார். இவ்வாறு கொன்றை வேணியர்க்குத் திருத்தொண்டுகள் பல புரிந்து வந்த இச்சிவனருட் செல்வர், நீண்ட காலம் நிலவுலகில் வாழ்ந்தார். எம்பெருமானின் திருவடி நிழலை அடைந்து வாழும் நிலையான பேரருளினைப் பெற்றுப் புகழுற்றார்.
சிவ அறங்களில் மேன்மை மிக்க அந்தணர் வாழும் திருவாக்கூரில் தோன்றிய வேதியரான வண்மையுடைய அச்சிறப்புலி யாரை வாழ்த்தி, திருச்செங்காட்டங்குடியில் செம்மையால் திளைக்கும் சிறுத்தொண்ட நாயனாரின் திருச்செயலைக் கூறப் புகுகின்றேன்
பெயர்:
சிறப்புலி நாயனார்
குலம்:
அந்தணர்
பூசை நாள்:
கார்த்திகை பூராடம்
அவதாரத் தலம்:
ஆக்கூர்
முக்தித் தலம்:
ஆக்கூர்
மேற்கோள்கள்
1.சுந்தரமூர்த்தி நாயனார் தனது திருத்தொண்டத் தொகையின் 6வது பாடலில் சிறப்புலி நாயனாரை பின்வருமாறு வரிசை படுத்தி உள்ளார்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
2.சேக்கிழார் பெருமான் தனது பெரிய புராணத்தில் பாடல் எண் 3654 முதல் 3659 வரை 6 பாடல்கள் பாடியுள்ளார்
திருச்சிற்றம்பலம்
சிவார்ப்பணம்