கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார்

- கணநாத நாயனார்
கடல் சூழ்ந்த பெரிய உலகத்தில் எல்லா உயிர்களையும் காக்கின்ற உமையம்மையாரிடம் ஞானப்பால் உண்ட, சிவஞானச் சீர்மைபெற்ற திருஞானசம்பந்தர் தோன்றிய அழகிய பெருமையுடையதும், ஊழிக்காலத்தில் பெருகிய பெருங்கடல் வெள்ளத்திலும் ஆழாமல் மிதந்து நின்று, உலகம் உருவாகுவதற்கு ஒரு முதலானதுமான சீகாழிப் பதியில், மறையவர் குலத் தலைவராய்க் கணநாதர் என்னும் பெயருடைய சிவத்தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
இவர், அந்தணர் மரபிற்கு ஏற்ப நாடோறும் சிவாகம விதிப்படி தோணியப்பரை வழிபட்டு வந்தார். சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு புரியும் உயர்ந்த அறத்தை உணர்ந்து வாழ்க்கையை நடத்தி வந்தார். இப்பெரியார், அடியார்களுக்குச் செய்ய வேண்டிய சிறந்த தொண்டினைப் பற்றிய ஒப்பற்ற உண்மையான தத்துவத்தை உலகிற்கு உணர்த்தத் தவறவில்லை ! திருத்தொண்டு புரிவோர் முவ்வுலகமும் போற்றும் பெருமை பெற்று உயர்வர். அவர்கள் தாங்கள் செய்துவரும் திருத்தொண்டிற்கு இடையூறு நேருங்கால் தங்கள் உயிரையும் விட அஞ்சமாட்டார்கள். இந்த உண்மையை உலகிற்கு உணர்த்தியதோடு நில்லாமல் தாமும் அதன்வழி நடந்தார்.
கோயிலில் அமைந்துள்ள நறுமலர்ச் சோலைகளைச் சீர்படுத்துவது, பொற்றாமரைக் குளத்தைச் செப்பஞ் செய்து சீர்படுத்துவது முதலியனவற்றைத் தவறாது செய்து வந்தார். திருமந்திர வாக்கின்படி, புண்ணியஞ் செய்வாருக்கு நறுமலர் உண்டு, திருநீருண்டு என்பதை கற்றறிந்து தெளிந்திருந்த இத்தொண்டர், இறைவழிபாட்டிற்கு இன்றியமையாத மலர்களைத் தரும் நந்தவனம் அமைத்தார்.
மலர்ச் செடிகளை முறைப்படி வளர்த்து மலர்களைப் பறித்து அழகுறத் தொடுத்து எழில்மிகும் பூ மாலையாக்கிப் பரமனின் பொன்னனாற் மேனிதனில் சாத்தி மகிழும் சிவபுண்ணியத்தைப் பெற்றிருந்தார் கணநாதர். இவர் திருசடை அண்ணலின் பூங்கழலைப் பணிந்ததோடு திருஞானசம்பந்தரின் திருவடிக் கமலங்களையும் அன்போடு மகிழ்ந்து வழிபட்டு வந்தார். திருமஞ்சனம் செய்தல், கோயிலில் மெழுகிடுதல், விளக்கிடுதல், திருமுறைகளை எழுதுதல், படித்தல் முதலிய திருத்தொண்டுகளையும் தவறாது செய்து வந்தார் இத்திருத்தொண்டர் ! மற்றவர்களுக்கும் யார் யாருக்கு எது எது விருப்பமோ அவ்வப்பணியில் அவர்களை ஈடுபடச் செய்தார்.
அவர்களுக்குப் பக்தியும், நல்ல பழக்கமும் ஏற்படுமாறு செய்ய அரும்பாடுபட்டார்.
சிவத்தொண்டு புரிந்து வந்த கணநாதருக்குத் தொண்டர்கள் பலர் தோன்றினர். இறைவழிபாட்டின் தனிமையான இனிமையை உணர்ந்திருந்த இவர் இல்லறத்தின் இனிமையையும், தனிமையையும் நன்கு உணர்ந்திருந்தார். வள்ளுவன் வகுத்த இல்லற நெறியை நன்கு உணர்ந்து மனையாளோடு கருத்தொருமித்து வாழ்ந்து வந்தார். நாயனாரின் திருத்தொண்டினையும், பக்தியின் மேன்மையையும் கண்டு அவருக்குப் பேரின்ப நிலையை அளிக்கத் திருவுள்ளம் கொண்டார் திருத்தோணியப்பர்.
தொண்டருக்குத் தொண்டராகி, அரனாருக்கு அன்பராகி, ஆளுடைப்பிள்ளைக்கு அரும்பக்தனாகி வாழ்ந்தவர் கணநாதர்! வித்தகம் பேச வேண்டா, பக்திப் பணி செய்ய வேண்டும் என்ற நெறிமுறையைக் கடைப்பிடித்து வாழ்ந்த அருமையான சிவத்தொண்டர். பூ உலகில் பேரும் புகழும் பெற்று வாழ்ந்த இப்பெரியார், இறைவன் அருளால் பேரின்ப வீடு பெற்றுச் சிவகணங்களுக்குத் தலைமைப் பதவி பெற்றுத் திருத்தொண்டில் நிலையான இன்பத்தைப் பெற்றார்.
உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு நஞ்சை யுண்ட சிவபெருமானின் தொண்டின் உண்மைத் திறத்தில் உறுதியான மெய்யுணர்ச்சி பொருந்தப் பெற்று, அளவில்லாத தொண்டர்களுக்கு அவ்வவர் தொண்டிற்கான அறிவை அளித்து, அவர்களின் திறங்களை உலகிலே நிலை நிறுத்தும் விரிந்த பெரும் புகழையுடைய சீகாழியில் தோன்றிய கணநாதரின் திருவடிகளைத் துதித்து, விளங்கும் திருநீற்றுச் சார்பு பூண்ட வண்மையுடைய கூற்றுவ நாயனாரின் இயல்பை உளங் கொண்ட கொள்கையின்படி சொல்லப் புகுகின்றாம்.
கணநாத நாயனார் புராணம் முற்றிற்று.
பெயர்:
கணநாத நாயனார்
குலம்:
அந்தணர்
பூசை நாள்:
பங்குனி திருவாதிரை
அவதாரத் தலம்:
சீர்காழி
முக்தித் தலம்:
சீர்காழி
மேற்கோள்கள்
1.சுந்தரமூர்த்தி நாயனார் தனது திருத்தொண்டத் தொகையின் ஆறாவது பாடலில் 38வது நாயகன்மாறாக கணநாதரை பின்வருமாறு வரிசைப் படுத்தி உள்ளார்
கடகாழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
- சேக்கிழார் பெருமான் தனது பெரிய புராணத்தில் பாடல் எண்
3923 முதல் 3929 வரை 9 பாடல்கள் பாடியுள்ளார்
திருச்சிற்றம்பலம்