fbpx

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 39

கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார்

  1. கூற்றுவ நாயனார்

பகைவர் எதிர்த்து நின்ற போரில், அவர்களைத் தம் தோளின் வன்மையால் வெற்றி பெற்றுச், சூலப்படையை ஏந்திய சிவபெருமானின் நல்ல திருப்பெயரான திருவைந்தெழுத்தைத் தம் நாவால் நாள் தோறும் சொல்லும் நன்மையில் மிக்கவர், பல நாள்கள் இறைவனின் அடியவர்தம் திருவடிகளைப் பணிந்து போற்றிவரும் முதன்மையான தொண்டில் முயன்றவர், களந்தைத் தலைவரான கூற்றுவ நாயனார் ஆவர்

வாளெடுத்து, வில்தொடுத்து, வீரம் வளர்த்து, வெற்றிகள் பல பெற்ற கூற்றுவ நாயனார், பகைவர்களுக்கு கூற்றுவன் போல் இருந்தார் என்ற காரணம் பற்றியே இத்திருப்பெயர் பெற்றார். அதுவே இவரது இயற்பெயர் மறைவதற்குக் காரணமாகவும் இருந்தது. வாள் சுழற்றும் வீரத்தோடு, பரமனின் தாள் போற்றும் பக்தியையும் பெற்றிருந்ததால் , களந்தை நாட்டை, அரனார் அருளோடு பெரும் வெற்றிகளைப் பெற்று அறம் பிறழாது புகழ்பட ஆட்சியும் புரிந்து வந்தார்.

சிவனருட் செல்வர்களின் திருவடிகளைப் பணிந்து அவர்கட்கு உயர்ந்த திருத்தொண்டுகள் பல புரிந்து வந்தார். இவ்வரசர் ஐந்தெழுத்து மந்திரத்தை இடையறாது ஓதிவரும் பக்தி படைத்தவர். இக்குறுநில மன்னர், தம்மிடமுள்ள அணி, தேர், புரவி, ஆட்பெரும் படை கொண்டு நாடு பல வென்று தமதுக் கொடி கீழ் கொண்டு வந்தார். மன்னர் தும்பை மாலை சூடிப் போர் செய்து பெற்ற வெற்றிகளால் குறுநிலம் விரி நிலமானது. முடியுடைய மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களையும் வென்றார். இவ்வாறு திக்கெட்டும் வெற்றி முரசு கொட்டிய காவலனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது.

தில்லைவாழ் அந்தணர்களின் பாதுகாப்பிலுள்ள சோழ மன்னர்களுக்கே உரிய மணி மகுடத்தைத் தாம் அணிய வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார். சோழ மன்னர்கள் தில்லை, திருவாரூர், உறையூர், பூம்புகார் என்னும் இடங்களில்தான் முடி சூட்டிக் கொள்வது வழக்கம். மணிமகுடம், ஆதிகாலம் தொட்டே சோழர் மன்னர்களுக்குரிய சிறப்புப் பொருளாகவே இருந்து வந்தது. இம் மணிமகுடத்தைப் பாதுகாத்து வரும் தில்லை வாழ் அந்தணர்கள் இம்மணி மகுடத்தைத் தக்க காலத்தில் சோழ மன்னர்களுக்கு மட்டுமே சூட்டும் நியதியைக் கொண்டிருந்தனர். இவற்றை எல்லாம் நன்கு தெரிந்து வைத்திருந்த கூற்றுவ நாயனார் தில்லைவாழ் அந்தணர்களிடம் தமது எண்ணத்தைச் சொல்ல எண்ணியபடியே, ஒருநாள் தில்லைக்குப் புறப்பட்டார்.

தில்லையை வந்தடைந்து தில்லை நடராஜப் பெருமானை வணங்கி வழிபட்டு, தில்லைவாழ் அந்தணர்களைச் சந்தித்தார். தமக்கு மணிமுடி சூட்ட வேண்டும் என்று வேண்டினார். மன்னரின் மொழி கேட்டு தில்லைவாழ் அந்தணர்கள் அஞ்சி நடுங்கினர். அவர்கள் மன்னர்க்கு முடிசூட்ட மறுத்தனர். மன்ன! நாங்கள் பரம்பரை பரம்பரையாகச் சோழ குலத்திலே பிறந்த மன்னர்களுக்குத்தான் முடிசூட்டி வருவது வழக்கம். மற்றபடி வேறு மன்னர்களுக்கு இத்திருமுடியைச் சூடுவதற்கில்லை என்று துணிச்சலோடு விடையளித்து மன்னரின் கோரிக்கையை நிராகரித்தனர்.

தில்லைவாழ் அந்தணர்கள் கூற்றுவ நாயனாரைக் கண்டு சற்று பயந்தனர். அவரால் தங்களுக்கு ஏதாகிலும் தீங்கு வந்துவிடுமோ என்று தங்களுக்குள் தவறான எண்ணங்கொண்டனர். தில்லையின் எல்லை நீத்து சேர மன்னர்பால் சென்று வாழ எண்ணினர். மணிமகுடத்தை தங்கள் மரபில் வந்த ஒரு குடும்பத்தாரிடம் ஒப்புவித்து, பாதுகாக்கும்படி செய்யத்தக்க ஏற்பாடுகளைச் செய்தனர். இவர்கள் அச்சமின்றி மொழிந்ததைக் கேட்டு கூற்றுவ நாயனார் செய்வதறியாது திகைத்தார். முடியரசு ஆவதற்கு குடியொரு தடையா? எனத் தமக்குள் எண்ணி வருந்தினாரே தவிர, தில்லைவாழ் அந்தணர்களை வற்புறுத்தியோ, தொல்லைப் படுத்தியோ, அம்மகுடத்தைச் சூட்டிக்கொள்ள விரும்பவில்லை.

கூற்றுவ நாயனார், திருமுடி சூட்டிக்கொள்ளும் பேறு தமக்குக்கிட்டவில்லையே என்ற மனவேதனையோடு, திருக்கோயிலுக்குச் சென்றார். இறைவனைப் பணிந்து, அருட்புனலே ! ஆடும் ஐயனே! உமது திருவருளால் மண்ணெல்லாம் என் வெற்றித் திருவடி பட்டும் தில்லைவாழ் அந்தணர்கள் மட்டும் அந்த மகுடத்தை எனக்குச் சூட்ட மறுத்துப் போய்விட்டார்களே! ஐயன் இந்த எளியோனுக்கு முடியாக உமது திருவடியினைச் சூட்டி அருள்புரிதல் வேண்டும் என்று இறைஞ்சினார். தமது இருப்பிடத்தை அடைந்து துயின்றார். அன்றிரவு கண்ணுதற் பெருமான் மன்னன் கனவிலே எழுந்தருளி தமது திருவடியை நாயனாரின் சென்னியின் மீது திருமுடியாகச் சூட்டி அன்பு அடியாரின் ஆசையை நிறைவேற்றி அருள்புரிந்து மறைந்தார்.

கூற்றுவ நாயனார் கண்விழித்தெழுந்தார். அவரது மகிழ்ச்சி அவர் களத்திலே பெற்ற வெற்றியைக் காட்டிலும் எல்லையற்று நின்றது. தில்லைவாழ் அந்தணர்கள் தமக்குச் செய்ய வேண்டிய கடமையை மறந்தபோதும் தில்லைப் பெருமானே தம் பொருட்டு கனவிலே எழுந்தருளி திருமுடி சூட்டினார் என்பதை எண்ணிப் பார்த்துப் பேரானந்தமுற்றார். சென்னி மீது கைகூப்பி, நிலத்தில் வீழ்ந்து வீழ்ந்து பரமனைப் பணிந்து எழுந்தார் நாயனார். எம்பெருமானுடைய திருவடியையே மணிமகுடமாகக் கொண்டு, உலகமெல்லாம் ஒரு குடைக்கீழ் கொண்டவந்து அரசு புரிந்தார் கூற்றுவ நாயனார்! அறநெறி நிறைந்த கூற்றுவ நாயனார், இறைவன் எழுந்தருளியிருக்கும் கோயில்களுக்கெல்லாம் பொன்னும் மணியும் வாரி வாரிக் கொடுத்தார். தன்னந்தனியே ஒவ்வொரு கோயில்களுக்கும் நித்திய நைமித்திய வழிபாடுகள் தங்கு தடையின்றி தட்டாமல் இனிது நடைபெற ஆவனச் செய்தார். திருத்தலங்கள் தோறும் சென்று சிவ வழிபாடு நடத்தினார். இவ்வாறு திருசடை அண்ணலின் திருவடி சூடி திக்கெட்டும் வெற்றிக்கொடி நாட்டி, பாராண்ட கூற்றுவ நாயனார், முடிவில் சஞ்சிதவினை தீர்க்கும் குஞ்சிதபாதத்தில் கலந்து இன்பமெய்தினார்.

தேனும் புல்லாங்குழலும் என்ற இவற்றை வென்ற இனிமை கொண்ட மொழியையுடைய பரவையாரின் ஊடலைத் தீர்க்கும் பொருட்டு, மதியும் பாம்பும் பகை தீர்ந்து வாழ்தற்கு இடமான திருச்சடையையுடைய பெருமான் தூது போந்த நாளில், கூனனது கூனையும் குருடனின் குருட்டுத் தன்மையையும் தீர்த்துப் பணி கொள்பவரான நம்பி ஆரூரரின் ஒளிபொருந்திய திருவடிகளை யானும் போற்றி, எழுவகைப் பிறப்பினும் உட்பட்டு முடங்கிக் கிடக்கும் தன் மையான கூன் தன்மையையும், அவற்றுள் செலுத்தும் அறியாமையான குருட்டுத் தன்மையையும் போக்கிக் கொள்கின்றேன்.

பெயர்:
கூற்றுவ நாயனார்
குலம்:
களப்பிரர்
பூசை நாள்:
ஆடி திருவாதிரை
அவதாரத் தலம்:
களப்பால்

மேற்கோள்கள்

  1. சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருத்தொண்டத் தொகையின் ஆறாவது பாடலில் 39வது நயன் மாறாக கூற்றுவ நாயனாரை பின்வருமாறு வரிசைப்படுத்தி உள்ளார்

ஆர்கொண்ட வேற்கூற்றன் களத்தைக்கோன் அடியேன்

  1. சேக்கிழார் பெருமான் தனது பெரியபுராணத்தின் பாடல் எண் 3930 முதல் 3938 வரை 9 பாடல்கள் பாடியுள்ளார்

திருச்சிற்றம்பலம்
சிவார்ப்பணம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram