கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார்

- புகழ்ச்சோழ நாயனார்
இமயமலையின் உச்சியின்மேல்
வேங்கைப் புலிக்கொடியின் குறியைப் பொறித்து
முழு நிலவு ஒளிவீசுகிற
வெண்கொற்றக்கொடியின் கீழ்
நெடு நிலத்தில் அரசாட்சி அளிக்கிற புகழும் வன்மையும் உடையது தமிழ் மன்னர்களான சோழர்களின் நாடு அதுதான்
வள நாடாகிய உறையூர். ஓங்கும் அழகுகளெல்லாம் உறையும் பழமை வாய்ந்தது உறையூர்
விண் உலகம் பாதாள உலகம்
மண் உலகம் எல்லா உலகிலும் சிறந்த போகங்கள் அனைத்துக்கும் உறுப்பாக
ஒப்பற்ற வளங்கள் உடையதாய்
வானம் தொடுமளவு குவிந்த
எல்லையற்ற பல வகைப் பொருட்கள் நிறைந்து காணப்பட்டன உறையூரின் ஆவண வீதிகள் எனப்படும்
கடைவீதிகள்.
பூமியே நனையும்படி மதநீரைப் பொழிந்தபடி வானின் இடம் முழுதும் அதன் ஒலி நிரம்பும்படி முழங்குகின்றன போர்த்தொழில் புரியும் கொடிய யானைகள்;அத்தகு யானைகள் தமது இனமோ எனக்கருதும்படி மழைநீர் மதநீர் போல பொழிகிறது
நீண்ட வரிசைகளில் நின்று
புல் உண்ணும் குதிரைகளின் வாய்களில் வழிகிற நுரை
கடல் அலை விளிம்பில் உள்ள நுரைபோல் உள்ளது
துளை கொண்ட துதிக்கை உடையஐராவதம் எனும் யானை;உச்சைச் சிரவம் எனும் குதிரை;இலக்குமி கடைந்த அமுதம்;கற்பகத் தரு;
சிந்தாமணி ஆகிய இவையெல்லாம் தேவர்கள் கொண்டு போனதால் மன உளைச்சல் அடைந்த கடல்
இவற்றில் ஒன்றேனும் திரும்ப பெற விரும்பி தேவர்களின் உலகை வளைத்தது போல் இருக்கின்றன மதிலைச் சூழ்ந்த
மலர்கள் மிதக்கும் அகழிகள்
அந்நகரைத் தலைநகராகக் கொண்டு உலகைக் காக்கும் வன்மையுடைய அரசர் நிலை பெற்ற தில்லை நகரின்
அழகிய வீதிகளில் அழகிய பணிகள் செய்கின்ற அனபாயச் சோழரின் திருக்குலத்தில்
மரபு வழியிலே தோன்றிய முன்னோருமான பொன்னியாறு பாயும் சோழ நாட்டின் புரவலர் புகழ்ச் சோழர்
வீரத்திலும், கொடையிலும் புகழ்பெற்ற புகழ்ச் சோழன் சிவபெருமானிடத்தும், அவருடைய அடியார்களிடத்தும் எல்லையில்லா அன்பும், பக்தியும் பூண்டிருந்தார். சிவாலயங்களுக்குத் திருப்பணி பல செய்தார். இவர் ஆட்சியிலே சைவம் தழைத்தது. புகழ்ச் சோழர் கொங்குநாட்டு அரசரும், மேற்கு திசையில் உள்ள பிறநாட்டு அரசர்களும் கப்பம் கட்டுவதற்கு வசதியாக தம் தலைநகரை மலைநாட்டுப் பக்கம் உள்ள கருவூருக்கு மாற்றிக் கொண்டார். கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்த புகழ்ச்சோழர் கருவூரில் எழுந்தருளியிருக்கும் ஆனிலை என்ற கோயிலுக்குச் சென்று பசுபதீச்சுரரை இடையறாது வழிபட்டு இன்புற்றார். பசுபதீசுவரர் புகழ்ச் சோழனின் ஒப்பற்ற பக்தியை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார்.
அதற்கான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. வேற்று அரசர்கள் கொண்டு வந்து கொடுக்கும் யானைகள், குதிரைகள், பொற்குவியல்கள், ரத்தின குவியல்கள் முதலிய திரைப் பொருள்களையெல்லாம் பெற்று, அந்தந்த அரசர்களுக்கு அவரவர்கள் நிலைமைக்குத் தக்க அரசுரிமைத் தொழிலினைப் பரிபாலனம் புரிந்து வருமாறு பணித்தார்.எண்ணற்ற மன்னர்கள் கப்பம் கட்டிவரும் நாளில் அதிகன் என்னும் அரசன் மட்டும் மன்னர்க்குக் கப்பம் கட்டாமல் இருந்தான். அதிகன் திரை செலுத்தாமல் இருக்கும் செய்தியை அமைச்சர் மூலம் அறிந்துகொண்டான் மன்னன். அதிகனை வென்றுவர கட்டளையிட்டான்.
மன்னரின் கட்டளைக்கு அடிபணிந்து அமைச்சர் மாபெரும் படையோடு சென்று அதிகனை வென்று பலவகை பொருட் குவியல்களையும், யானைகளையும், குதிரைகளையும், பெண்களையும் மாண்ட வீரர்களது தலைகளையும் எடுத்து வந்தார். படைகளின் வீரம் கண்டு பூரிப்படைந்த மன்னர் ஒரு தலையில் சடைமுடியிருக்கக் கண்டார். சடைமுடி கண்டு அரசர் உடல் நடுங்கியது. உள்ளம் பதைபதைத்தார். அவர் கண்களில் நீர் நிறைந்தது. பெரும் பிழை நடந்துவிட்டதாக மனம் வெதும்பினார். அடியார்களின் அன்பிற்குக் கட்டுப்பட்ட புகழ்ச்சோழர் எறிபத்த நாயனாரிடமும், தம் கழுத்தையும் வெட்டுமாறு பணிந்து நின்ற தொண்டர் அல்லவா…?
மன்னர் உள்ளம் உருக அமைச்சர்களிடம், என் ஆட்சியில் சைவ நெறிக்குப் பாதுகாப்பில்லாமற் போய் விட்டதே ! திருமுடியிலே சடை தாங்கிய திருத்தொண்டர் என்னால் கொல்லப்பட்டிருக்கிறாரே!
என் ஐயனுக்கு எவ்வளவு பெரும் பாவத்தைச் செய்து விட்டேன். சைவ நெறியை வளர்க்கும் வாள்வீரர் சிரசைக் கொன்ற நான் கொற்றவன் அன்று; கொடுங்கோலன்.
போரில் உரிய மாலை சூடி
மன்னருக்காக கடமை செய்து முடித்து தலை துண்டாகிக்கிடக்கும் இவர்
கங்கை சூடிய சடையுடைய சிவனின் நெறி தாங்கியவர் ஆயிற்றே. இவரது சிறப்புடைய சடையினைக்கண்டும்
கண்டும் நான் பூமியை ஆளப் போகிறேனா ? இனியும் நான் உலகில் உயிருடன் இருப்பதா? என்றெல்லாம் பலவாறு சொல்லி மனம் புண்பட்டார்.
மன்னர் அரசாட்சியைத் தமது மகனுக்கு அளித்து தீக்குளித்து இறக்கத் துணிந்தார்.தாம் கண்ட சடைத்தலையினை
தங்க மணிகள் பதிக்கப்பட்ட தட்டில் ஏந்திக் கொண்டார்
தனது தலை மீது தாங்கிக் கொண்டு ஒளிர்கின்ற செந்தீயை வலம் வந்தார்
அண்டர்பிரான் திருநாமமான ஐந்தெழுத்தை ஓதிக்கொண்டே
பொற்றாமரைக் குளத்தில் குளிப்பார் போல் உள்ளக்களிப்போடு தீப்பிழம்பினுள்ளே புகுந்தார் மன்னன். மெய்யன்பர்கள் மன்னரின் சிவபக்திக்கு உள்ளம் உருகினர். மன்னரின் பெருமையைப் புகழ்ந்து போற்றினர். மன்னர் தொழுதற்குரிய மகான் என்று கொண்டாடினர்
புகழ்ச்சோழர் தீயுள் புகுந்தபோது தெய்வப்பூமழை
பூமி முழுதும் பொழிந்தது பெரும் மங்கல வாத்தியங்கள்
வானில் முழங்கின அந்திச் செவ்வானம் போன்ற
நீண்ட சடைமுடியார் சிவபெருமானின்
சிலம்பு கொஞ்சும் சேவடியில் பெரும் கருணையின் திருவடி நீழலை அடையும் பெரு வாழ்வைப் பெற்றார் மன்னர் புகழ்ச்சோழர்!
வெற்றி முரசங்கள் பலவும் ஒலிக்கின்ற கடல் போன்ற படையையுடைய முடிகெழுவேந்தர் மூவருள்ளும் முதன்மையரான தேன் பொருந்திய மணம் நிறைந்த மாலைகளைச் சூடிய புகழ்ச்சோழரின் பெருமையைப் போற்றிவரும் குற்றேவல் வகையால், அவர் திருவடிகளை வணங்கி வழிபட்டு, அத்துணையாலே நரசிங்க முனையரைய நாயனாரின் அடிமைப் பண்பையாம் அறிந்த வகையினாலே இனி உரைப்பாம்.
புகழ்ச்சோழ நாயனார் புராணம் முற்றிற்று.
பெயர்:
புகழ்ச்சோழ நாயனார்
குலம்:
அரசர்
பூசை நாள்:
ஆடி கார்த்திகை
அவதாரத் தலம்:
உறையூர்
முக்தித் தலம்:
கருவூர்
ஆதாரம்
- சுந்தரமூர்த்தி நாயனார் தனது திருத்தொண்டத் தொகையின் ஏழாவது பாடலில் 41 ஆவது நாயன்மாறாக இவரை
பின்வருமாறு வரிசைப்படுத்தி உள்ளார்
பொழிற் கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற்கு அடியேன்
- சேக்கிழார் பெருமான் தனது பெரியபுராணத்தின் பாடல் எண் 3942 முதல் 3982 வரை 41 பாடல்கள் பாடியுள்ளார்
திருச்சிற்றம்பலம்
சிவார்ப்பணம்