fbpx

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 42

கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார்

42.நரசிங்க முனையரைய நாயனார்

செங்கோல் நீதிநெறி விளங்கும் குலமரபில் பிறந்து அதன்படி அரசாள்பவரும்
மணிகண்டராகிய சிவபெருமானின் திருநீறு ஒன்றையே பெரும் செல்வமாகக் கொள்வதும்
பெருவளங்கள் எதுவும் தேடி அலையும் நிலையில்லாமால் அவையாவும் தேடி வரும் நிலையையும்
செல்வமிகு திருமுனைப்பாடி நாட்டை ஆளும் மன்னரும்
நாட்டின் காவலருமான
நரசிங்க முனையரையர்” என அழைக்கப்பட்ட அடிகளார் ஒருவர் வாழ்ந்து வந்தார்

முனையர் மரபில் வந்த பெருந்தகை தம் நகரில் இருந்து அரசு புரிந்தார்.பகைவரின் போர்முனைகள் வென்று
தீமைநெறிகள் யாவும் நீக்கப் பெற்றார்

மூன்று முனைகளுடன் நீண்டிருக்கிற இலைவடிவம் உடைய சூலம் பெற்ற முதன்மையான படை கொண்ட இறைவனுக்கு தொண்டு செய்து இறைவன் திருவடி அடைவதே அரும்பேறு” என எக்கணமும் கருதுயவர் முனையரையர்

நரசிங்கமுன்னையரையர் ஒரு நாள் வீதிவலம் வரும் பொழுது வீதியில் தேருருட்டி விளையாடும் நம்பியாரூரரைக் கண்டார். அவர் தம் அழகில் பெரிதும் ஈடுபட்ட அரசர் சடையனாரிடம் சென்று அவரிடம் தாம் கொண்ட நட்புரிமையினால் நம்பியை வளர்த்தற்குத் தருமாறு வேண்டினார். சடையனாரும் அவர் வேண்டுதலுக்கு இணங்கி நம்பியை அளித்தார். நம்பியைப் பெருஞ் செல்வமெனக் கொண்ட நரசிங்கமுனையார் அவரை அரச திருவெலாம் பொருந்த திருமணப் பருவம் அடையும்வரை வளர்த்தார்.

(எனினும் திருத்தொண்டர் திருவந்தாதியில் இவரைப் பற்றிய பாடலில் இக்குறிப்பு இடம் பெறவில்லை. இது கருதியே ஆசிரியர் சேக்கிழார் பெருமானும், இக்குறிப்பினை இவர் வரலாற்றில் கூறவில்லை போலும்!)

கங்கையை அணிந்த சடைமுடியாரை திருவாதிரை நாட்களில் நிந்தியமான பூசைகள் செய்வது மிகவும் சிறப்பானது.ஆகையால் திருவாதுரை பூஜை மிகவும் சிறப்பாக செய்து வந்தார்அவ்வாறு பூஜை செய்யும் திருவாதிரை நாளில் திருநீறு அணிந்து வரும் தொண்டர்கள் எல்லோருக்கும்
இனிய திருவமுதும் உண்ணச் செய்தும் நூறு பசும் பொன்னுக்கும் குறையாமல் தந்து அவர்கள் திருவடி போற்றி வந்தார்

அத்தகைய செயல் புரிந்து வந்த திருவாதிரை நாளில் மேன்மை நெறி மிகுந்த தொண்டர்க்கு
பொன் தந்துக் கொண்டிருக்கும் போது மானநிலை அழியும் தன்மை கொண்ட காமக்குறிகள் வெளியில் தெரியும்படி குற்றம் மிக்க மேனியுடன் ஒருவர் திருநீறு அணிந்து அங்கே வந்து சேர்ந்தார்

அவ்வாறு வந்தவரை அருகிலிருந்தவர்கள் இகழ்ந்து பேசி ஒதுக்கி ஒதுங்கினர்
அதைக்கண்டார் முனையரையர்
வந்தவர் எதிரே சென்று கைகூவித்தார். இன்முகத்தோடு வணங்கி அவரை அழைத்துச் சென்று பாராட்டி உபசரித்தார்

உலகியல் சீலமோ நெறிகளோ அற்றவர்கள் எனினும் திருநீற்றினைச் சேர்ந்தவர்களை உலகினர் இகழாமல் இருக்கவேண்டும்
அப்படி இகழ்வதால் கடுநரகம் அடையாமல் உய்ய வேண்டி வரும் என எண்ணினார் முனையரையர் அங்கு வந்தவர்களுக்குத் தந்ததை விட
இருமடங்காக்கி இருநூறு பொன் தந்தார் இன்சொற்கள் தந்து உபசரித்து விடை கொடுத்து அனுப்பினார்.

இவ்விதமாக திருத்தொண்டின் அரிதான நெறிகள் எல்லா நாளிலும் செம்மையான அன்பால் செயலாற்றி வந்தார்
நச்சுப்பை வளரும் கொடிய பாம்பினை அணிந்த இறைவரின் பாதமலர் நிழல் சேர்ந்தார் மெய்மை கண்ட அன்பினால் வரும் வழியில்
மீளாத நிலையாகிய வீடுபேறு பெற்றார்.

நஞ்சையுடைய பாம்பை அணிந்த சிவபெருமானின் மெய்த்தன்மை பொருந்திய தொண்டு நெறியில் வழுவாது நின்று, அப்பயன் விளைந்த நிலையில் பெருமானின் உடனாக நின்று மகிழும் வாழ்வுடைய நரசிங்கமுனையரையரின் கழல்களை வணங்கிப் பெரிய யானைகள் மதநீரைச் சொரியச் செல்வங்களைப் பொழியும் மரக்கலங்கள் சேரும் கடல்துறைப் பட்டினமான நாகை நகர் வாழ் அதிபத்த நாயனாரின் நியமமான கடமையின் இயல்பைச் சொல்லப் புகுகின்றாம்.

நரசிங்கமுனையரைய நாயனார் புராணம் முற்றிற்று.

பெயர்:
நரசிங்கமுனையரைய நாயனார்
குலம்:
முனையர்
பூசை நாள்:
புரட்டாசி சதயம்
அவதாரத் தலம்:
திருநாவலூர்
முக்தித் தலம்:
திருநாவலூர்

மேற்கோள்கள்

  1. சுந்தரமூர்த்தி நாயனார் தனது திருத்தொண்டத் தொகையின் 7வது பாடலில் 42வது நாயன்மாறாக அடிகளாரை பின்வருமாறு வரிசைப்படுத்தி உள்ளார்

மெய்யடியான் நரசிங்க முனையரையற்கு அடியேன்

  1. சேக்கிழார் பெருமான் தனது பெரிய புராணத்தில் பாடல் எண் 3983 முதல் 3993 வரை 9 பாடல்கள் பாடியுள்ளார்.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram