fbpx

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 43

கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார்

  1. அதிபத்த நாயனார்

தினமும் ஓய்வின்றி நீண்ட காலமாய் வருகின்ற கதிரவனின் மரபு வழியில் வந்த பழமை மிகு குலத்தில் முதன்மை பெற்றது சோழர்களின் குலம். அக்குலத்திற்கு உரிமையுடைய காவிரிநாட்டில் கற்பகப்பூங்கொடியில் மலர்ந்த மலர்போல நன்மைகள் உடையது நாகப்பட்டினம் எனும் நகரம்

நீண்ட தொன்மையுடைய பெரும் புகழுடைய
பதினெட்டு நிலங்களில் உள்ள
நிறைந்த புகழும் அதிக பெருமையும் உடைய பல பொருள்களை தங்கள் உடைமையாக கொண்ட மாந்தர்கள் அங்கே அதிக அளவில் வாழ்ந்து வந்தார்கள்.

யானைகளையும் மணிகளையும் முத்துக்களையும் மயிற்தோகைகளையும் அகில் சந்தனம் மிளகு ஏலம் என இவற்றை வாங்குதற் பொருட்டும் உயர் இன குதிரைகள் கண்கவர் பட்டுத் துகில் இவற்றை விற்பதன் பொருட்டும் எழுந்த ஒலியினால் மகிழ்ந்திருந்தது

வலைகளைக் கடலுக்கு இழுத்துச் செல்வோர்கள் எழுப்பிய ஒலியினாலும் கடலினின்று கரைக்கு ஏற்றிய வெண்ணிறச் சங்குகளையும் சிறந்த மீன்களை விலை கூறி விற்பவர்கள் எழுப்பிய ஒலியினாலும் நிறைந்திருந்தது

இத்தகைய அரும்பெரும் சிறப்புகளை உடைய கடல் நகரமான நாகைப்பட்டினத்தில் கடற்கரையோரத்தில் செழுமையுடன் விளங்கிய மீனவர் குப்பங்களுள் ஒன்று நுளைப்பாடி.அங்கே மீனவப் பெருங்குலத்தில் பிறந்தவர் அதிபத்தர்.

அதிபத்தர் இளமை முதற்கொண்டே சிவபக்தி உடையவராக விளங்கினார்.
நாகையில் ஆலயம் கொண்டு விளங்கும் பெருமானிடம் அளவற்ற அன்பு கொண்டு நாளும் பல நல்லறங்கள் புரிந்தார். தனக்கு விதிக்கப்பட்ட வாழ்கையினின்று வழுவாது நேர்மையுடன் தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைத்தார்.
பல மீனவக் குடும்பங்களுக்குத் தலைவராக விளங்கினார் அதிபத்தர்.

வலை வீசிப் பிடித்த மீன்களைக் குவித்து அவற்றைத் தரம் பிரித்து நாடி வருவோர்க்கு நியாயமாக விற்பனை செய்து நேரிய வழியில் பொருளீட்டி பெருஞ்செல்வத்தினை உடையவராய் அது கொண்டு தன்னைச் சார்ந்தவர் பலரையும் ஆதரித்து அதனால் உயர்ந்தவராய் விளங்கினார்.

நாளும் தன் கூட்டத்தினருடன் கடலோடி வலை வீசி மீன் பிடிக்குங்கால் வலையினில் அகப்படும் முதல் மீனை சிவார்ப்பணம் என்று கடலிலேயே விட்டு விடுவது அவரது பழக்கமாக இருந்தது.
அது சாதாரண மீனாக இருந்தாலும் சரி உயர்தர மீனாக இருந்தாலும் சரி

வலையில் பிடிபடும் மீன்களில் அளவு அதிகமானாலும் குறைந்தாலும் தனது பழக்கத்தில் வழுவாதவராக விளங்கினார் இளமையிலிருந்து இவரைப் பற்றி அறிந்திருந்த உற்றாரும் மற்றோரும் இவரது பக்தியைக் கண்டு வியந்து – நம் குலத்தில் இப்படியோர் மகன் பிறக்க நாம் என்ன தவம் செய்தோமோ என்று மகிழ்ந்திருந்தனர்.

ஒரு கட்டத்தில் இவரது பக்தியை உலகத்திற்கு எடுத்துரைக்க விரும்பிய ஐந்தொழில் நாயகனாகிய எம்பெருமான் தனது விளையாட்டை ஆரம்பித்தார்

அதன் விளைவாக கடலில் அவருக்கு கிடைக்கும் மீன்களின் அளவு குறைய ஆரம்பித்தது.விரிந்து பரந்து விளங்கிய கடலில் நீரோட்டம் உணர்ந்து ஆங்காங்கே சென்று வலைகளை வீசினாலும் ஒற்றை மீன் மட்டுமே கிடைத்தது.

அச்சமயத்தில் அந்த மீனையும் சிவார்ப்பணம் என்று கடலில் விட்டு விட்டு வெறும் கையோடு கரைக்குத் திரும்பும்படி ஆயிற்று. வளங்கொழித்து விளங்கிய மீனவர் குடும்பங்கள் வறுமையில் வாடின. அதிபத்தர் தனது பக்தியை சற்றும் விட்டுக் கொடுக்காதவராகி தனது கைப் பொருளைக் கொண்டு தன்னைச் சார்ந்திருந்த மக்களை வாழவைத்தார்.

இதை அறிந்த ஏனைய குப்பத்தினர் ஏளனஞ்செய்து நகைத்து மகிழ்ந்தனர்.
பல நாட்கள் இப்படியே போயின
உணவு உண்பதையும் மறந்தார் அதிபத்தர்.உடல் வாடியது
அழகிய திருமேனி தளர்ந்து போனபோதும் தன் தொண்டில் குறையாத சீலம் காட்டினார்
மனந்தளராத அதிபத்தர் வழக்கம் போல கடலுக்குச் சென்று வலை வீசினார்.

தினமும் கிடைக்கும் அந்த ஒற்றை மீனும் அன்று அவருக்கு கிடைக்கவில்லை. மாறாக தூய பசும் பொன்னையும்
ஒளியுடைய மணிகளையும்
மீனின் உறுப்புகளாக அமைத்தார் நஞ்சுண்ட கழுத்தினை உடைய எம்பெருமான். உலகங்களே அம்மீனின் விலை என்ன என்று கேட்கும் சிறப்புடைய அற்புதத் தன்மை கொண்ட அந்த மீன் அதிபத்தர் வீசிய வலையில்
அகப்படச் செய்தார் எம்பெருமான்

வலையில் சிக்கிய அம்மீன் ஓங்கு செஞ்சுடர் கொண்ட கதிரவன்தான் வலையில் உதித்தானோ என உலகம் வியக்கும்படி
பெரிய பேரொளியுடன்
தழைத்து காணப்பட்டது. சிக்கிய மீன் அதைக் கண்டதும் பல நாள் பஞ்சத்தில் தவித்திருந்த மீனவர்கள் இன்றுடன் நம் கவலைகள் எல்லாம் தீர்ந்தன என ஆனந்தம் கொண்டனர்.

இந்த மீனுக்கு ஈடாக இவ்வுலகில் யாதொன்றும் இல்லை என அந்தப் பொன் மீனைக் கையிலேந்தி மகிழ்ந்தார் அதிபத்தர் .
இப்பொன்மீன் எம்மை ஆளுடைய நாயகனின் பொற்கழல் சேர்க என்று அதனை கடலில் விடுதற்கு முனைந்தார். உடனிருந்த மீனவர்கள், வறுமையால் தளர்ந்திருக்கும் வேளையில் இதனைக் கடலில் விட வேண்டாம் எனக் கூறித் தடுத்தனர். ஆனால் சிவம் எனும் செம்மையில் ஒன்றியிருந்த அதிபத்தர் சிவார்ப்பணம் என்று சொல்லி, அந்தத் தங்க மீனைக் கடலில் விட்டு விட்டார்

அகில உலகங்களும் பொருளையே முதலாக கொண்டுள்ளது. அப்படிப்பட்ட வலிமையான பொருள் ஆசையை பொன் ஆசையை தூரத்தில் எறிந்த ஒப்பிலாத மெய்த்திருத்தொண்டரின் முன்
விடை மீது மேகம் தவழும் வானில் அம்மையுடன் எம்பெருமான் எழுந்தருளினார். அப்போது தேவர்கள் கற்பகப்பூ மழை பொழிந்தனர் ஐந்து வகை வாத்தியங்களும் ஒலித்தன
அதிபத்தர் தனது கரங்களைத் தலைமீது குவித்து வணங்கி நின்றார்

அதிபத்தரை சிவலோகம் அடைவித்து அழகிய தம் திரும்பாத நிழலில் சிறப்புடைய அடியார்களுடன்
இருக்கச்செய்தார் நஞ்சுண்ட கழுத்தினை உடைய இறைவன்

மீன்பிடிக்கும் தம் மரபிற்கு ஏற்றவாறே, தகுதியான பெருந் திருத்தொண்டை உண்மையில் தவறாது செய்து அருள் பெற்ற அதிபத்த நாயனாரின் விளக்கம் செய்யும் திருவடிகளை வணங்கி, இனி உலகங்கள் மூன்றும் முறையாகப் போற்றுகின்ற செம்மையும் நீதியும் உடைய கலிக்கம்ப நாயனாரின் திருத்தொண்டைக் கூறுவோம்

அதிபத்த நாயனார் புராணம் முற்றிற்று

பெயர்:
அதிபத்த நாயனார்
குலம்:
பரதவர்
பூசை நாள்:
ஆவணி ஆயில்யம்
அவதாரத் தலம்:
திருநாகை
முக்தித் தலம்:
திருநாகை

மேற்கோள்கள்

  1. சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையின் 7வது பாடலில் 43வது நாயன்மாராக அதிபத்தரை பின்வருமாறு வரிசை படுத்தி உள்ளார்

விரதிரை சூழ் கடல்நாகை அதிபத்தற்கு அடியேன்

  1. சேக்கிழார் பெருமான் தனது பெரிய புராணத்தில் பாடல் எண் 3992 முதல் 4011 வரை 20 பாடல்கள் பாடியுள்ளார்

திருச்சிற்றம்பலம்
சிவார்ப்பணம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram