
கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார்
6.விறன்மிண்ட நாயனார்
மணங்கமழ் கொன்றை மாலையும் சடையும் உடைய
சிவபெருமானின் திருவடிகள் வணங்கித் பெரும் தவம் செய்த பரசுராமன் எனும் முனிவனைப் பெற்ற நாடு.அலை கடலில் உண்டாகும் வளங்களும்
நிலத்தினால் உண்டாகும் வளங்களும் ஒரு சேரப் பெருகி மிகுகின்ற மலைநாடு.
வாரிச் சொரியும் கடல் முத்தும்
வயல் மென் கரும்பில் விளைகின்ற முத்தும்
மூங்கிலில் விளையும் குளிர் முத்தும்
பெண்களின் வெண் முத்து போன்ற
நகைக்கும் பல் வரிசைகள் கொண்ட ஊர்
சேர நாட்டிலேயே சிறந்த பழமையான திருச்செங்குன்றூர்.
ஆராய்ந்த மறையின்படி நெறி தவறாமல் நடக்கின்ற
தூய குடியில் விளங்கும் நிலைத்த குலத்தின்மாமறைநூல் மரபில் வந்த பெரியோர் வாழும் ஊர் அவ்வூராகும்.அத்திருநகரில் வேளாண் குலத்தில் விறன்மிண்ட நாயனார் அவதரித்தார். விறலும் மிண்டும் திருவருள் நெறியில் இவருக்கு இருந்தமையால் விறன்மிண்டர் எனப்பெற்றார்
அளவிட்டு சொல்லமுடியாத சிறப்பினை உடைய சிவபெருமானது திருவடிகளை பற்றி ஏனைய பற்றுக்களை அறவே களைந்தவர் . முடிவில்லா அன்புடையவர் உண்மையான அடியார்களிடம் திண்மையான அன்பு பூண்டவர் தணியாத காதலுடன் ஐந்தெழுத்தை ஓதி திருநீறும் கண்டிகையும் பூண்டு சிவபக்தி செய்து வருவார். நதியும் மதியும் சூடிய பெருமான் விரும்பி அமர்ந்திருக்கும் பதிகள் தோறும் சென்றுவழிபடுவார் .அவ்வாறு வழி படும் போது சிவனடியார் திருக்கூட்டத்தை முதலில் தொழுது பின்னே பரமேசுவரனைத் தொழுவார்
மலைநாட்டைகடந்து ஏனைய நாடுகளில் சென்று அங்குள்ள திருக்கூட்டத்தினரைத் தொழுதும்சிவாலயங்களைச் சேவித்தும் விரிசடை விமலர் வாழும் திருவாரூரை அடைந்து பணிந்து புகழ்ந்து போற்றினார்
சிவலோகம் போல் திகழும் தேவாசிரியன் மண்டபத்தில் அடியார் திருக்கூட்டத்தை பணிந்து அக்கூட்டத்தில் தாமும் ஒருவராக விறன்மிண்டர் இருந்தார்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் நாள்தோறும் பூங்கோயில் சென்று புற்றிடங்கொண்ட திருமூலநாதரை வழிபடும் நியதி கொண்டவர் அதன்படி அன்று திருக்கோயில் உட்புகுந்து செல்லும்போது தேவாசிரியன் மண்டபத்தில் குழுமியிருக்கும் திருக்கூட்டத்தினரைப்பார்த்து இத்திருத் தொண்டர்கட்கு என்னை அடியேனாகச் செய்யும் நாள் எந்நாளோ? என்று மனதளவில் சிந்தித்து விட்டு அவர்களை வணங்காமல் நேரே கோயிலினுட் புகுந்தார் அதுகண்ட விறன்மிண்டர், அடியார்கள் திருக்கூட்டத்தை அடைந்து தொழுது உட்செல்லாது ஒருவாறு ஒதுங்கிபோவது என்ன முறை என்று வெகுண்டார்.இவன் திருக்கூட்டத்தாரை வழிபடாது கோயிலுட் செல்கின்றாதானதால் இந்த அடியார் கூட்டத்திலிருந்து அவனை தள்ளி வைக்கிறேன் (பிறகு) என்று கூறினார். விறண்மிண்டர் நாயனாருக்கு சுந்தரமூர்த்தி நாயனாரை பற்றி ஏதும் அறியாதவர் அவர் மலை நாட்டைச் சார்ந்தவர். உடனே அங்கிருந்தவர்கள் அனைவரும் பதற்றம் கொண்டு விறன்மிண்ட நாயனாரிடம் இவர் சுந்தரமூர்த்தி நாயனார் என்றும் இவர் எம்பெருமானின் தோழன் என்றும் கூறுகிறார்கள்.ஆனால் அவற்றையெல்லாம் சற்றும் யோசிக்காமல் அப்படி இறைவன் இவனை ஆட்கொள்வான் என்றால் அவனையும் இந்த அடியார் கூட்டத்திலிருந்து தள்ளி வைக்கிறேன் என்று கூறினார். விறன்மிண்டரது அடியார் பக்தித் திறத்தை மெச்சிய சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவாரூர்க் கோயிலுட் புகுந்து தியாகராசப் பெருமானைக் கும்பிட்டு நிற்கும்போது “அடியேன் இவ்வடியார்க்கெல்லாம் அடியானாகும் நாள் எது என்று” வேண்டுதல் செய்தார்.பின்பு எம்பெருமான் அவர்களே சென்று அடைவாயாக என்று கூறியவுடன் நெடும் தொலைவிலிருந்தே சுந்தரமூர்த்தி நாயனார் அடியார்களை வணங்கிக் கொண்டே வருகிறார்.அடியார்கள் முன்பு வந்து மொத்தமாக கூறாமல் தனித்தனியாக அடியாருக்கும் அடியார் என்று கூறுகிறார் அப்பொழுது பெருமான் “நாம் அடியாருடன் உளோம்; அடியாரைப்பாடு என்றருளி “தில்லைவாழந்தணர்” என அடியெடுத்துக் கொடுத்தார்.
பின்பு சுந்தரமூர்த்தி நாயனார் தில்லைவாழ் அந்தணர்க்கு அடியேன் திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் என்ற தேசமெல்லாம் உய்வதற்கு காரணமானதும், சைவநெறியின் சீலம் விளங்கச் செய்வதுமான திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத்தை பாடினார். இதுவே திருத்தொண்டர் புராணம் பெரியபுராணம் எல்லாவற்றுக்கும் மூலமாகும். (இதை மையமாக வைத்தே சேக்கிழார் பெருமான் நாயன்மார்கள் வரலாற்றை உருவாக்கினார்)இதுகண்டு விறன்மிண்ட நாயனார் ஆனந்தம் அடைந்தார்
இது போன்றே பலகாலம் இவ்வுலகில் சைவத்தின் தன்மை காத்துக் கொண்டு
சைவ நெறி போற்றி வாழ்ந்த விறன்மிண்டர் எம்பெருமான் திருவடியை அடைந்து அவரின் கணநாயகர் ஆனார்.
( கணநாயகர் -சிவகணங்களின் தலைவர் )
வேறு பலவும் சொல்லி என்ன பயன் ?
திருத்தொண்டத்தகையால் உலகம் விளங்கி
பெரும் பேற்றுக்குக் காரணரான விறன்மிண்டர்
பெருமை கூறும் சொல்திறம்
என் சொல் ஆற்றலுள் அடங்குமோ
அவர்தம் திருவடி வணங்கி
பழையாறை வணிகரான
அமர்நீதி நாயனார் திருத்தொண்டின் இயல்பு சொல்வோம்.
(விறன்மிண்ட நாயனார் புராணம் முற்றிற்று )
பெயர்:
விறன்மிண்ட நாயனார்
குலம்:
வேளாளர்
பூசை நாள்:
சித்திரை திருவாதிரை
அவதாரத் தலம்:
செங்கண்ணூர்
முக்தித் தலம்:
ஆரூர்/வண்டாம்பாளை
மேற்கோள்கள்:
- சுந்தரமூர்த்தி நாயனார் தனது திருத்தொண்டத் தொகையின் முதலாவது பாடலில் ஆறாவது நாயன்மாறாக விறன்மிண்ட நாயனாரை பின்வருமாறு வரிசை படுத்தி உள்ளார்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
2.சேக்கிழார் பெருமான் தனது பெரிய புராணத்தில் பாடல் எண்
491 முதல் 501 வரை மொத்தம் 11 பாடல்கள் பாடியுள்ளார்
திருச்சிற்றம்பலம்
சிவார்பணம்