fbpx

தினம் ஒரு நாயன்மார்கள் வரலாறு – தொடர் 2

கட்டுரை ஆசிரியர் சுரேஷ்குமார்

2.திருநீலகண்ட நாயனார்

இறைவன் களிநடனம் புரியும், தில்லைப்பதியிலே குயவர் குடியிலே – பிறந்தவர்தான் திருநீலகண்டர் என்பவர்.இவர் பொன்னம்பலத்து ஆடுகின்ற அம்பலக் கூத்தரின் திருவடிகளிலே மிகுந்த பக்தி கொண்டவர். அதுபோலவே, சிவன் அடியார்களிடத்து எல்லையில்லா அன்பும், பக்தியும் உடையவர். பொய் வாழ்க்கையை ஒழித்து, மெய் வாழ்க்கை வாழ்பவர். அறவழியில் வழுவாது நிற்பவர். எம்பெருமானை திருநீலகண்டம் என்று எந்நேரமும் இடையறாது நெஞ்சம் உருகப் போற்றி வந்த காரணத்தால் இச்சிவனடியாரை திருநீலகண்டர் என்ற காரணப் பெயரிட்டு யாவரும் அழைத்து வரலாயினர்

இப்பெரியார், தம் மரபின் ஒழுக்கப்படி ஓடுகளைச் செய்து அடியார்க்கு வழங்கும் சிறந்த தொண்டினை மேற்கொண்டிருந்தார். திருநீலகண்டரின் மனைவியும் கணவனுக்கு ஏற்ற கற்புடைச் செல்வியாய் வாழ்ந்து வந்தாள். இவ்வாறு அவர்கள் வாழ்ந்துவரும் நாளில், ஊழ்வினைப் பயனால், குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. அவரது பக்தி உள்ளம் ஒரே ஒருமுறை தவறான பாதைக்குச் சென்றது. பொன்னம்பலவாணரின் பக்தனாக இருந்த நீலகண்டர் சிற்றின்பத்தில் மிகடும் விருப்பம் கொண்டவரானார். பரத்தையின்பால் பற்று கொள்ளவும் தவறினாரில்லை. இதை அறிந்த அவரது மனைவி மனம் வருந்தினாள். அவள் கணவரிடம் கோபம் கொண்டாள். நீலகண்டர் ஏதும் புரியாது திகைத்தார். கூடல் இன்பம் பெருகவே ஊடல் கொள்கிறாள் மனைவி என்றெண்ணினார் நீலகண்டர். ஒருநாள் இரவு நீலகண்டர், மனைவியின் ஊடலை நீக்கி கூடச் சென்றார். மனைவி பொறுமை இழுந்தாள். ஐயனே! இனி எம்மை தீண்டுவீராயின் திருநீலகண்டம் என்று கூறித் திருநீலகண்டத்தின் மீதே ஆணையிட்டு, தம்மை தீண்டக் கூடாது என்று கூறிவிட்டாள். நீலகண்டத்தையே உயிராகவும், உணர்வாகவும் கொண்டிருந்த அடியார் என்றுமில்லாமல் மனைவி, இவ்வாறு ஆணையிட்டுக் கூறியதைக் கேட்டு உளம்பதறி, நிலை தடுமாறித் திடுக்கிட்டுப் போனார். தலைவியின் சொல்லிலுள்ள பொருளைச் சற்றே எண்ணிப் பார்க்கலானர். எம்மை என்றதனால் மற்றை மாதர் தமையும் என்றன் மனதிலும் தீண்டேன் என்று சிவனார் மீது ஆணையிட்டார் நீலகண்டர். அன்று முதல் தீருநீலகண்டர் தனது மனைவியைப் பிற மகளிரைப் பார்ப்பது போலவே பார்க்கலானர். முற்றும் துறந்த முனிவரைப் போல ஐம்புலனையும் அடக்கி வாழலானார். நீலகண்டர் வாழ்ந்து வந்த வீடு மிகச் சிறிய வீடுதான். அந்த வீட்டிற்குள் இருவரும் கட்டுப்பாடோடு வாழ்ந்து வந்தனர். இப்படியாக ஆண்டுகள் பல உருண்டன. நீலகண்டரும், அவரது மனைவியாரும் முதுமைப் பருவத்தை எய்தினர். சிவபெருமான், நீலகண்டரின் பெருமையையும் திறத்தையும் உலகிற்கு உணர்த்தத் திருவுள்ளங் கொண்டார். அதற்காக தமது கோலத்தை மாற்றிக் கொண்டார். பக்தனிடம் திருவிளையாடலைத் தொடங்கினார். சத்தியம், ஞானம், ஆனந்தம் ஆகியவற்றின் தூயவடிவான வேணியர்பிரான் ஓர் சாது போல் வேடமணிந்தார். பிரம்மன், திருமால், இந்திரன் போன்ற தேவாதி தேவர்கள், தனக்குக் குற்றவேல் புரியும் அடிமைகளாகக் கொண்ட சிவபெருமான், திருவோடு தூக்கி தெருவோடு நடந்துவந்து நீலகண்டரின் சிறுவீட்டை வந்து அடைந்தார். நீலகண்டரும் அவரது மனைவியும் பெருமானை வரவேற்று உபசரித்து முறைப்படி வழிபட்டனர். நீலகண்டர் பெருமானிடம், சுவாமி ! இவ்வடியேன்யாது பணி செய்தல் வேண்டும் ? என்று பயபக்தியுடன் வினாவினார். எம்பெருமான் தன் கையிலிருந்த திருவோட்டைக் காண்பித்தவாறு, நீலகண்டா ! இத் திருஓட்டின் அப்படி இப்படி என்று சொல்ல முடியாது. விலை மதிப்பிட முடியாதது. கற்பகத் தரு போன்றது, பொன்னும், மணியும், தங்கமும், வைரமும் கூட இதற்கு ஈடு இணையாகாது. இத்தகைய அபார சக்தி வாய்ந்த இத் திருவோடடை உன்னிடம் ஒப்படைத்து விட்டுப் போகிறேன். திரும்பி வந்து கேட்கும்போது தருவாயாக என்று கூறினார். திருவோட்டினை நீலகண்டரிடம் கொடுத்தார். நீலகண்டர் பணிவோடு திருவோடுதனைப் பெற்று சுவாமி ! உங்கள் சித்தம் என் பாக்கியம் என்று கூறினார். திருஓட்டை பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்தார். சிவயோகியரும் தில்லை மன்றை அடைந்து சில காலம் தங்கி பின்னர் ஓர் நாள் நாயனாரைக் காண முன்போல் வந்தார். திருநீலகண்டர் அடியாரை வரவேற்று, பாத கமலங்களைத் தூய நீரால் கழுவி, நறுமலர் தூவி ஆசனத்தில் அமரச் செய்தார். சிவனடியார் நீலகண்டரிடம் திருவோட்டைத் தருமாறு கேட்டார். திருநீலகண்டர் விரைந்து சென்று திருவோட்டைப் பாதுகாப்பாக வைத்திருந்த இடத்தில் போய் பார்த்தபோது அங்கு அதனைக் காணாது கலக்கமுற்றார். திருநீலகண்டர் மனைவியிடம் ஓட்டைச் காணவில்லையே என்றார். ஓட்டை அந்த இடத்தில் பாதுகாப்பாக வைத்தது இருவருக்குமே நல்ல ஞாபகத்தில் இருந்தது. அப்படி இருக்க எப்படி காணாமற் போகும். இருவரும் நிலை தடுமாறினர்.

சிவயோகியார் உள்ளே நின்ற அடியார் கேட்கும்படி, “நொடிப் பொழுதில் வருவேன் என்று போன நீ ஏன் இவ்வளவு நேரம் தாழ்ந்து நிற்கின்றாய்” என்று கேட்க
கரிய கண்டம் மறைத்து வந்திருந்த துறவியாரைக் கைத் தொழுது சொல்லலானார்,
இழைகளால் ஆன முந்நூல் எனும் பூணூல் மார்புடைய எம்தந்தை போன்றவரே.நீர் தந்து போன விரும்பத்தக்க ஓடு வைத்த இடத்திலும் வேறு இடத்திலும் தேடினேன் காணாமல் போனது பழையது ; மற்ற நல்ல பாத்திரம் தருவேன் பெற்றுக் கொள்வீர் பிழையினைப் பொறுக்க வேண்டும் பெருமானே என இறைஞ்சி நின்றார்

தலை வணங்கி நின்ற தொண்டரைக் கோபிப்பதுபோல் பார்த்து என்ன சொன்னாய் ! நான் வைத்த மண் ஓடு தவிர பொன்னினால் அமைத்துத் தந்தாய் ஆயினும் பெற்றுக் கொள்ளமாட்டேன்.
உன்னால் பாதுகாப்பாக வைக்கப்பட்ட முன்பு நான் வைத்த ஓடே கொண்டுவா “ என்றார் சிவயோகி

என்பால் வைத்த ஓடு காணேன்
எங்கு தேடியும் காணேன் , மிக நீண்டகாலம் பயன்படுமாறு வேறு ஒன்று தருகிறேன் எனச் சொல்லியும் ஏற்காமல் சினந்து உரைத்த உரை என் உணர்வெல்லாம் ஒழித்து விட்டது
என்றார் தொண்டர்.

“இனி உன்னால் ஆகக் கூடியது என்ன ! உன்னிடம் வைத்த அடைக்கலப் பொருளைக் களவிட்டு
வஞ்சனை பலவும் செய்து பழிக்கு வெட்காதவன் ஆனாய்.அனைவரும் காணும்படி உன்னை வளைத்து நான் ஓட்டைப் பெறாமல் போக மாட்டேன் என்றார்
புண்ணியத்தின் பொருளாய் நின்ற இறைவன்.

“வளம் மிக்க உம் ஓடு நான் திருடவில்லை செயலிலும் உளத்திலும் எண்ணம் புலப்படுத்த
இனி நான் என்ன செய்ய இயலும் என்று கூறுவீராக என்று வேண்டி நின்றார் திருநீலகண்டர்
கண்டத்தில் நஞ்சு ஒளித்த இறைவன் ஆசைக்குரிய உன் மகனைக் கைப்பிடித்து
குளத்தினில் மூழ்கிச் சத்தியம் செய்” என்றார்

ஐயா நீர் அருளிய வண்ணம் நான் செய்வதற்கு சிறப்புடைய மகன் இல்லை! என்ன செய்வேன் புகல்வீர்” என்றதும் குற்றமிலாச் சிறப்புமிக்க உன் மனைவியைப் பற்றிக் கொண்டு நிறைவான பூக்கள்மிக்க குளத்தினுள் மூழ்கி எழு என மொழிந்தார் துறவியார்
கங்கை ஒளிந்திருக்க சடையை மறைத்தருளி எதிர்நின்ற
கொடிய கண் உடைய காளையை வாகனமாக உடைய இறைவர்
இவ்வாறு உரைத்ததும்
“எங்களுக்குள் ஓர் சபதத்தால் உடன் மூழ்குதல் பொருந்தாது
பொங்கு புனலில் நான் தனித்து மூழ்கி சத்தியம் செய்துத் தருகிறேன் வாரும் என்றார் நீலகண்டர்.

“முன் தந்ததை நீ தராமல் வைத்துக் கொண்டமையாலும் உன் மனைவியின் அழகிய தளிர் செங்கையைப் பற்றி புனலில் மூழ்கி சத்தியம் தராமலும்
நீ திரும்பவும் பொய்யுரைத்து கொண்டே இருக்கிறாய்
இனி நான் தில்லைவாழ் அந்தணர்கள் கூடிய பேரவையில் வழக்குரைப்பேன்” எனச் சென்றார்.

நல்லொழுக்கம் தலை நின்ற
நான்கு வேதத்தின் எல்லை நின்ற
தில்லைவாழ் அந்தணர்கள் வந்திருந்த திருத்தமான சபையில்
எல்லையிலா இறைவர் முன் செல்ல பெருந்தொண்டர் நீலகண்டரும் பசுவின் பின் செல்லும் கன்று போல் தொடர்ந்து சென்றார்

அந்தணராக வந்த பெருமான்
தில்லைவாழ் அந்தணர்முன்
இக் குயவனிடம் நான் தந்த பாத்திரத்தை தொலைத்து விட்டதாக கூறுகிறான்
உண்மையில் தொலைத்திருந்தால்-
மனைவி கரம் பற்றி குளம் மூழ்கி சத்தியம் செய்து தா என்று கூறினாலும் மறுக்கிறான் என்றார்

மணம் கமழும் சடை முடியும்
நான்கு தோள்களும் முக்கண்ணும்
நீலகண்டமும் மறைத்து அருள் செய்து எதிரே வெளிப்பட்டு நின்ற வேதியரான இறைவர் சொன்னதும்
“நற்பண்புடைய குயவரே நிகழ்ந்ததைக் கூறுக”என்றனர் தில்லைவாழ் அந்தணர்கள்.

“பூணூலை அணியென அணிந்த மார்பரே இது பெருஞ்செல்வம்!” எனச்சொல்லி இவர் தந்த திருவோடு பேணி வைத்த இடத்திலிருந்து பெயர்ந்து மறைந்தது எவ்வாறோ காணவில்லை என்றார்
தொலைவிலும் தீமை நெருங்க முடியாத திருநீலகண்டர்.

“திருநீறு பூசிய கோலம் கொண்ட இவ்வேதியர் தந்த ஓட்டை காணாமல் போக்கிய நீர் கூறுவதை
ஒப்புக் கொள்ள வேணுமெனில்
அவர் கேட்டவாறு மனைவியுடன்
நீவீர் மூழ்குதல் தான் சிறந்த நீதி என்று தில்லைவாழ் அந்தணர்கள் கூறினார்கள்

அரிய தவமுடைய தொண்டரும்
அந்தணர் கூறிய தீர்ப்பு கேட்டுத்
மனைவியாரை தீண்டா நிலையைச் கூற இயலாதவராக
வழக்கில் வென்றபெருந்தவ முனிவரைப் பார்த்து
“பொருத்தமானபடி நான் மூழ்கித் தருகிறேன் வருவீராக”
எனத் தன் இல்லம் சென்றார்

இல்லத்திலுள்ள மனைவியைத் தம்முடன் அழைத்துக்கொண்டு
மறைச் சிவயோகியார் முன்
காளை ஊர்தியினரான சிவபெருமான் மேவும்
திருப்புலிச்சுரம் எனும் ஆலயத்தின் முன்னர் மலர்ச் சோலை சூழ்ந்த குளம் அடைந்து உண்மை காக்க
அழகிய மூங்கில் தண்டின் இருமுனைகள் பிடித்துப் புகுந்தார் குளத்து நீரில்.

தண்டின் இரு பக்கமும் பற்றி முழுகப்போகும் அவர்களை நோக்கி வெண்திருநீற்றை திரிபுரண்டரமாய் அணிந்த வேதியர் “மனைவியைத் தீண்டிக் கொண்டு உடன் மூழ்கித் தருக “ என்றார்.எவ்வகையிலும் குற்றமிலாத் தொண்டர் உலகம் அறியுமாறு தன் மனைவியைத் தீண்டி மூழ்க இயலா நிலை சொல்லி மூழ்கினார்.
நீர்நிலையில் மூழ்கிக் கரையேறும் கணவரும் மனைவியாரும்
முதுமை நீங்கி விருப்பம் தரும் இளமை பெற்றுத் தேவரும் முனிவரும் சிறப்புடன் பொழியும் தெய்வப்பூவின் மாமழையில் மேலும் மூழ்குவார் போலத் தோன்றினார்.அந்நிலையில் நின்ற அவ்விருவரைக் காணும் அதிசயம் கண்டார் உலகத்தார்
“தம்முன் நின்ற வேத முதல்வரைக் காணவில்லை வான்வெளியில் தன் துணை உமையுடன் காளையூர்தியில் தோன்றினார் இறைவன் கண்களால் கண்டவர்கள் அனைவரும்
கைகளால் தொழுதனர்
அன்பர் பெருமையில் காதல் கொண்டு தேவர்களும் தோன்றினார்கள்

“ஐம்புலனை வென்று விளங்குவோரே …என்றும் இந்த இளமை நீங்கா நிலையுடன் எம்முடன் விருப்பால் இருப்பீராக”
என்று அம்பலத்துள்ளே திருக்கூத்து ஆடி
அடியவர்கள் இல்லம் தோறும் சென்று அவர்தம் உண்மை நிலைகாட்டும் தேவர்களின் தேவரான இறைவர் அருளினார்
வல்லமையுடைய தொண்டரும்
வெண்பற்களும் சிவந்த வாயும்
மென் தோளும் கருமணல் போன்ற கூந்தல் உடைய மனைவியாரும்
அருளால் நிறைந்த அரிய செய்கை செய்து அன்றே எய்தினார் சிவலோகம்

பெற அரிய இளமை பெற்று
அன்றே பேரின்பம் உற்றார்
அயலார் யாரும் அறியாத வண்ணம் இறைவரது ஆணையைப் பாதுகாத்தவரும்
உலக மயக்கம் தவிர்த்தவருமான திருநீலகண்ட நாயனாரை
யான் அறிந்த வகையால் வாழ்த்தி
மேகம் தவழும் அளவு உயர்மாடம் கொண்ட பூம்புகார் நகரில் வாழ்ந்த
பொய்மையிலாச் செயல் கொண்ட இயற்பகை நாயனார் திருத்தொண்டு கூறத் தொடங்குகிறேன்.

பெயர்:திருநீலகண்ட நாயனார்
குலம்:குயவர்
பூசை நாள்:தை விசாகம்
அவதாரத் தலம்:தில்லை
முக்தித் தலம்:தில்லைப்புலீச்சரம்

மூலம்:சுந்தரமூர்த்தி நாயனார் தனது திருத்தொண்டத் தொகையின் முதல் பாடலில் தனி அடியார்களில் முதலாவதாகவும் மொத்த வரிசையில் இரண்டாவதாகவும் திருநீலகண்ட நாயனாரை பின்வருமாறு வரிசைப்படுத்தி உள்ளார்

திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்

  1. சேக்கிழார் பெருமான் தனதுபெரியபுராணத்தின் பாடல் எண் 360 முதல் 403 வரை மொத்தம் 44 பாடல்கள் பாடியுள்ளார்

திருச்சிற்றம்பலம்
சிவார்ப்பணம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram