fbpx

அரங்கனை காதலித்த ஆண்டாள்

துளசி செடியின் அடியில் அவதாரம் எடுத்தவருக்கு கோதை என்று பெயர் சூட்டி பெரியாழ்வார் வளர்த்து வந்தார். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக வளர்ந்த கோதைக்கு அரங்கனின் மீது பக்தியும், காதலும் அதிகரித்தது.

பல பாசுரங்களையும், திருமொழி நூல்களையும் பரந்தாமன் மீது பாடினார். இதற்கிடையில் பக்தி தீவிர காதலாக மாறியது. கண்ணனை தன் மணாளனாகவே நினைத்து கனவிலேயே காதல் செய்து வந்தாள். ஒரு கட்டத்தில் அரங்கனையே மணப்பதாக உறுதியும் பூண்டாள்.

தினமும் மாலை கட்டி பெருமாளுக்கு சாற்றுவது பெரியாழ்வாரின் வழக்கம். ஒருநாள் கோதை தன் மனதிற்கு பிடித்தவர் அணியப்போகும் மாலையாயிற்றே இது.

நான் அணிந்துவிட்டு கொடுத்தால் என்ன? என்று நினைத்து மாலையை அணிந்துகொண்டு அழகு பார்த்தாள். பிறகு தந்தைக்கு பயந்து, எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டாள்.

ஒருநாள், பெரியாழ்வார் பெருமாளுக்கான மாலையை கோதை சூடிக்கொண்டிருப்பதை பார்த்து பதறிவிட்டார். ஆண்டவனுக்காக தொடுத்த மாலையை சூடலாமா? என்று கடிந்துகொண்டார்.

வேறொரு மாலை தொடுத்து பெருமாளுக்கு சாற்றினார். அன்று இரவு பெரியாழ்வார் கனவில் அரங்கன் தோன்றி, கோதை என் மீது மிகுந்த பிரியமும், பக்தியும் வைத்திருக்கிறாள். அவள் சூடிக் கொடுத்த மாலையை தினமும் மிகுந்த அன்புடன் ஏற்று வந்தேன். இன்று என்னவாயிற்று? என்று கேட்கிறார்.

பரந்தாமனே இப்படி கேட்டதில் பெரியாழ்வாருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். கோதையின் பக்தியை உணர்ந்தார்.

பகவானின் உள்ளத்தையே ஆண்ட கோதையை அன்று முதல் ஆண்டாள் என்ற திருநாமம் வைத்தே பெரியாழ்வார் அழைத்தார். பெருமாளின் விருப்பத்திற்கு ஏற்ப, அவள் சூடிக் கொடுக்கும் மாலையையே பெருமாளுக்கு சாற்றி வந்தார்.

பகவானின் மீது ஆண்டாள் வைத்திருக்கும் அன்பும், காதலும் மேலும் அதிகரித்து வந்தது. அரங்கனையே மணம் முடிக்க திருவுள்ளம் கொண்டாள் ஆண்டாள். தந்தையிடம் இதை கூறியபோது, பெருமாள் மீது பக்தி, அன்பு, பாசம் வைக்கலாம்.

அவரை காதலிப்பதும், மணம் முடிப்பதும் சாத்தியமா? என்று கேட்டு கோபம் கொண்டார். ஆனால் ஆண்டாளோ அரங்கன்தான் என் மணாளன். அதில் மாற்றம் இல்லை என்று உறுதியாக கூறினார்.

மறுநாள் பெரியாழ்வார் கனவில் மீண்டும் அரங்கன் தோன்றுகிறார். ஆண்டாளின் விருப்பப்படியே திருவரங்கத்திற்கு அழைத்து வா! என்று சொல்லி மறைந்தார். என்ன செய்வதென்று தெரியாமல் தயக்கத்துடன் ஆண்டாளுடன் ஸ்ரீரங்கம் வந்தடைந்தார்.

வந்திருப்பது பெரியாழ்வாரும், ஆண்டாளும் என்று தெரிந்துகொண்டதும் வேத விற்பன்னர்களும் கோவில் முக்கியஸ்தர்களும் ஓடோடி வந்து வரவேற்று வணங்குகிறார்கள்.

தன்னை மணந்துக்கொள்ள சாட்சாத் மகாலட்சுமியே வருவதாக எங்கள் கனவில் அரங்கநாத பெருமான் நேற்று சொன்னார். மகாலட்சுமியை வரவேற்கத்தான் திரண்டிருக்கிறோம். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியை பெருமாள் திருமணம் செய்து கொள்வதாக கூறியிருப்பதால் கல்யாண வைபவத்திற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்திருக்கிறோம் என்கிறார்கள்.

அரங்கனின் திருவுள்ளத்தை எண்ணி மெய்சிலிர்க்கிறார் பெரியாழ்வார். அன்பும், காதலும் பெருக்கிட ரங்கநாதா…! என்று கூறியபடியே கருவறைக்குள் ஓடுகிறாள் ஆண்டாள். அங்கேயே ஆண்டவனுடன் ஐக்கியம் ஆகிறாள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram