fbpx

இந்தப் பரமபதத்தின் இரகசியம் தான் என்ன…!

மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று சாதாரண மக்களும் அறிந்துணர்வதற்காகப் பரமபதத்தைக் காட்டுவார்கள்.

இந்த வாழ்க்கையில் மனிதனானபின் மிருகத்திலிருந்து நாம் எப்படி மனித நிலைக்கு வந்தோம்…? மனிதனானபின் எப்படிப் பரமபதம் அடைவது…? என்று சிந்தித்துச் செயல்படும் நிலைக்குத்தான் பரமபதத்தின் படத்தைப் போட்டு அங்கே காட்டி இருப்பார்கள்.

பரமபதத்தில் நாம் தாயத்தை உருட்டுகின்றோம். உருட்டிக் கொண்டு போனவுடனே

1.முதலில் சிறு பாம்பு கடிக்கும். அது கடித்த பின் மீண்டும் கீழே கொண்டு போய் விட்டுவிடும்.

2.இதிலிருந்து தப்பித்து மேலே சென்றவுடன் அதை விடப் பெரிய பாம்பு கடித்தவுடன் மேலே இருந்து கீழே வந்து விடுகின்றோம்.

3.இப்படி அதையெல்லாம் தப்பித்து மேலே போகும் போது அதை விடப் பெரிய பாம்பு கடிக்கிறது. மீண்டும் “திரும்பத் திரும்ப வந்து…!” பல சுழற்சிகள் ஆகி நாம் மேலே போகின்றோம்.

4.இன்னும் இரண்டே கட்டம்…! எல்லாவற்றையும் விடப் பெரிய பாம்பு அங்கே இருக்கின்றது.

5.பயத்தால் உருட்டிய உடனே தாயம் விழுந்துவிடும். மீண்டும் அந்த விஷமான நிலைகள் பட்டவுடனே “ஜர்ர்ர்…” என்று கீழே இங்கே பன்றிக்குள் கொண்டு வந்து நம்மை விட்டுவிடும்.

6.ஆகவே கீழ் நிலைக்குக் கொண்டு வந்து மிக மோசமான சரீரங்களை எடுக்கும் நிலையை அது மீண்டும் உருவாக்கி விடுகின்றது.

7.வாழ்க்கையில் நடக்கும் இத்தகைய பேருண்மைகளை நமக்கு நினைவுபடுத்தும் நாள் தான் ஏகாதசி.

பரமபதத்தை அடைய வேண்டும் என்றால் விருப்பு வெறுப்பு என்ற நிலை இல்லாதபடி ஒளியின் சரீரமாக நாம் பெற்று அந்த மெய் ஒளியின் எண்ணத்துடன் செல்வது தான் ஏகாதசி என்பது.

அன்றைய நாளில் சொர்க்கவாசல் என்று கோவில்களை எல்லாம் திறந்து வைப்பார்கள். நமக்கு இதைக் கதையாகச் சொல்லி ஏதோ பேருக்கு சொர்க்க வாசல் வழியாகச் சென்று சாமியைக் கும்பிட்டோம்… போனோம்… வந்தோம்… இராத்திரியெலாம் விழித்திருந்தோம்…

இரவு பரமபதம் விளையாடினோம் என்ற எண்ணம் தான் இருக்கும். (இன்று உள்ள சிலருக்கு இந்தப் பரமபதம் படம் என்றால் கூட என்ன…! என்று தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை)

இந்தப் பரமபதத்தின் இரகசியம் தான் என்ன…!

நம் வாழ்க்கையில் எல்லாம் நல்லதைச் செய்வோம். அதே சமயம் நம்மை அறியாதபடி வேதனை என்ற நிலைகள் வரப்படும் போது அந்த விஷமான நிலைகள் “கொத்தப்பட்டு…!” நம் உடலுக்குள் நோய்களாகி விடுகின்றது.

நோயாகி விட்டால் இந்த மனிதச் சரீரத்தை இழந்து மீண்டும் இழி நிலையான சரீரத்தைப் பெற்று விடுகின்றோம்.

1.அதிலிருந்து மீண்டு மீண்டும் மனிதனாக வளர்ச்சியாகி பல கோடி சரீரங்களைப் பெற்று…

2.மீண்டும் இழந்து மீண்டும் வளர்ச்சி பெற்று…

3.இப்படியே இழந்து இழந்து… இன்று நாம் இந்தச் சுற்றிலேயே தான் இருக்கின்றோமே தவிர

4.மெய் வழியின் தன்மையை அடையும் தன்மை (பரமபதத்தை) இல்லாது நாம் இருக்கின்றோம்.

5.அந்த மெய் வழி செல்வதற்கு என்ன வழி…? என்ற நிலையைத்தான் அன்று மெய் ஞானிகள் பரமபதத்தின் மூலம் உணர்த்தினார்கள்.

பரமபதம் அடைவது என்றால்…

1.பரிணாம வளர்ச்சியில் கீழான உயிரினங்களிலிருந்து அடுக்கடுக்காகச் சென்று
2.மனித நிலைகள் பெற்று மனித நிலைகளிலிருந்து
3.உயிரை ஒளியாக மாற்றி உச்சியிலே செல்லும் போது தான்
4.அதாவது இந்த உடலை விட்டு (வெளியிலே) விண்ணிலே சென்று ஒளியாக நிற்க கூடிய நிலையைப் பரமபதமாகக் காட்டி
5.அதற்குகந்த நாளாக நாம் ஏகாதசியைக் காட்டினார்கள் ஞானிகள்.

நம் குருநாதர் சரீரத்தை விட்டு ஒளியாகச் சென்ற நந்நாள் வைகுண்ட ஏகாதசி (1971வது வருடம்). அவருடைய ஆத்மா வெளியே சென்ற பின் என்னை (ஞானகுரு) இயக்கியதும் பேசச் செய்ததும் பல உண்மையினுடைய நிலைகளை உணர்வதற்குண்டான நிலைகளையும் செய்தது.

சூட்சம நிலைகள் கொண்ட அவரின் தொடர் வழியே தான் 12 வருட காலம் பல அனுபவங்களைப் பெற்றேன். அவர் ஒளி முன் செல்ல… அவரைப் பின் தொடர்ந்து நான் சென்று… அவர் காட்டிய அந்த அருள் நெறிகளை அறிந்துணர முடிந்தது.

மனிதனுக்குள் இயக்கும் ஒவ்வொரு உணர்வின் தன்மையையும் உறுப்புகளின் இயக்கத்தையும் காட்டி மெய் உணர்வைப் பெறும் மார்க்கமாக சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடிய ஆற்றல் மிக்க சக்திகளை எவ்வாறு பெற வேண்டும்..? என்று குருநாதர் எனக்கு அருளியது மார்கழி மாதம் தான்.

அதே போல மெய் வழி காணும் அந்த ஆற்றலை நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் என்ற ஆசையில் தான் இதை உங்களுக்குள் உணர்த்துகின்றோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram