fbpx

எலும்புகளின் நண்பன்

நாற்பது வயதை எட்டிய பெண்களுக்கு குறிப்பாக எடை கூடுதலாக இருக்கிற பெண்களுக்கு மூட்டுகளில் வலி ஏற்படுவது இயல்பு. மூட்டுவலிக்கு காரணமாக இருப்பது எலும்புத் தேய்மானமே ஆகும். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கிற காலங்களில் உடலில் இருக்கிற ஹார்மோன்களில் மாற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக எலும்பு தேய்ந்து வரும். இதுபோலவே போதுமான அளவு சூரியக்கதிர் படாமல் அலுவலகத்திற்கு உள்ளேயே அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும் எலும்பு தேய்மானம் கொஞ்சம் வேகமாகவே வரும்.

போதுமான சூரியன் இல்லாது தோல் எப்படி வைட்டமின் டி-யை உற்பத்தி செய்ய முடியாதோ அது போலவே உடலுக்குத் தேவையான எலும்பின் பலமும் சூரிய ஒளி இல்லாமல் குறைந்துபோகும். மேலை நாடுகளில் குறிப்பாக குளிர் பிரதேசங்களில் குளிர்காலங்களில் வாழ்கிறவர்களுக்கு சூரிய ஒளி இல்லாது மனச்சோர்வு ஏற்படுவது போலவே எலும்புகளுக்கும் போதுமான அளவு வலு இல்லாமல் இருக்கும்.

வயது முதிர்ந்தவர்களுக்கு இயற்கையாகவே எலும்பு தேய்மானம் ஏற்பட்டு கால் எலும்புகள் வளைந்து இருப்பதும் அது தானாகவே கீழே விழுந்தால் கூட எலும்பு முறிவு ஏற்படுவதும் சகஜம். விளையாட்டு வீரர்களுக்கு குறிப்பாக ஓடுதல், கால்பந்து, ஹாக்கி ஆகிய விளையாட்டுகள் மேற்கொள்பவர்களுக்கு எலும்புகளில் இருக்கிற தசையும் மூட்டையும் சேர்த்து கட்டுகின்ற இணைப்பு தசை(Tendon), இரண்டு எலும்புகளை சேர்த்து கட்டுகிற தசைநார்(Ligament) பகுதிகளிலும் தேய்மானம், வறட்சி ஏற்பட்டு காயம் ஏற்படுவதும், கிழிந்து போவது இயல்பு.

இப்படி பல்வேறு காரணிகளால் மூட்டுகளில் பாதிப்பு ஏற்படுகிற போதும் எலும்பு தேய்மானம் ஏற்படுகிறபோது ஏற்படுகிற வீக்கம், வலி ஆகியவற்றை குறைப்பதற்கு மிக முக்கியமான ஒரு தாவரம் பிரண்டை. இந்த வறண்ட நில தாவரம் வஜ்ஜிரவல்லி என்றும் சொல்லப்படுகிறது.

எலும்பு தேய்மானத்தை குறைப்பதிலும் முதுமை வராமல் தடுப்பதிலும் பிரண்டை பெரிய பங்காற்றுகிறது. முறிந்த எலும்புகள் சீக்கிரம் சேர்ப்பதற்கும், விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படுகிற மூட்டு வலிகளை சரி செய்வதற்கும், Ligament tear என்று சொல்கிற கிழிந்து போகிற தசை நார்களை ஒன்று சேர்ப்பதற்கும் பிரண்டை மிகவும் உதவியாக இருக்கும்.அதனால்தான் வைரத்தை போன்ற ஒரு பலத்தை எலும்புகளுக்கு கொடுக்கிற காரணத்தினால் இது வஜ்ஜிரவல்லி என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. இதன் சமஸ்கிருதப் பெயர் அஸ்தி சங்கிரகம். இது எலும்புகளை ஒன்று சேர்ப்பது என்பதைக் குறிக்கும். வறண்ட நிலங்களிலும் வேலி ஓரங்களிலும் தானாகவே வளரக்கூடிய ஒரு பயிராக இருந்தாலும் கூட இன்றைக்கு அதனுடைய முக்கியத்துவம் மிகவும் அதிகம். இந்தியாவில் மட்டுமல்லாமல் ஆப்பிரிக்காவிலும் தாய்லாந்திலும் கூட பிரண்டையை முக்கியமான ஒரு மருந்து பொருளாகவே கருதுகிறார்கள்.

பொதுவாக அப்பளம் தயாரிக்கிற போது அதில் பிரண்டையை இடித்து, அதன் சாற்றைச் சேர்த்து, மாவைப் பிசைந்து உளுந்து மாவுடன் சேர்ந்து அப்பளம் செய்வார்கள். இதற்குக் காரணம் உளுந்து தசைகளுக்கு வலிமையையும் பிரண்டை எலும்புகளுக்கு வலிமை தரும் என்பதனால்தான். பிரண்டையுடைய தண்டு, நான்கு பக்கங்கள் உரியதாக இருக்கும். இந்த தண்டுகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்த கணுக்களில் கால்சியம் ஆக்சலேட் என்று சொல்லப்படுகிற ஒரு வேதிப்பொருள் காணப்படும். இதன் காரணமாகத்தான் மிகவும் முதிர்ந்த பிரண்டையை கையாளுகிறபோது கைகளில் ஒரு அரிப்பு ஏற்படுவதும் அதைக் கொண்டு நாம் உணவும் மருந்தும் செய்து சாப்பிடுகின்ற போது வாயில் ஒரு அரிப்பும் ஏற்படும்.

எனவே, பிரண்டையை பயன்படுத்துகிறபோது மெல்லிய இளம் தண்டுகள் மட்டுமே சேகரிக்க வேண்டும். அப்படி சேகரிக்கும் போதும் அதனுடைய கணுவை நீக்க வேண்டும். அப்படி இல்லாமல் வியாபார நோக்கில் இன்று தயாரிக்கப்படுகிற பிரண்டைத் துவையல், பிரண்டை ஊறுகாய், பிரண்டை பொடி ஆகியவற்றில் தண்டுகள் முதிர்ந்த தண்டுகளாக இருந்து அதனுடைய கணு நீக்காமல் பயன்படுத்துகிறபோது அதில் நிற்கிற சுண்ணாம்பு காரணமாக சிறுநீர் கற்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. உண்கிறபோது வாய் அரிப்பு ஏற்படுவதும் அதனால்தான்.

இதனை மறைப்பதற்காக வியாபார ரீதியாக தயாரிக்கப்படுகிற பொருட்களில் புளியின் அளவு சற்று அதிகமாக இருக்கும். ஆனால், பித்தத்தை அதிகப்படுத்தும் என்ற காரணத்தினால் மிக அதிக அளவு புளி இல்லாமல் எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து மல்லித்தழை சேர்த்து அரைத்து உணவில் சேர்த்துக்கொள்வது சிறப்பாக இருக்கும். பிரண்டையில் மேற்கண்ட இந்த கால்சியம் ஆக்ஸலேட் கற்களைக் குறைப்பதற்காகத்தான், அதனைத் துண்டுதுண்டுகளாக்கி மோரில் ஊற வைத்து வெயிலில் வைக்கிறோம். பிறகு பிரண்டை வற்றலாக மாறிய பிறகு, அதற்குப் பின்னர் பிரண்டை வடகம், பிரண்டை துவையல் செய்து நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

நம்முடைய இந்த பாரம்பரிய அறிவு இன்றைக்கு அதன் பக்கவிளைவுகளை குறைப்பதற்கு மிக உதவியாக இருக்கிறது என்பதையும் நமக்கு உணர்த்துகிறது. மூன்று பக்கம் உடைய முப்பிரண்டை, பட்ட பிரண்டை புளிப்பிரண்டை எனப் பல்வேறு வகைகளில் இருந்தாலும்கூட பொதுவாக நான்கு பக்கங்களில் உடைய பிரண்டையைத்தான் நாம் மருந்துக்கு பயன்படுத்துகிறோம்.

பிரண்டை, இஞ்சி, கறிவேப்பிலை, மிளகு ஆகியவற்றுடன் எலுமிச்சம் பழச்சாறு அல்லது புளியையோ சேர்த்து அதனுடன் இந்துப்பு சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டு வெயிலில் வைக்க வேண்டும். இதனை வாரம் 2 நாட்களாக, ஆறு வாரங்கள் குறைந்தபட்சம் 2 கிராம் அல்லது 3 கிராம் அளவில் உட்கொண்டு வந்தால் 6 வாரங்களுக்குப் பின்னர் எலும்பின் வீக்கமும் வலியும் குறைந்து நன்றாக நடக்க உதவியாயிருக்கும்.

எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் பண்பும், வளர்சிதை மாற்றம் எனும் பண்பும் பிரண்டைக்கு உள்ளது. எனவே, போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் உயரம் இல்லாமல் இருக்கிற குழந்தைகளுக்கும் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றாலும் போதுமான சூரிய வெப்பம் இல்லாத குழந்தைகளுக்கு சூரிய வெப்பம் கொண்டு எலும்பின் திறன் வளர வேண்டும் என்றாலும் பிரண்டையை கொடுத்து வருதல் நல்லது.

பிரண்டையை தினமும் துவையலாகச் செய்து சாப்பிடும்போது 2 முதல் 3 கிராம் அளவு பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கின்ற போது ஒரு கிராம் அளவு கொடுக்க வேண்டும். ஏனென்றால் எல்லா மருந்துகளுக்கும் அளவு என்ற வரைமுறை இருக்கிறது. மிக அதிகமான அளவு கொடுத்தால் சிறுநீர் கற்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே சிறுநீரக நோயாளிகளுக்கு பிரண்டையை கையாளும்போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram