fbpx

நம்ம உடம்பு நமக்கு பாரமா?

உணர்வது எப்போது :

எப்ப வெளியே போனாலும் ஒரு ஐம்பது அல்லது அறுபது கிலோ மூட்டையை தூக்கிக் கொண்டுதான் போக வேண்டும் என்று சொன்னால் எப்படி இருக்கும்? கல்யாண வீட்டுக்குப் போனாலும், காய் கறி வாங்கப் போனாலும், அலுவலகம் போனாலும், கோவிலுக்குப் போனாலும் அந்த மூட்டையை சுமந்து கொண்டுதான் போக வேண்டும்.

முடியுமா?

ஆனால் , செய்கிறோமே. இந்த உடம்பை தூக்கிக் கொண்ண்டுதானே போகிறோம். எங்கு போனாலும், இந்த உடம்பை தூக்கிக் கொண்டு தான் போக வேண்டி இருக்கிறது. விட்டு விட்டுப் போக முடியுமா?

நம்ம உடம்பு நமக்கு பாரமா? என்று கேட்கலாம்.

நாம் வெகு தூரம் நடப்பது இல்லை. எனவே தெரிவது இல்லை. பத்து கிலோ மீட்டர் நடந்து பாருங்கள் தெரியும், இந்த உடம்பு பாரமா இல்லையா என்று. பத்து மாடி ஏறிப் பாருங்கள் தெரியும். இந்த உடம்பை தூக்கிக் கொண்டு ஏற முடியாது என்று. மூச்சு வாங்கும். நின்று விடுவோம்.

இந்த உடம்பு ஒரு நாள் படுத்து விடும். இதை வைத்து எதாவது நல்லது செய்யலாம். நல்லவற்றை அறிந்து கொள்ளலாம். அறிந்தவற்றை பகிர்ந்து கொள்ளலாம். நாலு நல்ல வார்த்தை பேசலாம். ஏதாவது உருப்படியாக செய்யலாம். அதை விடுத்து சும்மா இந்த உடம்பை தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருக்கிறோம்.

ஒரு நாள், இந்த உடம்பை தீ கொள்ளும், அல்லது நிலம் கொள்ளும்.

சுந்தரர் பெருமான் சொல்கிறார்

“இந்த உடம்பை சுமந்து கொண்டு திரிந்து துன்பப் படுகிறீர்கள். ஒரு நாள், இந்த உடம்பை புதைத்து விடுவார்கள். புதைத்த உடம்பை நரி தோண்டி எடுத்து கீறி தின்னும். அது உங்களுக்குத் தெரியுமா? தெரியாது. கூற்றுவன் ஒரு நாள் வருவான். அவன் வரும் போது அடடா நல்லது செய்யாமல் காலத்தை போக்கி விட்டோமே என்று வருந்தினால், செய்ய நினைத்த நல்ல காரியங்களை செய்திருந்தால் வரும் பலன் கிட்டாமல் போய் விடும். இருக்கிற போதே, வாழ் நாளின் குறைவை எண்ணி நல்லதை செய்யுங்கள். பசித்தவர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நல்ல நீரோடு, உணவு அளித்து, அவர்கள் மனம் மகிழும் படி பேசி இருப்பவர்கள் வணங்கும் கேதாரம் என்ற திருத் தலத்தில் உள்ள ஈசனை வழி படுங்கள் “

பாடல்

பறியேசுமந் துழல்வீர்பறி நரிகீறுவ தறியீர்

குறிகூவிய கூற்றங்கொளு நாளால் அறம் உளவே

அறிவானிலும் அறிவான்நல நறுநீரொடு சோறு

கிறிபேசிநின் றிடுவார்தொழு கேதாரமெ னீரே

பொருள்

பறியேசுமந் துழல்வீர் = பறி என்றால் உடம்பு. உடம்பை சுமந்து கொண்டு துன்பப் படுவீர்கள்

பறி = இந்த உடம்பை

நரிகீறுவ தறியீர் = நரி தனது கூரிய நகங்களால் கீறுவதை அரிய மாட்டீர்கள்

குறி = குறித்த நாளில்

கூவிய = கூவிக் கொண்டு வந்து

கூற்றங்கொளு நாளால் = கூற்றுவன் உங்கள் உயிரை கொண்டும் செல்லும் நாளில்

அறம் உளவே = அறம் உங்களுக்கு உளவாகுமா ? ஆகாது. செய்தால் தானே பலன் கிட்டும்.

அறிவானிலும் அறிவான் = அறிந்து கொள்ளக் கூடியவர்களில் ஒருவராக

நல நறுநீரொடு சோறு = நல்ல நறுமணம் மிக்க நீரோடு, சோறும் தந்து

கிறிபேசி = அவர்கள் மனம் மகிழும் படி பேசி

நின் றிடுவார் = இருப்பவர்கள்

தொழு = தொழும் , வணங்கும்

கேதாரமெ னீரே = கேதாரம் என்று சொல்லுங்கள்.

திருவாசகத்தில், திரு அம்மாணையில் , மணிவாசகர் பாடுவார்

கேட்டாயோ தோழி “கிறி” செய்த வாறொருவன்

தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்

காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டி

தாள்தா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி

நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த

ஆட்டான்கொண் டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய் ..

கிறி செய்தவாறு ஒருவன் = மனதை மயக்கும் படி பேசி ஒருவன். சிற்றின்பத்தின் உச்சம் தொட்டுக் காட்டிய பாடல் இது. ஒரு பெண் முதன் முதலாக ஒரு ஆடவனின் அருகாமை உணரும் பாடல்.

மாவலியிடம், அவன் மனம் மயங்கும் படி பேசி மூன்றடி நிலம் பெற்ற அந்தத் திருமாலை அல்லால் என் மனம் வேறு ஒன்றையும் போற்றாதே என்கிறது பிரபந்தம்.

சுருங்குறி வெண்ணை தொடுவுண்ட கள்வனை, வையமுற்றும்

ஒருங்குர வுண்ட பெருவயிற் றாளனை, மாவலிமாட்டு

இருங்குறள் ஆகி இசையவோர் மூவடி வேண்டிச்சென்ற

பெருங்”கிறி” யானையல் லால்,அடி யேன்நெஞ்சம் பேணலதே

இதில் உள்ள இறுதி இரண்டு சொற்கள் “நெஞ்சம் பேணலதே” . நெஞ்சம் பேணாது. நெஞ்சம் போற்றாது என்று பொருள்.

பேணுதல், போற்றுதல்.

தந்தை தாய் பேண். தாய் தந்தையரை போற்று.

பெண் என்ற சொல் பேண் என்ற சொல்லில் இருந்து பிறந்தது.

போற்றப் படுபவள், போற்றப் பட வேண்டியவள் என்ற அர்த்தத்தில்.

சுந்தரர் பிரான் நாமம் வளர்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram