கஜசம்ஹாரமூர்த்தி:
யானைரூபமாகத்தோற்றிய கஜாசுரன் என்பவன் பிரம்மதேவனை நோக்கித் தவஞ்செய்து தேவர்களையெல்லாம் வென்று ஜெயம்பெற வேண்டுமென்கிற வரங்கேட்டான். பிரம்மதேவன் அப்படியே வரங்கொடுத்துப், பரமசிவனெதிரில் போகாதே, போனால் இந்த வரமழிந்துபோமென்று சொல்லக் கேட்டுக்கொண்டு போனவன், தேவேந்திரன் முதலானவர்களுடன் யுத்தஞ்செய்து வென்று திரியும்போது, முனிவர்கள் கண்டுபயந்து ஓடிக் காசி சேர்ந்தார்கள். அங்குமவர்களைத் தொடர்ந்து சென்றான். அவர்கள் கண்டு பயந்து மணிகர் நிகையென்னும் ஆலயத்துக்குப் போய்ப் பரமசிவனைச் சரணாகதியடைந்தார்கள்.
கஜாசுரனுக்குக் காலமுடிவு நேரிட்டதனால் பிரம்மதேவன் சொன்னதை மறந்து அங்குஞ் சென்று முனிவர்களைக் கொல்லவேண்டுமென்று உறுமுகிறபோது சுவாமி கோபத்துடன் உக்கிரமூர்த்தியாய்க் கஜாசுரன் மத்தகத்தைமிதித்து உடலைக் கிழித்துத் தோலையுரித்துப் போர்த்தருளினார்.
இதனால், இறைவனின் திருநாமம் கஜசம்ஹாரமூர்த்தி என வழங்கலாயிற்று.