fbpx

பேரானந்த நிலை… தெய்வீக நிலை

உலக சக்தி என்பதைத் தனித்து எதனைச் செப்புவது…?

இன்றைய உலகமே பிம்பத்தைத்தான் உலகமாகக் காண்கின்றது. எப்பிம்பமும் நிலைத்த பிம்பமல்ல.
1.இன்றைய பிம்பம் மாறிவிட்டால் காற்றுதான் (ஆவி)
2.அன்றைய காற்று இன்றைய பிம்பம்.

காற்றில் தான் அனைத்தும் உள்ளன. நீரும் காற்றுத்தான் நெருப்பும் காற்று தான்.

1.அனைத்து பிம்பமும் காற்று தான்.
2.காற்றே தான் கடவுள்
3.அக்காற்றிலிருந்து ஜீவன் கொண்ட அனைத்துமே கடவுள்தான்.

பால்வெளி மண்டலத்தைக் காற்றாய்க் காண்கின்றோம். அப்பால்வெளி மண்டலத்தில் இருந்துதான் ஆதவனாய் உள்ள சூரியனும் பிறந்தான். பூமித்தாயும் வளர்ந்தாள். மற்ற அனைத்துக் கோளங்களுமே பிறந்து… வளர்ந்து… வாழ்கின்றன.

இந்தப் பால்வெளி மண்டலத்தில் காற்றில் கலந்துள்ள அமிலமே நீராயும் நெருப்பாயும் ஒன்றை ஒன்று பற்றியே சுழன்று கொண்டு உள்ளது.

1.இவ்வமிலமே திடமாகி… அத்திடத்தில் இக்காற்று பட்டு
2.அதை ஈர்த்து அது வெளிப்படுத்தி… அந்நிலையிலேயே வளர்ந்து
3.ஒன்றுடன் ஒன்று மோதுண்டு மோதுண்டு ஒன்றின் அமிலம் மற்றொன்றில் கலந்து
4.அது ஈர்த்து சமைத்து வெளிக்கக்கும் அமிலம் மற்றொரு கலவையுடன் சேர்ந்து… அவை எடுத்து அவை வெளிப்படுத்தி
5.இப்படியே மோதுண்டு மோதுண்டு… ஒன்று உண்டு அதன் கழிவு வெளிப்பட்டு
6.அக்கழிவு அதன் இனமுடன் சேர்ந்து அவை உண்டு அவை சமைத்து வெளிப்படுத்தும் அமிலம் படர்ந்தே
7.ஒன்றுடன் ஒன்று மோதுண்டு மோதுண்டு ஜீவன் கொண்டு
8.ஒன்றிலிருந்து ஒன்று வெளிப்பட்டு மண்டலமாய் உருப்பெற்று
9.அம்மண்டலம் எடுக்கும் உணவு (சுவாசத்தை) கொண்டு அதன் சக்தி நிலை வளர்ந்து
10.அது வெளிப்படுத்தும் அமிலத்திலிருந்து பல நிலை பெற்று
11.பால்வெளி மண்டலத்தை… இக்காற்று மண்டலத்தை… மையமாய்க் கொண்டு சுழலுவது தான்
12.அனைத்து மண்டலங்களும்… நாமும்… எல்லாமுமே…!

ஆவிதானப்பா அனைத்துமே…!

ஆவியான இக்காற்றில் நிறைந்துள்ள அமில சக்தியைக் கொண்டு நம் ஆத்மாவிற்கு உகந்த அமில சக்தியை நாம் பிரித்தெடுத்து உயர்ந்த ஞான நிலைபெறும் பக்குவ அமிலத்தை உணரும் சக்தி பெறல் வேண்டும்.

இயற்கையில் வளர்ந்திடும் தாவரங்களெல்லாம் தனக்குகந்த அமிலத்தையே ஈர்த்து வளரும் பக்குவ நிலை உள்ள பொழுது நாமும் அனைத்துமே ஆவிதான்.

நாமும் ஆவிதான் நம் உடலில் உள்ள அனைத்துமே ஆவிதான் என்பதனை உணர்ந்து நமக்குகந்த ஆவி அமிலத்தை எண்ணத்திலேயே ஒரு நிலை கொண்டிடும் பக்குவ நிலைப்படுத்திட வேண்டும்.

1.பக்குவத்திய முறையில் ஞானத்தின் வழித்தொடர் பெற்று
2.ஆவியாய்ப் பிரியப் போகும் பிம்பத்தை பேராசைப் பொருளாய் எண்ணிடாமல்
3.அனைத்தும் ஆவிதான் என்பதனை உணர்ந்து ஒவ்வோர் உடல் கொண்டு வாழ்ந்து பல எண்ணத்தை ஈர்த்து
4.பல கோடி ஆண்டுகளுக்கு ஜீவன் கொண்ட பல பிம்ப உடல்களை ஏற்று ஏற்று (பிறவிக் கடனாக)
5.நம் ஆத்மாவைப் பெரும் இன்னல் படுத்திடாமல் உயர் ஞானம் பெறும் நல்லுபதேசம் பெற்று
6.சித்தாதி சித்தர்களும்… ஞானாதி ஞானியர்களும்… சத்திய ஞானம் பெற்ற சப்தரிஷிகளும் இக்காற்றில்தான் கலந்துள்ளார்கள் என்ற எண்ணம் கொண்டு இவ்வுண்மையை உணர்ந்து
7.ஆண்டவனுக்கு மத வேறுபாடு இல்லை…. எவ்வாண்டவனை வணங்கினாலும் ஒன்றே என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு
8.உம்மின் அன்பை ஆண்டவனாய் ஒருநிலைப்படுத்தி
9.உம் எண்ணத்தில் ஆண்டவனாய் வரித்துள்ளவரையே ஆண்டவனாக்கி உம் எண்ணத்தில் செயல்படுத்தி…
10.நீவிர் எடுக்கும் சுவாசமெல்லாம் உம் உயிர் ஆத்மாவின் அமில வட்டத்தில் ஞானத்தின் சக்தித் தொடரை ஈர்க்கும் பக்குவ நிலை பெறல் வேண்டும்.

ஞானத்தின் வழித்தொடர் பெற்று விட்டால் நம் எண்ணமும் செயலும் ஞானமாகி அதன் தொடர்பிலேயே பல நிலைகளை நாமும் உணர்ந்திடலாம்.

இத்தொடரின் வழியினால் நம் ஆத்மா நம் நிலையில் அக்காற்றுடன் காற்றாய் செயல் கொள்ளும் பக்குவத்தை நம் எண்ணத்தினால்தான் செயல்படுத்திட முடியும்.

உயிரணுவாய்த் தோன்றிய நிலையிலேயே ஈர்க்கும் நிலைப்படுத்தி அவ்வுயிரணு தோன்றிச் சேமித்துச் சேமித்துப் பழக்கப்படுத்தி பல நிலைகளை ஈர்த்த பின் மனித ஆத்மாவாகப் பல நாள் சேமிப்பின் அமிலத்தை வளர்த்துக் கொண்டுள்ள நிலையில்
1.தன் ஆத்மாவைக் காற்றுடன் கலக்கவிடும் பக்குவத்தை உணர்ந்து செயல்படுத்தினால்
2.ஞானம் என்ன…? சித்தென்ன…? சப்தரிஷிதான் என்ன…? சகலத்திலும் சகலமாய் உள்ள அவ் ஆதி சக்தியுடனே ஒன்றிடலாம்.

“பேரானந்த நிலை… தெய்வீக நிலை…!” என்பதெல்லாம் இன்று வாழ்க்கையில் நாம் காணும் இந்த மாயக் கனவு வாழ்க்கையில் இல்லை…! என்பதனை நாம் ஒவ்வொருவரும் உணரல் வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram