சொர்க்க வாழ்வை தரும் வைகுண்ட ஏகாதசி…!
மார்கழி மாதம் வந்த உடனே நம் மனதைக் குளிர வைக்க வரும் விரதம் வைகுண்ட ஏகாதசி விரதம் ஆகும். வைகுண்ட ஏகாதசி என்றதும் பரமபத வாசல் என்று சொல்லப்படும் சொர்க்கவாசல் நினைவுக்கு வரும். வைகுண்ட ஏகாதசி நாளில் விரதமிருந்து பெருமாளைத் தரிசித்து, பரமபத வாசலை அடைந்தால், நம் ஏழு ஜென்ம பாவமெல்லாம் விலகும். நாளை 25ம் தேதி வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா. இப்பெருவிழாவில் விரதமிருந்து பெருமாளை தரிசித்தால், முக்தி நிச்சயம். இப்பிறவியில் உள்ள சகல பிரச்சனைகளையும் தீர்த்தருளுவார் பெருமாள்.
வைகுண்ட ஏகாதசி பிறந்த கதை :
🌟 தேவர்களையும், முனிவர்களையும் முரன் என்ற அசுரன் துன்புறுத்தி வந்தான். அவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். முரனுடன் விஷ்ணு போரிட்டு வெற்றி பெற்றார். பிறகு ஒரு குகைக்கு சென்று ஓய்வெடுத்து கொண்டிருந்தார்.
🌟 அப்போது முரன் பெருமாளைக் கொல்ல வாளை ஓங்கியபோது, விஷ்ணு தன் உடலிலுள்ள சக்தியை ஒரு பெண் வடிவத்தில் தோற்றுவித்தார். அவள் முரனுடன் போரிட்டு வென்றாள்.
🌟 அசுரனை வென்ற பெண்ணுக்கு ஏகாதசி என்று அரங்கன் பெயர் சூட்டினார். அசுரனை வென்ற நாள் ஏகாதசி என அழைக்கப்படும் என்றும், அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண்டப் பதவி அளிப்பதாகவும் வரமளித்தார். அந்த தினமே வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
சொர்க்கவாசல் பிறந்த கதை :
🌟 ஆழ்ந்த உறக்கத்தில் விஷ்ணுபகவான் இருந்தபோது, அவருடைய இரு காதிலிருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தார்கள். இந்த அசுர சகோதரர்களை அடக்கி நம்மை காத்தருளக்கூடியவர் விஷ்ணுபகவான் ஒருவரே என்ற முடிவில் தேவர்கள் முறையிட, பெருமாள் அசுர சகோதரர்களுடன் போர் புரிந்தார். விஷ்ணுவிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள்.
🌟 பகவானே… தங்களின் சக்தியால் உருவான எங்களுக்கு நீங்கள் தான் கருணை காட்ட வேண்டும் என்று கேட்டு வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தை பெற்றார்கள். இந்த அசுர சகோதரர்கள், தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று எண்ணி பெருமாளிடம் வேண்டினார்கள்.
🌟 பெருமானே… தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது, தங்களை தரிசிப்பவர்களுக்கும், அவர்கள் செய்த பாவங்கள் யாவும் நீங்கி, அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் அசுர சகோதரர்கள்.
🌟 அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நாளை வைகுண்ட ஏகாதசி திருநாளில் சொர்க்கவாசல் வழியாக பெருமாளை தரிசித்து பாவங்கள் நீங்கி, பெருமாளின் அருளை பெறுவோம்…!!