திரிலோசனதாசர் பொற்கொல்லர் இனத்தைச் சார்ந்தவர்.தனது தொழிலில் மிகவும் நேர்மையானவர்.இறை பக்தி மிக்கவர்.பாண்டுரங்கனிடம் அளவு கடந்த பிரேமையும் பக்தியும் கொண்டவர்.
இவர் இயற்றியுள்ள பக்திப் பாடல்க்ள் சீக்கிய கிரந்தத்தில் இடம் பெற்றுள்ளன.இவர் வாழ்ந்த காலம் மன்னராட்சி காலம்.இவர் மன்னரின் அரண்மைனைப் பொற்கொல்லராக இருந்தார்.
மன்னரின் மகளுக்குத் திருமணம் நடக்கவிருந்தது.மகளுக்கான ஹாரத்தை திரிலோசனதாசர்தான் செய்ய வேண்டுமென மன்னன் விரும்பினான்.
பொன் மற்றும் நவ ரத்தினக் கற்களை திரிலோசனரிடம் கொடுத்து நான்கு நாட்களுக்குள் நகை செய்து தரவேண்டும் எனக் கட்டளையிட்டான் மன்னன்.
அது ஒன்று பெரிய விஷயமில்லை செய்து கொடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் திரிலோசனரும் சம்மதித்தார்.
ஆனால் இவர் அரண்மனையிலிருந்து வீடுவந்து சேர்ந்தவுடன் இவர் வீட்டிற்கு பஜனை கோஷ்டி ஒன்று வந்து இரண்டு நாட்கள் தங்கியிருந்து திரிலோசனாருடன் பஜனை செய்ய விரும்புவதாகச் சொன்னபோது மிகவும் மகிழ்ந்து போனார் திரிலோசனார்.
பாண்டுரங்கனையல்லவா பாடவேண்டும்? அதைவிட மகிழ்ச்சி தரும் விஷயம் ஏதும் உண்டா என்ன அவருக்கு?இரண்டு நாட்கள் அவரின் வீடு பாண்டுரங்கன் பஜனையால் கோலாகலமாய் இருந்தது.பஜனை கோஷ்டி விடை பெற்றுச் சென்றது.
அதன் பின்னர்தான் இவருக்கு ஹாரம் செய்ய வேண்டுமென்ற நினைவு வந்தது.நவரத்தினம் பதித்த ஹாரம் செய்யும் வேலையில் இறங்கினார்.அந் நகையைச் செய்வது அவ்வளவு எளிதாய் இல்லை
.நான்கு நாள் கெடுவில் ஏற்கனவே பஜனையில் இரண்டு நாட்கள் கழிந்து விட்டதால் மீதமிருந்த இரண்டு நாளில் என்ன முயன்றும் திரிலோசனதாசரால் ஹாரத்தைச் செய்ய முடியவில்லை.
மன்னரின் ஆட்கள் நான்கு நாட்கள் முடிந்து விட்ட நிலையில் நகை செய்தாகிவிட்டதா எனக் கேட்டு வந்தனர்.இவர் இன்னும் இரண்டு நாட்கள் தரும்படியும் அதற்குள் செய்து முடித்துவிடுவதாகவும் சொல்ல
இன்னும் இரண்டு நாட்களில் செய்து முடித்து தராவிட்டால் மன்னரின் கோபத்திற்கு ஆளாகி தண்டனை பெறுவீர்கள் என எச்சரித்துவிட்டுச் சென்றனர்.என்ன சோதனையோ இரண்டு நாளில் இவரால் முடிக்க முடிய வில்லை.பயந்து போனார் திரிலோசனார்
.மன்னர் என்ன தண்டனை தருவாரோ என்ற பயத்தில் மனைவியிடம் கூடச் சொல்லாமல் அடர்ந்த காட்டிற்குள் சென்று ஒளிந்து கொண்டார் திரிலோசனார்.
அங்கே அவ்வனத்திலே ஓர் மரத்தடியில் அமர்ந்து பாண்டுரங்கனை நினைத்து தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்
பாண்டுரங்கனின் இன்னொரு அவதாரமான கிருஷ்ணரின் பால லீலைகலைப் பாடல்களாகப் புனைந்து பாடியபடியும் பாண்டுரங்கனை நினைத்து தியானித்தபடியும் காட்டில் காலத்தைப் போக்கினார்.
கணவரைக் காணாது அவரின் மனைவி கலங்கிப்போனார்.இந்த நிலையை நீடிக்க விடக்கூடாது என எண்ணிய பாண்டுரங்கன் திரிலோசனதாசராக உருவெடுத்து அவருடைய வீட்டிற்கு வந்தார்.
அவருடைய மனைவி அவரிடம் திடீரென உங்களைக் காணவில்லையே எங்கு சென்றீர் எனக் கேட்கவும் என்னிடம் கேள்வி கேட்பதைத் தவிர் என்றார் திரிலோகரின் உருவில் இருந்த பாண்டுரங்கன்.
வந்திருப்பது பாண்டுரங்ககன் என்று தெரியாது அந்த பதிவிரதைக்கு.அவரைக் கணவன் என்று நினைத்த அவர் மேலும் எதுவும் கேட்காமல் மௌனமாகிவிட்டார்.
திரிலோசனாரின் வீட்டுக்கு அவரின் உருவில் வந்த பாண்டுரங்கன் சீக்கிரமே மன்னரின் மகளுக்காக அழகிய ஹாரம் ஒன்றினைச் செய்து முடித்தார்
.அது சந்திர ஹாரம் போல் ஒளி வீசியது.அதனை அவரே அரண்மனைக்கு எடுத்துச் சென்றார்.
ஒளிவீசும் அக்ஹாரத்தைப் பார்த்த மன்னரின் கண்கள் வியப்பால் விரிந்தன.ஆஹா..ஆஹா..எவ்வளவு அழகு..எவ்வளவு அழகு இக்ஹாரம் என வியந்து பாராட்டினார் மன்னர்.
இவ்வளவு அழகான ஹாரத்தைச் செய்த உங்களுக்கு எவ்வளவு பொருள் தந்தாலும் தகும் எனச் சொல்லி ஒரு பை நிறைய மோகராக்களைக் கொடுத்தனுப்பினார்.
திரிலோசனாரின் உருவில் இருந்த இறைவன் மோகராக்களுடன் வீட்டிற்கு வந்தார்.அவற்றை உண்மையான பொற்கொல்லர் திரிலோசனதாசரின் மனைவியிடம் கொடுத்து கொண்டுவந்திருக்கு மோகராக்களில் சிலவற்றை எடுத்துச் சென்று உணவுப்பொருட்கள் வாங்கிவந்து விருந்து தயாரிக்கும் படியும் தான் போய் பக்தர்கள் சிலபேரை விருந்துண்ண அழைத்து வருவதாகவும் சொல்லிச் சென்றார்.
திரிலோசனாரின் மனைவிக்கு அதிக அளவு மோகராக்களைப் பார்த்து அதிசயமாக இருந்தது. ஆனாலும் கணவரை ஒன்றும் கேட்க வில்லை.கணவர் சொல்லிச் சென்றது போல் விருந்து தயார் செய்தார்
.திரிலோசனாரின் உருவில் இருந்த பாண்டுரங்கனும் சில பகதர்களை உணவுண்ண அழைத்து வந்தார்.தானும் அவர்களோடு அமர்ந்து உணவுண்டார்.பின்னர் விருந்தில் தயாரித்திருந்த அனைத்துப் பதார்த்தங்களையும் பொட்டலங்களாகாக் கட்டி எடுத்துக் கொண்டு திரிலோசனார் ஒளிந்திருந்த காட்டிக்கு வந்தார் ஓர் அடியவர் வேடத்தில்.அப்போது பாண்டுரங்க பக்தரான திரிலோசனார் கண்களை மூடி தியானத்தில் இருந்தார்.
அடியவர் வேடத்தில் வந்திருந்த பாண்டுரங்கன் ஐயா..கொஞ்சம் விழித்துக் கொள்ளுங்கள்..என்று பலமுறை வேண்டினார்.திரிலோசனாரும் கண்களைத் திறந்தார்.
அவர் அடியவரை பார்த்து சுவாமி..இவ்வடர்ந்த காட்டில் உம்மைப் பார்த்தால் வியப்பாக உள்ளது..தாங்கள் எதற்காக இங்கு வந்தீர் ?நான் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்றார்..
அடியவர் வேடத்தில் இருந்த இறைவன்..ஐயா..இன்று இன்னாட்டின் மன்னர் மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம்..மன்னரின் மகளான மணமகள் அணிய கண்டோர் வியக்கும் வண்ணம் ஓர் ஹாரத்தை பொற்கொல்லர் ஒருவர் செய்து கொடுத்தாராம்.
மன்னர் மகிழ்ந்துபோய் அளவுக்கதிகமாய் பொற்காசுகள் கொடுத்தாராம்.அந்த பொற்கொல்லார் இறையடியார்களை அழைத்து நல்லதொரு விருந்தளித்தார்.
அவ்விருந்தில் நானும் கலந்து கொண்டேன்.திருப்தியாய் உண்ட நான் திரும்பி வருகையில் பாதை தவறி இக் காட்டிற்குள் வந்து விட்டேன்
.இதோ பாருங்கள் விருந்தில் அளிக்கப்பட்ட பதார்த்தங்களை மீண்டும் பசியெடுத்தால் உண்ணலாமென கொஞ்சம் அந்த பொற்கொல்லரிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டுவந்துள்ளேன்..
உம்மைப் பார்த்தால் மிகவும் பசியோடு இருப்பவர் போல் தெரிகிறது.இந்தாருங்கள் இதனை நீங்கள் உண்ணுங்கள் என்று கொண்டுவந்திருந்த உணவுப் பொட்டலத்தை அளித்தார்.
உண்மையில் திரிலோசனதாசருக்கு அந்த அடியார் கூறிய செய்தி மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.
நல்லவேளை ஹாரம் செய்வதற்கு நம்மால் ஆகாது என நினைத்த நாம் மன்னனின் தண்டணைக்குப் பயந்து இக்காட்டில் வந்து ஒளிந்து கொண்டோம்.வேறொரு பொற்கொல்லர் அதனைச் செய்து கொடுத்துவிட்டார் போலிருக்கிறது.நல்லவேளையாய்ப் போயிற்று
.இனி நாம் நம் வீடு திரும்பலாம்.இனி பயமில்லை என நினத்தார்.அந்த நினைப்பே அவருக்குப் பசியைத் தூண்டியது.அடியவர் அளித்த உணவை ஏற்று அதனை உண்டார் திரிலோசனார்.
வீட்டுக்குக் கிளம்பியவர் அந்த அடியவரிடம்..சுவாமி எனக்கு உணவளித்த நீர் என்னுடன் என் இல்லம் வரவேண்டும்.உமக்குத் தக்க மரியாதை செய்ய விரும்புகிறேன் என்றார்.
அடியவரின் உருவில் இருந்த பாண்டுரங்கனும் சம்மதித்தார்.இருவரும் திரிலோசனாரின் இல்லம் அடைந்தனர்.
அடியவர் திரிலோசனாரின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொள்ள திரிலோசனதாசர் உள்ளே சென்றார்.
வீட்டில் குவிந்து கிடந்த மளிகைப் பொருட்களைக்கண்டு வியந்த திரிலோசனார் மனைவியிடம் இன்று என்ன வீட்டில் விசேஷம்? ஏதும் விருந்து நடக்கப் போகிறதா?மளிகைப் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன?
என்று வியப்போடு கேட்டார்.அவரின் கேள்வியால் திகைத்துப் போனார் அவரின் மனைவி.
இதென்ன இப்படிக் கேட்கிறீர்கள்?நீங்கள்தானே ஹாரம் செய்து கொடுத்ததற்காக மன்னர் அளித்த மோகராக்களில் என்னிடம் சிலவற்றைக் கொடுத்து அடியவர்களுக்கு விருந்து வைக்க மளிகைப் பொருட்கள் வாங்கி வரச் சொன்னீர்கள்.அவ்வாறு நானும் வாங்கி வர அடியவர்களுக்கு விருந்தும் வைத்தோமே..?
நீங்களும் அவ்விருந்திலிடப்பட்ட பதார்த்தங்களைப் பொட்டலமாகக் கட்டிக்கொண்டு எங்கோ சென்றீர்களே?அப்படியிருக்க ஒன்றுமறியாதவர் போல கேள்வி கேட்கிறீர்களே என்றாள்.
மனைவி சொன்னதைக் கேட்டு வியந்து போன அவர் தன்னைக் காட்டில் சந்தித்தவரும் இதைத்தானே சொன்னார் என்று அதிசயத்தபடி வெளியே வந்தார்.வந்து பார்த்த போது திண்ணையில் அந்த அடியவரைக் காணோம்
இப்போது நன்கு புரிந்தது
திரிலோசனதாசருக்கு.தான் மன்னனுக்கு பயந்து காட்டில் சென்று ஓளிந்து கொண்டபோது பாண்டுரங்கனே தம் உருவில் இங்கு வந்து ஹாரத்தினைச் செய்து மன்னனிடம் கொடுத்து கூலிபெற்று அதில் மளிகை வாங்கி அடியவர்களுக்கு விருந்து படைத்துள்ளார்.
அவிருந்தில் அளிக்கப்பட்ட உணவினை எனக்கும் கொண்டுவந்து அளித்துள்ளார் அடியவர் வேடமிட்டு வந்து.
ஆஹா..ஆஹா..எப்பேர்ப்பட்ட பேறு இது.தன் பக்தர்களை பாண்டுரங்கன் எப்போதும் துன்பப்பட வைத்ததே இல்லை.தன்னை நம்புபவரை அவன் கைவிடுவதே இல்லை..என மிகுந்த பக்தியோடு தன்னை மறந்து பாண்டுரங்கன் மீது பாடல்களைப் பாட ஆரம்பித்தார்.அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பிரவாகமெடுத்தது.
சொல்லுங்கோ..பாண்டுரங்கா..பண்டரினாதா..விட்டல் விட்டல்… ஜேஜே விட்டல்…