நாம் ஆறுமுகநாவலரின் “விரதம்” என்பதற்கான வரைவிலக்கணத்தை நோக்கின் “மனம்; பொறி வழி போகாது நிற்றற் பொருட்டு உணவை விடுத்தேனும், சுருக்கியேனும்; மனம், வாக்கு, காயம் எனும் மூன்றினாலும் இறை அன்போடு, கடவுளை விதிப்படி வழிபடல்” என்கிறார். அவ்வாறான கட்டுப்பாடுகளினூடாக ஐம்புலனடக்கி மன அடக்கத்தை கந்த சஷ்டி விரதம் நமக்கு உணர்த்துகிறது.
இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப “கந்தசஷ்டி” விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும்.
ஒரு விரதத்தை ஆரம்பிக்கும் முன் இன்ன நோக்கத்துக்காக இன்னமுறைப்படி இவ்வளவு காலம் அனுஷ்டிக்கப் போகின்றேன் என்று உறுதியாகத் தீர்மானம் செய்து (சங்கல்பம் செய்து) ஆலயம் சென்று சங்கல்ப்பபூர்வமாக அர்ச்சினை வழிபாடுகள் செய்து ஆரம்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால எல்லை வரை மாற்றமின்றி அவ்விரதத்தை ஒழுங்காகக்கைக் கொள்ளவேண்டும்.
இவ்விதம் கடும் விரதம் அநுஷ்டிக்க முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் இரவு ஒரு பொழுது பால்பழம் அல்லது பலகாரம் உண்டு இறுதி நாள் உபவாசம் இருக்கலாம். அதுவும் முடியாவதவர்கள் முதல் ஐந்து நாட்களும் பகல் ஒரு பொழுது அன்னமும் ஆறாம் நாள் இரவு பால்பழம் அல்லது பலகாரமும் உண்டு விரதமிருக்கலாம். கந்தசஷ்டியின் நிறைவுநாளன்று (20.11.2020) காலை முதல் மாலை சூரசம்ஹாரம் முடியும் வரை ‘ஓம் முருகா’ என்னும் மந்திரத்தை மனதுக்குள் உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும். கந்த சஷ்டிக்கவசம், கந்தகுரு கவசம், சண்முக கவசம் போன்ற முருகன் பாடல்களைப் படிக்கலாம். காலை, மதியம் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் சூரசம்ஹாரம் தரிசித்தபின் நீராடி உணவு சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.